எப்போதாவது அதன் பக்கங்களைப் புரட்டுவதுண்டு. புரட்டும்போது, அதிலிருந்து மக்கிய வாசனை வருவதில்லை. அதுவேறு வாசனையாக இருக்கிறது. அதை நான் அறிவு வாசனை என்று கருதிக்கொள்கிறேன். புதிய புத்தகங்களுக்கு சுகமான வாசனை இருப்பதுபோல, பழைய புத்தகங்களுக்கென்றும் தனியாக ஒரு வாசனை இருக்கிறது. புத்தகத்தை விரும்புபவர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்திருக்கும். புத்தகம் எத்தனைக்கெத்தனை பழையதோ, அத்தனைக்கத்தனை அதன் வாசம் அதிகமாக இருக்கும்.

மதுரை முனிச்சாலை ரோட்டின் பேறுகால ஆஸ்பத்திரிக்கு எதிரில் அந்தப் பழைய பேப்பர் கடை இருக்கிறது. முன்புறத்தில் பத்துக்குப் பத்தாகவும் அதையொட்டி உள்ளே அகன்று பரந்த இடமாகவும் அது விரிந்திருக்கும். எங்கள் உறவுக்காரர்களுக்குச் சொந்தமான இடம் அது. அதற்கும் இந்தக் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை. பழைய திருநெல்வேலி மாவட்டம் திருந்செந்தூரைத் தாண்டி நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் அதை, அவர்களின் அப்பா துரைராஜ் நாடார் பெயரில் நடத்தி வந்தார்கள்.

அப்போதுதான் நான், குமுதத்தையும் ஆனந்த விகடனையும் இலக்கியம் வளர்க்கும் பத்திரிகை களாகக் கண்டடைந்திருந்த நேரம். பக்கத்து மிக்சர் கடைக்குப் பொட்டலம் மடித்துத்தர வரும் அவற்றை ஒன்றுவிடாமல் படித்து, என் அறிவு வேட்டையைத் துவங்கியிருந்த நேரமும் அதுதான். நண்பர்கள் ‘தட்டேத்தி’ விடுவதை உண்மை என்று நம்பிய பருவமும் அதுதான்!

அப்படிப் பல ‘அதுதான்கள்’ என்னை ரச வாதம் செய்து, எனக்குள் இருந்த எதையோ ஒன்றைக் கதை சொல்லியாக உசுப்பியிருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருந்த நான் விழித்துக்கொண்டு விட்டதாகக் கருதி, ஒரு கதையை எழுதி, அதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தேன். அப்புறம் மரவட்டையாகச் சுருண்டு வழக்கம்போல தினமணி டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படமும் அலங்கார் தியேட்டரில் சிவாஜி படமுமாகப் பார்க்கப் போய்விட்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை மத்தியான வேளையில் தபால்காரர், ‘இந்தப் பெயருல யாருருக்கா?’ என்று கேட்டு, ஒரு கவரை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார். அதை அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தால், நான் எழுதியனுப்பியிருந்த கதை. ஆனந்த விகடனின் ஐம்பத்திரண்டாம் பக்கத்தில் அச்சாகியிருந்தது, 5 பக்கங்கள். ஜெயராஜ் படம் போட்டிருந்தார். என் பெயர் அழகாக (?) அச்சிடப் பட்டு, அடிக்கோடு இடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நொடியிலிருந்து என் கால்கள் பூமிக்கு மேலே இரண்டு அங்குல உயரத்தில் இருந்தன. தரையில் கால்கள் பாவவே இல்லை. தலையில் கொம்பு முளைத்திருப்பதுபோல எதுவோ தட்டுப் பட்டது. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற கர கரத்த குரல் எனக்குள்ளிருந்து எனக்கே கேட்டது. தலையைச் சிலிர்த்துக் கொண்ட போது, ‘ஈ பாலக் காட்டு மாதவன் யாரையும் நம்பி இல்லா’ என்ற பிசுறும் குரலும் கேட்டது. ‘Fileக்கும் Lifeக்கும் நாலெழுத்துதான். எழுத்து மாறுச்சுன்னா எல்லாமே மாறிரும்’ என்று பட்டையாய்க் கண்ணாடி போட்ட பாலசந்தரும் தத்துவம் பேசினார்.

நெசம்மா சொல்றேன். அப்படித்தான் வாசகர் களின் கெட்டநேரமும் எனது நல்லநேரமும் ஒன்று கூடி வந்தது. அப்படி வரும் என்று நான் நினைத் திருக்கவேயில்லை. பிளஸ் இண்டு பிளஸ்ஸோ, மைனஸ் இண்டு மைனஸ்ஸோ சேர்ந்துதான், பிளஸ் ஆகும் என்று படித்திருக்கிறேன். ஆனால் இங்கு பிளஸ் இண்டு மைனஸ் சேர்ந்து பிளஸ் ஆகியிருந்தது.

என் அண்ணனுக்கு ஒரு சைக்கிள் கடை இருந்தது. வாடகை மற்றும் ரிப்பேர் நிலையம். ‘லூனா சைக்கிள்ஸ்’ என்று பெயர். அண்ணன் காங்கிரஸ் காரர். இளைஞர் காங்கிரஸ் பொறுப்பிலிருந்தார். அந்தக் கடைக்கு திமுகாக்காரர்களும் வருவார்கள். அதிமுகாக்காரர்களும் வருவார்கள். அதில் பாதிப் பேர் வாத்தியார்கள். சிலபேர் யுனிவர்சிட்டி வாத்தி யார்கள். காலையிலும் சாயங்காலமும் கடையில் ஆட்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். அரசியலும் சினிமாவும் பேசுவார்கள். அதைத் தாண்டி மூணு வட்டிக்குக் கொடுத்த கணக்கைப் பார்ப்பார்கள். அப்புறம் யார் யாருடன் (ஓடிப்) போனார்கள் என்ற கதை பேசுவார்கள். ஒருபோதும் அந்த வாத்தி யார்கள் பாடத்தைப் பற்றியோ... படிப்பைப் பற்றியோ பேசி நான் கேட்டதே இல்லை.

ஆனால், அவர்கள் எல்லோரும் என் முதல் கதையைப் படித்துவிட்டு, ‘அப்டியாக்கும்... இப்டி யாக்கும்’ என்று புகழ்ந்து பேசினார்கள். சும்மாவே புகழ்ச்சி என்றால் நமக்கு ரொம்பப் புடிக்கும். அதிலும் நம்மைவிட அதிகம் படித்தவர்கள் புகழுகிறார்கள் என்றால், சும்மாவா? அதற்குள்ளே இருக்கின்ற சூச்சுமம் தெரியாமல் மதிமயங்கிப் போய்விட்டேன். ‘அடுத்த கதை எழுதலையா... எழுதலையா?’ என்று வேறுவேலையே அவர்களுக்கு இல்லாத மாதிரி கேட்டு என்னை ‘நச்’செடுத்துவிட்டார்கள். ‘அடுத்த கதை எழுதினால்தான் விடுவேன்’ என்பது மாதிரி அவர்கள் பேச்சு இருந்தது. எதைப் பற்றி எழுதுவது?

அப்போதுதான் இங்கர்சால் வாத்தியார் சொன்னார். வெள்ளாளப்பட்டி அரசு ஆரம்பப் பாடசாலையில் வாத்தியார், அவர். ‘நெறைய படிடா. அப்பத்தான் எழுதுற உத்தி வரும்!’ என்று. அவர் எம். ஜி. ஆர். ரசிகர். ரசிகரென்றால் தீவிர ரசிகர். இப்போதிருக்கும் சூப்பர் ஸ்டார், தல, தளபதி ரசிகர்கள் மாதிரியெல்லாம் இல்லை. அவர் வேற மாதிரி. முதல்நாள் முதல் காட்சியில் படம் பார்த்து விடுவார். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் போட்டுக்கொண்டு வரும் டிரஸ் மாடலை அன்றைக்கு சாயந்திரமே தைத்துப் போட்டுக்கொண்டு வந்து விடுவார். எம்பிராய்டரி பூப்போட்ட சட்டைகள் அவருக்கு இஷ்டமானவை. வெள்ளைச் சட்டைக்கு கருப்புநிற பட்டன்தான் சரியானது என்பதிலிருந்து அவர் ரசனை புரிபடும் என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் அவர் சொன்ன ஒரே சரியான யோசனை, ‘நெறைய படிடா. அப்பத்தான் எழுதுற உத்தி வரும்!’ என்பதாகத்தான் இருக்க முடியும்.

அந்தநேரத்தில் தமிழில் வெளிவந்த அத்தனை பத்திரிகைகளிலும் துணுக்குச் செய்திகளையும் வாசகர் கடிதங்களையும் திசை முத்து என்பவர் எழுதி வந்தார். அவர் பெயரை முன்னமே பார்த் திருக்கிறேன். அவர் என் சிறுகதை பிரசுரமான அடுத்த வாரத்தில், அதற்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறார். அதை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்தக்கடிதம் எனக்கு ஆனந்த விகடனி லிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்த விலாசத்தைப் பார்த்தால், பக்கத்து ஏரியா ஆசாமி!

ஓடோடிப்போய் அவரிடம் நட்பு வளர்த்தேன். ‘வாங்க எழுத்தாளரே!’ என்று அவர் தன் பங்குக்கு பட்டையைக் கட்டினார். சந்தோஷமாகத்தான் இருந்தது., நட்பு இறுகஇறுக அவர், ‘துணுக்குச் செய்திகளுக்கு ஆதாரமாக இருக்கும் இடத்துக்குப் போவோம் வா’ என்று, ஒருநாள் அழைத்துப் போனார். போன இடம், நவ்வலடி சகோதரர்கள் நடத்திவந்த அதே பழைய பேப்பர்கடை! அந்தப் பழைய பேப்பர் கடை மதுரையிலேயே சற்றுப் பெரியது. சுற்று வட்டாரத்தில் பழைய பேப்பர் வாங்கும் தலைச்சுமை வியாபாரிகள், நடை வியாபாரிகள், சைக்கிள் வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் எல்லோருமே அங்கேதான் கொண்டு வந்து போடுவார்கள். காகிதங்களில் இன்ன காகிதம் என்றில்லாமல் எல்லா வகையையும் அங்கே பார்த்திருக்கிறேன். யுனெஸ்கோ கூரியரை அங்கேதான்... பழைய புத்தகமாகத்தான் முதல் முறையாகப் பார்த்தேன். அதற்குமுன் அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கணையாழியைக் கண்டடைந்ததும் அங்கேதான். மணிக்கொடி, வானம்பாடி எல்லாமே யாரோ படித்துவிட்டு எடைக்குப் போட்ட பழைய புத்தமாகத்தான் எனக்கு அறிமுகமானவை.

அங்கு வரும் ஆங்கிலப் புத்தகங்களைப் பொறுக்கி யெடுத்து, அதிலுள்ள படங்களைப் பார்த்து, படத்துக்கு ஏற்ப தங்கள் அறிவுக்குப்பட்ட தமிழில் துணுக்குகள் ஆக்குவதற்கான கோடவுனாகவும் அந்தப் பழைய பேப்பர்கடை இருந்துவந்தது. அங்கு, எனக்கு முன்பே வந்து சேர்ந்தவர்களாக துணுக்குத் திலகம் ஜெகவை பால்ராஜ், சு. த. குருசாமி, ‘ஓ’ பத்திரிகை கிருஷ்ணன் போன்றவர்கள் இருந்தார்கள். நவ்வலடி சகோதரர்களுக்கு இதுபோன்ற படைப் பாளர்கள் தங்கள் கடைக்கு வந்து போவது பெருமைக் குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். கடையில் வேலை நடந்து கொண்டிருக்கும்போது போனாலும் கூட, நவ்வலடி சகோதரர்கள் முகம் சுளித்ததில்லை. மாறாக ‘வாங்க!’ என்று வரவேற்பார்கள்.

ரீகல் டாக்கீஸ் வாசலிலும் டவுன் ஹால் ரோடு கடைகள் முன்பாகவும் பழைய புத்தகக் கடை விரிக்கும் நண்பர்கள் அவசர அவசரமாக அங்கிருக்கும் புத்தகங்களைப் பிரித்தெடுப்பார்கள். மலைபோல் குவிந்துகிடக்கும் காகிதக் குவியலுக்குள்ளிருந்து முத்தும் பவளமுமாக அவர்கள் கண்டெடுப்பார்கள். பள்ளிப் பாடப் புத்தகங்கள், கல்லூரிப் பாடப் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், சிறுவர் கதைகள், இலக்கியப் புத்தகங்கள் என்று அள்ளிக்கொண்டு போவார்கள்.

ரசனை மிகுந்த ஒரு மனிதன் அதை வாசித்து விட்டு, மனத்துக்குள் அதன் சாரத்தைச் சேமித்துக் கொண்டு, காகிதங்களைத்தான் அவன் பழையதாக எண்ணிப்போட்டு விடுகிறான். அந்த காகிதங்கள் அடுத்தவனின் ரசனைக்குத் தீனியாவதாக எனக்குத் தோன்றுவதுண்டு. புத்தகங்களுக்கும் மனிதர் களுக்கும் உள்ள உறவைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றும் கருதுகிறேன்.

நவ்வலடி சகோதரர்களில் மூத்தவர் சபாபதி. ப.நெடுமாறன் கட்சியில் செயலாளராக இருந்தார். நடுவிலுள்ள ராமச்சந்திரன், அரசு அலுவலகங்களில் ஏலம் எடுக்கப் போய் வருவார். கடைசி சகோதரரான முத்துராமன் பெரும்பாலும் கடையிலிருப்பான். முத்துராமன்தான் என் தேடலுக்கு உறுதுணையாக இருந்தவன். ஏலத்தில் எடுத்துக்கொண்டு வரும் பழையதில் நல்ல வெள்ளைக் காகிதங்கள், நல்ல நிலையிலுள்ள கவர்கள், முத்திரையிடப்படாத தபால் தலைகள் எல்லாமே இருக்கும். இதைத் தனியே பிரித்தெடுக்கும்போது, வெள்ளைக் காகிதங் களையும், கவர்களையும், தபால் தலைகளையும் முத்துராமன் எனக்குக் கொடுப்பான். “எழுதியனுப்ப யூஸ் ஆகும்ல்ல!” என்று.

முதல்கட்டமாக எனக்குப் பழைய புத்தகங்கள் மூலம் அறிமுகமானவர்கள் ராஜேஷ்குமாரும், பாலகுமாரனும்தான். அந்தப் புத்தகங்களாக எடுத்துத் தந்தான். அந்தப் புத்தகங்கள்தான் அதிகமாகப் பழைய பேப்பர் கடைக்கு வரும். பழைய பேப்பர் கடைக்கு அதிக வரவாக எது இருக்கிறதோ, அது அதிகமாக விற்பனையாகிறது என்று பொருள் என்று முத்துராமன் சொல்வான். அவன் அவ்வளவாகப் படித்தவனில்லை. அதையேதான் தினத்தந்தி அதிபர் சி. பா. ஆதித்தனாரும் சொல்லியிருக்கிறார். அந்தக் கோட்பாட்டை அங்கே பொறுக்கியெடுத்த ஒரு பழைய புத்தகத்தில்தான் படித்தேன்.

கொஞ்ச நாட்களிலேயே ராஜேஷ்குமாரின் நடையும் பாலகுமாரனின் தன் முனைப்பும் எனக்குச் சலிப்பைத் தந்துவிட்டது. சுஜாதா என் ஆட்சிக்குள் வந்தார். கொஞ்ச நாட்கள் தான். அவரும் ‘போய்ட்டு வாரேன்’ என்று என்னிடமிருந்து விலகிவிட்டார். இதற்குள் குங்குமத்திலும், குமுதத்திலும், கல்கியிலும் எனது கதைகள் வந்திருந்தன. ஒன்றுபட்ட இராம நாதபுர மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செய லாளராக இருந்த தோழர் எஸ். ஏ. பெருமாளை, சிவகாசியையடுத்த மீனம்பட்டியில் பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்தின் மீட்புப் பணியின் போது சந்தித்தேன். முதல் சந்திப்பு அது. அன்றிரவு, அந்த நெடிய உருவத்துடன் குட்டி முயல்போலப் பேசிக்கொண்டே நடந்தபோது, அந்த வாரம் என் சிறுகதை வெளியாகியிருந்த கல்கியை அவரிடம் தந்தேன். வாங்கி வைத்துக்கொண்டார்.

அதன்பின் நான் அவரைச் சந்தித்தபோது, ஏழெட்டு ஆண்டுகள் போயிருந்தன. பல்வேறு பத்திரிகைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட எனது சிறுகதைகள் வந்திருந்தன. அப்போது அவர் மதுரை தீக்கதிர் அலுவலக வளாகத்தின் நிர்வாகப் பொறுப்பி லிருந்தார். சிவகாசி சந்திப்பின்போது நான் கொடுத்துவிட்டு வந்திருந்த சிறுகதையை நினைவு கூர்ந்தார். “ரொம்ப நல்ல கதை அர்ஷியா. நல்லா வந்துருச்சு!” என்று ஒரு சகாவைப்போல உரை யாடினார். உரையாடல் எனக்கு சமதையாக இருந்தது. தன்னை அவர் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள வில்லை. தன்னை, என் தரத்துக்குக் கீழிறக்கிக் கொண்டு பேசினார். “நெறைய எழுதணும், அர்ஷியா!” என்று வாழ்த்தினார். டீ வாங்கிக் கொடுத்து உபசரித்தவர், இப்போது மெல்லிய குரலுக்கு மாறியிருந்தார். அது ஒரு ரகசியம் போல... மந்திரம்போல... இருந்தது. காதலியிடம் சிலாகித்துப் பேசும் தன்மை அதற்குள்ளிருந்தது. “இப்ப நீ எழுதிருக்கியே கதை, இந்த மாதிரி எழுதுறதுக்கு ரொம்பப் பேரு இருக்காங்க. நாம இந்த மாதிரியெல்லாம் எழுத வேண்டியதில்ல. அது மத்தவங்க வேலை. நாம மக்களப் பத்தி எழுதணும். அவங்க பாடு பத்தி எழுதணும். அது தான் நம்ம வேலை. அப்டி எழுத எவ்வளவோ இருக்கு. ஒனக்கு நல்லா எழுத வருது. எழுது. இன்னும் நல்லா வரும்!”

அவர்தான் மக்ஸிம் கார்க்கியின் அர்தமோ னவ்ஸ் கொடுத்தார். பலபேர் கைமாறி, அதன் கனத்த பவுண்ட் அட்டை சிதிலமாகியிருந்தது. பழைய புத்தகம். அதன் பக்கங்களைப் புரட்ட, மக்கிய வாசனை வந்தது. அப்போது அது, மக்கிய வாசனையாகத்தான் தெரிந்தது. ஆனால் அது, இது வரை நான் எழுதிய கதைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர வைத்தது. என்னை வெட்கப் பட வைத்தது. அந்த வெட்கத்தை என் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன். நான் மடைமாற்றம் அடைவதற்கு படிக்கட்டாக இருந்த பழைய புத்தகம், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இப்போதும் என்னிடம் பத்திரமாக பைண்ட் செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கின்றது.

எப்போதாவது அதன் பக்கங்களைப் புரட்டு வதுண்டு. புரட்டும்போது, அதிலிருந்து மக்கிய வாசனை வருவதில்லை. அதுவேறு வாசனையாக இருக்கிறது. அதை நான் அறிவு வாசனை என்று கருதிக் கொள்கிறேன். புதிய புத்தகங்களுக்கு சுகமான வாசனை இருப்பதுபோல, பழைய புத்தகங்களுக் கென்றும் தனியாக ஒரு வாசனை இருக்கிறது. புத்தகத்தை விரும்புபவர்களுக்கு அந்த வாசனை மிகவும் பிடித்திருக்கும். புத்தகம் எத்தனைக்கெத்தனை பழையதோ, அத்தனைக் கத்தனை அதன் வாசம் அதிகமாக இருக்கும். அதன் வயதை கார்பன் டேட்டிங் மூலம் கண்டு பிடிக்க வேண்டியதில்லை. அதன் இம்பிரிண்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஒருவேளை இம்பிரிண்ட் இல்லாமலோ, கிழிந்தோ போயிருந்தால் கார்பன் டேட்டிங்குக்குப் போகலாம்.

பைன் மரத்தில் செய்யப்ட்ட காகிதத்தில், அதிலுள்ள ரோசின் என்ற பொருள் மூலம் சுகமான அடர் வாசனை வரும். கிட்டத்தட்ட 100 வகையான வாசனைப் பொருட்கள் காகிதத்துக்குள் ஒளிந் திருக்கிறது.

இப்போது என்னுடைய இரண்டு நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கிறது. அடுத்த நாவலான ‘அப்பாஸ்பாய் தோப்பு’ அச்சுக்குப் போயிருக்கிறது. முதல் நாவல் ஏழரைப் பங்காளி வகையறா தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசையும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் சிறந்த நாவலுக்கான பரிசையும் பெற்றிருக்கிறது.

கடைசியாக, சு. வேணுகோபாலைச் சந்தித்த போது, “அர்ஷியா, ஒன்னோட ‘கபரஸ்தான் கதவு’ சிறுகதை படிச்சேன். கட்டுக்கோப்பா நல்லா வந்துருக்கு. சிறுகதைன்னா, இப்டித்தான் இருக்கணும். தமிழின் சிறந்த சிறுகதைகள்ன்னு ஒரு தொகுப்பு தயாராகிட்டுருக்கு. காவ்யா போடுது. அந்தத் தொகுப்புல இந்தச் சிறுகதையை சேத்துருக்கேன்!” என்று சொன்னார். அத்தோடு நிறுத்தி விட்டிருக் கலாம். நிறுத்தாமல், “அடுத்து நீ படிக்க வேண்டிய முக்கியமான ஒண்ணு இருக்கு. நீலகண்ட பறவை. ரொம்ப முக்கியமான நாவல். கிடைச்சுச்சுன்னா படி. படிச்சுட்டு எனக்குக் குடு!” என்றார்.

நீலகண்ட பறவையைக் கடந்த ஒன்னரை ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். பழைய புத்தகக்கடைகளில் மட்டுமல்ல. புதிய புத்தகக் கடைகளிலும்கூட. அது எங்கும் கிடைப்பதாகக் காணவில்லை. தமிழ்நாட்டிலுள்ள அத்தனை புத்தகக் கடைகளையும் அலசியாகிவிட்டது. நண்பர் களும் நிறையவே தேடினார்கள். கடைசியாக ஒரு நண்பர், ‘அது என். பி.டி.யில் கிடைக்கும்’ என்றார். அங்கும் போனேன். போனார்கள். புத்தகம் கிடைக்க வில்லை. மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். கூடவே அங்கிருந்த ஒருவர், “பரிசல் செந்தில்ட்ட கேளுங்க. அவர்ட்டருக்கு” என்றார்.

பரிசல் செந்தில் நம்பரைத் தேடுவது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. தொடர்பு எல்லைக்குள் வந்துவிட்டார். நீலகண்ட பறவையை அவரிடம் கேட்டபோது, “என்ட்ட ஒரு காப்பி இருக்கு, அர்ஷியா. இப்ப வீடு மாத்திக்கிட்டு இருக்கேன். புது வீட்டுக்குப் போனதும் ஜெராக்ஸ் போட்டு அனுப்பி வைக்கிறேன்!” என்றார். நம்பிக்கையாக இருந்தது. எப்படியும் கிடைத்துவிடும். படித்து விடலாம்.

இரண்டு மாதம் கழித்து தொடர்புகொண்டு கேட்டபோது, பாவமான குரலில் சொன்னார். “அர்ஷியா, என்ட்ட இருந்துச்சு அர்ஷியா. வீடு ஷிப்ட் பண்றப்போ எப்டியோ மிஸ்ஸாயிருச்சு!”

ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. எல்லாப் பழைய புத்தகக் கடையிலும் சொல்லி வைத்திருக்கிறேன். என் அழைப்பு எண்ணையும் கொடுத்து வைத்திருக்கிறேன்.

ஒவ்வொரு அழைப்பையும் நீலகண்ட பறவையின் அழைப்பாகக் கருதியே எடுக்கிறேன்.

Pin It