(திராவிட  இயக்கம் அப்படி என்னதான் செய்து கிழிச்சிருச்சு என்று வாய் கூசாமல் கேட்போர் இன்று நம்மிடையே உள்ளனர். அவர்களுள் பாதிப் பேர் திராவிட இயக்கச் செயல்பாடுகளால் பயன் பெற்றவர்கள். மீதிப் பேர் அது குறித்து அறியாத இளைய தலைமுறையினர். அறியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்புதிய பகுதி தொடங்கப்படுகின்றது).

தலித் என்னும் சொல் மிக அண்மைக் காலத்தில் பயன்பாட்டிற்கு வந்த சொல். அண்ணல் அம்பேத்கார், அட்டவணைச் சாதியினர், ஒடுக்கப்பட்டோர், தீண்டப்படாதோர் ஆகிய சொற்களைத்தான் பயன்படுத்தி உள்ளார். காந்தியார் ‘ஹரிஜன்’ என்னும் சொல்லைக் கையாண்டார். அச்சொல் அம்மக்களை இழிவு படுத்துவதாகவே இருந்தது. நீதிக் கட்சியின் ஆட்சியில்தான் ஆதி திராவிடர் என்னும் சொல் வழக்கிற்கு வந்தது. அதனையும் இன்று சிலர் குறை சொல்கின்றனர். அவர்களைத் தமிழர் என்று சொல்லாமல் திராவிடர் என்று குறிப்பிட்டது தவறு என்கின்றனர் சிலர்.

உண்மையில், தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றே அவ்வாறு செய்யப்பட்டது என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.

 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ‘திராவிட’ என்னும் சொல்லைத் தம் இயக்கப் பெயர்களில் இணைத்தவர்கள் அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலையாரும்தாம்.  1918இல், திராவிட மகா சங்கம் என்னும் அமைப்பு அரசுக்கு ஒரு மனு கொடுத்தது. அதில், ‘.....that the ancient and the proper name Dravidian shall be given and recognised by the government instead of the name of Paraiah” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதாவது, பறையர் என்பதற்குப் பதிலாக, தொன்று தொட்டு நிலவி வருவதும், உரியதுமான திராவிட என்னும் பெயரால் அம்மக்கள் அழைக்கப்பட வேண்டும், அரசு அதற்கு ஏற்பிசைவு தர வேண்டும் என்பதே கோரிக்கை. (சான்று: S. Saraswathi -”Minorities in Madras State”).

அவர்களின் கோரிக்கையை ஆங்கில அரசு கவனிக்கவில்லை. நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தபின், அவர்கள் விருப்பப்படி, பஞ்சமர், பறையர் என்னும் பெயர்கள் நீக்கப்பட்டு, அனைவரும் ஆதி திராவிடர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று 1922 மார்ச் 25 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. (G.O.817/1922 Law –General)

எனவே திராவிடர் என்பது திணிக்கப்பட்ட பெயர் அன்று!

Pin It