மாமல்லை, கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பல்லவர் கால கலைகளுக்கு கட்டியம் கூறும் கலைக்கூடம். சங்ககாலத் துறைமுகமாக விளங்கிய இந்நகரத்தின் சிறப்பை பெரும்பாணற்றுப்படை குறிப்பிடுகிறது.

 இருப்பினும் பல்லவர் காலத்தில் இங்கு மிகுந்த அளவில் குடைவரைகளும் ஓற்றைக்கல் கோவில்களும் கற்றளிகளூம் அமைக்கப்பட்டன. பிற்கால சங்க இலக்கிய நூலான பெரும் பாணாற்றுப்படையில், உருத்திரன் கண்ணனார் காஞ்சிபுரத்திற்கு அருகில் நீர்ப்பெயற்று என்னூம் பெயரில் அமைந்த ஒரு துறைமுகப் பட்டிணத்தைக் குறித்து கூறுகின்றார். இத்துறைமுகப்பட்டிணம் மாமல்லையாக இருக்கலாம் என வரலாற்று அறிஞ்ர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் இதுவரை சங்க காலத்திற்கான சான்றுகள் இப்பகுதியில் கிடைக்காததால் மாமால்லபுரம் சங்ககாலத்தில் துறைமுக நகரமாக செயல்பட்டதா? என்ற விணா ஆய்வாளர்களிடம் நிலவி வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் கடலகழாய்வுப் பிரிவினர் சுனாமியால் வெளிப்போந்த சில கட்டடச் சிதைவுகளை முழுவதுமாக வெளிப்படுத்தினர். இவை யாவும் மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலுக்கு 270 அடி தெற்க்கில் அமைந்துள்ளது.

இவற்றுள் சிறிய புலிக்குகை எனப்படும் ஓற்றைக்கல் சிற்பத் தொகுதி 10 ஆண்டுகளுக்கு முன்புவரை மண்மேடு அற்று அனைவரும் காணும் வகையில் இருந்தது. இச்சிறிய கோவிலுக்கு வட மேற்க்காக அதாவது கடற்கரை கோவிலில் இருந்து தென்மேற்க்காக 250 அடி தொலைவில் கடற்கரைக் கோவிலின் அமைப்பில் அதிட்டானப் பகுதி உடைய கற்றளிக்கோவில் ஒன்றின் எச்சங்களையும் மேற்குறித்த அகழாய்வுப் பிரிவினர் சுனாமியின் விளைவால் வெளிப்பட்டதை அகழ்ந்தனர். இக்கோவில் விமானத்தின் சிதைவுகளும் பக்கச் சுவர்களின் தாங்குதளக் கற்களும் சில உடைந்த கற்றூண்களும் பல்லவர் கால எழுத்தமைதியில் அமைந்த ஒரு சிறிய கல்வெட்டுத் துண்டும் இக்கற்றளிக் கோவிலின் கருவறைப் பகுதியின் உட்பகுதியை 2 மீட்டர் ஆழமாகத் தோண்டியபொழுது வெளிப்படுத்தினர்.

இக்கற்றளித் தொகுதி கடந்த நூற்றாண்டுவரை இப்பகுதியில் இருந்திருக்க வேண்டும். கடற்சீற்றத்தாலும் அடிக்கடி கடலால் மணல் அடித்து வரப்பட்டு இக்கோவிலை முழுவதுமாக அழித்திருக்க வேண்டும். அமைப்பில் வடக்கில் உள்ள கடற்கரைக் கற்றளிக்கோவில் போன்று அமைந்துள்ள இக்கோவிலின் அதிட்டானப்பகுதியை 1884 ஆம் ஆண்டு அலெக்சாந்தர் ரீ அகழாய்வு செய்து சில புனரமைப்புகளையும் மேற்கொண்டுள்ளார். (அலெக்சாந்தர் g-2000 Mamallapuram N.S. Ramaswami p134-135) இவ்வகழாய்வில் கோவிலின் அதிட்டானப்பகுதி வெளிப்பட்டது. அவ்வாறு அகழாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த சிலைகளின் எச்சங்கள் மற்றும் துண்டுக்கல்வெட்டு ஆகியவற்றை இக்கோவிலின் கருவரைப்பகுதியைத் தோண்டி அதனுள் இட்டுப் புதைத்துள்ளார்.

பொதுவாக அகழாய்வில் உடைந்த பயனற்ற எச்சங்களை இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே கொட்டி மூடிவிடுவது வழக்கம். மேலும் இக்கோவிலின் கருவறையின் வடகிழக்குத் தரைப்பகுதியில் சுண்ணக்காரை கொண்டும் புணரமைத்து உள்ளனர். இவை யாவும் இக்கோவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்துள்ளமையை நமக்குத் தெரிவிக்கின்றது. தற்பொழுது உள்ள கடற்கரைக்கோவிலுக்குத் தென்மேற்காக 250 அடி தொலைவில் இக்கோவில் இருந்ததாக அலெக்சாந்தர் ரீ குறிப்பிடுகின்றார். எனவே சமீபத்தில் கடற்கரைக்கோவிலின் தென்மேற்க்கில் சுனாமியின்மூலம் வெளிப்பட்ட கற்றளிக்கோவிலின் எச்சங்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கம் முடிய இருந்துள்ளமையை நம்மால் அறியமுடிகிறது.

இருப்பினும் மாமல்லபுரக் கடற்கரையில் பல்வேறு வரலாற்றுப் புகழ்பெற்ற சின்னங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மண்மேடிட்டு அழிந்துள்ளமையை கிழக்குக் கடற்கரையில் பல்வேறு இடங்களில் மணல் மேடுகள் தொடர்ச்சியாக உள்ளமையின் மூலம் அறியமுடிகிறது. இத்தகைய மண்மேடு ஒன்றை இக்கட்டுரை ஆசிரியர் தமிழ்நாட்டைச் சுனாமி தாக்குவதற்கு முன்பே கண்டறிந்தார். இம்மண்மேடு மாமல்லபுரத்திலிருந்து வடக்காக உள்ள புகழ்பெற்ற புலிக்குகை அமைந்துள்ள சாளுவான்குப்பம் என்னும் ஊரில் புலிக்குகையிலிருந்து 200 அடி வட கிழக்காக கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இயற்கையான நீண்ட பாறையை ஒட்டியவாறு அமைந்துள்ளது. இப்பாறையில் இந்தியத் தொல்லியல் துறையினர் 1890 ஆம் ஆண்டு 50 வரிகளில் அமைந்த நீண்டதொரு கல்வெட்டைக் கண்டுபிடித்து தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி நான்கில் வெளியிட்டுள்ளனர்.

இக்கல்வெட்டு சோழப்பேரரசர் திரிபுவன வீரத்தேவரின் ( மூன்றாம் குலோத்துங்க சோழன் கி.பி.1215 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டில் திருவிழிச்சில் ஊரில் இருந்த சுப்ரமண்யர் கோவிலுக்கு நிலம் கொடையாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கல்வெட்டில் கூறப்பட்டிருக்கும் சுப்ரமண்யர் கோவில் எங்கு உள்ளது? என்பதை யாரும் அறியவில்லை. இக்கல்வெட்டு தொல்லியல் துறையின் முதல் கல்வெட்டு அறிஞ்ரான ஹீல்ட்ஸ் என்பவரால் 1890ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்காலகட்டத்தில் இங்கு இப்பெயரில் கோவில் இருந்ததற்கான எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை. இக்கல்வெட்டின் அடிப்படையில் இப்பாறை உள்ள பகுதிகளை 2003 ஆம் ஆண்டு ஆய்வு செய்த இக்கட்டுரை ஆசிரியர் பாறையின் கிழக்குப் பகுதியில் புதியதாக ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இக்கல்வெட்டு கச்சியும் தஞ்சையும் கொண்ட கண்ணரதேவரின் (மூன்றாம் கிருஷ்ணனின்) 26 ஆவது ஆட்சி( -கி.பி. 965) ஆண்டு கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டு ஆமுர் கோட்டத்தில் திருவிழிச்சில் ஊரில் இருந்த சுப்ரமண்யபடாரருக்கு உண்ணாழிகைப்புரமாக தானம் அளிக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த கல்வெட்டின் அடிப்படையில் இப்பகுதியில் கள ஆய்வுகள் மேற்கொண்ட இக்கட்டுரை ஆசிரியர் இப்பாறையின் அருகில் மண்மூடிக்கிடந்த கோவிலின் எச்சங்களைக் கண்டுபிடித்தார். இங்கு ஓரு கோவில் அழிந்து மண்மேடிட்டு இருப்பதை இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் சென்னை அலுவலகத்திற்குத் தெரிவித்தார். இத்தகவலின் அடிப்படையில் இத்துறையினர் இங்கு அகழாய்வுகளை மேற்கொண்டனர்.

கடற்கரையை ஒட்டி கல்வெட்டு அமைந்துள்ள நீண்ட பாறைக்கு வடக்கில் அகழாய்வுக் குழி இடப்பட்டதில் 6 அடி ஆழத்தில் அழிந்துவிட்ட கோவிலின் கருங்கற் கட்டுமானத்தின் அதிட்டானப் பகுதியும் மூன்று கற்றூண்களும் வெளிப்பட்டன. இக்கோவில் கருவறை அந்தராளம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய அங்கங்களைப் பெற்றும் திருச்சுற்று மாளிகையப் பெற்றும் விளங்கியுள்ளது. கற்றூண் மூன்றில் இரு கற்றூண்களின் நான்கு பக்கங்களிலும் பல்லவர் கால எழுத்தமைதியில் கல்வெட்டுக்கள் இரண்டு காணப்பட்டன. முதல் கல்வெட்டு பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் 12 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி.808) தமிழ் கல்வெட்டு ஆகும்.

மாமல்லபுரத்தைச் சார்ந்த கீரைப்பிரியன் என்பவர் திருவிழிச்சில் சுப்ரமண்யர் கோவிலுக்கு இவ்வூர் சபையார் மூலம் 10 கழஞ்சு பொன்னை கொடையாக அளிக்கின்றார். இதன்படி இப்பொன்னைப் பெற்ற சபையார் இப்பொன்னிலிருந்து வரும் பலிசையால் (வட்டியால்) ஆண்டாண்டு வரும் கார்த்திகைத்திருநாளில் விழா எடுக்கவும் அதன்பொழுது இக்கோவிலில் விளக்கு எரிக்கவும் ஆவன செய்கின்றனர் என்ற செய்தி இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறிதொரு தூண் கல்வெட்டு பல்லவ மன்னன் கம்பவர்மனின் 17 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி.886) தமிழ் கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டு மணையில் கோட்டத்து மணையில் ஊரைச் சார்ந்த வசந்தனார் என்ற பெண் 16 கழஞ்சுப்பொன் திருவிழிச்சில் சுப்ரமண்யர் கோவிலுக்கு விளக்கு எரிக்கவும் பிற செலவினங்களுக்கும் அளித்த கொடையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இப்பொன்னைப் பெற்ற இவ்வூர் சபையார் அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்திலிருந்து தொடர்ந்து விளக்கெரிக்க சம்மதிக்கின்றனர். இக்கோவிலுக்கு மேற்குறித்த வசந்தனார் நிலக்கொடையும் அளிக்கின்றார். இவர் சீயசர்மன் என்கின்ற கம்பபட்டனின் மனைவியாவார். இவர் சாண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்தவர்.

இவரது மற்றொரு மனைவியான நங்கை என்பாரும் இக்கோவிலுக்கு விளக்கெரிக்க கொடையளித்துள்ள செய்தி இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. மணையில் என்ற ஊர் இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் அரக்கோணத்திற்கு அருகில் மணவூர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்கல்வெட்டுக்களைத் தவிர மூன்றாம் கிருஷ்ணரின் மற்றொரு கல்வெட்டுக் திருச்சுற்றுமாளிகைத் தூண் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கல்வெட்டுக்களின் மூலம் பல்லவர் காலத்தில் இங்கு சுப்ரமணியர் எனப்படும் முருகனுக்கு மிகப்பெரிய கோவில் ஒன்று இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. பல்லவர் காலத்தில் இருந்த கற்றளி கோவில் கி.பி 13 -14 ஆம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது. அதன்பிறகு கடற்சீற்றத்தால் இக்கோவில் முழுவதுமாக அழிக்கப்பட்டு மணல் மேடிட்டுள்ளது. இக்கோவில் கருவறை வடக்கு நோக்கி சிறிது கிழக்காக (வடகிழக்காக) பாறையை நடுவில் நிறுத்தி திருச்சுற்று மாளிகையுடன் விளங்கியது. வடக்கு நோக்கிய கருவறை இடைகழி, அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் பலிபீடப் பகுதி முருகனுக்குரிய வஜ்ஜிர அமைப்புடைய கற்றூண் போன்றவை காணப்படுகின்றன.

இக்கற்றளிக் கோவிலை மேலும் அகழாய்வு செய்ததில் இக்கற்றளிக்கு முன்பே இங்கு செங்கல்லில் ஆன திருச்சுற்று மாளிகையுடன் கூடிய செங்கல் தளி ஒன்று இருந்தமையை அறிய முடிகிறது. பல்லவர் காலத்திற்கு முன்பே இங்கு சங்க இலக்கியங்களில் கூறப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டளவில் கடலால் அழிக்கப்பட்டு அதன் மீதே பல்லவர்கள் கற்றளியாக இக்கோவிலை விரிவு படுத்தி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. செங்கற் தளியின் செங்கற்கள் ஒவ்வொன்றும் காவேரிப்பூம்பட்டிணம், அரிக்கமேடு மற்றும் உறையூர் ஆகிய இடங்களில் கிடைத்த சங்க கால செங்கற்களின் அளவை பெரிதும் ஒத்துள்ளன.

மேலும் இக்கோவிலின் வெளிச்சுவற்றை சுண்ணாம்பு சாந்து கொண்டு பூசி உள்ளனர். பல்லவர் காலத்திற்கு முற்பட்ட செங்கற் தளியின் தரைப்பகுதியும் சுண்ணம் கொண்டு பூசியுள்ளனர். இக்கோவிலின் கருவறைப் பகுதியையும் இடைகழியையும் பல்லவர்கள் மாற்றியமைக்கும் பொழுது சிறிது விரிவு படுத்தியுள்ளனர். கருவறைப் பகுதியை அகழ்ந்தபொழுது 29 வரிசையில் சதுர வடிவுடைய அறை ஒன்று ஆழமான தொட்டி போன்று அமைக்கப்பட்டுள்ளது. கருவறையச் சுற்றிவர மாடம் போன்ற மேடைப்பகுதி செங்கற்கள் கொண்டு நேர்த்தியாக பாவப் பட்டுள்ளது. கோவிலின் பின்புற மேடைப்பகுதியுடன் வடக்கு நோக்கிய கருவறைப்பகுதி அதன் முன்னுள்ள இடைகழி, நீள்சதுர அர்த்தமண்டபம் ஆகியவற்றையும் இயற்கையாக அமைந்த பாறையையும் மையப்படுத்தி செங்கற் திருச்சுற்று மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வகழாய்வில் சங்க காலத்தைச் சேர்ந்த கூறை ஓடுகளும் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் செங்கற்தளி மீது மூங்கிலை வேய்ந்து சூட்டோடுகள் கொண்டு கூறை வேய்ந்துள்ளமை இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் சுடுமண்ணால் ஆன கைகளைக் கோர்த்து நடனமாடும் மகளிர் பொம்மை ஒன்று இங்கு கிடைத்துள்ளது. இது முருகனுக்காக ஆடப்படும் ஆடலாக இருக்கலாம். சங்க காலத்தில் இப்பகுதியை தொண்டைமான் இளந்திரையன் என்பவர் ஆட்சிபுரிந்தார். இவர் ஆந்திரப் பகுதியுடன் நல்லுறவு வைத்திருந்ததாக சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. ஆந்திரப் பகுதிகளில் பல பௌத்த விகாரைகள் கிறித்துவ தொடக்க காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டன. அத்தகைய தாக்கத்தாலும் தொடர்பாலும் தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுக நகரமாக விளங்கிய மாமல்லைப் பகுதியில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு செங்கற் தளியை இம்மன்னனோ இம்மன்னனின் வழிவந்தோரோ கட்டியிருத்தல் வேண்டும் என்பது இவ்வகழாய்வின் மூலம் அறியமுடிகிறது.

கட்டுரையாளர், சென்னை, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையில் கல்வெட்டுப்பிரிவில் பணியாற்றுகிறார்.

Pin It