yalini 3502014ஆம் ஆண்டு ஒரு தீர்மான வரைவறிக்கையில் ‘இனப்படுகொலை’ என்ற சொற்கள் இருக்க வேண்டாம் என்று சொன்னவர், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கேஸ்வரன்.

2015 பிப்ரவரி 10ஆம் நாள், வடக்கு மாகாண சபைக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் முன்மொழிய, இதே முதல்வர் விக்னேஸ்வரன் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், “இலங்கையில் நிகழ்த்தப் பெற்றது இன அழிப்பே. இலங்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை உலகுக்குத் தெரிவிக்கும் தீர்மானம்” என்று அதிர வைத்திருக்கிறார் உலகை.

இந்த 11 பக்கங்கள் கொண்ட தீர்மானம் குறித்து இதுவரை இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எதுவும் சொல்லவில்லை.

இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனரத்ன ஈழத்தில் நடந்ததை இனப்படுகொலை என்று அழைக்க முடியாது என்று வாய் திறந்திருக்கிறார்.

இந்த அறிக்கை நாட்டுக்கு எதிரானது என்றும் வடக்கு மாகாண சபையைக் கலைக்க வேண்டும் என்றும், அச்சபை உறுப்பினர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் சிங்கள இனவெறியர்கள் கூச்சலிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

1956ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி சட்டம் தொடக்கம், இன்றைய நிலைவரை ஈழப்பகுதிகளில் இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலைமை, அதன்கீழ் மக்களின் அவலம் குறித்துக் கூறியிருக்கும் இந்த அறிக்கை எந்த அளவுக்கு சிங்களரை அதிரவைத்துள்ளது என்பதற்கு இவை சான்று.

மகிந்த இராஜபக்சே ஐ.நா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் நுழைய விடவில்லை. தானே விசாரித்துக் கொள்வதாகச் சொன்னார். அதே வேலையைத்தான் இன்றைய அதிபர் சிறிசேனாவும் செய்து கொண்டு இருக்கிறார்.

எதிர்வரும் மார்ச் திங்களில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைப் போர் குறித்த அறிக்கை வைக்கப்பட இருக்கிறது. அதை ஒத்திவைக்க வேண்டும் என்று சிறிசேனா சொல்லிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், வடக்கு மாகாண முதல்வரின் தீர்மான அறிக்கை வெளியாகி இருக்கிறது.

இத்தீர்மானத்தை இந்தியா வழிமொழிந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். கொடுமைக்குத் துணைபோகக் கூடாது.

அத்தோடு நிற்காமல் ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக் குற்றத்திற்கான தீர்மானம் ஐ.நா. கவுன்சிலில் வைக்கப்படும்போதும் அதை எதிர்க்காமல், ஆதரவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இனப்படுகொலைக்கு எதிரான வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை ஆதரிப்போம், இணைந்து குரல் எழுப்புவோம் & ஈழத்தின் இன அழிப்புக்கு எதிராக.   

Pin It