கு. முத்துக்குமார்
19.11.1982 - 29.01.2009

சாதிப்பன

என்
கண்ணைத் தோண்டி,
அமிலம் ஊற்றி,
காலை வெட்டி,
கையை உடைத்து,
குடலைக் கிழித்து,
சதையை அறுத்து,
என்னைக்
கொன்றுவிட்டதாக
எகத்தாளம் செய்யும்
என் எதிரணியில் உள்ள
நண்பனே, நீ
அறிவாயா?
போராளியின் வாழ்வைவிட
மரணம்
அதிகமாகவே சாதிக்கும்!


வாஸ்து

குளியலறையில் சமையல்-
கழிவறையில் சாப்பாடு-
பரணில் படுக்கை-
நடுவீட்டில் கிணறு-
கூரையில் வாசல்-
குழம்ப வேண்டாம்- இது
"வாஸ்து” சாஸ்திர நிபுணரின்
வீடாகவும் இருக்கலாம்.


காகிதக் கூழ்

கல்லணை கட்ட
கரிகாலனுக்குப்
போரடிமைகளும்
கற்களும்
தேவைப்பட்டனவாம்.
நாம்தான்
முன்னறிவிட்டோமல்லவா
அறிவியலில்?
இனி
காவிரியில் இன்னொரு
அணை கட்ட
கற்கள் தேவையில்லை.
கொஞ்சம்
போதும்
காகிதக் கழிவுகளும்
காகிதக் கூழும்.
மே
உழைப்பதற்குக்
கைகள் மட்டுமே
கொண்டிருந்த
தொழிலாள வர்க்கத்திற்கு
உரிமைகளை
உரக்கக் கேட்க
வாய் புதிதாக
வாய்த்த திருநாள்.


என் தேசம்

மேகம் ஓர் ஓவியன்.
சாரலெனும்
தூரிகையெடுத்து
பூமியின் பூமேனியில்
பசுமையெனும்
வண்ணக்கவி தீட்டும்.
மழை கண்டு
தலை நீட்டும்
இளஞ்சிவப்பு அரும்புகள்.
தலைமீது
பனிசுமந்து
தரைமீது கண்பதித்து
வில்லென வளைந்து
பசும் புல்.
இந்த தேசம் இனியது
இதுவே என்றும் எனது.


மனிதாபிமான உதவி

தீராத வழக்கொன்று
தினம்தினம் சண்டைக்கென்று
திரள்கிறான்
பக்கத்து வீட்டான்.
அவன்
பேச்சை மட்டுமல்ல
மூச்சையே நிறுத்திக்
கொலை செய்தாலும்கூட
நல்லதுதான்.
கழுத்தைச் சுற்றிக்
கயிறு போட்டு இறுக்கக்
கையில் தெம்பு இல்லை.
கத்தி வாங்கக்
கைவசம்
காசும் இல்லை.
அணுகுண்டு கிடைத்தால்
நலம்.
தயவுசெய்து
எந்த நாடாவது
செய்யுங்களேன் எனக்கு
மனிதாபிமான உதவி.

பின் குறிப்பு: இந்தக் கவிதையில் வரும் மனிதாபிமான உதவிக்கும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்த மனிதாபி மான உதவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருப்பதாக யாராவது கருதினால் அது நம் தவறல்ல.


மாலை நேர ஓவியம்

மாலை நேரக்
கடற்கரை.
சங்கு பொறுக்கலில்
சிறுவர்கள்.
காதலியின் முத்தப்
பொறுக்கலில் வாலிபச் சிறுவர்கள்.
மனக்கவலைகளில் மனிதர்கள்.
வானவில்லை நோக்கி
பறவைகளும் படகுகளும்.
இருண்ட பின்னே
விடியும் சில மனுஷிகள்.
அலைக்கரங்களில் நான்.
யாரங்கே?
வரையச்சொல்லுங்கள் இரவிவர்மாவிடம்
இப்படி ஓர் ஓவியத்தை.


உனக்கென ஓர் உலகம்

நண்பனே!
உலகம் உன்னை
உயர்வாக மதிக்கத்
தயாராகவே உள்ளது-
நீ மட்டும் ஏன்
உன்னையே நிந்திக்கிறாய்?
தூக்கத்தைத்
தெருவில் நிறுத்து.
உன்துக்கங்களை
நெஞ்சில் நிறுத்து.
உழைப்பைக்
கைகளில் நிறுத்து.
உலகம்
உன்னை
உச்சியில் நிறுத்தும்.


சுயமரியாதை

மீண்டும்
மீண்டும்
மிதிக்கிறேன் குரூரமாய்.
ஆனாலும்
உயிரது
பனியாய்த் துளிர்க்க
மீண்டும்
மீண்டும்
தலைநிமிர்கிறது- புல்!


வைத்தியப் பரிணாமம்

உள்ளங்கை மட்டுமே
உடைமையாக
இருந்த காலத்தில்
பாட்டி வைத்தியம்.
இழப்பதற்குக்
குடிசையொன்று
கிடைத்துவிட்ட பிறகு
வைத்தியரிடம் வந்தான்,
சொஸ்தமானது.
கையில் கொஞ்சம்
காசு சேர்ந்தபோது
சர்க்கார் வைத்தியம்- (!)
சடுதியில் அல்ல-
சாவகாசமாகச் சரியானது.
காசின் பரிணாமம்
கொஞ்சமே கொஞ்சம்
கூடிவிட்ட பின்பு
தனியார் வைத்தியம்
வாடிக்கையாளன் ஆனான்.
காசுகள் காக்க
பணப் பைகள்
கிடைத்த பிறகு
ஸ்பெஷலிஸ்டிடம் போனான்.
ஸ்பெஷலிஸ்ட்
வேற்றிகரமாக
முடித்துவைத்தார்
அவன் கதையை.


தனி வழி

நாலு பக்கம்
கடலிருந்தால்
தீவு.
மூனு பக்கம்
கடலிருந்தால்
தீபகற்பம்.
மூனு பக்கம் கடல்
நாலாவது பக்கம்
மலை
எட்டுப் பக்கமும்
கடன்-
நம் தேசம்.


நம் அரசியல்

குளத்துநீரில்
நான்
தத்தளித்திருந்தேன்.
காப்பாற்றுபவர்கள்
வந்தார்கள்.
குளத்தின்
ஆழத்தை,
அகலத்தை,
என் வயதை,
எடையை,
பெயரை,
முக்கியமாக
வீட்டு முகவரியைக்
கேட்டுக்கொண்டு
விடை பெற்றார்கள்.
அலறினேன்-
உயிர்தான் எனக்கு
வெல்லக்கட்டியாயிற்றே.
அடக்கமுடன் ஓர்
அதிகாரி
அறிவித்துச் சென்றார்,
"அமைச்சரின் வருகிற
பிறந்தநாளில்
உம் குடும்பத்துக்கு
நிச்சயம் இழப்பீடு உண்டு.”


ஒரு வீடு இரு திருடர்கள்

அது
அவர்களுடைய தொழில்,
கொள்ளையடிப்பதும்
கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன
எல்லைக்கோடு போல
அவர்களுக்குத்
தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில்
மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.
ஒரு வீட்டின் புறவாசல் வழியே
ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும்
தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம்
குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண
முடியவில்லை திருடர்களால்.
முதல் திருடன் சொன்னான்,
"மக்கள் தீர்ப்பே
மகேசன் தீர்ப்பு.”
இரண்டாம் திருடன்
சொன்னான்,
"திருடுவது நம் உரிமை
அதைத்
தீர்மானிப்பது
வீட்டுக்காரனின் கடமை.”
ஆகவே,
எழுப்பப்பட்டான் அந்த
வீட்டுக்காரன்.
அவன் முன்
வாக்குப் பெட்டி.
யார் திருடவேண்டுமெனத்
தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன்
வேண்டப்பட்டான்.
அவனுக்கு
ஜனநாயக முறை
பற்றிய அறிவு
புகட்டப்பட்டது.
இங்கு
திருடர்களுக்கு
வீட்டுக்காரனே எஜமானன்.
அவன்
சொல்லும் நபரே
திருட முடியும்.
கடைசில்
ஜனநாயகம் வென்றது.
ஆம்-
வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

பின் குறிப்பு: கவிதையில் "திருடர்கள்” என்ற வார்த்தை "திருடர்கள்” என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதை "அரசியல்வாதிகள்” என்று யாராவது பொருள் கொண்டால் அது நம் தவறல்ல.

யதார்த்தம்

"தண்ணீர்” என்றேன்.
“அது எப்படி இருக்கும்?”
-கேட்டவன் தஞ்சை விவசாயி.
“பாட்டிலில் இருக்கும்.”
-சொன்னவன் சென்னைவாசி.

காற்றின் "கவி”க்கனா

காற்று
புரட்டிக்கொண்டிருந்தது
என் மேசைக்
காகிதங்களை.
"கவிதை” எழுதுகிறதோ?
நல்லது,
இனி நானும்
பெருமையாகச்
சொல்லிக்கொள்ளலாம்
"என் வீட்டுக் காற்றும் கவி பாடும்” என்று.

ஆசிரியர் குறிப்பு: 'புதியவன் கு. முத்துக்குமரன் என்பது கவிதையில் அடையாளப்பட விரும்பிய பெயர். இக்கவிதைகள் ஐந்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவையாகலாம்.
Pin It