துருக்கி நாட்டுக்குறும்படம் : அக்ரி அண்ட் தி மவுண்டன் பள்ளிக்குப் போகும் அந்த இளம் பெண் தூங்கி எழுந்ததும் தான் படுத்த படுக்கையை, ரஜாயை மடக்கிப் போடுகிறாள். அடுப்பிற்கு தேவையான விறகுக் கட்டைகளை எடுத்துப்போய் அடுப்பில் போடுகிறாள். சாம்பலை வெளியே எடுத்து போட்டு விட்டு தயார் படுத்துகிறாள். குடும்ப மனிதர்கள் மற்றும் நாய்.

“நான் ஸ்கூலுக்கு போகணும் அம்மா”

“இருக்கற வேலைகளை முடிச்சுட்டுப் போ ..”

வீட்டில் இருக்கும் படுக்கைகளை மடித்துப்போடுவது போன்ற வேலைகளைச் செய்கிறாள். பெரியவர்கள் தேனீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“புது ஷ¨ தேவைப்படுதம்மா”

“இருக்கறதெ போட்டுக்க”

“அப்பா வாங்கித்தர்றதா சொல்லியிருக்கர் அம்மா” குளிரைத் தாங்கிக் கொள்ளும் விதமாய் ஒன்றுக்கும் மேற்பட்ட காலுறைகளை அணிகிறாள்.

“வழக்கமா வர்ற பாதி வழிக்குத்தா நான் வருவேன். மீதி வழியிலெ நீயே போய்க்கணும்” பள்ளிக்கு அம்மாவுடன் புறப்பட்டுப் போகிறாள்.

பாட்டி “ஸ்கூலுக்கு எதுக்குப் போறே. மசூதிக்குப் போ. போதும்” என்கிறாள்.

வெளியே பனி படர்ந்த மலைகள். நோக்கும் திசையெல்லாம் பனி படர்ந்து கிடக்கிறது.

“சீக்கரமா போ மகளே. நிலச்சரிவும் பனிச்சரிவு ஏற்படலாம்..”

பாதி வழியில் கழுதை மேய்த்துக் கொண்டு வருபவர் அவளுடன் இணைந்து கொள்கிறார். கால் புதைப்பனியில் அமிழ்கிறது. கழுதையின் காலே ஒரு அடிக்கு மேல் பனியில் அமிழ்கிறது. மெல்ல கால்களை வைத்து நடக்கிறார்கள். கழுதை குளிரிலும், ஆழமான பனியில் இருந்து கால்களை எடுக்கவும் சிரமப்படுகிறாள். அந்தப் பெண்ணும், கழுதையை ஓட்டி வரும் மாமாவும் சிரமப்படுகிறார்கள். நதிகளும் குறுக்கிடுகின்றன. உடம்பைப் போர்த்திக் கொண்டிருக்கும் அடர்த்தியான ஆடைகளை மீறி பனியின் தாக்கம் மோசமாக இருக்கிறது. பள்ளி தென்படுகிறது. வெகு சிரமத்துடன் பள்ளி போய் சேருகிறாள்.

அவள் பள்ளி வகுப்பறைக்குள் சென்ற பின் பின்னணியில் கேட்கும் குரல்: “விறகுக்கட்டையைக் கொண்டுட்டு வர்லியா. பள்ளியும் நம்ம வீடுதானே” ஆசிரியர் உள்ளே இருக்கும் குளிரைத் தாங்காமல் சொல்கிறார். படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு அந்தச் சிறுமியை இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் அவளைப் பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

பள்ளி முடிகிறது. “இருட்டுவதற்கு முன்பு சென்று விட வேண்டும். இருட்டில் நதியைக் கடப்பது சிரமம்” மூன்று குழந்தைகளுடன் அவள் கிளம்புகிறாள். காலையைவிட அடர்த்தியான பனி இன்னும் இம்சிக்கிறது.

நதியை, புதைப்பனியைக்கடந்து ரொம்ப தூரம் நடந்து வீட்டிற்கு வந்து சேருகிறாள். அம்மா வீட்டின் வெளிபுறத்தில் கோழிகளுக்கு தானியம் இரைத்துக் கொண்டிருக்கிறாள். தாத்தா சவுகரியமாக உட்கார்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறார். படுக்கையில் சாய்ந்து அந்தச் சிறுமி உறங்க்த் தொடங்குகிறாள். களைப்பில் தூங்கி விடுகிறாள்.

“இன்னொரு கப் டீ கொண்டு வா” தாத்தா சப்தம் போடுகிறார். ஜோர்டான் நாட்டு குறும்படம் : ஒன்ஸ் அப் ஆன் ஏ டைம் ஒரு தோள் பையைச் சுமந்து கொண்டு அவர் இறங்கி நடந்து வருகிறார். விஸ்தாரணமான வீதியை பார்த்தபடி நடந்து செல்கிறார்.

புதிதாய் மணமானவர்கள் போன்ற உடைத் தோற்றத்தில் இருக்கும் இருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார்கள். மகிழ்ச்சியுடன் பலர் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கடை அவரின் கண்ணில் படுகிறது.

பழங்களும் வெவ்வேறு மளிகைச் சாமான்களும் விற்கும் கடை. அவர் கடையின் மூலையில் கிடக்கும் ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வைத்து தோள்பையிலிருக்கும் பொருட்களை எடுத்துப் பரப்புகிறார்.

கடைக்காரப் பெண்மணியும் அவரைச் சார்ந்தவர்களும் என்ன இது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு குழந்தை நடந்து போய் அவர் பரப்பி வைத்திருக்கும் பொருட்களில் இருக்கும் பொம்மை ஒன்றை எடுத்துக் கொள்கிறது. அதன் தகப்பனார் விலை கேட்கிறார். விலையெதுவும் இல்லை என்கிறார்.

“இதில் காமரா ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்குமா. குண்டு இருக்குமா” அடுத்து வருகிற ஒருவர் மோதிரம் ஒன்றை எடுத்துப் பார்த்து விலை கேட்கிறார். விலையெதுவும் சொல்லாமல் உதட்டைப்பிதுக்கி இலவசம் என்கிறார். அவர் முன் கிடக்கும் பொருட்களைத் தேர்வு செய்து பலர் எடுத்துப்போகிறார்கள்“எங்கள் கடையுள் வந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ பொருட்களை விற்பனை செய்கிறாய். நீ யார்?”

கடைக்காரப் பெண்மணியும் அவரைச் சார்ந்தவர்களும் என்ன இது என்று சப்தமிட்டு களேபரம் செய்து அவரைத் தாக்கத் தொடங்கிறார்கள்.

காவல்துறையினர் வருகிறார்கள். அவர் தோள்பையை எடுத்து மாட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி நடந்து போகிறார்.

பொம்மையை வாங்கிய குழந்தை நடந்து போய் வெளியில் இருக்கும் ஏக்கத்துடன் பொம்மையைப் பார்க்கும் ஒரு சிறுவனுக்கு அந்த பொம்மையைக் கொடுத்து விட்டு நடந்து போகிறாள்.

இந்தியப் படம்:

18 குச்சிகள் ; இயக்கம் மணிமாறன்.

முள்ளி வாய்க்கால் 17-05-2009 : 11.26 PM

எல்லாவற்றையும் இழந்து விட்டேன்.

இறுதியாக இருப்பது இந்த தீக்குச்சிகள்தான்.

(ஒவ்வொரு தீக்குச்சியாக பற்றவைத்துக் கொண்டே பேசுகிறார்) இதை வைத்தாவது எதையாவது கொளுத்த முடியுமா என்று பார்க்கிறேன்.

நீங்கள் இன்னும் ஒரு கொலை செய்யவில்லை என்று நம்புகிறவன். சில நிமிடங்களில் நான் சாக இருக்கிறேன்.

நீங்கள் தான் அதற்குக் காரணம். அல்லது நீங்கள் காரணம் அல்ல கூட அல்லது நீங்கள் மட்டும்தான் தனிப்பட்ட முறையில் காரணம் எனலாம். எனக்கு அரசியல் தெரியாது.

எனக்கு சரித்திரம் தெரியாது , எனக்கு சட்டம் தெரியாது , எனக்குத் தெரிந்ததெல்லாம் என் மகள், மனைவி, மக்கள் , பேரப்பிள்ளைகள்.

என் மனைவியின் மார்பை பதம் பார்த்த கத்தியில் உங்களின் ரேகை இருக்கிறது. மகளின் மார்பில் உங்கள் நகக்கீறல்கள்.

யாழினி 8 வயது பேத்தி.

சரியாகச் சிறுநீர் கழிக்கக் கூடத் தெரியாது என் பேத்திக்கு அவளின் யோனில் உங்கள் விந்து துளிகள் நீங்களே காரணம்.

அவள் யோனியின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நீங்களே காரணம்.

நீங்கள் குற்றவாளிகள்.

உங்களுக்கு குற்ற உணர்ச்சியைத் தரமுடியும் என்னால்.

எனவே இந்தப் பழி வாங்கல்.

எனது முடிவு முட்டாள்தனமானது என்று சொல்லலாம்.

எனது முடிவு தவறானது என்று சொல்லலாம்.

ஆனால் இதற்கெல்லாம் நீங்கள்தான் காரணம்.

நேசிப்பதற்கு எதிரிடை வெறுப்பதல்ல.

அக்கறையின்மைதான்.

(ஒவ்வொரு தீக்குச்சியாய் பேசிக் கொண்டே பற்ற வைப்பவர் கடைசிக் தீக்குச்சியை எண்ணெய் கேனுடன் தீப்பற்ற வைத்து அவர் உடம்பை வருத்திக் கொண்டு தீயில் கருகுகிறார்)

கோவையில் நடைபெற்ற சர்வதேச நான்கு நாள் திரைப்பட விழாவில் இடம்பற்ற சில குறும்படங்கள் இவை. துருக்கி நாட்டுப்படங்கள் அரசியல் தளத்திலும் தீவிரமான பிரச்சினைகளைக் கொண்டிருந்தன.தமிழ்ச்சூழல் வெளிறியே காணப்பட்டது.

பார்த்த இன்னும் சில படங்கள்:

* காலணிகள்: ..மனிதர்கள் இல்லாமல் காலணிகள் கதாபாத்திரமாக.. சற்றே வித்யாச முயற்சி.கோவை மாணவர்கள்

* இன் தடார்க்னஸ்: துருக்கிப்படம், பார்வையற்றவர். தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கிறார். வெவ்வேறு நிகழ்வுகள். செய்திகள். அவரை தொந்தரவு செய்கின்றன. கண்ணீர் வடிக்கிறார். பார்வையற்றவன் யார் என்ற கேள்வி..

* டே ஆப்டர் டொமாரோ :இணையதளம், ஆபாசப்படங்கள் இளைஞர்களை பாலியல் ரீதியாக அலைக்கழிப்பது பற்றிய விரிவான படம், கல்கத்தா சூழல். . பெரும் எச்சரிக்கை கூட ..

* கூத்தே: பவா செல்லதுரையின் சிறுகதை குறும்படமாக. இயக்குனர் ரோசலின் செல்வம். பாலுமகேந்திராவிடம் தட்டச்சு செய்பவராக இருந்தவர். பாலு தந்த ஊக்கத்தால் இந்த படம் எடுத்திருக்கிறார். பாலு மரணத்திற்குப்பின்னே வெளியாகியிருக்கிறது.கூத்துக் கலைஞர்கள் வேறு ஏதாவது தொழில் செய்து கொண்டே கூத்தாடுபவர்கள் அதிகம். கூத்து வாய்ப்பு இல்லையென்பதாலும், அங்கீகாரம் இல்லாததாலும் தற்கொலைக்கு ஒரு கூத்துக் கலைஞனை தள்ளி இருக்க வேண்டாம். விலைமாது, மனைவி கதாபாத்திர பேச்சில் இயல்பில்லை.

* திரு. சலீம் : உடல் ஊனம் மீறி வாழ்க்கையில்சாதனை செய்திருக்கும் இளைஞர் சலீம் பற்றிய தமிழ் ஆவணப்படம். இயக்கம் வருண் சிங்கர்

* ஏ குட் மேட்ச்: மனைவி அவள் மீதான கணவனின் வன்முறைகளை சகித்துக் கொண்டே வாழ்கிறாள். அது தன் மகள் மீது ஏவப்படும் போது எதிர் வினை செய்கிறாள். அமெரிக்கப் படம்.இயக்கம். சுனிதா மிஸ்ரா

Pin It