“சொத்துவரி செலுத்தாத நட்சத்திர ஓட்டல்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து வரி வசூல். சென்னை மாநகராட்சி ஒரே நாளில் ரூபாய் 1.5 கோடி வசூல்” & இப்படி ஒரு செய்தி நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

 இது ஒரு பெரும் சாதனை என்பதைப் போல, சென்னை மாநகராட்சியின்  அடையாறு மண்டலத் துணை வருவாய் அதிகாரி ஒரு வாக்குமூலம் கொடுக்கிறார். அதில், “மும்பை மாநகராட்சியில் வரிகட்டாத நிறுவனங்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து, வரி வசூலிப்பது வழக்கமாக உள்ளது. மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தண்டோரா அடிக்க, திருநங்கைகள் நடனமாடுவர்.

thirunagaikal 600

சென்னையிலும் இது போலச் செய்யலாமே என்று யோசித்தோம். எனவே அதிகத் தொகை நிலுவை கொண்ட, வரி செலுத்த மறுக்கும் நிறுவனங்கள் முன் திருநங்கைகளை நடனமாட வைத்தோம். அதற்குப் பலன் கிடைத்துள்ளது. இதனால் ஒரே நாளில் 1.5 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது....மேலும் 13 கோடி வசூல் செய்யப்பட உள்ளது”

தாங்கள் செய்த ஒரு கேவலமான செயலை, நியாயப்படுத்தும் விதமாக, இப்படி ஒரு கேவலமான வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கும் அந்த அதிகாரிக்கு, மனித நேயம் என்றால் என்ன என்று தெரியவில்லை போலும்.

சென்னை மாநகராட்சிச் சட்டம் (1919) பிரிவு 104இன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் வரி செலுத்த வேண்டும் என்று சட்ட வதி இருக்கிறது-.

இதன்படி வரிசெலுத்தத் தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரிவசூல் செய்யவும் சட்ட விதி முறைகள் இருக்கின்றன. இதன் அடிப்படையில்தான் ஓர் அரசு நிறுவனமும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும்.

இதை விட்டுவிட்டுத் திருநங்கைகளைக் கூட்டி வைத்து மாரடிக்கச் செய்தும், ஒப்பாரி வைக்கச் செய்தும், வசைபேசி & கேலி பேசிக் கும்மியடித்துக் கூச்சலிடச் செய்தும், நடனமாடச் செய்வது அதிகாரிகள் செய்ய வேண்டிய செயல் அன்று.

பீகாரில், நிதிஷ்குமார் முதல்வராக இருந்த போது, பாட்னா மாநகராட்சி ஆணையர் அத்துல் பிரசாத் மூளையில் உதித்து, அங்கு நடத்தப்பட்ட இந்த கேலிக் கூத்து நடன வசூல், மகாராஷட்டிரா, பெங்களூர் வரை நடந்து இப்பொழுது சென்னைக்கு வந்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் இதை நாகரிகமற்ற செயல் என்று பெங்களூர் மாநகராட்சியைக் கண்டித்தும் இருக்கிறது. மனித உரிமை ஆர்வலர்கள், பீகார், மகாராஷ்டிரா, பெங்களூர் மாநகராட்சியின் நாகரிகமற்ற செயலைக் கண்டித்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்குப் பிறகும் அ.தி.மு.க. ஆட்சியின் கீழ் இயங்கும் சென்னை மாநகராட்சி இந்த வெட்கக் கேடான வரிவசூல் நடவடிக்கையின் கீழ் இறங்கித் திருநங்கையர்களை அவமானப்படுத்தி இருக்கிறது-.

அண்மையில் திரைப்பட இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’ திரைப்படத்தில், மூன்றாம் பாலின மக்களான திருநங்கையர்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கப்பட்டு, தாம் பிறந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இன்றும் கேலிக்குரியவர்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் ஏற்பட்ட மனவேதனை, மன உளைச்சல், அவமானம் அந்த வலி, அது அவர்களுத்தான் தெரியும்.

சக மனிதராக அல்லது மனுசியாகக் கூட அவர்களைப் பார்க்க மறுத்துப் பாலுறவுப் பார்வையை வீசும் மனிதர்களுக்கு அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது?

திருநங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க மறுக்கும் யாருக்கும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று கேலி பேச உரிமை இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்கள் கூட சமூகங்களாக வாழ்கிறார்கள். அந்தப் பேறுகூட இல்லாமல் சிதறிக்கிடக்கும் அந்த நங்கையர்களின் உரிமைகளுக்குத் துணைநிற்க வேண்டிய நாம், அவர்களின் வாழ்வாதார முன்னேற்றங்களுக்குத் துணை நிற்க வேண்டிய நாம், அதைச் செய்யத் தவறுகிறோம் என்றாலும் பரவாயில்லை, அவர்களைக் கேவலப்படுத்தித் தண்டிக்காமலாவது இருக்க வேண்டாமா?

திருநங்கையர், திருநம்பியர் உரிமைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிரேஸ்பாணி, சென்னை காவல்துறை ஆணையரகத்தில் அளித்த மனுவில், இப்படிக் கூறுகிறார், “நான் பொறியியல் கல்லூரி மாணவி......

சட்டப்படி வரிவசூல் செய்ய நிறைய வழிகள் இருக்கும்போது, திருநங்கைகளை நடனமாட வைத்து வரிவசூல் செய்தது, திருநங்கைகளின் கவுரவத்தைக் குறைக்கும் செயல். அந்தச் செயலை மனித உரிமை மீறிய செயலாக நாங்கள் கருதுகிறோம். இந்தச் செயலைச் செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்”.

காவல்துறையும், தமிழக அரசும் என்ன செய்யப் போகின்றன?

Pin It