templa 350அண்மையில் நடந்து முடிந்த தில்லி சட்டமன்றத் தேர்தல் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. வலிமைவாய்ந்த மத்திய அரசின் பா.ஜ.க.வின் புகழ்வாய்ந்த கிரண்பேடியைத் தோற்கடித்து, அக்கட்சியைப் படுதோல்வி அடையச் செய்திருக்கிறார்கள் தில்லி வாழ் மக்கள்.

வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி 70 சட்டமன்றத் தொகுதிகளில் 67ஐக் கைப்பற்றியது. பா.ஜ.க. 3, காங்கிரசைக் காணவில்லை. 

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்றார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னார், ‘பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், வாக்குகளை எங்களுக்குப் போடுங்கள்’ என்றார்.

பிரச்சாரங்களும், வாக்கு சேகரிப்புகளும் தீவிரமாயிருந்தன. களம் சூடு பிடித்தது. ஆனால் அங்கே கலவரம் இல்லை. அடி தடி இல்லை. அதிகார வரம்பு மீறல் இல்லை. ஏனெனில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் நடந்த தேர்தல் அது. அதனால்தான் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டி வந்த பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது ஆம் ஆத்மியிடம். அதன் தந்திரம் பலிக்கவில்லை.

அதற்கு நேர் எதிராக ஒரு தேர்தலைப் பார்க்கிறோம் தமிழகத்தில், திருவரங்கம் இடைத்தேர்தலில்.தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குத் தொடுக்கப்பட்டு, 4 ஆண்டுகள் சிறை, 100 கோடி அபராதம் என்று கர்நாடக நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. ஊழல் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டதால், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அதனால் நடைபெறும் தேர்தலே திருவரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தல். 

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி, பினாமி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சியில்தான் திருவரங்கம் இடைத்தேர்தல். தலைநகர் தலைமைச் செயலகத்தில் பணியாற்ற வேண்டிய அனைத்து அமைச்சர்களும், தம் பணியைச் செய்யாமல், திருவரங்கத்தில் குடிகொண்டிருக்கிறார்கள். அப்படியானால் தொகுதியில் இருக்கும் அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பினாமி முதல்வர் ஓ.பி.யின் சொந்த ஊரான தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்தான் இப்போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர், தேர்தல் அதிகாரி.

காவல்துறை குறித்துச் சொல்ல வேண்டியதே இல்லை. அது, அதிமுக அரசின் ஏவல் துறையாகிப் போனது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பிறகு எப்படி இருக்கும் திருவரங்கம் இடைத்தேர்தல் களம்.

அதிகார வரம்பு மீறல்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள், ஒருதலைப்பட்சமான காவல்துறை.

இடைத்தேர்தல் வரக்காரணமான ஜெயலலிதாவின் ஊழல், கிடைத்த தண்டனை இவைபற்றியெல்லாம் பேசக்கூடாதாம்.

பணத்த அள்ளி இறைக்கிறார்கள் அதிமுகவினர். ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாயாம். விலை போய்க் கொண்டிருக்கிறது வாக்காளரின் வாக்குரிமை. அதுவும் அமைச்சர்களின் மேற்பார்வையில் முதல்வர் ஓ.பி. திருச்சிக்கு வந்து போனதில் இருந்த பணமழையாம். வாக்காளர்கள் நனைகிறார்களாம்.
இது போதாதென்று ஆளும் கட்சியினர் அடிதடி அராஜகம் வேறு.

திருவரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் பா.ஜ.க. வினர் வாக்கு சேரிக்-கும் போது, அவர்களுக்கு அடி. மாவட்டத் தலைவர் பார்த்திபன், கோவிந்தன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.கம்பரசம்பேட்டை பெரியார் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில ஈடுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல். இங்கு கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரை, சசிகுமார் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

எதிரெதிர் கட்சியினர், தம் கொடிகளின் கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கிய காட்சி, போர்க்களம் போலத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

அந்தக் காட்சியில் காவலர்கள் அடிதடி நடக்கும் இடத்தில் இருந்தும், எதுவும் நடக்காதது போல வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இவை குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டால், எந்தப் பயனும் இல்லை. எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

அரசு இயந்திரம், அதிகாரிகள், காவல்துறை அனைத்தையும் தன் கைக்குள் வைத்துக் கொண்டு, பணபலம், படை பலத்தால் தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சி செயல்படுவது அப்பட்டமான அதிகார அத்துமீறல்.

அரசு அதிகாரிகள் ஆனாலும் சரி, தேர்தல் அதிகாரிகள் ஆனாலும் சரி, காவல்துறை ஆனாலும் சரி, அனைத்தும் ஆளும் கட்சிக்கே முழுமையாகச் செயல்படும் போது, இத்தேர்தல் நேர்மையாக நடக்கும என்ற எப்படி எதிர்பார்க்க முடியும்?

இத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அறைகூவல் விடும் அளவுக்கு ஆளும் கட்சியின் அராஜகம் தலைதூக்கியிருக்கிறது.
எப்படியோ! இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது தேர்தல் முடிந்திருக்கும்.

எல்லாம் அந்த ‘திருவரங்கன்’ கூத்து! வாழ்க ஜனநாயகம்!!

Pin It