அபத்தங்களின் சிம்பொனி (கவிதைகள்)
கரிகாலன்
வெளியீடு: புதுமைப்பித்தன் பதிப்பகம்
57,ஏ. 53வது வீதி அசோக்நகர், சென்னை-23. ரூ.45.

கவிதை எது? வாசம் வீசும் மலரா? ஒளி காட்டும் கை விளக்கா? உளற வைக்கும் மதுக் குவளையா? துயர் தரும் வேசியின் இருளா? என்ற பின் குறிப்புடன் தொடங்குகிறது கரிகாலனின் ஏழாவது கவிதைத் தொகுப்பு ‘அபத்தங்களின் சிம்பொனி’ இன்றைய நவீன கவிஞனுக்கு சொல் முறையிலும் பொருள் தேர்விலும் அளப்பரிய சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் தெரிவு செய்யப்பட்ட வரைமுறைகளோ, உரிய வழிகாட்டுதல்களோ போதிய அளவு அவனுக்கு இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.

மரபுக் கவிதைகளில் குறிப்பிட்ட வடிவத்தில் குறிப்பிட்ட பொருளால் பாடுவதென்பது வரையறுக்கப்பட்ட ஆடுகளத்தில் விளையாடுவது போன்றது, ஹாக்கி போல, கால் பந்தாட்டம் போல. இன்றைய நவீன கவிதை எவ்வித திட்டவட்டமான விதிகளின்றி ஆடப்படும் ஆட்டமாகிவிட்டது, ரக்பி போல. இத்தகையதொரு சூழலில், நல்ல கவிதைகளை இனம் கண்டு கொள்வதும் கவிதைக்கான பொது ரசனையை வளர்த்தெடுப்பதும் மிகுந்த சவாலாகி விடுகிறது. இந்தச் சவாலை எளிதாக முறியடிக்கும் தமிழ்க் கவிஞர்கள் பட்டியலில் கரிகாலனை எளிதாகவே சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமான பாடுகளைக் கொண்ட கரிகாலன் கவிதைகள் அவற்றின் கூறு முறையிலும் தனித்துவம் மிக்கவையாக விளங்குவது ஓர் ஆறுதல். பாலியல் வார்த்தைக் கூறுகளை சுவாரசியத்துக்காக கவிதையில் இட்டு நிரப்பும் கவிஞர்கள் மத்தியில் கரிகாலனின் பாலியல் நோக்கு கவனம் பெறத்தக்கது.

‘அன்னப் பூ’ போன்ற நீள் கவிதையில் அவர் காட்டும் பாலியல் புதிர் முடிச்சுகள் சமூகப் பிறழ்வுகளையும், உளவியல் நுட்பங்களையும், காலத்தின் தொடர்ச்சியையும் பின்புலத்தால் கொண்டு இயங்குவது. இதே கவித்துவ தரிசனத்தை நாம் ‘மோகனாங்கி’, ‘அழகி’ ஆகிய கவிதைகளிலும் காணலாம். குழந்தை உலகின் அபூர்வ கணங்களையும், பரவசங்களையும், மோன நிலையையும் முன் மொழிகின்றன. சிலகவிதைகள் கனவுக்கு அப்பாற்பட்ட கனவென்பது குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியம். அது ஒரு தீராத கனவும் கூட. தர்க்க ரீதியான சிந்தனைக்குள் ஒரு போதும் சிக்கிக் கொள்ளாதது அது. இத்தகைய கனவுலகின் ஆச்சர்யங்களை வெகு நுட்பமாக சித்தரிக்கிறார் கரிகாலன். புனைவும், யதார்த்தமும் சரியான கலவையில் இயங்கும் இக் கவிதைகள் கூர்த்த வாசிப்பனுபவத்தை கோருபவை.

வாழ்வின் அன்றாட கணங்களில் உள்ள மெய்ம்மையே நிரந்தரமானது. உயிர்த் துடிப்பானது இந்தக் கணங்களின் பரவசத்தை கண்டுணர்பவர்களே சீரிய கவிஞர்களாக முடியும் புனைஅலகு எவ்வாறு கவிஞனின் உள் மன ஆபாசங்களுக்கும், அவயங்களுக்கும், கனவு வெளிப்பாட்டுக்கும் வடிகாலாக அமைகிறதோ அது போல யதார்த்த சித்திரங்கள் கவிஞனின் சமூக அக்கறைக்கும், வாழ்வியல் நேர்மைக்கும், கருணை மனத்திற்கும் கட்டியமாய் அமைகின்றன. எளிய விவசாயி, இல்லம் ஆகிய இரு கவிதைகளில் நமக்குக் காணக் கிடைப்பது காட்சி சார்ந்த ஒரு வாழ்வியல் பதிவு. ஆனால் அக் காட்சியமைப்பு வெறும் காட்சியாக மட்டுமே நம் மனதில் தங்கவிடாமல் வாழ்வின் எல்லையற்ற, நீட்சியான சங்கிலிப் பிணைப்பாக உருவம் கொள்கிறது நம்முள். முதல் வாசிப்பில் மிகச் சாதாரண கவிதைகள் என புறக்கணிக்கப்படும் ஆபத்தும் நிறையவே உண்டு இக் கவிதைகளில்.

குழந்தைகள் உலகத்தைப் போலவே பெண்கள் சார்ந்த உலகமும் நிறையவே பேசப்படுகின்றன இத் தொகுப்பில். பெண்களின் குறுகிய உலகத்தை கரிசனத்துடன் எதிர்கொள்ளும் தளை, நிர்மலாவின் உலகம், சிறை போன்ற கவிதைகளானாலும் சரி, பெண்ணின் உடற்கூறுகளை மையமாக வைத்து இயங்கும் ‘வதம்’, கறுப்பு நாயின் ரகசியங்கள்ü, ‘அழகி’ ஆகிய கவிதைகளானாலும் சரி, பெண் சார்ந்த வாழ்க்கையை உற்று நோக்கும் ஒரு தேர்ந்த பார்வையாளராகவே தென்படுகிறார் கரிகாலன்.

Pin It