பேராசிரியர் செ.போத்திரெட்டி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சில காலமும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருபதாண்டுகளுக்கு மேலாகவும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இடதுசாரி அரசியல் இயக்கத்தோடும் பேராசிரியர் நா.வானமாமலையின் ஆராய்ச்சிக் குழுவோடும் நெருங்கிய தொடர்புடையவர். பாரதி மீது மிகுந்த பற்றுக்கொண்ட பாரதி ஆய்வாளர். கா.சிவத்தம்பி முதலான ஈழத்து இலக்கிய அறிஞர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். தன் மாணாக்கர் பலர் தமிழ் ஆய்வுலகில் சிறக்கக் காரணமாய் இருந்தவர். அவரது நேர்காணல் இங்கு இடம் பெறுகிறது.

தங்களது குடும்பப் பின்னணி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

pothireddy_360இன்றைய தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அருகில் உள்ள சந்திரகிரியில் பிறந்தேன். புன்செய் விவசாயத்தில் என் குடும்பம் ஒரு வசதியான குடும்பம். என் பாட்டனாருக்கு நிறைய நிலச் சொத்து இருந்தது. புன்செய் நிலச் சொத்து போக சக்கம்மாள்புரம் கிராமத்தில் விடுமாடுகளுக்கான மேய்ச்சல் காடும் இருந்தது. இது மட்டுமின்றி கருவைக்குளம் கிராமத்திற்கு ஒன்றரை மைல் தொலைவில் எங்களுக்கு என்று தனியே 300 ஏக்கர் மேய்ச்சல் காடும் இருந்தது. இதனைக் கீழக்காடு என்று சொல்வோம். ஆக மேய்ச்சல் காடு மட்டுமே 500 ஏக்கருக்கு மேல் இருந்திருக்கும். இவ்வாறு வசதியான குடும்பத்தில் பிறந்தேன்.

தங்களது பள்ளிக் கல்வி பற்றிக் கூறுவீர்களா?

சந்திரகிரி கிராமத்தில் எங்கள் குடும்பத்திற்கும் ஊராருக்கும் இடையே பிரச்சினை வந்தது. அதனால் அந்த கிராமத்தில் படிக்கக்கூடாது என்று என் பெற்றோர் தடுத்து விட்டனர். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று கருதிய என் தாயார் நான்கு மைல்களுக்கு அப்பால் தளவாய்புரம் கிராமத்திற்குப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு சென்று படிக்க வைத்தார். அக்கிராமத்தில் எங்களுக்குச் சொத்தும் இருந்தது வீடும் இருந்தது. இதுதான் ஆரம்பக் கல்வி.

தளவாய்புரம் கிராமத்தில் ஆரம்பக் கல்வி கற்றேன். அதன் பிறகு தூத்துக்குடி கால்டுவெல் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றேன். அப்போது என் தாயாருக்குச் சிறிய தகப்பனார் வி.ஜி.சாமுவேல் என்பவர் வீட்டில்இருந்து படித்தேன். அவர் கால்டுவெல் உயர்நிலைப் பள்ளியின் செகண்ட்டரி கிரேடு ஆசிரியராகப் பணியாற்றி 1942இல் ஓய்வு பெற்றவர். ஆனால் பள்ளி ஆண்டு மலரில் வருடம் தோறும் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுவார். அந்தப் பழைய கட்டுரைகளை நான் மாணவனாக இருக்கும்போது எழுதிக் கொடுத்துப் படிக்கச் செய்வார். “whose work is this?” என்ற அவரது கட்டுரை என்னால் இன்றும் மறக்க முடியாது. அக்கட்டுரை மாணவர்களின் எல்லாச் செயல் களுக்கும் ஆசிரியரைப் பொறுப்பாக்கும் மக்களின் மனோபாவம் பற்றியது.

தாத்தாவின் பெயர் வி.ஜி.சாமுவேல் என்று கிறித்துவப் பெயராக இருக்கிறதே. நீங்கள் கிறித்தவரா?

என் தாயின் தந்தை சாயல்புரம் போப் உயர்நிலைப் பள்ளியில் படிக்கப் போன போது கிறித்துவராக மாறிவிட்டார். அவருக்குப் பொருத்தம் இல்லாத உறவுப் பெண்ணைக் குடும்பத்தார் முதல் மனைவியாகத் திருமணம் செய்து வைத்து விட்டனர். அவருக்கு 10 ஜோடி உழவு மாடுகள் உட்பட ஏராளமான நிலச் சொத்து இருந்தது. அவர் தன் முதல் மனைவியைக்கொண்டு இந்தச் சொத்தைப் பராமரிக்க முடியாது என்று கருதியதால் இந்து முறைப்படி ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆகவே அன்று இருந்த புராட்டஸ்டாண்டு திருச்சபை அவரைக் கிறித்தவ மதத்தில் இருந்து நீக்கிவிட்டது. ஆனால் அவர் பெயர் மோசஸ்ரெட்டி. அவருக்கு இருந்த ஒரு மகன் ஆபிரகாம் எனது தந்தையார். ஆனாலும் என் தாயார் வீட்டில் கிறித்துவத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்துக் கோயில்களுக்கும் போவதில்லை. சாமி கும்பிடுவதில்லை. என் தாயார் என் தந்தைக்குத் தாய்மாமன் மகள். ஆகவே முறைப் பெண்ணான அவளை மணந்துகொண்டார். இருந்தபோதிலும் என் தாயார் குடும்பத்தினர் என் தாய்வழிப் பாட்டனார் இறந்தபிறகு ஒரு கிறித்தவ ஆலயத்தை நூ.சின்னயாபுரம் கிராமத்தில் கட்டிக் கொடுத்தார். அப்பொழுது நெல்லை மாவட்டத்துப் பேராயராக இருந்த செல்வின்துரை அதைத் திறந்து வைத்தார்.

இடதுசாரி இயக்கத்தோடு தங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது எப்படி?

கால்டுவெல் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் என் தாயாரின் சிறிய தந்தை சாமுவேல் ரெட்டியார் வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தேன். அது தூத்துக்குடி கீழூரில் நாராயணன் செட்டியார் தெருவில் இருந்தது. அந்த வீட்டிலிருந்து கால்டுவெல் உயர்நிலைப் பள்ளிக்குப் படிக்கப் போய் வந்தேன். அப்போது அந்தத் தெருவில் இந்திய முற்போக்கு ஜனநாயக வாசகசாலை என்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த வாசக சாலையில் ‘ஜனசக்தி’ கிடைக்கும். அதனைத் தொடர்ந்து படிப்பேன். அதுதான் பொதுவுடைமை இயக்கத்தோடு ஏற்பட்ட முதல் அனுபவம். அதனோடு இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது இன்டர்மீடியட் வரை படித்து விட்டு கோயம்புத்தூர் மற்றும் கோவில்பட்டி நகரங்களில் வேலைபார்த்த என் மாமன் திரு.பூபால்ரெட்டியார் இரண்டு வேலைகளையும் உதறி எறிந்துவிட்டு தன் தகப்பனாரோடு தங்கி சாட்டன்ட் படித்துக் கொண்டிருந்தார். அத்தேர்வுகளில் வெற்றி பெற்று கோவில்பட்டியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் நடத்தினார்.

கிறித்துவராகப் பிறந்தாலும் அவருக்குப் பொதுவுடைமை இயக்கத்தின்பால் கொஞ்சம் அனுதாபம் உண்டு. இஸ்மத்பாஷா நடத்திய ‘சமரன்’ தொகுதியை வாங்கிப் படிப்பார். அந்தத் தொகுதிகளை நானும் படிப்பேன். இது மட்டுமின்றி அந்தக் காலப் பகுதியில் நடைபெற்ற இடதுசாரி அரசியல் பொதுக் கூட்டங்களுக்குப் போய் இருக்கிறேன். எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி: கேரளத்தில் இ.எம்.எஸ். முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் திடீரென காலமானார். அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் உட்பட எந்த அமைச்சருமே அந்தத் தொகுதியில் பிரச்சாரம் செய்யாமல் ரோசம்மாள் என்ற பெண் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வரவேற்பு விழா தூத்துக்குடி சக்தி மாரியம்மன் கோவில் அருகில் பொதுக்கூட்டம் நடத்தி வரவேற்றனர். அதற்கு நானும் போயிருந்தேன்.      

பள்ளிக்காலத்தில் கண்ணதாசனின் ‘எங்கள் திராவிட பொன்னாடு’ என்ற பாடலை மாற்றி அமைத்து, “எங்கள் செந்தமிழ்ப் பெரு நாடே வளம் கொடுக்கும் பொன்னாடே” என்று பாடினோம்.

தங்களது கல்லூரி வாழ்க்கையனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தேன். மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை சிறப்புத்தமிழ் படித்தேன். அப்போதுதான் 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது என் வகுப்பு மாணவராக இருந்த கா.காளிமுத்து எனக்கு ஓராண்டு முந்தைய வகுப்பு படித்துக் கொண்டிருந்த நா.காமராசன் இருவரும் இந்திய அரசியல் சட்ட நகலை திலகர் திடலில் எரித்துச் சிறை புகுந்தனர். அதற்குப்பின்பு அவர்களோடு நெருக்கமாக இருந்த பா.செயப்பிரகாசம் கைது செய்யப் பட்டார். இந்த மாணவர்களுக்கு எதிராக நான் செயல்பட்டேன்.

ஆனால் நான் இளங்கலைத் தமிழ் படிக்கிற காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந் தேன். இங்குள்ள தலைவர்கள் குறிப்பாக கே.டி.கே.தங்க மணி, எம்.ரத்தினம், பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதன கோபால் போன்றவர்களோடு நெருங்கிய தொடர்புண்டு. இதன் காரணமாக திராவிட இயக்க மாணவர் களுக்கு எதிராகச் செயல்பட்டேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதனை இப்பொழுது குறிப்பிடுகிறேன். இந்தியா பரிபூரணமாக சுதந்திரம் அடைய வேண்டும் என்று 1928, 1929 வாக்கில் பண்டிதநேரு தலைமையில் கூடிய காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. மறுநாள் காலை ராவிநதிக் கரையில் கூடி சுதந்திரதின உறுதிமொழியை இளைஞர்கள் செய்துகொண்டனர். அந்தநாள் சனவரி 25. அந்த நாளில்தான் இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தது. மணலி கந்தசாமி சனவரி 25ஐத் துக்கநாளாகக் கொண்டாட விடமாட்டோம் என்று அறிக்கை விட்டார். அதனை ஏற்ற நான், தி.மு.க மாணவர்களுக்கு எதிராகச் செயல் பட்டேன். ஆகவே ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது என்னையும் நான்கு காங்கிரஸ் மாணவர்களையும் அறையில் இருந்து அடித்து விரட்டினார்கள். கல்லூரி விடுதியை விட்டு வெளியே ஓடிவந்து ஒரு சவரக்கடையில் தஞ்சம் புகுந்தேன். மறுநாள் அவரிடம் ஒரு சட்டையை வாங்கிப் போட்டுக்கொண்டு கே.டி.கே.தங்கமணியைப் பார்க்க நேராகச் சென்றேன். ‘நீ அடிவாங்கிட்டேல இனிமே வளர்ச்சி தான்’ என்று கூறினார். தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சிகளில் தடியடிக்கும், பலர் இறந்துபட்டும் இருந்த நிலையிலும் அந்த மாணவர்களுக்கு எதிராகச் செயல்பட்டது தவறு என்று இப்பொழுது நான் உணர்கிறேன்.   

தியாகராசர் கல்லூரிப் பேராசிரியர்களோடு தங்களுக்கு எத்தகைய உறவு இருந்தது?

மதுரை தியாகராசர் கல்லூரி இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குக் கல்வி அடிப்படையில் சிறந்த கல்லூரியாக விளங்கியது. ஏனென்றால் தமிழ் இலக்கியங்களில் ஆழமான பயிற்சியும், பரந்த அறிவும் கொண்ட ஆசிரியர்கள் சிலர் இருந்தனர். எடுத்துக்காட்டாக சுப.அண்ணாமலை அவர்கள் நான் மறக்கமுடியாத ஆசிரியர். புறநானூறு வகுப்பு எடுத்தார். முதல் நாள் பாடம் நடத்தினால் மறுநாள் மனப்பாடமாக அதைக் கூறுவேன். இலக்குவனார் வெளியேறிய பின்பு கல்லூரி முதல்வராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் டாக்டர் அ.சிதம்பரநாதசெட்டியார் பதவி ஏற்றார். அவர் 1942இல் “தமிழ் யாப்பியல் உயர்நிலை ஆய்வு” (Advanced Study in Tamil Prosody) என்ற தலைப்பில் தமிழில் முதல் முனைவர் பட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பெற்றவர். எனக்கு அவர் பாடம் நடத்தவில்லை. அவரோடு எனக்கு ஏற்பட்ட இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறேன்.

என்னோடு நெருங்கிப் பழகிய நண்பன் பாலபாரதி. அவனது சித்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டான். பல தமிழ்ப்; பெயர்களைப் பரிசீலித்துவிட்டு அவை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டோம். திடீரென்று எனக்கு நினைவு வந்தது. அவன் பிறந்த நாள் நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைசர் பிறந்த நாள். ஆல்பர்ட் கிறித்துவ பெயர். இந்து குடும்பத்தில் வைக்க மாட்டார்கள் சுவைசர் எனப் பெயரிடும்படி சொன்னேன். மேலும், தமிழ் மட்டுமே தெரிந்த அவன் பெற்றோருக்கு சுவைசர் பற்றித் தகவல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே நான் துணிச்சலாக ஏ.சி.செட்டியாரைச் சந்திக்கச் சென்றேன். ஏனென்றால் சுவைசரைப் பற்றி ‘மண்ணுயிருக்கு அன்பர்’ என்று ஒரு நூல் எழுதியிருந்தார். நான் விசயத்தைத் தெரிவித்தவுடனே மகிழ்ந்த அவர் தென்னாட்டுப் பதிப்பகத்திற்கு எழுதி நூலை வருவித்துத் தருகிறேன். என்றார். அவர் சொன்னபடியே பார்த்தேன். அந்தப் பையன் எந்த ஊர்க்காரன் என்றார். ‘திசையன்விளை’ என்றேன். உடனே திசையன்விளை சுவேசனுக்கு அன்புடன் தருபவர் சிதம்பரநாதன் என்று கையெழுத்திட்டுக் கொடுத்தார். ஏன் இதைத் குறிப்பிடுகிறேன் என்றால் ஆங்கிலத்தில் நோபல் பரிசு பெற்ற அந்தக் கவிஞன் “இந்தியக் கருத்தும் அதன் வளர்ச்சியும்” என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் திருக்குறளைப் பற்றி விரிவாக ஒரு பக்கம் எழுதியிருக்கிறார்.

இன்னொரு நிகழ்ச்சி, ஏ.சி.செட்டியார் மாஸ்கோ போய் ஒரு கட்டுரையை வாசித்திருந்தார். அந்தக் கட்டுரைத் தலைப்பு ‘Thirukural message to the world”. அந்தக் கட்டுரையின் பிரதியையும், கல்கத்தாவில் தாகூர் நூற்றாண்டு விழாவில் அவர் படித்த “Tagore Tamil Translation” என்ற கட்டுரையையும் வாங்கிப் படித்தேன். இந்நிகழ்ச்சிகள் தியாகராசர் கல்லூரியில் மறக்கமுடியாதவை.      

அப்பொழுது தமிழ்படித்த மாணவர்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் நா.காமராசன், ஆங்கில நூல் படிக்கும் இயல்பு படைத்தவர். ஆனால் நல்ல கவிதை எழுதிக்கொண்டிருந்த அவர் திரைப்படத் துறைக்கு எம்.ஜி.ஆர் உடன் சேர்ந்து காணாமல் போனார். எனக்கு இளைய மாணவர் மு.மேத்தா நல்ல ஆற்றல்மிக்க கவிஞர். திராவிட இயக்கத்தில் சம்பத் கண்ணதாசனோடு வெளி வந்தவர். ‘செந்தமிழ்போல் இனித்திருக்கும் ஆண்டியப்பன் சீர்மிக்க பூத்தொட்டி போத்தி ரெட்டி...’ என்று மாணவர் துணைத்தலைவர் தேர்தலில் நான் நின்ற

போது மு.மேத்தா கவிதை பாடினார். தி.மு.க.மாணவர்கள் “வேண்டாம் இந்த இந்தி” என்ற தலைப்பில் பாடும்படி மு.மேத்தாவிடம் கேட்டபோது உடனே ஆசுகவிபோல் வேண்டாம் இந்த இந்தி, என முடியும்படி பல வெண்பாக்கள் பாடினார். என்னுடன் பயின்ற கீழக்கரை மாணவர் சாகுல் ஹமீது, இன்குலாப்; என்ற பெயரில் சிறந்த கவிதைகள் எழுதினார். கட்டுரைகளும் எழுதினார். படிக்கும்பொழுது யாப்பில் ஒரு காவியம் எழுதியிருந்தார். அதனைப் படித்திருக் கிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக அனுபவங்களைக் கூறவும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்க சேர்ந்தேன். அப்பொழுது பேராசிரியராக இருந்தவர் கோ.சுப்பிரமணிய பிள்ளை, அவருடைய கம்பராமாயண வகுப்புகள் மிகச் சிறப்பாக இருக்கும். அவர் சொல்கின்ற விளக்கம் நகைப்பை விளைவிக்கும். மிகச்சிறந்த கல்விமான் வேடிக்கையாக அவரைப்பற்றிக் கூறுவார்கள். திருநெல் வேலியில் அவர் வழக்கறிஞராக இருந்தபோது நீதிமன்றத்தில் நீதிபதி எடுத்தவுடன் what is the trouble? என்று கேட்பாராம். ஒரு நாள் அவரிடம் இவர் வாதத்தைத் தொடரும் போது “My lord there is another trouble” என்று கூறினாராம். பின்னர் வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு ஆசிரியப் பணிக்கு வந்ததாகக் கூறுவர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது பொதுவுடைமை மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டேன். இருவரை இவ்வியக்கத்தில் சேர்த்தேன். ஒருவர் திருப்பராய்த் துறை சித்பவானந்தர் பள்ளியில் படித்துவிட்டு டீ.ழு.டு.இ படிக்க வந்த மே.து.ராஜ்குமார். பக்திப்பழமாக வந்த அவரது திருநீறையும் பொட்டையும் நானும் புலவர் ஆ.சிவசுப்பிரமணியனும் அழிக்க வைத்தோம். இரண்டாவது நபர் அரங்க குப்பன் என்ற மாணவர். பின்னாளில் தொல்லியல் துறையில் பணி யாற்றினார். பூங்குன்றன் எனப்பெயர் மாற்றிக் கொண்டார். சிறந்த ஆய்வுகள் செய்தவர்.      

1967, 1968இல் திராவிட இயக்க மாணவர்கள் அண்ணா பிறந்த நாளில் ஒவ்வொரு அறைக்கும் அண்ணாவைப் பற்றிய பாராட்டு உரைகள், சாதனைகளை விளக்கித் துண்டுப்பிரசுரம் போடுவார்கள். நானும் அதனைப் போல நண்பர்களுடன் சேர்ந்து மாற்றுவழியில் லெனின் பற்றி, அக்டோபர் புரட்சிப் பற்றிப் பொதுவுடைமை ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றித் துண்டுப் பிரசுரம் ஒவ்வொரு விடுதி அறைகளிலும் கொடுத்தோம். இது நாங்கள் செய்த குறிப்பிடத்தக்க ஒரு மாற்றுச் செயல்.      

pothireddy_350அதன் பிறகு முதுகலை இரண்டாம் ஆண்டில் பேராசிரியர் லெ.ப.கரு. ராமநாதன் செட்டியார் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதால் பதவி விலகக்கோரிப் போராட்டம் நடத்தினோம். உண்ணாவிரதம் இருந்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விடுதியில் ஒரு வார காலத்திற்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும். இந்த நிலையில் அந்தப் பேராசிரியர் அந்தப் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்து பதவியைத் தக்கவைக்க நினைத்தார். முத்தையா செட்டி யாருக்கு நெருங்கியவர். பல்கலையில் ஆற்ற வேண்டிய செய்திகளை அவர் மூலமாகத் தெரிவிப்பார். அந்தப் போராட்டத்தின் இறுதி நாளன்று ஒரு தென்னங்கூரை வேயப்பட்ட ‘செட்’ ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இச்செயல் முன்னரே எனக்குத் தெரியும். ஆனால் நான் இதில் பங்கேற்கவில்லை. தீப்பற்றி எரிந்தபோது பதிவாளர் வந்தார். நேற்று மாலையே அவரின் ராஜினாமா கடிதம் வந்ததே. நீங்கள் ஏன் தீயிட்டுக் கொளுத்தினீர்கள் என்றார். இந்தப் போராட்டத்தின்போது அந்தப் பேராசிரியர் தி.மு.க. வளவனூர் கோவிந்தசாமியைப் போராட்டத்தில் தலையிடச் செய்து போராட்டத்தை நிறுத்த ஏற்பாடு செய்தார்.

அப்பொழுது நான் கூட்டத்தில் நேரடியாகவே அமைச்சருக்கு எதிராகப் பேசினேன். அவர் படையாச்சி சாதியைச் சார்ந்த அமைச்சர். உடனே தி.மு.க. படையாச்சி மாணவர்கள் என்னைப் பட்ட மேற்படிப்பு மாணவர் விடுதி அறையில் வைத்துப் பூட்டிவிட்டனர். அந்த நேரத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்ட மேற்படிப்பு துறையில் பயின்ற நாடார் மாண வர்கள் துணிச்சலாக வந்து போராடிய பிறகு திறந்துவிட்டனர். அதன்பின்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அருகில் திருவேட்களம் என்ற இடத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவர் பொதுவுடைமை இயக்கக் தலைவர் பாலதண்டாயுதத்தை அழைத்து வந்து கம்யூனிஸ்ட் மாணவர் சார்பாக நானும் ராஜ்குமாரும் ஒரு கூட்டம் நடத்தி வைத்தோம். அப்போது துணைவேந்தரின் தனிச் செயலராக இருந்த பி.சே~ன் ஐயர் மின்சாரம் கொடுத்தார். இந்த திருவேட்களத்தின் குளக் கரையில்தான் தமிழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் இலங்கையறிஞர் விபுலானந்தர் தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கு இரவில் பாடம் நடத்தினார். அப்போது லாந்தர் விளக்கேந்தி வந்தவர்தான் பின்னாளில் தவத்திரு குன்றக்குடி அடிகளாராக மாறினார்.  

விபுலானந்தர் அண்ணாமலைப் பல்கலையில் இருக்கும் போது செய்த காரியங்களில் குறிப்பிடத்தக்கன.    

1.காங்கிரஸ் கொடியை அவர் வீட்டுமுன் நிறுத்தியது.

2.பாரதியார் கழகம் ஒன்று நிறுவியது.

தங்கள் ஆசிரிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் 

ஆசிரியப் பணியைத் தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் தொடங்கினேன். அப்பொழுது ஸ்ரீதரமேனன் முதல்வர். அப் பொழுது என்னுடன் பணியாற்றிய புலவர் ஆ.சிவசுப்பிர மணியனுக்கும் எனக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. அந்தக் காலப்பகுதி நா.வா.ஆராய்ச்சிக் கூட்டங் களில் பங்கு கொண்டேன். ஆனால் அங்குக் கட்டுரை எதுவும் வாசித்ததில்லை. அந்த ஆய்வரங்குகள் பலரோடு தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பளித்தது. வௌ;வேறு துறைகளில் ஆய்வுக் கட்டுரை எழுதி வாசித்தனர். அப்பொழுது பேராசிரியர் தொ.பரமசிவத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. அந்த ஆய்வரங்கிற்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், திரு.கா.சுப்பிரமணியன். ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். சுப.அண்ணாமலை அவர்களை நெறியாளராகக் கொண்டு கீழ் முனைவர் பட்டம் பதிவு செய்து சங்க இலக்கியம் பற்றி பேரா.நா.வா. ஆலோசனையின்படி கட்டுரைகள் எழுதினார். அது நூலாக வந்துள்ளது. கடைசியாக நான் சந்தித்தபோது அதை விரிவாக எழுதும்படி கூறினேன். குடும்பச்சூழல் காரணமாக முடிக்க முடியாமல் விட்டுவிட்டார்.

இடதுசாரி படைப்பாளர்களுடனான தொடர்புபற்றிச் சொல்லுங்கள்.

என் தாயார் பிறந்த ஊரான சின்னயாபுரத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. அதற்கருகில் உள்ள குமரெட்டயாபுரம் கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை மாசித்திருவிழா 10 நாள் சிறப்பாக நடைபெறும். அந்த ஊர்ப் பள்ளியில் என் தாய் மாமனோடு படித்த ஆ.பரசுராமன் ஆசிரியராக இருந்தார். அவருடைய வேண்டுகோளின்படி மதுரையிலிருந்து பேராசிரியர்களை அழைத்துப் போய் பட்டிமன்றம் நடத்தினேன். பேராசிரியர் களைத் திரும்ப அழைத்து நாகலாபுரத்தில் தங்கியிருந்த போதுதான் பொன்னீலனை முதன் முதலில் சந்தித்தேன் தொடக்கப்பள்ளி துணை ஆய்வாளராகப் பதவி ஏற்றிருந்தார். அப்பொழுது அவருக்குப் பொதுவுடைமை இயக்கத்தில் தொடர்பு இல்லை. அதற்குப்பிறகு அவருக்கு நா.வா.வுடன் தொடர்பு ஏற்பட்டது. “கரிசல்” நாவல் எழுதினார். அது சாகித்ய அகாடமி பரிசுபெற்றது.பேராசிரியர் நா.வா. பற்றி “சுடர்களை ஏற்றும் சுடர்கள்” என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். கலை இலக்கியப் பெருமன்றத்தில் பொறுப்பு ஏற்றார்.

தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்லில் ளு.ளு.டு.ஊ வரைகூடப் படிக்காத இளைஞன் ஸ்ரீதரகணேசன் குறைந்த சம்பளத்தில் பணியாற்றினார். அப்பொழுது மில்லில் பெரிய தீவிபத்து ஏற்பட்டது, அதில் சிக்கி தீக்காயத்திற்கு உள்ளான சிலரை பரிதாப அடிப்படையில் ரிக்ஷாக்காரர் ஒருவர் தன் வருமானத்தைக் கருதாது ஒவ்வொருவராய் அழைத்துச் சென்று அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். இதைக்கண்ட ஸ்ரீதரகணேசன் ரிக்ஷாக்காரரை மையமாக வைத்து சிறுகதை ஒன்று எழுதினார். அதனை ‘நெருப்புக் குமிழிகள்’ என்ற பெயரில் ஆ.சிவசுப்பிரமணியம் வெளியிட்டார். பின்பு அவர் உப்புவயல், சந்தி, வாங்கல் போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதினார். அவற்றை NCBH நிறுவனம் வெளியிட்டது.

தங்களது ஆய்வுகள் பற்றிச் சொல்லலாமே.

என்னுடைய எம்ஃபில் படிப்பிற்கு நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி சென்றேன். அப்பொழுது வ.சுப.மாணிக்கம் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். அவர் குலச் சடங்குகள், சாதி அமைப்புகள் இவை பற்றி மாணவர்கள் ஆய்வு செய்யவேண்டும் எனச் சுற்றறிக்கை விட்டார். இது எனக்குப் பிடிக்கவில்லை. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி சென்றுவிட்டு திங்கட்கிழமை நாகர்கோவில் வருவேன். தூத்துக்குடி போனபோது ஒருநாள் பக்கத்தில் நடந்த கோயில் திருவிழாவில் தனுஷ் கோடி அழிவு பற்றி ஒருவர் பாடியதைக் கேட்டேன். எனவே தனுஷ்கோடி புயல் பாடல்கள் எனத் தலைப்புக் கொடுத்தேன். பாடல்கள் கிடைக்கவில்லை. சிரமப்பட்டு ராமநாதபுரம், இராமேஸ்வரம், வேம்பார் சென்று எழுதி முடித்தேன். அதில் வேம்பார் பாக்யநாதன் எழுதிய பாடல் குறிப்பிடத்தக்கது. இது போன்ற சமூகத் துயரப்பாடல்கள் விரிவான ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியன.

தங்களது பாரதி ஆய்வுகள் குறித்துக் கூறுங்கள்.

ஷபழமையின் சிறுமையும் புதுமையின் பெருமையும்’ என்ற தலைப்பில் உ.வே.சா.வையும், பாரதியையும் ஒப்பிட்டுக் கட்டுரை எழுதினேன். அது தாமரையில் வந்தது. உ.வே.சா., வாழும் போது பாரதி பல இடங்களில் அவரைப் பாராட்டினார். ஆனால் உ.வே.சா. பாரதி உயிருள்ளவரை ஒருபோதும் பாராட்டவில்லை. பாரதி இறந்து வெகு காலத் திற்குப் பிறகு காங்கிரஸ் மகாசபை பொன்விழாவில் சிறப்பாகப் பேசினார். அதுவும் மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் பதவியில் ஓய்வு பெற்ற பின்னர். ரூ.5000 செலவு செய்து போப்பிடம் கொடுப் பதைவிட டிக்~னரி வெளியிடும் பணியை உ.வே.சாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பாரதி வலியுறுத்தினார்.

பாரதி சுதேசமித்திரனில் கேரளாவில் ஈழவ மக்களின் எழுச்சிக்குப் பாடுபட்ட ஸ்ரீநாராயணகுருவைப் பாராட்டி ஏழு கட்டுரைகள் எழுதினார். அதனை மீண்டும் படித்து “கேரளத்தில் சமூகப் புரட்சி” என்று கட்டுரை எழுதினேன். அது சிறப்பாக இருப்பதாகக் கருதியதால் தொ.மு.சி.ரகுநாதன் உடனே பிரசுரிக்காமல் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பாரதி நூற்றாண்டு விழா மலரில் வெளியிட்டார்.    

புதுவை பாரதி நண்பர்கள் நடத்திய பாரதி விழாவில் ‘பாரதியின் கவிதைகளில் வெளிப்படும் நாட்டுப்புறக் கூறுகள்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கும்படி கூறினார். தலைப்பைக் கொஞ்சம் மாற்றி அமைத்து ‘பாரதி கவிதைகளில் வெளிப்படும் நாட்டுப்புறக் கூறுகள் அல்லது இன்றும், அன்றும் பாரதி சிந்துக்குத் தந்தை’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். அது ‘பாரதி பன்முகப் பார்வை’ என்று புதுவையில் வெளிவந்த நூலில் உள்ளது. சிந்துக்குத் தந்தை என்று கைலாசபதி எழுதிய முதற்கட்டுரை அதன்பின் இன்னும் சற்று விரிவாக எழுதப்பட்டது என் கட்டுரை.

தங்களது முனைவர்பட்ட ஆய்வு என்ன ஆனது?

முனைவர்பட்டத்திற்கு இந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளின் நிறுவனரும், ஆசிரியருமான ஜி.சுப்பிர மணியஐயர் பற்றி ஆய்வு செய்ய எண்ணினேன். அவர் 1917இல் காலமானார். ஆங்கிலத்தில் அவரைப் பற்றியும் அவர் எழுதியது பற்றியும் ஐந்து தொகுதிகள் ஜி.சுப்பிரமணி ஐயர் பெயரன் தொகுத்து வைத்திருந்தார். அவற்றைப் படித்து விட்டேன். சுதேசமித்திரன் இதழில் அவர் எழுதிய தலையங்கம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் சுதேசமித்திரன் அலுவலகம் மூடப்பட்டபோது அங்கிருந்த இதழ்கள் போட்டோ நகல் எடுக்கப்பட்டு டெல்லி நேரு நினைவு நூலகம் சென்றுவிட்டது. இதன் விளைவாக நான் ஒரு செயல் செய்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது திராவிட இயல் துறையில் பேராசிரியராக இருந்த அகத்தியலிங்கம் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக வந்தார். தமிழ்ப் பல்கலையில் என் பேராசிரியர் சோ.ந.கந்தசாமி வேண்டு கோளின்படி கருத்தரங்கில் கட்டுரை வாசித்தேன். பத்தொன் பதாம் நூற்றாண்டின் வரலாற்றைச் சரியாக அறிந்துகொள்ள நேரு நூலாக சுதேசமித்திரன் இதழ் போட்டோ காப்பி தமிழ்ப் பல்கலையில் வைக்கவேண்டும் என்று கூறினேன். அது நிறைவேற்றப்பட்டதா என்று தெரியவில்லை. தேசத்திற்காக வந்த ஒரே இதழ் இதுதான்.

ஐயா தங்களிடம் மிக அரிய நூற்கள் ஏராளமாக உள்ளன. பழைய நூற்களைச் சேகரிக்கும் ஆர்வம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

வ.உ.சி. கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது பி.ஏ., பி.எஸ்.சி., புதுமுக வகுப்பு படிப்பவர்க்கு மட்டும் தமிழ்ப்பாடம் நடத்தினேன். அப்போது குறிப்பிட்ட சில பாட நூல் மட்டும் படித்துப் பாடம் நடத்தினேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலில் இளங்கலை வகுப்பு மாணவர்க்கும், பின்னர் முதுகலை சிறப்புத் தமிழ் மாணவர்க்கும் வகுப்பு எடுத்தேன். அப்பொழுதுதான் என் தமிழ் அறிவின் போதா மையை உணர்ந்தேன். பழைய தமிழ் நூல்களை எல்லாம் தேடி வாங்கத் தொடங்கினேன். ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை பத்து மணிக்கு நரிமேட்டில் இருந்து நடந்து போய் பழைய புத்தகங்களை வாங்கினேன். அதன் மூலம் என் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டேன். அப்படித் தொகுத்த பழைய நூல்களில் ஒன்று ஆக்கூர் அனந்தாச்சாரியார் எழுதிய “பாரதியார் சரித்திரம்”. அதனைப் பார்க்கவேண்டும் என சிற்பி கேட்டார். ஜெராக்ஸ் எடுத்துவிட்டுக் கொடுக்க நினைத்தேன் அப்படிச் செய்தால் பக்கம் உடைந்துவிடும் எனத் தெரிந்தது. எனவே பாரதியிடம் மிகுந்த ஈடுபாடும் ஆழமான ஆய்வுகளும் மேற்கொள்கின்ற பேராசிரியர் சிற்பி அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன்.    

பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் இறந்த பின்பு அவருடைய மகன் அ.கி.ப.சோமசுந்தரமிடமிருந்து ‘கலாநிதி’ இதழ்களை எடுத்துவந்தேன். சரஸ்வதி ஒன்பது இதழ்கள் கொண்ட பைண்டிங் என்னிடம் உள்ளது. அந்த நூலை அப்போது என்னிடம் படித்துக் கொண்டிருந்த மு.செ.பிரகாசம் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். மணிக்கொடி இதழ்கள் பத்திரிகைத் தொகுப்பாக என்னிடம் உள்ளது. இவைபோக பாரதிதாசன் குயில் இதழ்கள் ஓராண்டுப் பிரதி வாங்கி வந்தேன். 1930களில் வெளிவந்த சங்கரதாஸ்சுவாமிகள் நாடகங்களும் என்னிடம் உள்ளன. என்னிடம் ஏற்றத்தாழ 4000 அரிய தமிழ் நூல்கள் உள்ளன. அவற்றை முறையாக வைத்துப் பராமரிக்க உரிய அலமாரிகள் இல்லை. சேந்தியில் வைத்துள்ளேன். அவற்றை எனது மாணவர் பா.ஆனந்தகுமார் பணியாற்றும் காந்திகிராமப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்போகிறேன்.

தங்களது மாணவர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

பேராசிரியர் பா.ஆனந்தகுமார், சுந்தர்காளி விருதுநகர் கல்லூரிப் பேராசிரியர் சண்முகபாரதி ஆகியோர் என்னிடம் படித்த குறிப்பிடத்தக்க மாணவர்கள். கேரளத்தில் கம்யூனிச இயக்கம் வென்றதிலிருந்து மலையாள இலக்கியங்களை ஆழமாகப் படிப்பேன். அப்படிப் படித்த வேளையில் ஸ்ரீ நாராயண குருவுக்கு மலர் போட்டிருந்தார்கள். அதனைப் படித்த பின்பு கேரளாவின் முப்பெரும் கவிஞர்கள் உள்@ர் பரமேஸ்வர ஐயர், குமரனாசான், வள்ளத்தோள் ஆகியோர் பற்றி வாசிக்கத் தொடங்கினேன். என்னைப் பொறுத்தவரை வள்ளத்தோள் மீது அதிக ஈடுபாடு வரவில்லை. வள்ளத் தோள் ரிக் வேதத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்தார். காந்தி இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். சோவியத்யூனியன் போய் வந்திருந்தாலும் பொதுவுடைமைச் சிந்தனைகள் அவர் படைப்பில் இல்லை. பரமேஸ்வர ஐயர், அறிவாளி, பழைய மரபுகளை உள்வாங்கி வித்தியாசமான சில இலக்கியங் களைப் படைத்தார். மலையாள மொழியில் மிகச்சிறந்த அறிவாளி. ஆனால் இருவரையும் ஒதுக்கிவிட்டு குமாரன் ஆசான் பற்றிப் படித்தேன்.      

ஈழவ மக்கள் விடுதலைக்குப் பாடுபட்ட ஸ்ரீநாராயணகுரு இயக்கத்தில் செயலாளராக இருந்தவர் குமாரன் ஆசான். அவர் ஒரு புறநிலைக் கவிஞர். வள்ளத்தோள் அகநிலைக் கவிஞர். பாரதி தன்னுடைய தொடக்க காலத்தை அகநிலைக் கவிஞராகத் தொடங்கி, படிப்படியாக ஒரு புறநிலைக் கவிஞராக வாழ்ந்து மடிந்தவர். ஆகவேதான் பாரதிமீது ஈடுபாடுகொண்ட எனக்குக் கேரளத்தில் தேசிய இயக்கத்தின் மீதும் விலகி நின்ற குமாரன் ஆசான் மீதும் ஈடுபாடு ஏற்பட்டது. திருவனந்தபுரம் பல்கலை வெளியிட்ட ஆசானின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் படித்தேன். எனவே ஆனந்தகுமாரை வற்புறுத்தி பாரதி-குமாரன் ஆசான் பற்றி ஆய்வு செய் என்றேன். அவன் என்னையும் தாண்டிப் போனான். மலையாள மொழியோடு தெலுங்கு மொழியிலும் பயிற்சி உண்டு. எனவே பாரதி, குமாரன் ஆசான், குரஜாடா அப்பாராவு ஆகிய மூவரைப்பற்றி ஒப்பாய்வு மேற்கொண்டான். இது என்னையும் தாண்டிய வளர்ச்சி. இத்தகைய வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதனை வரவேற் கிறேன்.    

ஆனால் இப்பொழுது தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு போதிய அளவில் இல்லை. அது ஒரு பெரும் குறை. ஆங்கில இலக்கியங்களை நான் படித்தது இல்லையே தவிர ஆங்கில மொழியில் எந்த நூலையும் படித்துப் புரிந்துகொள்வேன். குறிப்பிட்ட துறை சார்ந்த நுட்பமான நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ளமுடியாது. அதற்குத் துறைசார்ந்த அறிவு வேண்டும் அது எனக்கு இல்லை.

இலங்கைத் தமிழ் அறிஞர்களுடனான தங்களது தொடர்பு பற்றிச் சொல்லுங்கள்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி, தன்னாட்சிக் கல்லூரி என்பதால் பாடத்திட்டம் தயாரிக்கும் பொறுப்பு அந்நிறுவன ஆசிரியர்களிடமே இருந்தது. முதுகலைத் தமிழ் மாணவர் களுக்கு அக்கரை இலக்கியம் பாடத்தை அறிமுகப்படுத்தி னோம். நானும் சாலமன் பாப்பையாவும் அந்தப் பாடத்தை நடத்தினோம். பாப்பையா தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வௌ;வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், அவர்களின் தற்போதைய நிலை, அங்குத் தமிழ்க்கல்விக்கு இருக்கும் ஆதரவுபற்றி வகுப்பு எடுப்பார். நான் இலங்கை இலக்கியம், குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள கவிதை வளர்ச்சி, நாவல், சிறுகதை வளர்ச்சிபற்றி வகுப்பு எடுப்பேன். இதனால் இலங்கை அறிஞர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டேன். கைலாசபதியிடம் கடிதத்தொடர்பு வைத்திருந்தேன். அவரிடம் அவரது ஆசிரியர் ஜார்ஜ் தாம்சனின் முகவரி வாங்கினேன். அவரிடம் தான் கைலாச பதியும் சிவத்தம்பியும் முனைவர் பட்ட ஆய்வு செய்தனர். “A socio cultural history of ancient Tamils” என்ற தலைப்பில் ஆய்வுசெய்ய விரும்பி ஜார்ஜ்தாம்சனுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் அவர் தான் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் தனது மாணவர்களிடம் தொடர்பு கொள்ளும்படியும் கூறினார். அது எனக்கு வருத்தம் அளித்த நிகழ்வு.  

சிவத்தம்பி அவர்களுடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு இருந்தது. அவருடைய “Studies in ancient Tamil society” என்ற நூலில் 5 கட்டுரைகள் உள்ளன. அதில் ஒரு கட்டுரை நா.வா. மொழிபெயர்த்து ஆராய்ச்சி இதழில் வெளிவந்தது. எஞ்சிய கட்டுரைகளை நான் தமிழாக்கம் செய்தேன். அதற்குக் காரணம் மே.து.ரா. இது ‘பண்டைத் தமிழ்ச் சமூகம்; வரலாற்றைப் புரிதலை நோக்கி’ என்ற தலைப்பில் மக்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது.

தங்களது ஆசிரியர் சங்க அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்

சென்னைப் பல்கலைக்கழகம் பெரிதாக இருக்கிறது. அந்தப் பல்கலையைப் பிரித்து, தென்பகுதியில் பல்கலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மதுரையில் பல்கலைக்கழகம் ஏற்பட்டது. அதற்குப் பாரதி பெயர் சூட்ட வேண்டுமென கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கை விடுத்தது. தமிழ்ப் பண்பாடு மீது அக்கறை இல்லாத காங்கிரஸ் இயக்கம் அதைக் கண்டு கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர். காலத்தில் மதுரை காமராசர் பல்கலையானது.

1974 வாக்கில் மதுரை, பல்கலை ஆசிரியர் சங்கம் தோற்றம் பெற்றது. சிவகங்கைக் கல்லூரி; ஆங்கிலப் பேராசிரியர் நா.தர்மராஜன் உருவாக்கினார். உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் க.திருமாறன், சரசுவதி நாராயணன் கல்லூரி முதல்வர் சிவசங்கரன். மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டுப் பாளையங்கோட்டை, மதுரை சிறையில் இருந்தேன். அந்தப் போராட்டங்கள் நடைபெறாமல் இருந்தால் நான் அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க முடியாது.

இன்றைய தமிழ் ஆய்வுலகத்திற்குத் தாங்கள் கூற விரும்பும் செய்தி யாது?

பழந்தமிழ் இலக்கியத்தை ஆழ்ந்து பயின்று, அவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு நடத்தும் ஆசிரியர்கள் குறைந்து வருகிறார்கள். அது வருந்தத்தக்க நிலை. ஏனென்றால்

பல ஆசிரியர்கள் தங்களுக்குப் பின்னே மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கி இருக்கிறார்கள். எங்கள் ஆசிரியர் அ.கி.பரந்தாமனார் எழுதிய ‘நல்ல தமிழ் எழுதவேண்டுமா’ நூலுக்கு அடிப்படையானது அவரது பள்ளியின் தமிழ் ஆசிரியர் எழுதிய இலக்கண நூலாகும். என்னுடைய ஆசிரியர் களுக்குத் தமிழில் இருப்பது போல் ஆங்கிலத்திலும் புலமை இருந்தது. இன்று அது இல்லை. இது வருந்தத் தக்கது. இலங்கையில் விடுதலைக்குப் பின்பும் தமிழ்ப் பாடத்தைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி உடையவர்களாக இருக்கிறார்கள். கைலாசபதி, சிவத்தம்பி மட்டுமல்ல அவர்களுடைய ஆசிரியர் சு.வித்தி யானந்தன், உடன் பணிபுரிந்த ஆ.வேலுப்பிள்ளை ஆங்கிலத் தேர்ச்சி உடையவர்கள். ஆகவே, தமிழ் மாணவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படிப்பதோடு நிறுத்தாமல் தங்கள் அறிவைச் சிறப்பாக வளர்ப்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள பலதரப்பட்ட நூல்களையும் வாசிக்கவேண்டும். தமிழில் திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளையும் உ.வே.சா.வின் என் சரிதத்தையும் மாணவர்கள் வாசிக்கவேண்டும்.

Pin It