தீட்டுப்படா திரௌபதி

தட்ப வெட்ப
மாற்றங்களின் தகிப்பென
உருண்டு ஒழுகும்
இரத்தப் பெருக்கில்
ஓராடை நனைந்தது
போராடிய வீதிகளில்
தெளிந்து சிதறி
படிந்த கறை கிடக்கிறது
இன்னும் கழுவப்படாமல்
அதை அழித்து இன்று
நடந்தேகும் கொற்றவையின்
வாயில் காலனின் நிணமும்
கைகளில் கருப்பையும்.

சாத்தானும் சோதிடமும்


கடவுள்கள் கனவுகளில் வந்து
மிரட்டிப் போக, இப்படியாக
நிகழ்ந்தது சாத்தான்களின் மறதி
படைப்பறியா சாத்தான்கள்
முற்றிலும் மறந்து போயிருந்தன
அழிவுகள் கொலைகள் பற்றி
கடவுளால் நிகழ்த்தப்படும் மரணம்
என்று சோதிட கூற்றுக்காய்
தேவதையின் வீதிகளில் ஓடுகின்றன
தாழ்கொண்ட வீடுகளில்
தங்கி விடுகின்றன
வெளிவர பயந்து
தேவதையின் வீதிகளில் என்றேனும்
இறங்கக் காத்திருக்கும் சாத்தான்கள்.

Pin It