‘தொகை நூலாகத் தொகுத்துப் படிக்கிறபோது அலுப்பு ஏற்படும் என்று சுரேஷ்குமார் நியாயமான ஒரு பயத்தைத் தனது முன்னுரையில் பதிவு செய்கிறார். ‘மாபெரும் சூதாட்டம்’ என்ற இந்தத் தொகை நூலைப் படிக்கிறபோது எனக்கு அலுப்பு ஏற்படவில்லை. மாறாக அத்தனை கதைகளில் இருந்தும் வெவ்வேறு உணர்வுகளையும் வெவ்வேறு சூழல்களின் வெவ்வேறு வெளிப்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது.

sureshkumar_indrajithஎழுபதுகளில் முக்கியத்துவம் பெற்ற சிறுகதையாளர்களின் தொகைநூல்கள் வந்துள்ளன. அத்தொகை நூல்கள் அயர்ச்சியை ஏற்படுத்தியவாயும் உள்ளன. அந்த விபத்து இத்தொகுப்பு நூலில் நிகழவில்லை. பொருண்மை சார்ந்தும் களம் சார்ந்தும் விதவிதமான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. கூடுதலாக இந்திரஜித்தின் சொல்முறை உத்தி இதற்குக் கூடுதல் பங்களிப்புச் செய்கின்றது. எண்பதுகளில் எழுத வந்த எழுத்தாளர்களில் தனித்துவமான சொல்பாதை யமைத்துச் சென்றவர்களில் சுரேஷ்குமார் இந்திரஜித் முக்கிய மானவராக அடையாளமாகிவருகிறார், இத்தொகுப்பின் மூலம், கோணங்கியின் சொல்முறையில் அகம் காய்ந்து வறண்டு போகிறது. அவரது கதைகள் மனிதனை அவாவாமல் நிழல்களைச் சுருட்டமுயல்கின்றன. இந்திரஜித்தின் கதைகள் இந்த வகையில் சமூகத்தின் கதைகளாகவும் சமூக மனிதர்களின் கதைகளாகவும் மாறுகின்றன. இலக்கியத்தின் அடிப்படை களைப் பற்றிக்கொண்ட எழுத்தாக சுரேசின் கதைகள் இருக் கின்றன.

ஒரு புள்ளியிலிருந்து வேறுசில புள்ளிகள் நோக்கிச் சென்று திறக்கிற கதைகளையும் (‘ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள்’, ‘அலையும் சிறகுகள்’) வௌ;வேறு புள்ளி களிலிருந்து ஒரு மையத்தை நோக்கி வந்தடையும் கதை களையும் (‘திருமண வரவேற்பு’, ‘விரிந்த கூந்தல்’) எழுதி யிருக்கிறார். போர்ஹே பாணியிலான புனைவான தகவல் களை முன்வைத்து விரித்துச் செல்லும் கதைகளும் (‘புனைவு களின் உரையாடல்’, ‘மாபெரும் சூதாட்டம்’) அகமும் புறமுமாக அல்லாடும் மனச்சிக்கலைச் சொல்லும் கதைகளையும் (‘சுழலும் மின்விசிறி’, ‘திரை’) எழுதியிருக்கிறார். ஒரு படைப்பாளியாக வடிவ உணர்வோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவருடைய தலைமுறையில் இவ்வளவு அக்கறையோடு சொல்முறையில் கவனம் எடுத்துக்கொண்டவர் தமிழில் வேறு ஒருவரை உடனடியாகச் சொல்லமுடியவில்லை கோணங்கி, ஜெயமோகன், பிரேம்-ரமேஷ், யுவன்சந்திரசேகர், டி.கண்ணன், பா.வெங்கடேஷ், எஸ்.ராமகிருஷ்ணன், ஆதவன் தீட்சண்யா முதலியவர்கள் எல்லாம் இவருக்குப் பின்னால் தங்களுக்கான பாணிகளை உண்டாக்கிக் கொண்டவர்கள். சாருநிவேதிதா சொல்முறைக்காக முன்னோடி வரிசையில் வருவார்.

நமது வாழ்க்கையின் அனுபவங்களைக்கொண்டு உலக வாழ்க்கையின் அனுபவங்களையும் மதிப்பீடு செய்கிறார். பூரணத்துவமான லட்சியம் என்ற ஒன்றில்லாமலேதான் எல்லாச் செயல்பாடுகளிலும் இயைந்து வெளிப்படுகின்றன. செயல் படுகின்றன என்பதைத் தனது பார்வையாக மீட்டிக்கொண்டு வருவது பல இடங்களில் தெரியவருகிறது. எல்லா நிலை களிலும் அவரவர்களுக்கான விருப்ப அரசியல் தொழிற்பட்ட படியே இருப்பதைக் கழிந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அமைவதைச் சொல்கின்றன இவரது கதைகள். எதிர்காலத்திலும் கூட இவ்விதமே அமையும் என்ற வெறுமையின் தொனியை வெளிப்படுத்தும் படைப்பாளியின் கோணமும் இருக்கிறது. அறம்சார்ந்த கருத்தியல்களை சமூகத்தின் மீது படியவைக்க முயன்றாலும் போகிற போக்கில் ஊதித்தள்ளிக்கொண்டு, அதனுடைய இயல்பில் மனித உலகம் இயங்கிக்கொண்டிருப் பதை விலகி நின்று சொல்கிற கதைப்பாணி இவருடையது (ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள்).

ஒட்டுதலற்ற உறவுபேணும் முறை இன்று நமது பண் பாட்டின் புதிய அம்சமாகப் படிந்துவிட்டது. போலி சம்பிரதாய சந்திப்புகளுடன் தான் நம் வாழ்க்கை நகர்கிறது. இது இந்த நூற்றாண்டில் மானிடகுலத்திற்கு வந்த புதிய அம்சம். இந்த அம்சத்தை இந்திரஜித் கதைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. இந்திரஜித், கதைகளுக்குள் தன் விமர்சனத்தை வைப்பதில்லை. கதைக்கு வெளியே வாசகனிடம் வைக்கிறார். இதனை விமர்சிக்கவும், இதுபற்றி உரையாடவும் வைக்கிறார். ‘சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்’ கதை போன்று ஒரு

சில கதைகளில் தனது எண்ண வெளிப்பாடுகளைச் சுரேஷ் சொன்னாலும் சுவையைப் பாதிப்பதில்லை. ஜப்பான் எழுத் தாளர் டோகுடோவின் உரையாடலில் வைக்கிறார், மிகப் பொருத்தமான தேர்வின் மூலம்.

நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குச் சகஜமாகச் செல்வதற்கேற்பத் துண்டுக் காட்சிகளாக அமைவது இவரின் எழுத்துப்பாணிகளில் ஒன்று. அவை சட்டென்று குழப்பத்தை ஏற்படுத்தும் நிழலாகப்படியும். நிறுத்தி நிதானமாக அடுத்த பத்தியைத் தாண்டும்போது குழப்பம் விலகிக் கொள்ளும். முன்வரி விளக்கங்கள் தவிர்த்த ‘கட்சாட்’களாக உருமாறி உருமாறி நகர்கின்றன. ‘திருமண வரவேற்பு’ கதை வேறு விதமான சொல்முறையால் உருவாகி இருக்கிறது. கதையில் வரும் ‘அவனை’ ஒருவனாகக் கொண்டு வாசிக்கும்போது திகைப்பு ஏற்படுகிறது. ஒருவனே எப்படி ஒரு திருமணத்திற்கு வௌ;வேறு மனிதனாக வந்தான் என்ற குழப்பத்தை வைத்து நிறுத்தி ஏற்படுத்தும் திகைப்பு அது. இந்த நிகழ்வு சாத்தியம் தானா என்று குழப்புகிறது. இந்தக் குழப்பம் உண்டாக்கும் மாயத்தன்மை ஈர்ப்பைத் தரவும் செய்கிறது. ஒட்டாத மூன்று சித்திரங்களாக மிதக்கின்றன. வௌ;வேறு அவன்கள் என்று கதையைப் புரிந்துகொள்ளும்போது ஒரு மையத்திற்கு வந்த மூன்று கிளைகள் என்பது புரிந்துவிடுகிறது.

'திருமண வரவேற்பு’, ‘நள்ளிரவில் சூரியன்’ போன்ற கதைகள் வடிவரீதியாக ஈர்த்தாலும் சிறுகதையின் பாய்ச்சலை நிகழ்த்தவில்லை. ‘ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள்’ கதை, சா.கந்தசாமியின் ‘தொலைந்து போனவர்கள்’ பாணியை நினைவுபடுத்தினாலும் அதனைத்தாண்டி வேறு விசயங்களைப் பேசுகிறது. ‘நள்ளிரவில் சூரியன்’ கதையில் சில சித்திரங்கள் மனவெழுச்சியை அளிக்கின்றன. பூவரசமரமிருந்த வீடுபற்றிச் சொல்லும்போதும், அழுக்கு மூட்டையுடன் ஒருத்தி மரத் தடியில் இருப்பதாகச் சொல்லும்போதும் நாதஸ்வரக்காரர் கதைசொல்லியின் பாராட்டுதலைக் கேட்டு பெருமிதம் கொண்டு வாசிக்கும் போதும் உள்ளம் வாசகனுக்கும் கிளர்கிறது. ஆனால் பேரழகியாக இருந்த சுகந்தி வழங்கிடாது பார்க்க நேர்வதை வாசிக்கும் போதே தி.ஜானகிராமனின் ‘தவம்’ கதை நினைவிற்கு வந்துவிடுகிறது. இந்த சிறு காட்சியை தி.ஜா. தனது ‘தவம்’ கதையில் இதைவிட உக்கிரமான வெளிப்பாட்டுடன் உருவாக்கியிருக்கிறார். சுகந்தியின் வழியாக தி.ஜா. சொல்லாத ஒரு கோணத்தை அப்பகுதி வெளிப்படுத்தியிருந்தால் சிறப்படைந்திருக்கும் தி.ஜானகி ராமனை வாசிக்காத வாசகனுக்கு யாக்கை நிலையாமைப் பகுதி ஈர்ப்பை உண்டாக்கும். ஆனால் இக்கதையில் சிறுசிறு சித்திரங்கள் வேறொன்றை அறிய வருவதுபோலவும் அமைகிறது. இந்தக் குறிப்புகளிலிருந்து கதை சொல்லியாக வரும் எழுத்தாளன், நாவலை உருவாக்கப்போவதாக உணர்ந்து கொள்ள இடமிருக்கிறது.

வடிவத்திற்கும் இலக்கியத்தன்மைக்கும் உள்ள உறவு பற்றிச் சொல்ல வேண்டும். பொதுவாக இந்திரஜித் கதைக்காகச் சொல்முறை உத்தியைப் புகுத்துவதில்லை. தமிழ்ச் சூழலில் நிகழ்ந்துவரும் வெற்று ஆரவாரத்தைப் பின்தள்ளி தமிழ்ச் சிறுகதையின் ஆழத்தைக் கூட்டுவதற்காக, ‘புனைவுகளின் உரையாடல்’ கதையில் ‘ராபர்ட்’ தன் மனைவி பற்றிச் சொன்ன செய்தி வருகிறது. பின் கதை சொல்லி கிளாடிஸ் குலோத்துங்கனிடம் அதைப்புனைவு என்கிறான். அதாவது தான் புனைவாகக் கட்டமைத்தது என்கிறான். (ராபர்ட் சொல்லவில்லை. தன் மனைவியை ராபர்ட்டின் மனைவியாக வைத்து வெளிப்படுத்தும் சாத்தியம்) ஸ்டார் ஓட்டலில் கதை சொல்லி சந்தித்துப் பேசிய மொரோக்கோ நாட்டுப் பெண்ணும் அவளுடைய காதலன், பிரான்ஸ் தேசத்து ஓவியனும் புனைவாகக் கட்டமைக்கப்பட்டவர்கள் என்று திசையை நாம் திருப்பிக் கொள்ளலாம். கொள்ளாமலும் இருக்கலாம். சுரேஷ்குமார் இக்கதைக்குள் ஏற்கனவே எழுதிய ‘பீஹாரும் ஜாக்குலினும்’ கதையை ஒரு கதை சொல்லியாக இழுக் கிறார். பழைய கதையும் இக்கதைக்குள் புனைவாக மலர்ச்சி பெறுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. புனைவின் எண்ணற்ற சாத்தியங்களை சுரேஷ்குமார் உண்டாக்கிக் காட்டுகிறார். இந்தச் சொல்முறை ரசிக்கத்தக்கதாகவும் தெரிகிறது.

இந்திரஜித் அடுத்தகட்டத்திற்குச் சொல்முறையை நகர்த்துவது தெரிகிறது. ஆனால் இந்தப் புனைவுகளின் இழைகளை இலக்கியம் என்று எந்த எளிய வாசகனும் சொல்லமாட்டான். ராபர்ட் சொல்வது புனைவாக இருக்கட்டும் - புனைவில்லாமலும் இருக்கட்டும், கதை சொல்லி சொல்லும் புனைவாக இருக்கட்டும். புனைவில்லாமலும் இருக்கட்டும். ராபர்ட் தன் மனைவிபற்றிச் சொன்னதில் அகத்தின் சிறுபாதை ஒன்று திறக்கிறது. அதுதான் இலக்கியம். காதலித்த மனைவி செத்துப்போனாள் என்று முன்பு சொன்னதும், அவளின் அன்புநிறைந்த கடிதம் தன்னை ஆற்றுப்படுத்துவதாகவும் கூறிய ராபர்ட்டை கதைசொல்லி அவனுடைய மனைவி மக்களுடன் ஒரு ஓட்டலுக்குள் செல்வதைப் பார்க்கிறான். நாமும் மனைவி பற்றிய புனைவை உண்டாக்கி வாழ்பவர்கள் தாம். கனவு வாழ்க்கைக்கும் - இல்வாழ்க்கைக்கும் உள்ள பெருத்த முரண், ராபர்ட் வாக்கு மூலத்திலிருந்து புரியலாம். நாமும் மனைவியை அடிக்கடி கொலை செய்பவர்கள் தானே! மனைவிமார்களும் நம்மை அடிக்கடி கொலை செய்பவர்கள் தான். அவனுடைய கனவுகளின் சிதைவாகத்தான் அந்தப் புனைவு வாசகம் அமைகிறது.

இப்படிச் சொல்கிறேன். சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டாலும் நேராக மூக்கைத் தொட்டாலும் சரி, இலக்கியம் என்பது மனித அகத்தின் சிறப்பு, பகிர்தல், புரிதல். சொல் முறையின் புதியபாதைகள் வெற்றிடங்களாக இருக்கும்போது அதற்கு எவ்வித இலக்கிய அந்தஸ்தும் கிடையாது. அந்தப் பாதைகள் வாழ்வை அவாவிநிற்கிற சவாலை ஏற்றுக் கொள்கிற போதுதான் வடிவத்திற்கும் சிறப்பு சேர்கிறது.

இந்திரஜித் புனைவின் வழி உண்டாக்கும் வரலாறு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திரஜித்தின் பலமான பகுதிகளில் முதன்மையானது. இவ்வகையான கதைகளைப் படிக்கும்போதுதான் இவர் என்ன படித்திருக்கிறார் என்று திரும்பிப் பார்த்தேன். இவரின் படிப்பும் இதன் மீதான தேடலும் விருப்பமும் புனைவில் சிறப்பாகத் தொழில்பட்டிருக்கிறது. ‘காலத்தின் அலமாரி’, ‘பீஹாரும் ஜாக்குலினும்’, ‘மறைந்து திரியும் கிழவன்’, ‘எலும்புக்கூடுகள்’, ‘சந்திப்பு’ போன்ற கதைகள் தமிழில் எழுதப்பட்ட முக்கியமான அரசியல் கதைகள். அந்த வகையில் தமிழ்ச்சிறுகதையின் எல்லையை சுரேஷ்குமார் அக்கறையுடன் விரித்திருக்கிறார். ஆட்சி, அதிகாரம், சுதேசிகளைப்படுத்தும் பாடுகள் மெல்லமெல்ல நெருக்கி உடலைச் சிதைத்து ரத்தக் கூடாக அரைத்து மண்ணாக்கிவிடுகிற அவலத்தை இக் கதைகள் பேசுகின்றன. இனமோதல்களில் அதிகார வக்கிரத்தின் முன் சுதந்திரமும் உரிமையும் நிர்மூலமாக்கப்படுவதை இக் கதைகள் காட்டுகின்றன. பாலியல் சுரண்டலில் சுதேசி பெண்கள் அதனைச் செறித்துக்கொண்டு வலிகளை மறக்கத் தொடங்கும் பேரவலமும் வரலாற்றில் படிகிறது. சுரேஷின் இவ்வகையான கதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். இனமோதல் குறித்த பல்வேறு Non fiction வகை எழுத்துக்கள் துல்லியமான ஆய்வுகளுடன் தோண்டி நம்முன் வைக்கப் படுகின்றன. இந்திரஜித் புனைவின் வழி உண்டாக்கும் வரலாற்றுப் பிரச்சினைகள் உலக நாடுகள் அத்தனைக்கும் பொருந்தக்கூடியதே. வேற்று தேசப் பின்னணியில் எழுதப் பட்ட இக்கதைகள் நம் தேசத்தையும் பற்றியதே. இந்திரஜித் நிகழ்கின்ற கொடூரத்தைச் சொல்லிவிட்டு விலகிக் கொள் கிறார். உதாரணமாக ‘காலத்தின் அலமாரி’ கதையில்: எழுச்சியும் வீழ்ச்சியும், துரோகமும், பழிவாங்கலும்,

பாலியல் சுரண்டலும் என நகரும் இக்கதையில் எல்லாவித அயோக்கியத்தனங்களுக்கும் எல்லோருக்கும் பங்கிருப்பதாக ஆழப்படுத்துகிறார். இப்படிக் கதை மாறுவதை முக்கிய மானது தீமையின் கரங்கள் நல்லவனாக இருந்தவனிடமும் முனைவிட்டு காரியமாற்றத் தொடங்குகிறது. மனிதனிடம் உள்ள இந்த வேட்கை நீக்கமுடியாத தன்மையுடன் இயங்கு வதை அடையாளப்படுத்துகிறார். இந்திரஜித்திடம் உள்ள இந்தப் பார்வை இவ்வகையான கதைகளில் சிறப்பாக வெளிப்படுகிறது. கட்டுரைகள் இந்தப்பார்வையை உண்டாக்கவில்லை என்பது தவிர இவ்விசயங்கள் பேசப்பட்டு வருகின்றன. சுரேஷ்குமார் மேலதிகமாக மன இயக்கத்திற்குள் புகுந்து செல்லாமல் நின்றுவிடுகிறார். நிலப்பின்னணியும் வலுவாக இல்லை. ஆரம்பகாலக் கதைகளில் இந்த மன இயக்கம் அழகாகக் கூடிவந்திருக்கின்றன ‘திரை’, ‘விரித்த கூந்தல்’, ‘அலையும் சிறகுகள்’ கதைகளை அருகில் வைத்துப் பார்க்கும்போது தெரியவருகிறது. நிலப்பின்னணி இக் கதைகளில் கதைகளுக்கெனத் தேவையான அளவு அழுத்தம் பெற்றிருப்பதையும் காணமுடிகிறது.

கதைக்கு அனுசரணையாக மாந்தர்களின் உளவியல் எல்லா விதங்களிலும் கூடி வந்திருக்கின்றன. படைப்பிற்குள் மனிதர்களைச் சுயமாக இயங்கவிடும் மனது சுரேஷ் குமாருக்கு வாய்த்திருக்கிறது. அம்பை போல ஆண் பாத்திரத்தைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொண்டு பெண் பாத்திரத்தைச் சுயமாக உலவவிடும் வறட்டுத்தனம் இல்லை. சுரேஷ்குமார் பெண்களைத் தன்போக்கில் விட்டுக் காட்டுகிறார். இந்திரஜித் மாந்தர்களின் உளப் போக்கை எந்த இடத்திலும் நழுவவிட்டு விடுவதில்லை.

ஆனால் அகத்தின் விசித்திரங்கள் இன்னும் ஆழ மானவை. அதை நோக்கிப் பயணப்பட முடியாமல் போவதற்கு இவரின் பிற்காலத்திய சொல்முறை உத்தி தடுத்துக் கொண்டு விடுகிறது என்று நினைக்கிறேன். உளவியலின் ஆழத்திற்குச் சென்றால் படைப்பிற்குள் மூக்கை நுழைப்பதுபோல இந்தச் சொல்முறையே துருத்திக்காட்டும். கதை சொல்லியின் கூற்று முறையில் வரும் கதைகள் அந்த எல்லைக்குள் நுழைய விடுவதில்லை. அகத்தின் தீமையைக் கண்டடைய இந்தச் சொல்முறை தடையாக இருந்தால் அதனைத் தூக்கி எறிய வேண்டும். இந்திரஜித் அந்தக் காட்டிற்குள் இல்லை என்பது தெரிகிறது. இப்படிச் சொல்வதால் இந்திரஜித்தின் கதைகள் ரொம்பவும் பின் நகர்ந்து நிற்கின்றன என்று பொருள் அல்ல. அவரின் கதை உலகில் இதனைச் சரியாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார். நான் சொல்லவருவது மேலதிகமான பாய்ச்சல்.

அன்றாடச் செய்தித்தாள்களில் படிக்கும் வெட்டுக்குத்து, சினிமா, கள்ளக்காதல், கொலை, திருட்டு, விபச்சாரம் போன்ற செய்திகளை எடுத்துக்கொண்டு கதையாக்கி-யுள்ளார். இச்செய்தியைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தின் பல்வேறுபட்ட முகங்களைக் காட்டுகிறார். ஆர்ப்பாட்டமில்லாத நடையில் கதையை மேலெடுத்து விரிக்கும்போது மனிதர்களின் கொதிப்புகளுக்குப் பின்உள்ள இச்சைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. பணத்திற்காகவும், காமத்திற்காகவும் மனிதனின் லோவாய்த்தனங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. காவல்துறையினர், முதலாளிமார்கள், உழைப்பாளிகள், திருடர்கள், ஓட்டுநர்கள், காமக்கிழத்திகள், எடுபிடிகள், வேலைக்காரிகள் என இவர்களின் நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்தப்பக்கமும் சாயாமல் ஆடும் ஆட்டத்தினை ஒரு பார்வையாளனாக இருந்து சொல்கிறார் (‘வெற்றிப் படகுகள்’) இந்திரஜித் தனக்கான சார்புகளை உருவாக்கிக் கொள்வதில்லை. மாறிக்கொண்டே இருக்கும் சேர்க்கைகளை எந்தத் தத்துவமும் பாதிக்கவில்லை என்று சுட்டுகிறார்.

இந்த நவீன உலகின் இயக்கத்தினைச் சொல்லும் இடங் களிலெல்லாம் இந்திரஜித் என்ற புனைகதையாளனுக்குப் பார்வை விசாலப்பட்டு வருகிறது.

இந்திரஜித்தின் பிற்காலக் கதைகளில் பல்வேறுபட்ட நிலம் உண்டு. கதை காலூன்றிக் கொள்ள நிலக்காட்சிகள் இல்லை. ஆனால் ஆரம்பகாலக் கதைகளில் கதைக்குத் தேவையான அளவு நிலம் விரிந்துகொள்கிறது. பிற்காலக் கதைகளில் நிஜம் சிறுத்துப் போனாலும் குறையாகப் பார்க்க விடாதபடி சொல்முறைக்குள் வாசகனை இழுத்துவிடுகிற சாமர்த்தியம் இருக்கிறது. அவர் எடுத்துக்கொண்ட பிரச் சினையை நிலக்காட்சியில் நிறுத்தவேண்டிய அவசியமில்லாத பிரச்சினையாக மாற்றிக்கொள்கிறார். கொந்தளிப்பான அரசியல் சூழலில் அதிகாரிகளின் கொடுங்கோன்மையைச் சொல்லும் ‘காலத்தின் அலமாரி’, ‘எலும்புக்கூடுகள்’, ‘சந்திப்பு’, ‘பீஹாரும் ஜாக்குலினும்’ கதைகளையும், கனவுகளும் லட்சியங்களும் அகத்திலிருந்து உருவாகாது சூழலின் கையசைப்புகளுக்குச் சாய்ந்து இயக்குகின்ற போக்கைச் சொல்லும் ‘ஓர் இடத்திற்குப்பல வரைபடங்கள்’ போன்ற கதைகளை நிலக்காட்சியில் வைக்காமல் என்னால் முடியாது. இந்திரஜித் தனது சொல்முறையால் வாசகனை அந்தப்பக்கம் பார்க்கவிடாமல் சாமர்த்தியமாகத் தன் வசப்படுத்திக் கொள் கிறார். அதாவது வாசகன் குறையாகப் பார்க்க முடியாதபடி திறமையாக ஒரு திரையைப் போட்டுவிடுகிறார். தனிப்பட்ட முறையில் ஒரு வாசகனாக, ஒரு எழுத்தாளனாக, ஒரு விவசாயியாக இக்கதைகளில் அந்தப் போதாமை உள்ளது என்பதை இந்திரஜித்திற்கு முன்வைக்கிறேன். நகர்சார்ந்த வாசகனுக்கு, எழுத்தாளனுக்கு இது ஒரு முறையாக மண்டையில் உறைக்காது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

ஷமாபெரும் சூதாட்டம்’ என்ற தலைப்பு ஒரு கதையின் தலைப்பாக மட்டும் இல்லாமல் ஒரு தொகை நூல் விளிக்கும் பிரச்சினைப்பாடுகள் அனைத்திற்கும் பொருத்தமாக அமைந் திருக்கிறது. புனைகதை உலகத்திற்கு மட்டுமல்லாது இந்த நவீன உலகமே மாபெரும் சூதாட்டத்தில் இயங்குவதை இத்தொகுப்பு சொல்லவருகிறது. பல்வேறு முனைகளில் நடக்கும் சூதாட்டங்களின் திரட்சியாக இது அமைகிறது.

ஆனால் ‘மாபெரும் சூதாட்டம்’ என்ற தலைப்புக் கதையின் உத்தி வெற்றிகரமாகச் செயல்படவில்லை. நம்பிக் கைகளின் கருத்தியல்களைக்கொண்டு ‘இசபெல் ஆரலன் டே’, ‘ஐசக் பாஸ்கர் சிங்கர்’ போன்றோர் நவீன மனிதனை நம்பவைக்கிற உளவியலின் சாரத்தின் வழியும், அரசியல் நெருக்கடியிலும் வைத்து சாகசம் பண்ணியிருக்கிறார்கள்.

‘மாபெரும் சூதாட்டம்’ கதை இந்திரஜித்திற்கே உரிய புற உலக இயக்கத்தின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட ஆட்டத்தைச் சொல்லமுனையும் கதைதான். சீட்டாட்டத்தைப் போன்று வாழ்க்கையில் அடுத்து திறக்கிற கணம் மர்மமானதே என்று சொல்ல வருகிறார். இதனை நிகழ்வுகளின் அடுக்கு களிலிருந்தே பார்க்காமல் சீட்டாட்டத்தையும் நிகழ்வுகளையும் ஒப்புமைப்படுத்திச் சொல்லும் பாணி விளக்கக்கதையாக மாறிவிட்டது ‘வான சாஸ்திர குறிப்பு நோட்டு’ என்ற கதை, சொல்வதற்கான முன்னெடுப்பு சரக்கைச் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.

அதேசமயம் ‘பீஹாரும் ஜாக்குலினும்’, ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சியும்’ கதைகளில் சொல்முறை உத்தி மெல்லமெல்ல பதுங்கி நம் தேசத்தின் மீதான விமர்சனத்தை முன்வைக்கின்றன. ரவுடித்தனமும் சுரணை கெட்டதனமும் மிதமிஞ்சிப் போன அவலம் தீராது நகர்ந்துகொண்டிருப்பதை மௌனமான தொனியில் அடையாளப்படுத்துகிறார். இயற் கையின் கோலங்கள், எளிய மனிதர்களின் வெகுளித்தனங்கள், குழந்தைகளின் சுயம்புவான கற்பனைகள் போன்ற எளிய நல்லம்சங்களை நம் அறிவுத் திறம் முடக்குவதைச் சொல்லி அழிவுச் செயலை மறுக்கின்ற இடத்திற்கு மேலெடுத்துச் செல்கின்றன. தமிழ்ச்சூழலில் உத்தி யானைக்கால்போல வீங்கிக்கொண்டு விசயம் சிறுத்துப் போய்விடுவதைப் பார்க்க முடிகிறது. இந்திரஜித் இந்த சிக்கலை உணர்ந்தவராக இருக் கிறார். அவரின் படைப்பு குறித்த அக்கறை, என்பது வாழ்வின் மீதான விமர்சனமாக இருப்பது எனக்கு முக்கியமாகப் படுகிறது. கதைகளுக்கான கால இடைவெளிகூட இந்தத் தேர்வு சார்ந்த சுயபரிசீலனைக்கு அவருள் இடமளித்தே வந்திருக்கிறது.

நமக்குத் தெரிந்த பிரச்சினைகளை, நூல்களின்வழி தெரிந்துகொள்கிற பிரச்சினைகளை நமக்குத் திரும்ப கதை வடிவில் கொண்டுவந்து வைக்கிறார் (அறிக்கை) இருந்து கொண்டிருக்கும் பிரச்சினையை நம்மால் தீர்க்கமுடியாமல் இயைந்துபோய் விடுகிறோம். படைப்பாக அதே பிரச்சினை களை வைக்கும்போது ஒன்றும் செய்ய முடியாமல் நிற்க வேண்டியதாகிவிடுகிறது. இந்த மாயச் சூத்திரக்கயிறு சூதாட்டத்தை நிகழ்த்துகிறது. நம்மிடம் கோணல் சிரிப்பை உண்டுபண்ண மட்டுமே செய்கின்றன. (ரிடாகா பேட்டி) புற உலகம் நடத்தும் நாடகத்தைப்போல அகமும் ஒரு நாடகத்தை நிகழ்த்திக்கொள்கிற கதைகள் (திரை) உள்ளன. இக்கதை களில்தான் அகம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. ‘அலையும் சிறகுகள்’ முதல் தொகுப்பிலேயே இந்த அகத்தின் ஆட்டத்தை அளவுடன் புனைவிற்குள் விரித்துள்ளார். இவரது இரண்டாம் தொகுதியான ‘மறைந்து திரியும் கிழவன்’-இல் அகம் கொள்ளும் புனைவுப் பாதைகள் பதற்றங்களுடன் விரிந்து செல்கின்றன. மௌனி முழுக்க முழுக்க மனசஞ்சாரத்தின் வெளியைப் புனைவாக்கினார.; பல கதைகளில் சுரேஷ்குமார் இந்திரஜித் அந்த அகத்தின் கற்பனைக் கோட்டைகளை நிலத்துடன் பிணைக்கிறார். மொழிமீது தொடர்ந்து வைத்த விமர்சனத்தின் விளைச்சல் இது. மௌனியை ‘மண்ணில் காலூன்றாது பறக்கும் கலைஞன்’ என்று சுந்தர ராமசாமி சுட்டிக்காட்டிய பலவீனத்தைக் களைந்து சுரேஷ் குமார், கதையை சமூக மனநெருக்குதலில் வைக்கிறார். உதாரணமாக ‘திரை’ கதையைச் சொல்லலாம். ‘மாபெரும் சூதாட்டம்’ தொகுப்பு லத்தீன் அமெரிக்க சிறுகதைகளின் சொல்முறையை எடுத்துக் கொண்டது. புனைவிற்குள் ஒரு யதார்த்தப்பாணி இதில் உருவாகிறது. புனைவிற்குள் இவர் உருவாக்கிக் காட்டும் வரலாற்றுப் பார்வை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் மனிதார்த்தத்திற்கு எதிராக நடக்கும் கொடூரங்களை, கீழ்மைகளை, துரோகங் களை ஒரு விவாத தளத்தில் வைக்கின்றன இவரது கதைகள். ஆனாலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் அக்கதைகளுக்குள் இலக்கியம் வெளிப்படுத்தும் தரிசனம் இல்லை என்று தோன்றுகிறது. அந்த ஆழத்தைக் கவ்விப் பிடிப்பதுதான் படைப்பாளியின் முன் உள்ள சவால். இச்சொல்முறை கொண்ட கதைகளில் சுரேஷ்குமார் அந்தத் தகைமையை அகழ்ந்து கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஒரு வாசகனாக நான் சொல்லவருவது.

இக்கட்டுரையை இந்திரஜித் பற்றிய எனது தொடக்க கட்டுரையாக மட்டுமே இங்கு முன்வைக்கிறேன். எனக்குக் கிடைத்த அவகாசத்தில் இப்போது இதை மட்டுமே செய்ய முடிந்தது. தமிழ்ச்சிறுகதை ஆளுமைகள் உலகத்தரத்திற்குப் பத்துப்பத்துக் கதைகள் தந்திருப்பதாகச் சொல்வதுண்டு. அதில் உண்மையும் இருக்கிறது. அந்த வகையில் இந்திரஜித்தின் எந்தப் பத்துக்கதைகள் அவை என்பதை இன்னொரு சந்தர்ப் பத்தில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

இறுதியாக ஒன்று, சுரேஷ்குமார் இந்திரஜித் மலைச் சிகரத்திற்கும் செல்லவில்லை பாதாள குகைக்குள்ளும் செல்லவில்லை. அவர் நடந்த பாதைகளில் முட்புதர்களின் சிடுக்கையும் பாலைவனங்களின் மாலை வேளையையும் மட்டுமே காணமுடிகிறது. இதன் கடுமையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இதுதான் அவர் என்றால் அதிலிருந்து இவரை மதிப்பிடலாம். கலையின் திசைகளில் இன்னும் ஆழமும் அகலமும் இருப்பதாக நினைக்கிறேன். அதனை நம்முன்னோடிகளே சாதித்திருக்கின்றனர். இந்திரஜித் இன்னொரு இலக்கிய முகத்தைக் காட்ட வருவார் என நம்புகிறேன்.

Pin It