ஜெய் பீம் சர்ச்சைகள் குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் (21.11.2021) தொடர்ந்து எழுதி வரும் அருண் ராம், எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான கருத்துக்கள்.
பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இதுவரை ரேட்டிங்கில் (IMDB) முதல் நிலையில் இருந்த ‘தி ஷாவ்ஷங்க் ரிடம்சன்’ (The Shawshank Redemption) மற்றும் ‘தி காட்பாதர்’ (The Godfather) படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரேட்டிங்கில் முதலிடத்திற்கு வந்திருக்கிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம். பார்வையாளர்களின் ஒருமித்த உணர்வுகளை படம் பிரதிபலிப்பதே இந்த வெற்றிக்கான காரணம். கரங்களை கட்டிக்கொண்டு இந்தப் படங்களை பார்க்க முடியாது. கரங்களை நெஞ்சில் தொட வைக்கும் படம் இது. கணவனை கொலை செய்தவர்களிடம், ‘அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொண்டால் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு என் அப்பா யார் என்று கேட்டால், அதற்கு நீங்கள் தரும் பணம் பதில் சொல்லுமா?’ என்று கேட்கிறார் செங்கேனி. இதை நான் எழுதுவது ஒரு திரைப்பட விமர்சனமாக அல்ல. இப்போது தலைதூக்கி நிற்கும் ஜாதி வெறி அரசியல் பார்வையில், இதை நான் எழுதுகிறேன்.
முதலில் படம் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டதா ? என்றால், ஆம். ஆனால் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் உண்மையானதா ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. உலக புகழ் பெற்ற 'காந்தி' திரைப்படத்தை உருவாக்கிய 'அட்டன் பரோ' படத்தின் முகப்புரையாக இவ்வாறு கூறுவார். “ஒரே கதையில் எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் உண்மையாக காட்டி விட முடியாது. ஆனால் அந்த மனிதனின் ஆழமான உணர்வுகளை பதிவு செய்ய முடியும். அவரின் இதயத்தை திறந்து காட்ட முடியும்.” ஆனால், படம் உணர்த்தும் சமூக அவலங்களை விரும்பாதவர்கள் சுலபமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சில காட்சிகளே போதுமானது.
சித்திரவதை செய்த ஆய்வாளருக்கு சூட்டப்பட்ட பெயர், சில வினாடிகள் மட்டுமே காட்டப்படும் காலண்டர். இவைகளே இவர்களின் எதிர்ப்புக்குப் போதும். கீழ் ஜாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்டு, கொடுமைக்குள்ளான மக்களின் வலியை விட இந்தக் குறியீடுகளே எதிர்ப்பாளர்களுக்கு முக்கியமானது.
ஜாதி எதிர்ப்பைப் பேசும் படங்களுக்கு ஆதிக்க ஜாதி குறியீடுகளைப் பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை.
படம் பார்ப்பவர்களுக்கு துயரம் தொண்டையை அடைக்கிறது, இதயம் கனக்கிறது. ஆனால், படத்தை எதிர்ப்பவர்களோ, நகைச்சுவைகளை அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். படத்துக்கும், படத்தின் தலைப்பிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? என்று கேட்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் சூரியா, அய்ந்து மொழிகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டது ஏன் ? என்று கேட்கிறார் எச். இராஜா. இதற்கு சூரியா மவுனமாக ‘லைக்’ போட்டுவிட்டார். இதுவே அவரது பதில்.