ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாகக் கூறிக் கொண்டு, 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்த ஜெயலலிதாவுக்குப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தும் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அதனால், பரப்பன அக்ரஹாரச் சிறைக்குச் சென்ற ஜெயலலிதா, தனது முதல்வர் பொறுப்பையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.

செப்டம்பர் 29 அன்று ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருடன் 29 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு ‘நிர்வாகப் பரிபாலனம்‘ நடத்தி வருவதாகக் கூறிக் கொள்கின்றனர்.

ஒரு தண்டனைக் கைதிக்காக அமைச்சர் பெருமக்கள் தாடி வளர்க்கத் தொடங்கி, அதிமுகவினர் மொட்டை போடுதல், மண்சோறு தின்னுதல், யாகம் வளர்த்தல், மாநிலம் முழுவதும் பேருந்துகளை உடைத்தல், பெட்ரோல் குண்டு வீசுதல், பயணிகளுக்கு அச்ச மூட்டுதல், திரைக் கொட்டகைகளை மூடி உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களை உண்ணா நோன்பு இருந்திடச் செய்தல், பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விடாமல் அச்சுறுத்துதல், நாடாளுமன்றத்தின் முன்பு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறியல் போராட்டம் நடத்துதல் என்பன போன்ற ‘அறவழிப் போராட்டங்கள்’ தீர்ப்பு வழங்கிய பெங்களூரு நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவுக்கு எதிராக நடைபெற்றன.

pannerchelvam 600

முதல்வர் நாற்காலியில் அமராமல், முடிவெடுக்க முடியாமல் முடங்கிப்போன நிர்வாகத்தை நடத்திவருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த ‘பினாமி’ ஆட்சியில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு ஆகியன பெருகி வழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மாநில ஆளுநர் ரோசைய்யா, ‘சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது”” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார். இந்தியாவில் பல ஆளுநர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தமது பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்வதில் ‘பரிசு’ பெற்றவர் அல்லவா அவர்.

அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 32 பேர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்,  நோக்கியாவில் 8000 தொழிலாளர்களும், ஃபாக்ஸ்கானில் 1700 தொழிலாளர்களும், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர். நிசான் தொழிற்சாலை மற்றும் ஒரு செல்பேசி தொழிற்சாலையிலும் இதே நிலைமை.

2013-ஆகஸ்ட், 31இல் முடிந்த ஊதிய ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படாத நிலையில், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சுமார் 1,43,000 பேர் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துக் களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கி விட்டார்கள். அவர்களை அழைத்துப் பேசப் பொம்மை முதல்வர் முன்வரவில்லை.

ஏற்கனவே, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு ஏற்பட்டு முழக்கமிட்டு வருகின்றனர். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசுடன் போராடி இன்னும் பன்னீர்செல்வம் நிவாரணமும் பெற்றுத் தரவில்லை.

காவிரி கடைமடைப் பகுதி விவசாயிகள் மழை நீரில் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், கடும் அதிர்ச்சியில் உள்ளனர் அவர்களுக்கு உரிய நிவாரணம் அரசால் வழங்கப்படவில்லை.

சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு இன்னும் ரூ. 370 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.

மீனவர் நலத்திற்காக, ரூ. 1520 கோடி வேண்டி இப்போதுதான் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 1 லட்சத்து 70,000 மீனவர்களுக்கு வழங்க வேண்டிய சேமிப்புத் திட்ட நிதி என்ன ஆனது? அவர்களுக்கு மத்திய அரசு ஒரு நபருக்கு ரூ. 600/-, மற்றும் மாநில அரசு ரூ.600/- என மொத்தம் ரூ. 1200/- என ரூ. 2,700 கோடி ரூபாய் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்ட சேமிப்புத் திட்ட நிதி வழங்காமல் கற்பூரம்போல் காற்றோடு காற்றாகக் கரைந்து போனது.

கலைஞர் ஆட்சியில், மாநிலம் முழுவதுமிருந்த 33,500 கடைகளில் 59,780 கிலோ லிட்டர் மத்திய அரசிடமிருந்து பெற்று மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அதனை 40 சதவிகிதமாகக் குறைத்து, 29,066 கிலோ லிட்டராகத்தான் மத்திய அரசு ஒதுக்கீடாக அதிமுக ஆட்சியில் வழங்கப்படுகிறது. இதைக் கேட்டுப் பெற்றுத் தந்திட 37 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள அதிமுக, மத்திய அரசை எதிர்த்து ஏன் போராட முன்வரவில்லை?

மத்திய மின் நிலையங்கள் 3,800 மெகாவாட் மின்சாரம் வழங்கி வந்தன. ஆனால், தற்போது 1,800 மெகாவாட் மின்சாரம்தான் வழங்கி வருகின்றன என்பதைக் குறித்து ஏன் என்று தட்டிக் கேட்கவில்லை ஊமை அதிமுக அரசு.

அதற்கு மாறாக, மின் கட்டணத்தை 15 சதவிகிதம் உயர்த்தி, மக்கள் தலையில் கட்டிவிட்டது. தனியாரிடம் ரூ. 400 கோடிக்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ. 1,200/- கோடிக்குக் கொள்முதல் செய்ததில் மாபெரும் நிதி மோசடி நடைபெற்றிருக்கிறது. ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பருப்பு கொள்முதலில் ரூ. 3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்டு நாள் 1க்கு 48 லட்சம் முட்டைகளில், ஒரு மூட்டை ரூ. 3.16 காசுக்கு வாங்க வேண்டியதை ரூ. 4.50 காசுக்கு என உயர்த்தி வாங்கியதில் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் கையூட்டாகச் சென்றிருப்பது உண்மையா? இல்லையா?

இந்த அரசு, நதிநீர் விவகாரத்தில் அக்கறை செலுத்தவில்லை. ஆனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 1,744 ஏக்கர் பாசனம் குடிநீர் பெறத்தக்க வகையில் கலைஞர் தன் ஆட்சியில் ரூ. 339 கோடி ஒதுக்கி, தாமிரபரணி, நம்பியாறு, கருமேனி ஆறு இணைப்புத் திட்டம் உருவாக்கினார். இந்த அரசு அவற்றையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டது.

பெண்ணையாறு - பாலாறு இணைப்புக்கு நிதியில்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டதைக் கேட்டுப் பெற்றிட வக்கில்லை. சென்னைக்குக் கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி. நீரை ஆந்திர அரசிடம் முறையாகக் கேட்டுப் பெறவில்லை. இதனால், கோடைக் காலத்தில் சென்னை மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக் கூடிய காவிரி நீரை கர்நாடக அரசு வழிமறித்து, ‘மேகதாது’ எனும் இடத்தில் 3 அணைகள் கட்டி 48 டி.எம்.சி. தண்ணீரை நிரந்தரமாகத் தங்களது மாநில மக்களின் குடிநீர்ப் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்து வருகிறது.

அதைப்போல அமராவதி அணையின் பழைய ஆயக்கட்டுக்களின் மூலம் 60,000 ஏக்கர் பாசனம் பெற்றுவரும் நிலையில் 26க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம், கரூர், திருப்பூர், கோவை மக்களின் வாழ்வதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டிவருகிறது.

முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பை ஆய்வு செய்யச் செல்லும் தமிழக அதிகாரிகளைக் கேரள அதிகாரிகள் வழிமடக்கித் தாக்கி வருகிறார்கள். கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பிஜூமோல், ரோசையா ஆகியோர் அத்துமீறித் தங்களது படை பரிவாரங்களுடன் நுழைந்து தமிழகத்திற்கு எதிராக நடந்துகொண்டு வருகிறார்கள்.

கர்நாடகத்திலும், கேரளாவிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்றங்களைக் கூட்டி ஒருங்கிணைந்த முடிவு எடுத்து தங்கள் மாநில மக்களுக்காக முன்நின்றிருக்கிறார்கள்.

ஆனால், இங்குள்ள பினாமி முதல்வர் அதுபோன்ற முடிவு எடுக்க முடியாமல், செயலற்றவராக இருந்து வருகிறார்.

கனிம வளக்கொள்ளைகளைக் கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் நியமித்துள்ள முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயத்திற்குக் கொலைமிரட்டல் விட்டு விசாரணையை முடக்கப் பார்க்கும் அநீதி அரசாகச் செயல்படுகிறது.

100 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிதிக் குறைப்பை செய்துள்ளதைத் தட்டிக்கேட்கவில்லை இந்த அரசு.

ஆனால், தண்டனைக் குற்றவாளி ஜெயலலிதா படங்களை அரசு அலுவலகங்களில் வைத்துக் காட்சிப் பொருள் ஆட்சி நடத்தி வருவதைக் கண்டு நகைப்புத்தான் வருகிறது.

நிர்வாகத் தவறுகளுக்குத் துணைபோகாத அதிகாரிகள் அடிக்கடி பந்தாடப்படுகிறார்கள். தலைமைச் செயலாளர் மோகன் வர்கிஸ் சுங்கத், உணவுத் துறைச் செயலாளர் நிர்மலா, மாநகராட்சி இணை ஆணையர் கெம்ளே ஆகியோர் இவ்வாறு தூக்கி அடிக்கப்பட்டவர்கள். ஆனால், ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஷீலா பாலகிருஷ்ணன், இராமானுஜம் போன்றோர் மாநிலத்திற்கு ஆலோசர்களாக இருந்து வருவது குறித்துத் தமிழ்நாடு எள்ளி நகையாடுகிறது.

மழை பெய்து வெள்ளம் பெருகித் தமிழகத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளை முதல்வர் உட்பட அமைச்சர்கள் நேரில் சென்று பார்க்க நேரமில்லை. ஆனால், 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்த பன்னீர்செல்வம், இதற்கான நிவாரணப் பணிக் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் வெறும் 60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கினார்.

பொம்மை முதல்வரின் மூன்று மாத ஆட்சியில் நடைபெற்ற ‘சாதனைகள்’தாம் இவை!

Pin It