ஒரு தனிநபர் தனது செயல்பாடுகளின் வாயிலாக எத்தனை பேருக்கு நண்பராக இருக்க இயலும் என்பதற்கு அரியதொரு சான்றாக நம்மிடையே இருந்து மறைந்தவர் நெடுஞ்செழியன். ‘பூவுலகின் நண்பர்கள்’ எனும் பெயரில் செயல்பட்ட குழுவினர் பல அரிய நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து வந்த சிலர் ஒரு குழுவாக இணைந்து சூழலியல் குறித்த நூல்களை மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்காவில் எண்பதுகளில் வெடித்தெழுந்த விடுதலைப் போராட்டங்களையும், அவற்றில் ஈடுபட்டோர் கூட்டங்கூட்டமாக கொன்றொழிக்கப்பட்ட வரலாற்றையும் தமிழுக்கு மொழிபெயர்ப்பின் மூலமாக வழங்கியவர்கள் பூவுலகின் நண்பர்கள்.

நெடுஞ்செழியன், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளார்; அனைத்து தரப்புகளிலும் நண்பர்களைச் சம்பாதித்துள்ளார். அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க அவரது அலுவலகத்தினர் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் இதயத்துல்லாஹ், தி.மு.க.வின் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழினத் தலைவர் பழ. நெடுமாறன், வழக்கறிஞர் மோகன், தலித் முரசு இதழாசிரியர் புனித பாண்டியன், பூவுலகின் நண்பர்கள் மொழிபெயர்த்த நூலை வெளியிட்ட சவுத் விஷன் பதிப்பாளர் பாலாஜி, தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கத்தின் செயலர் அமரந்த்தா ஆகியோர் அவரது பணி குறித்துப் பேசினார்கள். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், தலித் பெண்கள் அமைப்பு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பேசினார்கள்.

மனித குலத்தின் நல்வாழ்வின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக சூழலியல் மாசு குறித்த செய்திகளை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் அவரது அர்ப்பணிப்புணர்வு, சுயநலமின்மை, பெருந்தன்மை, தலித்துகள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள், அரவாணிகள், பெண்கள், வன் கொடுமைகளுக்கு ஆட்படும் சிறைவாசிகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவர் சார்பாகவும் குரல் கொடுத்த அவரது நினைவைப் போற்றியவர்கள் ஏராளம்.

நெடுஞ்செழியனின் அந்தரங்க நண்பர்களான பாமரனும், புனித பாண்டியனும் சாதி-வர்க்க அடையாளமின்றி அனைவரோடும் இயல்பாகப் பழகிய நெடுஞ்செழியன், குடும்பம் உட்பட தனது இயங்குதளங்கள் அனைத்திலும் ஒரே மாதிரியான கொள்கையோடு திகழ்ந்ததைக் குறிப்பிட்டதோடு, செய்திப் பரவலுக்கு அவரைவிட அதிகமாக யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்றே வலியுறுத்திக் கூறினார்கள். நெடுஞ்செழியனின் நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் - உயிரோடு இருக்க வேண்டும் - அடுத்து அவர் கூறியவற்றில் நாம் எவற்றைச் செய்துள்ளோம் எவற்றைச் செய்யப் போகிறோமென்று ஆண்டுக்கொருமுறை சந்தித்துப் பேசவேண்டும் என்றார் மனித உரிமை வழக்குகளை இலவசமாக நடத்த உதவும் வழக்கறிஞர் மோகன். ‘பொதுமக்களைச் சென்றடைய வேண்டிய முக்கியமான செய்தியொன்று உடனடியாக ஒரு துண்டறிக்கையாக வெளியிடப்பட்டாலே ஒரு புத்தகம் வெளியிட்டதற்கு இணையாகும்” என்று கூறி உடனுக்குடன் மொழிபெயர்த்து வெளியிட்டவர் நெடுஞ்செழியன் என்றார் சவுத்விஷன் பதிப்பாளர் பாலாஜி.

நெடுஞ்செழியன் தீர்க்கதரிசி - உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற உடனேயே உலக வர்த்தக அமைப்பினால் ஏற்படக் கூடிய சீரழிவுகளை துல்லியமாக இனம்கண்டு எச்சரிக்கை விடுத்தவர் அவர். ஆனால் பொதுவாழ்வுக்கும் அகவாழ்வுக்கும் இடையே அவர் கனமான ஒரு திரையை ஏற்படுத்திவிட்டதால் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி, உடல் நலக் குறைவு பற்றி ஏதும் தெரியாமலே போய்விட்டது, அவரை நாம் இழந்து விட்டோம் என்று வருந்தினார்.

நூல்கள் வழி அறிமுகமான நெடுஞ்செழியனை நேரில் காணும் வாய்ப்பு உண்டானது 2004 ஆகஸ்ட் 15 அன்று சென்னையில் நாங்கள் ஏற்பாடு செய்த ‘தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம்’ என்னும் பொருளில் நடைபெற்ற தமிழ்மொழிபெயர்ப்பாளர் சந்திப்பில்தான். பூவுலகின் நண்பர்கள் குழுவிலிருந்து நெடுஞ்செழியனும் செந்தில்குமாரனும் கலந்துகொண்டார்கள். அதிகமான நூல்களை விரைவாக மொழிபெயர்த்து வெளியிட்டவர்கள் என்ற வகையில் பூவுலகின் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்கள். கூட்டத்தினரின் ஒருமித்த கருத்துப்படி தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வப்போது சந்தித்து ஆலோசித்துச் செயல்படும் வகையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டது.

மார்ச் 2005இல் உருவான இவ்வமைப்பில் முதுபெரும் மொழிபெயர்ப்பாளர் மாஜினி சிறப்புத் தலைவராகவும், பேராசிரியர் கோச்சடை தலைவராகவும், அமரந்த்தா செயலாளராகவும், நெடுஞ்செழியன் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். ஒரு சில மாதங்களிலேயே உடல் நலம் குன்றிய நிலையில் நெடுஞ்செழியன், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து சிகிச்சைக்காக மதுரை சென்றுவிட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 14, 2005 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டு பேசினார். பின்பு மறுபடியும் அவரை சந்திக்க இயலவில்லை.

இறப்பதற்கு முதல் நாள் காலையில் ஏதேச்சையாக செந்தில்குமரனிடம் பேசியபோது, எந்த நிமிடமும் நெடுஞ்செழியன் மரணமடையலாம் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியைத் தெரிவித்தார். 2006 பிப்ரவர் 28 அன்று இரவு 48 வயதான நெடுஞ்செழியன் என்னும் இயக்கம் பாதியில் முடிந்து போனது.

Pin It