பி.எஸ்.சி. தியேட்டர்ல ரெண்டாவது ஆட்டம் ஆரம்பிக்கப் போறதுக்கான கொம்பு ரிக்கார்டை போட்டுட்டாங்க. எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது. அப்பா இன்னும் வரல. நான் தெரு பிள்ளைகளோட லைட் கம்பத்துக்குக் கீழ கண்ணாமூச்சி, இல்லாட்டி தொட்டு வெளையாட்டு வெளையாடிகிட்டு இருக்கறப்ப அப்பா மேற்கே கடைப்பக்கமிருந்து வந்திடுவாரு. “கிறுக்குக் கழுத இன்னும் வெளையாடி கிட்டிருக்க, காலயிலப் பள்ளிக்கூடத்துக்கு போகவேணாமா”ன்னு சொல்லி என்னைத் தூக்கிட்டு போவாரு. இன்னைக்கு என்னமோ கரெண்டை அமத்தினதுக்கப்புறமும் அப்பா வரல. எங்க ஊர்ல ராத்திரியில கரண்டு அமந்தால் பத்து மணின்னு அர்த்தம்! அப்பா வந்தா போவோம்ன்னு நானும் வீட்டுக்கு போகாம கெடக்கேன். அப்பா இல்லாம தனியா வீட்டுக்கு போனா “இம்புட்டு நேரமும் எங்கடி போனே”ன்னு அம்மா என்னைப் போட்டு அடிக்கும். அப்பா இருந்தா என்னை அடிக்க விடமாட்டாரு. எல்லாப் பிள்ளைகளும் வீட்டுக்குப் போயிட்டாங்க. அதுவும் பொம்பளப் பிள்ளைங்கெல்லாம் எப்பவும் கரண்டு அமறதுக்கு முன்னாடியே போயிடுவாங்க.

குமரேசன், பிரகாசு, மொக்கப்பாண்டி நாங்க நாலு பேரு மட்டும்தான் கடைசிவரைக்கும் வெளையாடி கிட்டிருந்தோம். அவங்க வீடெல்லாம் பக்கத்திலே இருக்கு குடுகுடுன்னு ஓடிப் போயிடுவாங்க. எங்க வீடு.. பெரிய தெருவுலருந்து உள்ள திரும்பற முட்டுச் சந்துக்குள்ள இருக்கும். நான் எப்படி தனியா போறது. அன்னைக்கு கரண்டு அமந்து மறுபடியும் லைட்டை போட்டதுக்கப்புறம் “யெம்மே... வெளையாண்டது போதுமே அவரவர் வீட்டுக்குப் போயி கஞ்சியை குடிங்க”ன்னு போயிட்டான். நானும் பிரகாசும் மட்டும் இருந்தோம். “எலே எங்கப்பா வர்ற வரைக்கும் இங்கய இருடா”ன்னு பிரகாசை என்கூடவே ஒக்காரவச்சுட்டேன். எப்பவும் பிரகாசு என்கூட சண்டை போடமாட்டான். அவனுக்கு நான்னா பிரியம். சாக்கடைக்குக் குறுக்க போட்டிருந்த கல்லுல நாங்க ரெண்டு பேரும் காலைத் தொங்கப்போட்டு ஒக்கார்ந்திருந்தோம். அவனுக்கு தூக்கம் பொறுக்க முடியல. தூங்கி என்மேல சாஞ்சான். ஆனால் எனக்கு அப்பா வரலங்கிற துக்கத்திலும், அம்மா அடிக்குங்கிற பயத்திலயும் தூக்கம் வரல. அவனப் பார்க்க பாவமா இருந்துச்சு. அம்மா அடிச்சாலும் பரவாயில்ல வீட்டுக்குப் போகலான்னு முடிவு பண்ணிட்டேன். அவனை “தெரு முனையிலே நில்லுடா.. நான் சந்துக்குள்ள போறேன். நீ நூறு வரைக்கும் சத்தம் போட்டுச் சொல்லு நான் எதாச்சும் கத்துனா மட்டும் ஓடிவந்து பாரு. நீ நூறு சொல்லி முடிச்சும் நான் கத்தலன்னா சூதானமா வீட்டுக்குப் போயிருப்பேன்னு அர்த்தம். அதுக்கப்புறம் உங்க வீட்டுக்குப் போயிரு சரியாடா”னேன். அவனும் தூக்கக் கலக்கத்தில் “சரிமா நீ போ நான் பாத்துக்கிறேன்”னு ஒண்ணு ரெண்டு எண்ண ஆரம்பிச்சிட்டான்.

சந்துக்குள்ளே போற வழியில முத்து வீட்டுக் கொட்டம் இருக்கும். கொட்டத்து விட்டத்தில சாக்குச் சாக்கா தொங்விட்டு இருப்பாங்க. நான் எப்பவும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டேன். சாக்கு தொங்குறது இருட்டு நிழலுல ஆள் உருவம் மாதிரியே தெரியும். அவங்க வீட்டைக் கடந்து வேக வேகமா எங்க வீட்டுக்கு ஓடிட்டேன். வைக்கோல் போட்டு மேஞ்ச எங்க வீடு மண்சுவரா இருந்தாலும் கதவு மட்டும் கெட்டியா இருக்கும். சாத்தியிருந்த கதவை என் சத்தெல்லாம் ஒன்னுசேத்து உள்பக்கமா தள்ளுனேன். எங்கம்மாவுக்குப் பிடிக்காததை நான் செய்யுறப்ப, அதுக்கு கோபம் முத்துறதுக்கு முன்னாடி “அடியே உனக்கு முதுகெல்லாம் பரபரன்னு இருக்கு. இப்ப அடி வாங்கிச் சாகப்போறே”ன்னு எச்சரிக்கை பண்ணும். அன்னைக்கும் எனக்கு அப்படித்தான் அம்மா அடிக்கிறதுக்கு முன்னாடியே வலிய நெனைச்சு முதுகு பரபரன்னு இருந்துச்சு. வீட்டுக்கு நடுவில தரையோடு தரையா சேர்ந்திருந்த மரவிட்டத்தில சாஞ்சு உட்கார்ந்திருந்துச்சு எங்கம்மா. தலையை கீழ குனிஞ்சு, கருவேப்பிலை குச்சியால தரையில கோடு போட்டுகிட்டுருந்துச்சு. எங்கம்மா கவலையாயிருக்கறப்பல்லாம் இப்படிதான் ஒரே சிந்தனையா ஒக்காந்திரும். கண்ணீர் மட்டும் தானா கண்ணுலருந்து வழிஞ்சுகிட்டிருக்கும்.

அப்பல்லாம் என்னை அடிக்கவும் அடிக்காது. “நல்ல வேள தப்பிச்சோம்”ன்னு பேசாம போயி எங்கப்பா படுக்கிற கயித்துக் கட்டிலப் படுத்தேன். நான் வௌயாட போறதுக்கு முன்னாடியே சாப்பிட்டிருந்தாலும் விளையாண்டதுல மறுபடியும் வயிறு பசிச்சுச்சு. “கஞ்சி ஊத்துமா”ன்னு இப்ப கேட்டா அம்மா அடிக்கும்னு பயந்துகிட்டு பேசாம இருந்திட்டேன். அப்பா இருந்தார்ன்னா அவர் சாப்பிடறப்ப சோறை உருட்டி உருண்டை பிடிச்சு குடுப்பாரு. அதுவும் அப்பா தட்டுல கெடக்கற கடிச்சு குடிக்கெல்லாம் ஒவ்வொன்னா எடுத்து தின்னுகின்னே இருப்பேன், அதிலய வயிறு நெறைஞ்சிடும். “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” இன்னைக்கு உன் வட்டியில எடுத்து திம்பா. கல்யாணமானதுக்கப்புறம் புருசன் வட்டியிலயும் எடுத்து திம்பா. “ஒங்காத்தா எப்படி வளர்த்திருக்கா பாரு”ன்னு அவ மாமியாகாரி என்னை வைவா”ன்னு சொல்லி அம்மா இன்னும் கொஞ்சம் கடிச்சகுடிக்கைய கொழம்புச் சட்டியிலிருந்து எடுத்து அப்பா வட்டியில போடும். “உனக்கெல்லாம் அறிவு இருக்கா? பச்ச பிள்ளைக்கு நாளைக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாயக்கும். கூறுகெட்டு ஏதாவது பேசாதன்னு அப்பா அம்மாவை வைவாரு.

அப்பா பக்கத்தில படுத்தாதான் எனக்கு உறக்கம் வரும். பொம்பளப்புள்ள அம்மா கூடதான் படுக்கணுன்னு என்னை அடிச்சு அதுக்கு பக்கத்தில படுக்க வச்சுக்கும். அம்மாவோட கயித்து கட்டிலு ரொம்ப சிறிசு. நெருக்கியடிச்சு அதுல படுக்க எரிச்சலா இருக்கும். அதுவும் இல்லாம அப்பா மாதிரி அம்மா கதை எதுவும் சொல்லாது. என்னதான் எங்கம்மா என்னை அடிச்சாலும் சினிமாக்குப் போறப்ப நடக்க முடியலன்னா என்னை அடிக்காம தூக்கிப் போகும். தெரு பொம்பளைககூட காலை நீட்டி ஒக்காந்து பேசிகிருக்கறப்ப போயி மடியில படுத்தேன்னாலும் ஒன்னும் சொல்லாது. கறிச்சோறு ஆக்குற அன்னைக்கு என்னை சாப்பிட வைக்காம அது சாப்பிடாது. சொல்லு கேக்காட்டிதான் அம்மா என்னை அடிக்கும். இல்லாட்டி ஒன்னும் சொல்லாது. அதனால அம்மா கவலையா இருக்கிறப்ப எனக்கும் கவலையா இருக்கும். அம்மாவைப் பார்க்க பாவமா இருந்துச்சு. பக்கத்தில போயி “என்னம்மா அழுகுறன்னு” கேட்டேன். “உங்கப்பா இன்னும் வரல, கெழக்குத் தெருவில நல்லமாயாண்டி செத்து போயிட்டாருல்ல அங்கதான் இருப்பாரு” போலாமான்னு கேட்டுச்சு.

எனக்கு பயத்தில தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு. அப்பா ரொம்ப நல்லவருதான் ஆனா ஊர்ல யாராவது செத்துபோயிட்டா மட்டும் கெட்டவரா மாறிராரு. நானும் அம்மாவும் அப்பாவைக் கூட்டிக்கிட்டு திரும்பி வர்றப்ப பெரும்பாலும் அப்பா தோள்ல நான் தூங்கிகிட்டு வருவேன். வீட்டுக்குப் பக்கத்தில வர்றப்ப அப்பா என்னைத் தோள்ல வச்சுக்கிட்டே அம்மாவை அடிப்பாரு. அப்பா அடிக்கிற வேகத்தில அவர் தோள்லிருந்து துள்ளி முழிச்சுக்குவேன். அப்பா அம்மாவை அடிக்கிறப்பல்லாம் நான் ஊரைக் கூட்றமாதிரி அழுவேன். என் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டு ஒச்சம்மா சின்னம்மா, ஜெயமணி அத்தை யாராவது ஓடி வந்து அடிக்கிற அப்பாவை தடுத்து நிறுத்தி அம்மாவை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுவாங்க. அப்பா போர்வையை தலை கால் தெரியாம இழுத்து மூடி படுத்துப்பாரு.

“நான் வரலம்மா அண்ணனை கூட்டிட்டு போ”ன்னு சொன்னேன். “அப்பா அடிப்பாருன்னு அண்ணன் வரமாட்றான். ஒன்னை அடிக்க மாட்டாரு நீ வா”ன்னு சொல்லுச்சு. நான் மாட்டேன்னு கண்ணை மூடிப் படுத்ததும், “போதும்த்தே இந்த பொழப்பு புருசனும் சரியில்ல. பிள்ளைங்களும் சரியில்ல. குருவனத்து ஆத்துல விழுந்து செத்துபோறே”ன்னு பெரிய ஒப்பாரியா வச்சு அழுதுச்சு. அம்மா கையை பிடிச்சு இழுத்து “அழுகாதம்மா நான் வாரே”ன்னு சொன்னதும், கொண்டையை அள்ளி முடிஞ்சு என்னை தூக்கிட்டு போச்சு. மத்த நேரத்தில நான் தூக்கச் சொன்னா என்னைத் திட்டிக்கிட்டே “குச்சிக்காலி எட்டு வயசு கொமரியாயிட்ட இன்னும் தூக்க வைக்கிறியே”ன்னு திட்டிக்கிட்டே தூக்கிப் போகும். நல்லா ஓடியாடி வெளையாண்டாலும் எனக்கென்னமோ அந்த வயசில நடக்கிறது கஷ்டமான காரியமா இருந்துச்சு. எங்க போனாலும் எங்கம்மாவை தூக்க வப்பேன். ஆனால் நான் கேட்காமலே அம்மா என்னைத் தூக்கி வச்சிகிச்சு. அம்மா இருக்கிற தைரியத்தில முத்து வீட்டுக் கொட்டத்தை உத்துப் பாத்துட்டே போனேன்.

நான், இல்ல எங்கண்ணன், எங்க ரெண்டு பேருல யாரையாவது தொணைக்கு கூட்டிக்கிட்டு எம்புட்டு இருட்டானாலும் அம்மா நடந்து போகும். பந்தல் போட்டிருந்த வீட்டுக்குப் பக்கத்திலிருந்த மொட்ட மதுலுக்குப் பின்னாடி மறைவா நின்னுகிட்டு “அப்பாவைக் கூட்டிக்கிட்டு வா”ன்னு என்னை மட்டும் அனுப்பி வச்சுச்சு. பந்தல்ல டியூப்லைட் எரிஞ்சதால பட்டப்பகல் மாதிரி வெளிச்சமா இருந்துச்சு. பந்தலுக்கு மேல தேங்கா எளனியக் கட்டி தொங்க விட்டிருந்தாங்க. தரையில வைக்கலை பரப்பி அதுக்கு மேல சாக்கை விரிச்சு ஆம்பளைங்கெல்லாம் கூட்டமா ரவுண்டுகட்டி ஒக்காந்திருந்தாங்க. எல்லார் கையிலும் கலர்கலரா சீட்டு இருந்துச்சு. கூட்டத்தில எங்கப்பா இருக்காரான்னு எட்டிப் பார்த்தேன். பச்சைக் கலர் துண்டை தலையில உருமா கட்டி கையிலிருந்த சீட்டை கவனமா பாத்துகிட்டிருந்தாரு எங்கப்பா.

என்னைப் பாத்ததும் கூட்டத்தில ஒருத்தரு “யாரு பிள்ளமா நீ! இந்நேரத்தில இங்க வந்திருக்க”ன்னு கேட்டாரு. எதுவும் சொல்லாம நான் அப்படியே நின்னுகிட்டிருந்தேன். “பக்கத்து வீட்டுப் பிள்ளையா இருக்கும். எங்கிட்டோ தூக்கச் சடவுல எந்திரிச்சு வந்திருக்கும். யாருன்னு விசாரிச்சு அவங்க வீட்ல விடுங்கப்பா”ன்னு இன்னொருத்தர் சொன்னாரு. அப்பதான் எங்கப்பா நிமிந்து பாத்துட்டு ரொம்ப பதட்டமா “என் பிள்ளப்பா”ன்னாரு. “இந்த இருட்டுக்குள்ள மேற்குத் தெருவிலிருந்து இந்தப் பிள்ள தனியாவா வந்துச்சு”ன்னு ஆளாளுக்கு அதிசயப்பட்டு பேசிகிட்டிருந்தாங்க. “எப்பா அம்மா அங்க நின்னுருக்கு ஒன்னைய கூப்பிட்டுச்சுப்பா வீட்டுக்கு வாப்பா”ன்னு கூப்ட்டேன். அப்பா நான் சொன்னதை காதுல வாங்கிக்காம என்னைத் தூக்கி மடியில ஒக்கார வச்சுகிட்டாரு.

நாங்க வர்றமான்னு அம்மா எட்டி எட்டி பாத்துச்சு. அப்பாவை நான் ஒரு தடவைதான் கூப்ட்டேன் அதுக்கப்புறம் அப்பா கையில இருந்த சீட்டை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். கலர் கலரா இருக்கிற அந்தச் சீட்டை பாக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சுச்சு. அதுவும் பரபரன்னு சீட்டை அடுக்கி கலைச்சு கண்ணசைக்கிற நேரத்தில சர்சர்ன்னு சீட்டை தூக்கி ஒவ்வொருத்தர் முன்னாடி போடுறது, வித்தை காட்ற மாதிரி இருந்துச்சு. ஆனால் எங்கப்பா மெதுவா கலைச்சு பொறுமையா ஒவ்வொரு சீட்டா போட்டாரு. அவருக்கு சீட்டை வேகமா போடுற வித்தை வரவே வராது போலருக்கு. எங்க பள்ளிக்கூட புத்தகத்தில போட்ருந்த ராஜா ராணி படம் மாதிரியே அப்பா வச்சிருந்த சீட்லயும் ராஜா ராணி படம் போட்டிருந்துச்சு. இது இல்லாம கோமாளி படம் போட்டுருந்த சீட்டுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

எழவு வீட்டுக்குள்ள பொம்பளைங்க அழுகிற சத்தம் விட்டுவிட்டு கேட்டுக்கிட்டிருந்துச்சு. யாரோ ஒரு பொம்பளை சீட்டு வெளையாடுற எல்லா ஆம்பளைகளுக்கும் டீ கொண்டு வந்து குடுத்தாங்க. என்னைப் பாத்துட்டு “என்னாப்பா புள்ள குட்டியோட சீட்டு வெள்ளாண்டு கிட்டு”ன்னு சொல்லி எனக்கொரு கெளாசுல டீ குடுத்தாங்க. “இந்தா முத்துக்கழுவன் புள்ள. அந்தா அவங்கம்மா இருட்டுக்குள்ள நின்னிருக்கு. அவர கூப்ட வந்திருக்காங்க”ன்னு ஒருத்தர் சொன்னதும், அந்த பொம்பள எங்கம்மாகிட்ட போயி ஏதோ பேசுனாங்க. அவங்க திரும்பி எங்கப்பாகிட்ட வந்து “ஏந்தம்பி சம்பாதிக்கிறதெல்லாம் சீட்டு வெளையாண்டு தோத்துட்டு போறீங்கலாம்ல. அப்பறம் எப்படிப்பா குடும்பம் நடத்த முடியும். பச்ச புள்ளய ஒக்கார வச்சிக்கிட்டு மேற்கு தெருவிலிருந்து இங்க வந்து சீட்டு வெளையாடிகிட்டிருக்க. சீட்டு வெளையாண்டது போதும். வீட்டுக்கு எந்திரிச்சு போப்பா. உன் பொண்டாட்டி இருட்டுக்குள்ள நின்னு கிட்டிருக்கா”ன்னு சொன்னாங்க. அப்பா தலையை குனிஞ்சுகிட்டே “இந்தா போயி றேக்கா”ன்னு சொன்னாரு. “எழவு வீட்ல எப்பவும் ஆளு இருக்கணும். ராத்திரி சும்மா கண்ணு முழிக்க முடியாதுன்னு பொழுதுபோக்குக்கு சீட்டு வெளையாடிட்டு போங்கன்னு விட்டா, ஊர்ல எங்க எழவு விழுந்தாலும் நீ கௌப்பில வெளையாடுற மாதிரி தீவிரமா வெளையாடி கிட்டிருந்தா குடும்பம் கெட்டுப்போகாது”ன்னு சொல்லிட்டு உள்ள போனாங்க. அப்பா அதுக்கப்புறமும் எந்திருச்சு வராம வெளையாடுனாரு. அப்படியே அவர் மடியில நான் படுத்து தூங்கிட்டேன்.

அப்பா என்னைக் கட்டில்ல போயி டம்முன்னு போட்டதுல்ல முழிச்சுப் பாத்தேன். நான் கட்டில்ல விழுந்த அடுத்த நிமிசமே அம்மாவை ஓங்கி முதுகில அடிச்சாரு. அம்மா அப்படியே மரவிட்டதுக்குப் பக்கத்தில போட்டுருந்த இன்னொரு கட்டில்ல போயி விழுந்து கத்துச்சு. அப்பவும் அப்பா விடல. அம்மாவை தூக்கி மரவிட்டத்தில முட்ட வச்சாரு. “ஆத்தே என்னை கொல்றா”ன்னு அம்மா கத்தி அழுதுச்சு. உடனே அப்பா அம்மா தலையை விட்டுட்டாரு. தலையிலிருந்து ரத்தம் சரசரன்னு ஊத்துச்சு. எங்கண்ணன் எந்திரிச்சு பேந்த பேந்த முழிச்சுகிட்டு ஒக்காந்திருந்தான். அம்மா தலையிலிருந்து வந்த ரத்தத்தை பார்த்து நான் உருண்டு உருண்டு அழுதேன். எங்கப்பாவுக்கு கையெல்லாம் நடுங்குச்சு. ஒரு துணியை எடுத்து அம்மா தலையை கட்டப் போனாரு.

அம்மா கோபத்தில “போடா அங்கிட்டு”ன்னு ஆங்காரமா கத்தி அப்பாவை தள்ளிப்போகச் சொல்லுச்சு. அண்ணன் வேகமா எந்திருச்சு வெளியே ஓடுனான். “இந்தச் சீட்டு வெளையாடி பயகிட்ட ஒரு நிமிசங்கூட நான் வாழமாட்டேன் இப்பயே போயி நான் சாகப்போறே”ன்னு சொல்லி அம்மா அழுதுச்சு. அதுக்குள்ள எங்க பெரியம்மா நெஞ்சுல அடிச்சுகிட்டு ஓடியாந்துச்சு. எங்கம்மா தலையில வழியிற ரத்தத்தைப் பார்த்து "அய்யையோ என் தங்கச்சிய அடிச்சு கொன்னுபுட்டானே”ன்ன அது ஒருபக்கம் ஒப்பாரி வச்சுச்சு. பெரியப்பா “ஏம்ப்பா அடிக்கிறதுக்கு ஒரு அளவு இருக்குப்பா இப்படியா பண்ணுவே'ன்னு சொல்லிட்டு அம்மாவை எங்கேயோ டாக்டர் வீட்டுக்குக் கூட்டுகிட்டு போனாரு. அண்ணனும் அவங்ககூடவே போயிட்டான். எல்லாரும் போனதுக்கப்புறம் அப்பா அழுதாரு. இனிமேல் சீட்டு வெளையாட போகமாட்டேன். உன் மேல சத்தியமான்னு என் தலையிலடிச்சு சத்தியம் பண்ணி என் கண்ணீர தொடச்சுவிட்டாரு. “சத்தியத்தை மீறுனா, யார் மேல சத்தியம் பண்ணுனோமோ? அவங்க தலை வெடிச்சுப் போகும்னு பிரகாசு சொல்லியிருக் காம்பா, நீயி சீட்டு வெளையாடப் போகக் கூடாது. இல்லாட்டி என் தலை வெடிச்சுப் போகும்”ன்னு அப்பாகிட்ட சொன்னேன்.

“சத்தியமா போகமாட்டேம்மா”ன்னு அப்பா இன்னொரு தடவ என் தலையிலடிச்சு சத்தியம் பண்ணுனாரு.
அம்மாவோட காயம் ஆறிப்போச்சு. இப்ப அம்மா எந்த எழவு வீட்டுக்கும் ராத்திரியில என்னைக் கூப்டுட்டுப் போகல. அப்பா சீட்டு வெளையாட்ட மறந்திட்டாருபோல. சிகரெட் அட்டையை சீட்டு மாதிரியே கத்திரிச்சு அதுல ஒன்னு ரெண்டு நம்பர எழுதி நானும் மொக்கப்பாண்டி பிரகாசெல்லாம் சேந்து அப்பா மாதிரியே சீட்டு வெளையாண்டோம். நான் வெளையாடுறத பாத்து அண்ணன் அம்மாகிட்ட சொல்ல, சோளத்தட்டைய எடுத்துட்டு வந்து என்னை அடிஅடின்னு அடிச்சுச்சு.

தெம்பு இருக்கிற வரைக்கும் தனியா கஞ்சி காச்சி குடிக்கிறேன்னு எங்கப்பத்தா ஒரு வீட்டை ஒத்தி வாங்கி குடியிருந்துச்சு. இப்ப கொஞ்ச நாளா அதுக்கு ஒடம்பு சரியில்லாம போனவுடனே “என் மகன் வீட்ல போயி சாகுறே”ன்னு சொல்லி எங்க வீட்டுக்கு வந்திருச்சு. மூணு மாதம் படுத்த படுக்கையா கெடந்த அப்பத்தா ஒரு சனிக் கெழமை செத்துப் போச்சு. எனக்கு அப்பத்தா செத்துபோனதை விட “எல்லா எழவு வீட்ல மாதிரியும் எங்க வீட்லயும் சீட்டு வெளையாடப் போறாங்க. அப்பா சீட்டு வெளையாண்டார்ன்னா என் தலை வெடிச்சுப் போகுமே”ன்னு பயந்து போயி பிரகாசுகிட்ட கேட்டேன். “சனிப் பொணம் தனியா போகாது. உங்கப்பா சீட்டு வெளையாண்டார்ன்னா உன் தலை வெடிச்சுதான் போகும். நீயே உங்கப்பத்தாவுக்கு தொணையா போயிடுவே”ன்னு மொக்கப்பாண்டியன் சொன்னான்.

உங்கப்பா உன்மேல பாசமாத் தானமே இருக்காரு.. சத்தியத்தை மீறமாட்டாரு பயப்படாதன்னு பிரகாசு சொன்னான். தப்படிக்கிறதுக்கு ஏத்தமாதிரி தலையை ஆட்டி கோயிலுக்கு வளக்ககிற முடியை முன்னால வரவச்சு பிள்ளைகளுக்கு வேடிக்கை காட்டினான் குமரேசன். சந்து ஓரமா அப்பத்தாளை தூக்க தேரு கட்டிகிட்டிருந்தாங்க. தேருல சுத்தறதுக்கு வெட்டிவெச்ச பூவை ஒவ்வொன்னா எடுத்து குடுத்துகிட்டிருந்தேன். “அப்பத்தா செத்துபோச்சு அங்க போயி தலையை விரிச்சு போட்டுகிட்டு அழுகாம தேருல கைய வச்சிருக்க”ன்னு கல்யாணி மாமா என்னை எழவு வீட்டுக்குள்ள வெரட்டி விட்டாரு. தேருல எல்லாச் சோடனையும் முடிஞ்சதும் ஒரு கோழி குஞ்சை தேருல கட்டி அப்பத்தாவை சுடுகாட்டுக்கு தூக்கிப் போனாங்க.

ஏழாநாளு எழவு முடியற வரைக்கும், எழவு வீட்ல ஆளு இருந்துகிட்டே இருப்பாங்க. அதுவரைக்கும் பந்தலும் டியூப்லைட்டும் வீட்டுக்கு முன்னாடி இருக்கும். பகல் நேரத்தில நாங்கெல் லாம் பந்தக்காலைச் சுத்தி வெளையாடுவோம். குழிமுழுகின அன்னைக்கு ராத்திரி எல்லா வீட்டையும்போல எங்க வீட்லயும் சீட்டு வெளையாட ஆரம்பிச்சாங்க. மொட்டை எடுத்த தலையில மஞ்சத் துண்டை கட்டியிருந்த அப்பா இரும்புச் சேர்ல ஒக்கார்ந்திருந்தாரு. அப்பா சீட்டு வெளையாடினா என் தலை வெடிச்சு போகுமேங்கிற பயத்தில அப்பாவை பாத்துகிட்டேயிருந்தேன். அம்மா சீட்டு வெளையாடுற எல்லாருக்கும் மொனங்கிகிட்டே டீ கொண்டுவந்து குடுதுச்சு. அப்பா சீட்டு வெளையாடுறத சும்மா வேடிக்கை பாத்துகிட்டிருந்தாரே தவிர வெளையாடல. அப்புறம் எனக்குத் தூக்கம் வந்தவுடனே வீட்டுக்குள்ள போயி படுத்துகிட்டேன்.

காலையில அம்மா முணுமுணுன்னு பேசுற சத்தம் கேட்டு எந்திரிச்சேன். “பிள்ள மேல சத்தியம் பண்ணிட்டு சீட்டு வெளையாடினதுக்கு பிள்ளைக்கு என்ன ஆகப்போகுதோ”ன்னு அம்மா குண்டை தூக்கிப் போட்டுச்சு. “அய்யையோ என் தலை வெடிக்கப்போகுது”ன்னு நான் அழுதேன். வீட்லருந்த சொந்தக்காரங்கெல்லாம் “சும்மா இருடி”ன்னு என்னை அடக்கிட்டாங்க. எனக்கு அப்பாவை பாக்கவே பிடிக்கல. அடுத்தடுத்து ராத்திரிகள்ல ஏழாநாளு எழவு முடியற வரைக்கும் அப்பா சீட்டு வெளையாண்டு என் பயத்தைக் கௌப்பினாரு. மொக்கப்பாண்டியன் வேற “சனிப் பொணத்துக்கு தொனைப் பொணம் ரெடியாயிடுச்சுடா”ன்னு எல்லார்ட்டயும் சொல்லி எரிச்சலக் கௌப்பிகிட்டிருந்தான். காசுக்கா வெளையாடுறோம் சும்மா பொழுது போக்குக்கு சம்பிரதாயத்துக்கு வெளையாடுறோம் சும்மா கூறுகெட்ட பிள்ளகெணக்கா கத்திகிட்டிருக்கன்னு சொந்தகார ஆம்பளைங்கெல்லாம் அம்மாவை சமாதானப்படுத்தினாங்க.

“எப்பா வெளையாடதப்பா என் தலை வெடிச்சுப் போகும்”ன்னு அப்பாவை கெஞ்சிக்கிட்டிருந்தேன் நானு. “ஒன்னும் ஆகாது கிறுக்குப்புல்ல”ன்னு ரெண்டு ரூபாயை கையில குடுத்து என்னை பேசாம இருக்க வச்சாரு அப்பா. அவர் கையிலிருந்த ராஜா ராணி படமெல்லாம் எனக்கு இப்ப பேய் படம் மாதிரி கண்ணுக்கு தெரிஞ்சுச்சு. அப்பா மாதிரியே பம்பையன் கிழவனும் சீட்டாட்டத்தில வெறியா இருப்பாரு. சாகிற வரைக்கும் சீட்டாடிகிட்டே இருப்பாருபோல. தொங்கு தொங்குன்னு இருமிகிட்டே கை நடுங்க சீட்டை பிடிச்சு அவரு வெளையாடுனாரு. முன்னெல்லாம் விடாம ஜெயிப்பாராம். இப்ப கூறு மாறிப் போச்சில்ல அப்படின்னாலும் பத்துக்கு ஒன்னு பழுதில்லாம ஜெயிச்சுபுடுவாரு. “செத்துபோயி சாத்தி வச்சிருந்தாலும் எந்திரிச்சி வந்து ஒரு ஆட்டத்தை ஆடாம போகமாட்டாருப்பா நம்ம பம்பையன் கெழவ”ன்னு கூட்டம் கெழவனை ரகல பண்ணுச்சு. “ஜென்மம் ஜென்மமா வெளையாண்டாலும் மாப்பிள்ள ஜெயிக்க மாட்டாரு. இதுல ராங் அடி குடுத்துவேற அவுட்டாகிபுடுராரு”ன்னு கல்யாணி மாமா அப்பாவை கிண்டல் பண்ணினதை அண்ணன் அம்மாகிட்ட சொல்லிக்குடுத்தான். “சீட்டு வெளையாண்டு எல்லாத்தையும் தோத்து புட்டான். காதுல மூக்குல ஒன்னும் இல்லாம மூலியாத் திரியுறேன். இவன் நாலு காசு சேர்த்து வைக்கமாட்டான். மறுபடியும் சீட்டைத் தொட்டுட்டான். என் உசுரு அடங்காத்தான் இவந்திருந்துவா”ன்னு அம்மா பக்கத்து வீட்டு ஒச்சம்மா சின்னம்மாகிட்ட பொலம்பிகிட்டே இருந்துச்சு. எழவு முடிஞ்சதும் பந்தலைப் பிரிச்சிட்டாங்க.

அப்பா சீட்டு வெளையாடியும் என் தலை வெடிக்கல. மறுபடியும் அப்பா எழவு வீட்ல சீட்டு வெளையாட கௌம்பிட்டாரு. ஊர்ல எங்க எழவு விழுந்தாலும் எழவு வீட்டுக்காரங்களைவிட எங்கம்மா அதிகமா துக்கப்பட்டுச்சு. அப்பா சீட்டு வெளையாடிய எழவு வீட்டு ராத்திரிகள்ல என் தூக்கம் கெட்டுப்போச்சு. மறுபடியும் சீட்டு வெளையாட்டு, சண்டன்னு குடும்பத்தில நிம்மதியில்லாம போச்சு. சண்டையில காயம் பட்ட அம்மாவை சமாதானப்படுத்துறதுக்கு அப்பா மறுபடி மறுபடி என்மேல சத்தியம் பண்ணி, அதை மீறிகிட்டே இருந்தாரு. அப்பா ஒவ்வொரு தடவை என்மேல சத்தியம் பண்றப்பவும் எனக்கு ரெண்டு ரூபா காசைத் தருவாரு. அப்பா தன்மேல சத்தியம் பண்ணி காசு தரலேயேன்னு அண்ணனுக்கு வருத்தமா இருக்கும்.

நானும் இப்ப ஏழாப்புக்கு போயிட்டேன். அண்ணன் ஹைகூல்ல சேந்ததுக்கப்புறமும் அப்பா அம்மாவை அடிக்கிறது அவனுக்கு வேதனையா இருந்துச்சு. அவர் அடிக்கிறப்ப போய் வெலக்கி விடவோ, அவரக் கேள்வி கேட்கவோ அவனுக்கு பயம். அப்பா என் கேள்விகளை அன்பால தொடைச்சு போட்டுட்டு போயிட்ருந்தாரு. இப்பல்லாம் ஆம்பளைப் பையன் சட்டையை எனக்கு லூஸா தைச்சு போட்டு விட்டுச்சு அம்மா. “உன் மகளுக்கு தாவணி போட்டுவிடு மதினி, அசிங்கமா இருக்கு”ன்னு ஜெயமணி அத்தை சொல்றப்பல்லாம் “இப்பயே இவளுக்கு தாவணியைப்போட்டு கல்யாணம் பண்ணிக்க என்வீட்ல பொண்ணு ரெடியா இருக்கான்னு சொல்லச் சொல்றியா? உங்கண்ணன் பொறுப்பில்லாம, இன்னும் சீட்டு வெளையாண்டு பணத்தை தோத்துகிட்டு திரியுறாரு. அஞ்சு பைசா சேத்து வைக்கல, என்னிய என்னா செய்யச் சொல்ற? அவ வயசுக்கு வரட்டும் தாவணி போடுறதப் பத்தி பேசுவோம்”ன்னு அத்தை வாயை அடக்கும் எங்கம்மா.

முன்ன மாதிரி அப்பா சீட்டு வெளையாடுறப்ப பக்கத்தில போய் ஒக்காந்துகிட்டு அவரை கூப்டுறதுக்கு இப்பல்லாம் கூச்சமாத்தான் இருந்துச்சு. நான் வளந்துகிட்டிருக்கேங்கிறதே அப்பாவுக்குப் புரியல. எப்பயும்போல என்னைப் பக்கத்தில ஒக்கார வச்சு சீட்டைக் காட்டுறாரு. சீட்டு வெளையாட்டுல அப்பா ஜெயிச்சதா சரித்திரமே இல்ல. இதுவரைக்கும் எழந்த பணத்தெல்லாம் ஒரே நாள்ல அடைஞ்சிரலாங்கிற வெறியோடதான் ஒவ்வொரு தடவையும் ஆட்டத்தை தொடங்குறாரு. ஆனால் சீட்டு வெளையாட்டு அவருக்கு கைகூடல. கொஞ்ச நாள் ஊர்ல எழவு வீடு விழுந்தாலும் அவரே வெறுத்துப்போய் சீட்டு வெளையாடப்போகல.

எங்ககிட்ட சொந்தக்காடு இல்லன்னாலும் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அம்மாவும் அப்பாவும் வெவசாயம் பாத்தாங்க. அப்பா கடுமையா உழைப்பாரு. தோட்டத்தில செவ்வந்தி பூ நட்டுருந்தாங்க. ஆயுதபூசை சமயந்தான் பூ வெடிக்கும். அந்தச் சமயம் பூவை புடுங்கி மதுரை சந்தையில கொண்டுபோய் மொத்தமா வித்தா நல்ல வெலைக்குப் போகும். “பூ விக்கிற எடத்தில சிறுக சிறுக காசை வாங்க வேணாம் மொத்தமா வாங்கிக்கலாம். மொத்தம் பத்தாயிரத்துக்காச்சும் பூ வெளையும். ஐயாயிரம் கடன் இருக்க. அதைக் கழிச்சிட்டு மீத ஐயாயிரத்தை மிச்சப்படுத் தலா”ன்னு அம்மா அப்பாகிட்ட சொல்லுச்சு. பூ வெடிச்சு ஓஞ்சு போச்சு. மதுரையில பூ போட்ட எடத்தில காசு வாங்கி வரேன்னு சொல்லி அப்பா மதுரைக்குப் போனாரு. மதுரைக்குப் போயிட்டு திரும்பி வர்றப்பல்லாம் அப்பா எனக்கு குண்டுமல்லியும் ரப்பர் ரோசாவும் வாங்கிட்டு வருவாரு. அதுக்காகவே நான் காத்துகிட்டிருந்தேன். அப்பா அன்னைக்கு ராத்திரியே வந்திருக்கனும். அப்பா வரல. அம்மா ராத்திரி தூங்காம முழிச்சு கெடந்திருக்கும்போல, காலையில கண்ணெல்லாம் செவந்துபோயி கெடந்துச்சு.

பகல் முழுசும் அப்பா வரல. அப்பாவை எங்க போயி தேடுறதுன்னு தெரியல. ஊர்லயும் எந்த எழவும் விழல. அம்மா முக்காட்டைப்போட்டு சாப்பிடாம படுத்திருச்சு. “உன் புருசன் பணத்தை அடிச்சிகிட்டு சீட்டு வெளையாடத்தாண்டி போயிருக்கான். சாராயம் குடிக்கிறவனை திருத்திபிடலாம் சீட்டு வெளையாடுறவனைத் திருத்த முடியாதுடி”ன்னு பெரியம்மா சொன்னதும் “அப்படியெல்லாம் அவன் செஞ்சிருந்தாண்டு வச்சுக்க, என் உசுரை மாச்சுகிறதைத் தவர வேற வழியே இல்ல”ன்னு சொல்லி அம்மா அழக்கூட சத்தில்லாம படுத்திருச்சு. “ஏண்டி ரெண்டு பிள்ளைகளைத் தெருவில விட்டு சாகப்போறியாக்கும். பெரிய காசலைக்கார புருசனை மொத்தமா துட்ட வாங்கிட்டு வாடான்னு அனுப்பிட்டு இப்ப உக்காந்து அழு”ன்னு அம்மாவை பெரியம்மா திட்டுச்சி. மூனு நாளாச்சு அப்பா வரல. “பணத்தைச் சீட்டாடுனாலும் பரவாயில்ல. இப்படி ஆளக்காணாமே பணத்தை வாங்கி வர்றப்ப எவனும் புடுங்கிட்டு எதுவும் செஞ்சி புட்டாங்களோ என்னமோ?” அப்பா உசுருக்கு ஆபத்தாகியிருக்குமோன்னு புதுசா ஒன்னை நெனைச்சு அழுக ஆரம்பிச்சிருச்சு அம்மா.

அப்ப சிங்கம் சித்தப்பாதான் அந்த விசயத்தை எங்கம்மாகிட்ட வந்து சொன்னாரு. “மதினி அண்ணன் சீட்டுக் கௌப்பில மூனு நாளா கெடக்குராராம். நம்ம ஜெயராசு சொல்லிட்டு போறா”ன்னு சொல்லி வாயை மூடி முடிக்கல அதுக்குள்ள அம்மா ஆவேசம் வந்த மாதிரி கௌம்புச்சு. என்னையும் புடுச்சி “வாடி”ன்னு இழுத்துட்டுப்போச்சு.

எழவு வீட்டுலதான் சீட்டு வெளையாடுவாரே தவிர சீட்டுக் கௌப்புக்கெல்லாம் போயி அப்பா சீட்டாடுனதில்ல. ஊருக்கு ஒதுக்குபுறமா கிடுகு வச்சு சுத்தி கட்டியிருந்துச்சு அந்த சீட்டுக் கௌப்பு. கிழிஞ்சுபோன மூங்கிப் பாயை தரையில விரிச்சு அதுக்குமேல ஒக்காந்து சீட்டு வெளையாடிகிட்டு இருந்தாங்க. அப்பாவோட சட்டை வேட்டியெல்லாம் அட்டஅழுக்கா இருந்துச்சு. வாயெல்லாம் ஒனந்துபோயி வெள்ளை பரிஞ்சு பரதேசி மாதிரி இருந்தாரு. கூட்டத்தோட உக்காந்து வெளையாடாமே தனியா கௌப்புக்காரங்கிட்ட இன்னொரு ஆட்டம் ஆடுறதுக்கு காசை கடனா கேட்டு கெஞ்சிகிட்டிருந்தாரு. பூ வித்த பத்தாயிரத்தையும் தோத்திருப்பாருபோல. கடன் வாங்கி ஒரு ஆட்டத்தை ஆடி ஜெயிச்சு அதிகமா இல்லன்னாலும் பூ வித்த காசு பத்தாயிரத்தை மட்டுமாவது மீட்டுபுடலான்னு நம்பினாரு அப்பா. “பத்தாயிரத்தையும் தோத்துட்டு ஐநூறுவாய்க்கு மேல கடனும் வாங்கிட்ட பேசாம எடத்தைக் காலிபண்ணு”ன்னு கௌப்புகாரன் அப்பாவை வெரட்டிகிட்டிருந்தான்.

இம்புட்டு காலமும் அப்பா எத்தனையோ தடவை நெறையா பணத்தை சீட்டாடி தொலைச்சிருந்தாலும் அம்மா அப்பாவை அடுத்த ஆம்பளைகளுக்கு முன்னால கேவலமா வஞ்சதில்ல. சீட்டு வெளையாடுற எடத்துக்குப் பக்கத்தில போகாம தூரமா ஒதுங்கி நின்னுதான் அப்பாவை கூப்புடும். ஆனா இப்ப அளவே இல்லாத அதோட கோவத்தை கட்டுப்படுத்த முடியாம ருத்ரதாண்டவம் ஆடுச்சு. “நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா. பரதேசி மாதிரி திரியிற ஒனக்கெல்லாம் பொண்டாட்டி, புள்ள. பூராத்தையும் சீட்டு வெளையாண்டு தோத்துட்டு இதை மட்டும் எதுக்குடா பாக்கி வச்சிருக்க, இதையும் வச்சு வெளையாடுறா”ன்னு மஞ்சள் கயித்தில தொங்கியிருந்த கால்பவுனு தாலியை கழத்தி அப்பா மேல எறிஞ்சுச்சு. அப்பா தலையை கவுந்து அப்படியே குத்த வச்சு ஒக்காந்தவருதான் நிமிந்தே பாக்கல. அப்பாவை அந்த எடத்தை விட்டு கூப்ட்டு போகனுன்னு நெனைச்சேன்.

எங்கப்பாவை மட்டுமில்ல கௌப்புகாரங்கள பாத்தும் அம்மா வைய ஆரம்பிச்சிருச்சு. “ஏண்டா இப்படி கௌப்பு நடத்துரோம்னு ஊர் பொழப்பில மண்ணள்ளி போடுறீங்க. கண்ணகி மதுரையை எரிச்சாப்பல பூராத்தையும் தீய வச்சு எரிச்சுபுட்டு போயிடுவேன்”ன்னு வாய்க்கு வந்தபடி பேசுச்சு. சீட்டு வெளையாட்டிருந்தவங்கள்ல ஒன்னு ரெண்டு பேரு தெரிஞ்சவங்களா இருந்தாங்க. “என்னாமா பொம்பளையல்லாம் கௌப்புக்கு வந்திகிட்டு”ன்னு கௌப்பு நடத்திறவன் பேசி முடிக்கல அதுக்குள்ள எங்கம்மா “என்னப்பா நொட்ட கெணக்கா பேசுற, உங்கௌப்பில ஒக்காந்து சீட்டு வெளையாடவா வந்தேன். என் பொழப்பை அத்துப்புட்டு இவன்பாட்ல அட்ரஸ் இல்லாம கெடக்கான். இவன் சரியா இருந்தா நான் எதுக்கு இங்க வரப்போறே”ன்னு சொல்லிட்டு அழுது கிட்டே “கண்ட கண்டவங்கிட்டல்லாம் பேச்சு கேக்கனுன்னு தலையில எழுதியிருக்கு. நாடோடி மாதிரி அப்படியே எங்கிட்டாச்சும் ஓடிப் போயிருடா. வீட்டுப் பக்கம் வந்திராதே”ன்னு அப்பாவை பாத்து கேவலமா பேசிட்டு போயிருச்சு.

மத்த நேரத்தில அம்மா இம்புட்டு பேச்சு பேசியிருந்தா அப்பா அம்மாவை வெட்டியே போட்டிருப்பாரு. கொலை குத்தவாளி மாதிரி தண்டனையை தலை வணங்கி ஏத்துகிட்டாரு. “வாப்பா வீட்டுக்கு போவோம்”ன்னு நான் நின்னுருந்தேன். அப்பா கண்ணுல சொட்டுச் சொட்டா தண்ணீ வடிஞ்சுச்சு. “ஆனது ஆகிப்போச்சு வீட்டுக்குப் போங்க”ன்னு அப்பா பக்கத்தில வந்து சொன்ன ஒருத்தர் என்னை இடிச்சுகிட்டு நின்னாரு. அவரு என் தொடையில கிள்ளிவச்ச மாதிரி இருந்துச்சு. பயத்திலும் அருவருப்பிலும் என் உடம்பெல்லாம் புள்ளரிச்சு முடியெல்லாம் நட்டுகிச்சு. நிமிந்து அவரை ஒரு மொறை மொறைச்சேன். எதுவுமே நடக்காதது மாதிரி தள்ளி நின்னு “சரி சரி வீட்டுக்கு போங்க, பொம்பளப் பிள்ளைய இங்கயா நிக்க வப்பாங்க”ன்னு சொல்லிட்டு நகர்ந்து போயிட்டாரு அந்தாளு. அம்மா போட்ட சத்தத்தில எல்லாரும் சீட்டாட்டத்தை நிறுத்திட்டு எந்திரிச்சிட்டாங்க. அப்பா அங்க நடக்கிற எதுவும் தெரியாம ஒரே ஒரு ஆட்டத்தில எழந்ததெல்லாம் ஜெயிச்சுபுடலாமுன்னு கனாக் கண்டுகிட்டிருப்பாரு போல. எப்பா எந்திரிச்சு வாப்பான்ன கத்துனேன். அப்பதான் நெனைவுக்கு வந்தவரு கெணக்கா நிமிந்து பார்த்திட்டு என்கூடவே வந்திட்டாரு.

அப்பா எங்க வீட்டுக்குள்ள வராம ஒச்சம்மா சின்னம்மா வீட்டுத் திண்ணையில ஒக்காந்திருந்தாரு. “ஐய்யோ கடனை என்னைக்கு அடைக்கப் போறேனோ? இவன வச்சிகிட்டு இந்தப் பொட்டச்சியை என்னைக்கு கரையேத்தப் போறேன்” அம்மா மனம் ஆறும்மட்டும் அழுதும் பொலம்பியும் அப்பாவை திட்டியும் கடைசியா பேச்சில்லாம வாயை மூடிகிச்சு. சொந்தக்காரங்கெல்லாம் அப்பாவுக்கு எம்புட்டோ அறிவுரை சொல்லி அம்மாவை சமரசம் பண்ணி அப்பாவை வீட்டுக்குள்ள விட்டாங்க. “மொதல்ல மேலுக்கு ஊத்திட்டு வேட்டி சட்டையை மாத்துண்ணே. ஏய் தண்ணிய காயவைமா”ன்னு ஒச்சம்மா சின்னம்மா கிட்ட சொன்னாரு சிங்கம் சித்தப்பா. அப்பா குளிச்சிட்டு வந்ததும் சாப்பிட வச்சிட்டு எல்லாரும் வீட்டுக்கு போயிட்டாங்க. இனிமேல் சீட்டு வெளையாட போகமாட்டேன்னு இந்தத் தடவை அப்பா என் தலையிலடிச்சு சத்தியம் பண்ணல.

அண்ணனும் அம்மாவும் நல்லா தூங்கிட்டாங்க. அப்பா கட்டில்ல காலை தொங்கப்போட்டு ஒக்காந்திருந்தாரு. விடாம பீடியை குடிச்சுகிட்டே இருந்த அவர் காலுக்கீழ சாக்கை விரிச்சு நான் படுத்திருந்தேன். சத்தியம் பண்றதுக்கு கையை என் தலைகிட்ட கொண்டு வந்துட்டு அப்பா கையை எடுத்துகிட்ட மாதிரி கனவு கண்டு நான் முழிச்சிப் பாத்தேன். “ஏம்ப்பா சத்தியம் பண்ணாம கையை எடுக்கிற நான் செத்து போவேன்னு பயமா? இன்னும் நான் சின்னப்பிள்ள இல்லப்பா. பெரிய பிள்ளையாயிட்டேன். அத்தனை ஆம்பளைங்கக்குள்ள வந்து நிக்கிறது உசுரே போகுதுப்பா. இனிமேல் நீ சீட்டு வெளையாடப் போனா ஒன்னைக் கூப்ட நான் வரமாட்டேன்! தாமரைக் கெணத்தில விழுந்து செத்துபோயிருவே”ன்னு ஒரே மூச்சா சொல்லிட்டு அவர் மூஞ்சிய பாக்காம திரும்பி படுத்துக்கிட்டேன். அம்மா கோழிகூப்பிட வாசலைத் தெளிக்க எந்திருச்சு என்னை எழுப்பி, “எங்கடி உங்கப்பனை காணாம்? மேற்கே டீ குடிக்க போயிட்டானோ? அது ஒன்னுதான் அவனுக்கு கொறச்சலு”ன்னு பேசிகிட்டே, முத்து வீட்டு மாட்டு கொட்டத்தில சாணியை எடுத்துவந்து கரைச்சு வாசலத் தெளிசிச்சி.

கெழக்கே உதிச்ச சூரியன் எல்லா திசையும் பரவி முழு மஞ்சளான பின்னாடியும் அப்பா வரல. “பழையபடிக்கு சீட்டு வெளையாட ஓடிப் போயிட்டாத்தே”ன்னு அம்மா அடுக்கு பானையில வச்சிருந்த தட்டு சரியா இருக்கான்னு பாத்துச்சு. உச்சிவெயிலு மண்டைய பொளக்கிறப்ப “முத்துக்கழுவன் தாமரைக் கெணத்தில செத்து மெதக்கிறாரு”ன்னு ஆட்டுக்காரப் பேயத்தேவன் ஓடிவந்து ஊருக்குள்ள சொல்லிகிட்டிருந்தான். அப்பா சீட்டு வெளையாடப் போனப்பல்லாம் “வாடி அப்பாவை கூப்ட்டுட்டு வரலாம்”ன்னு என்னைத் தொணைக்கு கூட்டுட்டு போன அம்மா, இப்ப என்னைக் கூப்பிடாமலே விழுந்தடிச்சுட்டு ஓடுது. நான் அப்பா மாதிரியே தலை கால் தெரியாம போர்வையால் மூடி படுத்துகிட்டேன்.

Pin It