யமுனா நதிக்கரையில் நானூறு ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்ட தில்லி நகரம் இன்றைக்கு துர்தேவதை கையில் அகப்பட்டிருக்கிற பொம்மை போல திணறிக்கொண்டிருக்கிறது. தில்லி என்பதற்கு மறைகழண்டவன் என்ற பொருளும் இருக்கிறது. ஏதோவொரு காலத்தில் அரசனுக்கு எதிரானவர்கள், புரட்சிகரமானவர்களை மறை கழண்டவன் என்று அழைக்கப்போக அதுவே சற்று மருவி நகரின் பெயராகவும் நிலைத்துவிட்டிருக்கிறது. புதிதாய் அந்தப் பெரும் நகரத்தை கணிக்கிற யாரும் மறை கழண்டவனின் பிரதேசமாகவே அதை எடுத்துக் கொள்வார்கள். 82 சதவீத இந்துக்களும் 12 சதம் முஸ்லிம்களும் 2 சதம் ஜெயின்களும் உள்ள நகரம் வெளிப்படையான பூச்சை மீறி திகில் தரும் கல்லறையாகவே இருக்கிறது. நகரத்தின் பழைய தெருக்களும், சந்துகளும், அழுக்கான கட்டிடங்களும் தில்லியின் கலாச்சாரத்தை பல்வேறு வகைகளில் பறை சாற்றுபவை. தில்லியின் ஆத்மாவை ஓரளவு உள்வாங்கிக் கொள்ள ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹராவின் டெல்லி-6 படம் உதவும்.

டெல்லியின் பழைய பகுதிகளும், சிறுசிறு சந்துகளும், சாந்தினி சவுக்கும் அதன் சாதாரண இயல்புகளோடு வெளிப்படுகிறது. டெல்லி - 6 என்பது சாந்தினி சவுக் பகுதியின் மிகவும் நெரிசலான ஒரு பகுதி. ஜிலேபி கடைகள், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள், காவல் துறையின் உதிரிகள், பழைய மனிதர்கள் என்று நிறைந்திருக்கும் பகுதி. ஆழமான நட்பின் பின்புறம் மதவாதப் பிடிப்பு அவர்களுள் ஆழமாக இருக்கிறது. அபிஷேக் பச்சனின் கதாபாத்திரம் அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு பாட்டி வகீதா ரகுமான் தன் கடைசி காலத்தை டெல்லியில் கழிக்க விரும்புவதாய் வருகிறது. அபிஷேக் பச்சனுக்கு சிறுசிறு சந்துகளில் அலைந்து திரிவது, பட்டம் விடுவது, மாடிப்புறாக்களுடன் உலாவல், மாமா ரிஷி கபூருடன் ஸ்னூக்கர் விளையாடுவது என்று பொழுது போகிறது. அவரின் இன்னும் இரு மாமாக்கள் ஒரே வீட்டில் தடுப்புச் சுவர் எழுப்பிக்கொண்டு வாழும் குடும்பத்தினராக இருக்கிறார்கள். கறுப்பு குரங்கொன்று மாநகரில் நடமாடுவதாய் செய்திகள் பரவி திடுக்கிடச் செய்து கொண்டிருக்கின்றன. நகரில் நடத்தப்படும் ராமாயண நாடகமும் கறுப்பு குரங்கின் பீதியும் மக்களிடம் நிறைந்திருக்கிறது. மெல்ல மதப் பிரச்னைகள் கிளம்பி மக்களைப் பிரிக்கிறது. விளிம்பு நிலை தலித்துகளும், “கடவுள் உன்னுள் இருக்கிறார் வெளியில் இல்லைஎன்ற சொல்லியபடி கண்ணாடியை தென்படுகிறவர்களின் முகங்களுக்கு எதிரே நீட்டி கோமாளித்தனம் செய்கிறவனும், மஜித் மந்திர் பிரச்னைகளும் அவர்களை திக்கு முக்காடச் செய்கிறது. அவர்களின் உள் முகங்களையும் திணறல்களையும் காட்டுகிறது. பழமை வாய்ந்த நெரிசலால் திணறும் நகரின் குரூரமான முகத்தோடு, மனிதாபிமானம் நிரம்பிய மனிதர்களை ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இதில் காட்டுகிறார். சிறுசிறு கதாபாத்திரங்கள், குறுகிய தெருக்கள் என்ற கடந்து போக நேரிட எல்லோரையும் அறிமுகப்படுத்தி விடுகிறார்.

மும்பை இந்தியாவின் மிகப்பெரிய ராட்சத வியாபார நகரம். 14 மில்லியன் ஜனத்தொகை நெரிசலிலும், பண சூதாட்டமும், அதற்குள் அமிழ்ந்து போன மனிதர்களும் விசேசமானவர்கள். 1992ல் ஆயிரக்கணக்கானோர் பலியான மதக்கலவரம் நிகழ்ந்த மாநகரம் 1993 மிகப்பெரிய அளவில் 13 இடங்களில் வெடித்த குண்டுகள் நகரை சிதைத்தது. 2006, 2008ல் நடந்த வன்முறைகளும் கூட. திருவிழாக்கள், விதவிதமான உணவுகள், வெவ்வேறு வகையான மனிதர்கள் என விசித்திரமான மும்பாய்.

இந்த நகர மனிதர்களின் விசித்திர இயல்புகளை குரூரமான நகைச்சுவை பின்னணியுடன் சொல்லும் நகரம் சங்கத் சிட்டி’. குரு என்ற டாக்ஸியை திருடி வேறு வர்ணம் பூசி விற்று வருகிற பிரதான கதாபாத்திரத்தை முன்வைத்து இப்படம் பேசுகிறது. முதல் காட்சியில் குரு திருடப்பட்ட காரில் சென்று கொண்டிருக்கிறான். அவன் இயக்குகிற வானொலி மும்பை நகர் நில நடுக்கத்தால் பாதிக்கப்படப் போகிறது என்ற செய்தியைச் சொல்கிறது. குரு எந்தவித சலனமும் இல்லாமல் வானொலியைத் திருப்பி வேறு அலைவரிசைக்குப் போகிறான். திருடிய டாக்ஸிகள் விற்கப்படுகின்றன. திரைப்படப் படப் பிடிப்புகளில் தீயிட்டு கொளுத்தப்பட பயன்படுத்தப்படுகின்றன. மறைமுக உலகத்தில் நடமாடும் பணம் பல மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது.

ஒருவனுக்கு கொடுக்க அனுப்பப்படும் பணம் கைமாறி தொலைந்து பல இடங்களுக்கு நகர்வதன் மூலம் வெவ்வேறு மனிதர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். ஏமாற்றி பணம் பறிக்கும் காவல்துறையினர், பெண்கள், சாமியார்கள், அவர்களுக்கு உள்ள மிகப் பெரிய மனிதர்களின் தொடர்புகள் என்று விரிகின்றன. குரூரமான முகங்கள் முழுக்க சுயநல நடவடிக்கைகள். மாநகர சுவரொட்டிகளும், வீட்டு தினசரி நாட்காட்டிகளும், மாநகர குப்பைக் கூளமும் என்று பல்வேறு படிமங்கள் மூலம் மும்பை பற்றிய சித்திரம் முன் வைக்கப்படுகிறது. தினசரி நிகழ்வுகளின் நெருக்கடியில் கடந்து போகிறவர்கள் எதேச்சையாக நின்று ஒரு கணம் திரும்பிப் பார்த்து அதிர்ச்சி அடைகிற தருணங்களை இப்படம் கொண்டிருக்கிறது. எல்லா இந்திய நகரங்களின் பொதுவானத் தன்மையின் குறியீடாய் மும்பை நிற்கிறது.

Pin It