கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வரலாற்றில் வாழ்பவர்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதேன்? சமகால வரலாற்றுக்கும் மறைந்த பெரியவர்கள் பலரின் செயல்பாடுகளுக்கும் உள்ள உறவு எத்தகையது? நூற்றாண்டுகள் நிறைவு பெறும்போது பெரிய மனிதர்கள் நினைவு கூரப்படுவதேன்? போன்ற பல கேள்விகளோடு ப.ஜீவானந்தம் அவர்களின் ஆக்கங்களைப் புதிய வடிவில் உருவாக்கியதின் பின்புலம் சார்ந்து உரையாடலாம் என்று கருதுகிறேன்.

இருபதாம் நுற்றாண்டு இறுதி மற்றும் தொடக்க காலங்களில் சைவம் சார்ந்த பிரிவினர் புலமைத்தளத்தில் விரிவாகச் செயல்பட்டனர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதழ்கள் நடத்துதல் மூலம் சைவத்தின் பழைமை, அதனை ஒரு தத்துவச்சொல்லாடலாகக் கட்டமைப்பது போன்ற பல செயல்கள் நடைபெற்றன. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது குடிமைச் சமூக அமைப்பில் உருவான புதிய அதிகாரக் கட்டமைப்புகளில் தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது. 1917 இல் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சி மற்றும் அதன் செயல்பாடுகளுக்கும் சைவத்திற்குமான உறவுமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வகையில் ஏறக்குறைய 1917 தொடக்கம், அரசியல் செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கிய ப.ஜீவானந்தம் (இனி ஜீவா) அவர்களின் வாழ்க்கை 1963 ஜனவரியில் நிறைவுறுகிறது. சுமார் நாற்பது ஆண்டுகள் அவர் பொது வெளியில் செயல்பட்டார். தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் நீதிக்கட்சித் தொடக்கமும் அதன் பரிமாணமாக வளர்ச்சியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறியதுமான இடைப்பட்ட காலவெளியில் ஜீவா செயல்பட்டார். இந்தக் கால வெளியில் தமிழ்ச் சமூகத்தில் உருவான புதிய அரசியல் இயக்கங்களாக, சைவ சமயம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவையும் பகுத்தறிவுக் கழகம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற இன்னொரு பரிமாணத்தையும் கூற முடியும். இவற்றைப் புரிதல் சார்ந்து திராவிட இயக்கம் எனும் பெயரில் அழைப்போம். இவ்வியக்கத்திலிருந்து வேறுபட்ட இடதுசாரி இயக்கமும்இக்காலங்களில் செயல்பட்டது. இவை இரண்டும் காங்கிரஸ் என்ற பொதுவான அல்லது பிரிட்டீஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பிலிருந்து வேறுபட்டுப் புதிதாக உருப்பெற்றவை.

இவ்விரு அமைப்புகள் சார்ந்து தமிழகத்தில் செயல்பட்டவர்களில் ஜீவா முதன்மையானவர். இத்தன்மைகளை உள்வாங்கிய வேறு தலைவரை நாம் அடையாளப்படுத்த முடியாது என்றே கூறலாம். தமிழ்மொழி, தமிழ், இனம் சார்ந்த பண்பாட்டுத் தேசியமும், உலகில் புதிதாக உருப்பெற்ற சோசலிசம் மற்றும் மார்க்சியம் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும் இங்குச் செயல்பட்டன. இவ்விரு முதன்மையான செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் என்ற அமைப்பு, காலந்தோறும் குறுக்குச்சால் ஓட்டியதை நாம் அறிவோம். இந்தப் பின்புலத்தில் ஜீவாவின் நாற்பது ஆண்டுக்கால இயக்கத்தை அவரது நூற்றாண்டு நிறைவில் தொகுத்துப் பார்ப்பதற்கு இத்திரட்டு உதவலாம். இதனை முழுமையாக வாசிக்கக் கிடைக்கும் அனுபவம் சார்ந்து ஜீவா என்ற மனிதரைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்குண்டு.

இந்திய நாட்டில் 1920 களில் உருவான இடதுசாரி அமைப்பு, 1960 களில் பிளவுபடும் சூழல் உருவானது. இச்சூழலைத் தமது இறுதிக்காலத்தில் மனரீதியாக எதிர் கொண்டார் ஜீவா. உணர்ச்சித் தளத்தில் செயல்படுபவராகவே ஜீவாவைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகையான தளத்தில் செயல்படுபவர்கள், அரசியல் தளத்தில் செயல்படுவது துன்பமளிக்கும் நிகழ்வு. ஜீவா இறுதிக் காலத்தில் இடதுசாரி அமைப்பு சார்ந்த சிக்கல்கள் குறித்து மனத்துன்பம் பெற்றவராகவே இருந்தார். இதனோடு, தனது உடலைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்பட்ட அவரது போக்கு, நோய் பற்றிக் கொள்ள வாய்ப்பளித்தது. இதன் விளைவு அவரது வாழ்வு மிகக் குறைந்த காலத்தில் ஐம்பத்தாறாவது வயதில் நிறைவுற்றது. இவரது இளமைக்காலச் செயல்பாடுகள், பொதுவாழ்வு தொடக்கம் முதல் இறுதிக்கால நிகழ்வுகள் வரை நாம் கவனத்தில் கொள்வதற்கு இப்பதிவின் மூலம் அவருடைய சில பரிமாணங்களைப் புரிந்து கொள்ளலாம்.

ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கம் என்று கூறமுடியும் (1961) இதன் முன்னோடித் திட்டமாகத் ‘தாமரை’ இதழ் உருவாக்கத்தையும் கூறலாம். (1959) இச்செயல்பாடுகளின் வழியே, தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் அவர் மேற்கொள்ள விரும்பிய முயற்சிகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை. பேச்சு மரபை முதன்மைப்படுத்தி, அடுக்குத் தொடர்மொழி சார்ந்த அரசியல் சொல்லாடல் உச்சம் பெற்றிருந்த காலம் அது. காட்சி ஊடகங்களில் திரைப்படக் கதாநாயகர்கள் செல்லுலாய்டு வடிவங்களாக உருப்பெறுவதற்கான தளம் உருவாகிக் கொண்டிருந்தது. பேச்சு ஊடகமும் காட்சி ஊடகமும் கைகேர்த்து, அதன் வெளிப்பாடாக அச்சு ஊடகம் செயல்படத் தொடங்கியது.

இத்தருணத்தில், இத்தன்மைக்கு மாற்றாகச் சாதாரண மக்களின் வெளிப்பாடுகளுக்கு முதன்மை கொடுப்பதாகவும் சோவியத் கலை இலக்கியப் பாரம்பரியத்தைக் குறிப்பாக எதார்த்தவாத மரபை முன்னெடுக்கும் கலைச்செயல்பாட்டை ஜீவா கட்டமைக்க முயன்றார். திராவிட இயக்கம் முன்னெடுத்த இலக்கியக் கருத்தாக்கங்களை இவரது கண்ணோட்டத்தில் கட்டமைக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதில் கம்பன் பற்றிய இவரது நிலைப்பாடுகளைக் கூறமுடியும்.

திராவிட இயக்கம், இராமாயணக் கதை சார்ந்த பண்பாட்டை விமர்சனம் செய்யும் நோக்கில் செயல்பட்டது. அதனை எரிக்க வேண்டும் என்ற போராட்ட மரபும் முன்னெடுக்கப்பட்டது. ஜீவா, இதற்கு மாற்றாக, அதனைக் காப்பியமாகப் புரிந்து கொள்ளும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இலக்கிய அழகியலுக்கும் சமகால வரலாற்றுக்குமான தொடர்புகள் குறித்து விவாதிப்பது அவசியம். மரபு சார்ந்த இலக்கிய அழகியல் வெறும் சமயமாக மட்டும் குறுகி விடுவதில்லை. கம்பனின் இலக்கிய ஆளுமையின் பரிமாணங்கள் விரிந்தவை. இதனைக் குறுக்கி விடத்தான் விரும்பவில்லை என்றே ஜீவா கருதினார்.

ஆளும்வர்க்க மனநிலை சார்ந்த பழமைவாதிகள் மற்றும் காங்கிரஸ்காரர்கள் புரிந்துகொண்ட கம்பனுக்கும் ஜீவா புரிந்து கொண்ட கம்பனுக்கும் திராவிட இயக்கம் முன்னெடுத்த இராமாயணக் கதை சார்ந்த பண்பாட்டு மறுப்புக்கும் உள்ள இடைவெளிகள் குறித்து விவாதிக்கும் தேவை உண்டு. இப்பின்புலத்தில் கம்பனின் பரிமாணமாகவே பாரதியை ஜீவா புரிந்துகொண்டார். கம்பன், பாரதி ஆகிய ஆளுமைகளை காங்கிரஸ்காரர்கள் கண்ணோட்டத்தில் அணுகுவது திராவிட இயக்கம் சார்ந்த மரபில் அணுகுவது இடதுசாரி இயக்கம் முன்னெடுக்கும் இலக்கிய அழகியல் சார்ந்து அணுகுவது என மூன்று பரிமாணங்கள் இருப்பதை நாம் அறிவோம். இதில் ஜீவா இடதுசாரி அழகியல் சார்ந்து கம்பனையும் பாரதியையும் அணுகினார். இறுதிக்காலத்தில் அவரது பேச்சில் இவ்விரு ஆளுமைகளே முதன்மையாக இடம்பெற்றன. எதார்த்தவாதம், சோசலிச எதார்த்தவாதம் ஆகிய சொல்லாட்சிகள் சார்ந்து இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதார்த்தவாதத்தை ஜீவா முதன்மைப்படுத்தினார். அத்தன்மையே இலக்கியத்தின் அடிப்படை என்பதாகவும் கருதினார். சமயமறுப்பு, புராண மறுப்பு, மூடநம்பிக்கை மறுப்பு ஆகிய தளங்களில் இலக்கியப் பிரதிகளின் செயல்பாட்டை ஜீவா, திராவிட இயக்க அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்ட நிலையில் அணுகினார். அன்றைய சூழலில் இதனை எளிதில் புறக்கணிக்க இயலாது. இன்றைய திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சியிலிருந்து அன்றைய ஜீவாவின் இலக்கியப் பிரதிகள் தொடர்பான செயல்பாட்டைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஜீவா கட்டமைக்க விரும்பிய பண்பாட்டு நிகழ்வுகள் சார்ந்த பார்வையை எளிதில் புறக்கணிக்க இயலாது. அதற்கான மாற்று அன்றைய சூழலில் வேறொன்று இருந்ததாகக் கூற முடியாது. ஜீவா பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவதற்குக் கலை இலக்கியப் பெருமன்றத்தைக் கட்டமைத்த செயல்பாட்டின் மூலம் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

இறுதிக் காலங்களில், பண்பாட்டுத்தளத்தில் செயல்பட்ட போது, பழமைவாதிகளின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்வினை புரிந்தார். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு, சென்னை ராஜ்ஜியத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டல், மொழிவாரி மாநில உருவாக்கத்தின் மூலம் ஐக்கியத் தமிழகத்தை உருவாக்குதல், தமிழ் வழிக் கல்வி, தமிழ் ஆட்சிமொழி ஆகியவை குறித்த விரிவான உரையாடலை, அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நிகழ்த்திக் காட்டினார்.

1950 களில் ஜீவா முன்னெடுத்த இந்நிகழ்வுகள் அனைத்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளாகப் புரிந்துகொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிகழ்வுகள் குறித்த ஜீவாவின் பார்வையைப் பரவலாக அறியாத தமிழ்ச்சூழல் இருப்பதாகவே கருத வேண்டும். இச்செயல்பாடுகளின் முக்கியத் துவம் இன்று பரவலாக உணரப்படுவதைக் காண்கிறோம்.

வெகுசன அமைப்பாக உருவான திராவிட இயக்கம், ஜீவா பேசிய சொல்லாடல்களைத் தங்களுடைய சொல்லாடல்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பயிற்று மொழி சார்ந்த தெளிவும் உறுதிப்பாடும் இல்லாத சூழல் இன்றும் நிலவுகிறது. இப்பின்புலத்தில் ஜீவா, மொழி, வாழ்விடம் மற்றும் பண்பாடு சார்ந்து 1950 களில் நிகழ்த்திய உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை இன்றைய தலைமுறை புரிந்துகொள்ள இத்திரட்டு உதவலாம். திராவிட இயக்கப் பண்பாட்டுச் செயல்பாடுகளை இன்றைய சூழலில், எதிர்கொள்வதற்கு ஜீவாவின் பண்பாட்டு அணுகுமுறைகள் உதவலாம். இக்கண்ணோட்டத்தில் ஜீவாவின் ஆக்கங்களை மீண்டும் வாசிக்கலாம்.

வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் போலியான பண்பாட்டு நிகழ்வுகளுக்கான போராட்டக்களத்தில் தன்னை முன்னிருத்தி செயல்பட்ட ஜீவா, 1940 களில் இடதுசாரி இயக்கம் சார்ந்த களப் போராளியாக இருந்தார்-. 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார். மார்க்சிய மூல நூல்கள் சார்ந்த உரையாடலை, ஜீவாவிற்கு முன் தமிழக இடதுசாரிகள் விரிவாகச் செய்ததாகக் கூறமுடியாது.

மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. சோசலிசச் சொல்லாடல்களைத் தமிழில் கொண்டு வருவதில் ஜீவாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. மொழியாக்கம் செய்யாமல், தமிழில் சுயமாக எழுத மேற்கொண்ட அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

சென்னை ராஜ்ஜியம் முழுவதும் பலமான கட்சியாகக் கம்யூனிஸ்டுக் கட்சி தேர்தல் வழியாக அங்கீகரிக்கப்பட்ட சூழலில், தமிழ் நாட்டின் திசைவழி, இடதுசாரி திசை வழியாக, கேரளம், வங்காளத்தைப்போல இருந்திருக்க வேண்டும். இதற்கான செயல்பாடுகளில் ஜீவா முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறார். அவரது ஓய்வற்ற பயணமும் மேடைப் பேச்சுகளும் இதற்கு உரமாக அமைந்திருந்தன.

சென்னை ராஜ்ஜியத்தில் இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தைப் பெறவிடாமல் செய்த பெருமை ராஜாஜியைச் சேரும். அவரது ‘சமூகக் கடமை’யைத் தெளிவாகவே நிறைவேற்றினார். ஆனால் காமராஜர் உள்ளிட்ட பச்சைத் தமிழர்கள், இக்காலங்களில் ராஜாஜியோடு கைகோத்த வரலாற்றுக்கும், தமிழகத்தில் இன்று உருப்பெற்றிருக்கும் வரலாற்றிற்கும் தொடர்பு இருப்பதாகவே கருத வேண்டும். தமிழகத்தில் தத்துவப் பின்புலம் அற்ற இயக்கங்கள், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதும், இடதுசாரிகள் அதனைப் பெற வாய்ப்பற்று இருப்பதும், இந்தியாவில் இடதுசாரி அரசியலுக்கும் தேர்தல் நிகழ்வுகளுக்குமான உறவைப் புரிந்துகொள்ள உதவும்.

ஜீவா, 1942-45 காலப்பகுதியில் தனது சொந்த ஊரில் தங்க வேண்டும் எனும் பிரிட்டீஷார்களின் ஆணையால் அங்குச் செயல்பட்ட போது, அவர் செயல்பாடுகள் பிரமிக்கத் தக்கவையாக இருந்தன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பல்வேறு இயக்கங்களைக் கட்டியமைத்துள்ளார். சாதாரண மக்களிடத்தில் அரசியல் உணர்வை உருவாக்கியுள்ளார். இவரோடு சேர்ந்து செயல்பட்ட தோழர் இளங்கோவின் பணியையும் இங்கு இணைத்துக் கொள்ள வேண்டும். இடதுசாரிகள் களப்பணி மூலமாக வெகுமக்களை அணி திரட்ட முடியும் என்பதற்கான சான்றாக ஜீவாவின் இக்காலச் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறித்தவ சமயப் பரவல் மூலம் கிடைக்கப் பெற்ற அணி சேரல், பொருளாதாரம் மற்றும் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படல் ஆகிய தன்மைகளைக் கொண்டிருந்த மக்களிடம் ஜீவா செய்த களப்பணியின் பரிமாணம் வரலாற்று மாணவனுக்குப் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. இடதுசாரிகள் களப்பணி மூலமே மக்களை அணி திரட்ட முடியும் என்பதைத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஜீவா நடைமுறைப்படுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். காங்கிரஸ்காரர்கள், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகிய சொல்லாட்சிகளைப் பரவலாக வேறுபடுத்திப் பேசும் பொதுவெளி உருவான காலமிது. இக்காலத்தில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் எவ்வகையில் இருக்க வேண்டும் என்பதில், ஜீவாவின் செயல்பாடு தனித்து இருந்ததாகக் கூற வேண்டும். ‘ஜீவாவின் ஆக்கங்கள்’ ‘ஜீவாவின் தலையங்கங்கள்’ என்ற தொகுப்பு நூலில் உள்ள ‘தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சி உருவான வரலாறு’ என்ற கட்டுரை அவ்வகையில் குறிப்பிடத்தக்கது.

ஜீவா கம்யூனிஸ்ட்டாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது(1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரிட்டீஷ் அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.

சமூகத்தில் உருவான புதிய குடிமை அமைப்புகள் சார்ந்து, போராடும் இயக்கங்கள் உருவான தன்மையை எளிதில் புறக்கணிக்க இயலாது. இதில் தோழர்களோடு சேர்ந்து ஜீவா செயல்பட்ட பாங்கு வியப்பளிப்பதாக இருப்பதைக் காண்கிறோம். சர்வதேச அளவில் இடதுசாரி இயக்க உருவாக்கத்தின் வரலாற்றில் சென்னை ராஜ்ஜியத்தைச் சேர்ந்த பகுதியின் செயல்பாட்டைக் குறைத்து மதிப் பிடுவதற்கில்லை. இச்செயல்பாடுகளின் ஆழத்தைப் புரிந்து கொண்ட பிரிட்டீஷார் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்ததை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த அமைப்புகளுக்கும் தடை விதிக்காத பிரிட்டீஷார், கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? என்ற புரிதல் முக்கியம்.

1934, 1939, 1948 எனப் பலமுறை கம்யூனிஸ்ட்டுக் கட்சி தடை செய்யப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்காலங்களில் ஜீவாவின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தன? என்ற புரிதலும் முக்கியமாகின்றது. இவ்வகையில் 1930 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசும் மக்களிடத்தில் இடதுசாரி அமைப்புகளை உருவாக்கிய தோழர்களின் பட்டியலில் ஜீவாவின் இடம் தனித்தே இருக்கிறது. தோழர் சீனிவாசராவ் விவசாய இயக்கங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டதைப் போல், ஜீவா தொழிலாளர் இயக்கங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

கோவை, மதுரை, திருச்சி, நெல்லிக்குப்பம், சென்னை ஆகிய இடங்களில் உருவான தொழிலாளர் இயக்கங்களுக்கும் ஜீவாவிற்குமான உறவுகளை இத்திரட்டில் காணப்படும் பல்வேறு தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியத் தொழிலாளர் இயக்க வரலாற்றில் முன்னோடியான போராளியாக ஜீவா செயல்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் விவசாய இயக்கத்தின் முக்கியத்துவத்தையும் ஜீவா உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். இதற்கான ஆளுமை அவரிடம் எவ்விதம் செயல்பட்டது என்பது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். அதற்கு இத்தொகுப்பு உதவலாம்.

பிரிட்டீஷாருக்கு எதிரான போரில் ஒன்று திரண்டு போரிட்ட தமிழ்ச் சமூக அரசியல் 1920 களில் வட்டாரம் சார்ந்த அதிகாரச் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்போது, தவிர்க்க இயலாமல் முரண்பட வேண்டிய சூழுல் உருவானது. சநாதனப் பின்புலத்தில் உருவான காங்கிரஸ்காரர்களின் சாதியப் பார்வை மற்றும் சமயப்பார்வை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள இயலாத சூழல் உருவானது. காங்கிரஸ்காரர்கள் அடிப்படையில் சநாதனிகளே. அவர்களுடைய சீர்திருத்தங்கள் என்பவை ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றுவதற்கும் சமயக் கருத்தாடலைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் உதவின.

இதற்கு மாற்றான பார்வையை முன்னெடுத்த தமிழகக் காங்கிரஸ்காரர்களாக, வ.உ.சி., திரு.வி.க., சிங்காரவேலர், பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் ஜீவா ஆகியோரைக் கூறமுடியும். (1920களில்)
வ.வே.சு, அய்யரின் சேரன்மாதேவி குருகுலம், காங்கிரஸ்காரர்களின் சாதிய அணுகுமுறையை வெளி உலகுக்குக் காட்டியது. இதனால் ஈ.வெ.ராவும் ஜீவாவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உருவானது. ஈ.வெ.ரா.இப்பின்புலத்தில்தான் பகுத்தறிவுக் கழகத்தை (1925) உருவாக்கி, குடியரசுப் பத்திரிகையைத் தொடங்கினார். ஜீவா, சேரன்மாதேவி குருகுல ஆசிரியர் பதவியைத் தூக்கியெறிந்துவிட்டு, காரைக்குடிப் பகுதிக்குச் சென்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆசிர ங்களை உருவாக்கத் தொடங்கினார். இக்காலங்களில் காந்தியத்தின்மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.

சாதியழிப்பு, மதுவிலக்கு, பெண்ணடிமை ஒழிப்பு ஆகியவற்றைக் காந்தியக் கண்ணோட்டத்தில் அணுகுபவராகவே ஜீவா செயல்பட்டார். காந்தியக் கருத்து நிலைகளை அவர் விமர்சன பூர்வமாகவே அணுகினார். பெரியார் ஈ.வெ.ராவும் ஜீவாவும் காந்தியாரின் சமயம் மற்றும் சாதி பற்றிய பார்வையை ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை. இதனை இருவரும் பதிவு செய்துள்ளனர். பகுத்தறிவுக் கழகம், சுய மரியாதை இயக்கமாக வளர்ச்சி பெற்றது. ‘நான் 1926 முதல் சுயமரியாதை இயக்கத்தின் மீது மதிப்புடையவனாகவே செயல்பட்டேன்’ (பார்க்க : ப.623) என்று ஜீவா கூறுகிறார். 1920 களில் இந்திய அளவில் உருவான, ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தில், பங்குகொண்ட ஜீவா, தன் குடும்பத்திலிருந்து முற்றுமாகத் தம்மை விடுவித்துக் கொண்டு சேரன்மாதேவி குருகுலத்தில் ஆசிரியராகப் பணி ஆற்றியது, பின்னர் சிராவயல் காந்தி ஆசிரமத்தை உருவாக்கியது, தொடர்ந்து ‘உண்மை விளக்க நிலையம்’ எனும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டது ஆகியவற்றை அறிய முடிகிறது.

இளமையில், எழுச்சியுடன் சமூக விடுதலைப் போராட்டங்களில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்ட இளைஞனின், தீவிர மான செயல்பாடுகளாக மேற்கண்டவற்றைக் காண முடிகிறது. இதில் இவர் 1930 களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார். 1932 இன் இறுதிக் காலம் தொடங்கி 1939 இல் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலம் வரை ஜீவாவின் செயல்பாடுகள் பலபரிமாணங்களில் இருந்ததைக் காண முடிகிறது.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார். பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் செயல்பட்ட சுய மரியாதை இயக்கத்தை, இடதுசாரி இயக்கச் சார்பான இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். சிங்கார வேலரோடும் ஈ.வெ.ரா.வோடும் இணைந்து ஈரோட்டுத் திட்டத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டார்.

ஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937).

சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றோடு ஜீவா முரண்பட்டதை இந்தியாவில் இடதுசாரி அமைப்பு ஒன்றை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் எத்தனிப்பாகவே கொள்ள வேண்டும். தொழிலாளர் இயக்க வளர்ச்சியின் மூலம் இது சாத்தியமாகியது. இக்காலங்களில் கம்யூனிஸ்ட்டுகள், மேற்கொண்ட வேலைத்திட்டம், உலக அளவில் வளர்ந்து வந்த இடதுசாரி இயக்கத்தைத் தமிழ்ச் சூழலில் உருவாக்கும் நோக்கத்தில் அமைந்திருந்தது. இதில் ஜீவா, ஈ.வெ.ரா.வோடும், ராஜாஜியோடும், காந்தியாரோடும் பல தருணங்களில் முரண்பட நேரிட்டது. இடதுசாரி இயக்கம் வேர்கொள்ளும் சூழலில் உருவாகும் அனைத்துச் சிக்கல்களையும் எதிர்கொள்ளும் அணியில் ஜீவா தமது அடையாளத்தோடு செயல்பட்டதைக் காண்கிறோம்.

1932 -1939 காலச் சூழலில் ஜீவாவின் செயல்பாடுகள் பல பரிமாணங்களிலிருந்தன. அத்தன்மை குறித்த விரிவான ஆவணப் பதிவுகள் இதுவரை முறையாகச் செய்யப்படவில்லை. இத்திரட்டில் அக்காலத்திய ஜீவாவின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளும் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் திரட்டப்பட்டுள்ளன. ஜீவாவைப் புதிதாகப் புரிந்து கொள்ள இப்பகுதி உதவும். ஜீவா - ஈ.வெ.ரா. அணுகுமுறைகள் குறித்துப் புரிந்து கொள்ளும் தேவை, இன்றைய சூழலில் கூர்மையடைந்துள்ளது. இத்தருணத்தில் அக்காலத்திய ஜீவாவின் ஆக்கங்களை வாசிக்க இத்திரட்டு உதவும் என்று நம்பலாம்.

ஜீவா வீரியம் மிக்க ஆளுமையைப் பெற்றவர். அவரது இளமைக்காலச் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு தகவல்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கவிதை புனையும் திறன், வீரதீரச் செயல்பாடுகள், பக்தி ஈடுபாடு, தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகள் எனப் பல்வகையில் புனைவு சார்ந்த மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தில் வலிமைமிக்க ஆளுமையாகச் செயல்பட்ட மனிதர்களின் இளமைக் காலம் குறித்து இவ்வகையான பதிவுகள் தேவைப்படுகின்றன.

ஜீவாவின் இளமைக்காலம் தொடங்கி அவரது இறுதிக் காலம் வரையிலான நிகழ்வுகளை வடிவெடுக்கிறது. அடிப்படையாகக் கொண்ட மேற்குறித்த உரையாடல், ஜீவா என்ற ஆளுமை நமக்குள் எப்படி என்பதைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

சமூகத்தில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட்ட இளைஞன்.

ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் காந்தியக் கருத்து நிலை சார்ந்து செயல்பட்ட இளைஞன்.

தமிழகத்தில் உருவான சுய மரியாதை இயக்கத்தில், தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

உலகம் தழுவிய அளவில் உருவான இடதுசாரி கம்யூனிச இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதையும் அதற்கே அர்ப்பணித்த மிகப் பெரும் மனிதன்.

மேற்குறித்த பதிவுகள் என்பவை சுமார் நாற்பது ஆண்டுகள் செயல்பட்ட ஜீவா என்ற ஆளுமை குறித்த புரிதல். இப்புரிதலுக்கு உதவும் வகையில் அவருடைய ஆக்கங்களை முழுமையாகத் திரட்டி உங்களிடம் வைக்கிறோம். சமகாலக் கண்ணோட்டத்தில் நின்று, இந்தியாவின் தமிழகத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள, ஜீவாவைக் குறியீடாகக் கொண்டு செயல்படுவோமாக. ஜீவா என்ற ஆளுமை நம்முள் உந்து சக்தியாகச் செயல்படட்டும். அமரர் ஜீவானந்தம் எழுத்துகள் அனைத்தையும் திரட்டி ‘ஜீவா ஆக்கங்கள்’ முழுத்திரட்டு எனும் இரு தொகுதிகள் கொண்ட நூலுக்கு

பதிப்பாசிரியர¢ன் உரை இது. நியூ செஞ்சுரி புத்தக வெளியீடு. பக்கங்கள்: 1750