cartoon 600இலட்சக்கணக்கான தமிழீழ உறவுகளைக் கொன்றுகுவித்த இலங்கைஅதிபர் ராஜபக்சே மீது ஐக்கிய நாடுகள் அவை ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழு இலங்கையில் நுழைவதற்கே அனுமதி கிடையாது என்று ராஜபக்சே அறிவித்திருக்கிறார். ஐ-.நா. அவையோ அவரைக் கண்டிக்காமல், வரும் செப்டம்பர் 25ஆம் நாள் ஐ.நா. அவையில் உரையாற்றுமாறு அழைப்பு விடுத்திருக்கிறது.

ஒரு பக்கம் குற்ற விசாரணை. மறுபக்கம் விருந்தினருக்கான அழைப்பு. யார் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதோ, அவரையே அழைத்து உலக அரங்கில் கருத்து உருவாக்கும் இடத்தில் அமர்த்துவதற்கான முயற்சி என்றால், இதனை எப்படிப் புரிந்து கொள்வது என்று நமக்குப் புரியவில்லை. இந்த முரண், தற்செயலாக நடைபெறும் ஒன்றில்லை என்பது மட்டும் புரிகிறது.

இலஙகை அரசுதானே குற்றம் புரிந்திருக்கிறது, அதற்கு எப்படி ராஜபக்சே எனும் ஒரு தனி மனிதரை மட்டும் முழுப் பொறுப்பாக்க முடியும் என்று சிலர் வினவுகின்றனர். இந்தியாவுக்கும், இலங்கைக்குமான அரசமைப்புச் சட்ட வேறுபாடுகளை இங்கு நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தளவு அரசின் தலைமை, குடியரசுத் தலைவரிடமும், அரசாங்கத்தின் தலைமை பிரதமரிடமும், முப்படைகளின் தலைமை இராணுவத் தளபதிகளிடமும் உள்ளது. ஆனால் இலங்கையிலோ அரசு, அரசாங்கம், இராணுவம் ஆகிய மூன்றுக்கும் அதிபரே தலைவர்.

ஆதலால் இலங்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் ராஜபக்சே இருக்கிறார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதனால் ராஜபக்சேயை விருந்தினராக அழைப்பது தமிழீழ உறவுகளையும், உலகத் தமிழ் இனத்தையும் இழிபடுத்துவதாகவே அமையும்.

இந்தச் சூழலில், பிரதமர் மோடி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரோடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடியதும், மறுவாழ்வுப் பணிகளை விரைவுபடுத்துவோம் என்று கூறியதும் ஓரளவிற்கு ஆறுதல் தருவதாக இருப்பினும், இந்திய அரசின் பிற நடவடிக்கைகள் ஏமாற்றத்தையும், வேதனையையும்தான் தருகின்றன.

ஈழச்சிக்கலிலும் காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாகவே பா.ஜ.க. செயல்படுகிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரோடு இதே போன்ற பேச்சுவார்த்தையை மன்மோகன் சிங்கும் நடத்தினார். தினமணி நாளேடு தன் தலையங்கம் ஒன்றில், அதிகாரிகளை எல்லாம் அருகில் வைத்துக்கொண்டு மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இது ஒரு புதிய அணுகுமுறை என்று பாராட்டியுள்ளது. அன்று மன்மோகன் சிங்கும், அதிகாரிகள் இருவரை அருகில் வைத்துக் கொண்டு தான் பேச்சுவார்த்தை நடத்தினார். மோடியின் செயல்கள் மிகப் புதியன என்று தினமணி போன்ற பத்திரிகைகள் பெரிதுபடுத்திக் காட்ட நினைக்கின்றன. உண்மை என்னவோ, பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் அரசின் தொடர்ச்சி என்பதையே உறுதிப்படுத்துகிறது.

மன்மோகன் சிங், பத்தும் மூன்றும் பதின்மூன்று என்றால், மோடியே ஆறும் ஏழும் பதின்மூன்று என்கிறார். மொத்தத்தில் விடை ஒன்றுதான்.

முன்பெல்லாம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் பதினைந்து, இருபது நாள்களுக்குப் பின்பே விடுவிக்கப் பட்டனர். ஆனால், எங்கள் ஆட்சியில் ஏழு நாள்களுக்குள் விடுதலை ஆகிவிடு கின்றனர் என்று கூறி, தமிழக பா.ஜ.க. வினர் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இப்போது மீனவர்களை விடுவித்தாலும், அவர்களின் படகுகளை எல்லாம் இலங்கை அரசு கைப்பற்றி வைத்துக் கொள்கிறது. இன்றைய சூழலில் தமிழக மீனவர்களின் 62 படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளன. படகுதான் அந்த மக்களின் வாழ்வாதாரம். அவற்றைக் கைப்பற்றிக் கொண்டு ஆள்களை மட்டும் விடுதலை செய்வதால் எந்தப் பயனும் விளையாது.

ஐ.நா. அவை அமைத்த விசாரணைக் குழுவை இலங்கை அரசு அனுமதிக்க மறுப்பதைப் போலவே, இந்தியா உள்ளிட்ட மூன்று தெற்காசிய நாடுகளும் அனுமதி மறுக்கின்றன. அதனால் ஐரோப்பாவில் இருந்தபடியே இலங்கை யில் நடந்த இனப்படுகொலையை அந்த விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியிருக்கிறது.

இவையனைத்தையும் கருத்தில் கொண்டே, 26.08.2014 அன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற டெசோ அமைப்புக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதல் தீர்மானம் கூட்டமைப்பின ரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்தை பற்றியும், இரண்டாவது தீர்மானம் மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றியும், மூன்றாவது தீர்மானம் இந்தியா விசாரணைக் குழுவை அனுமதிக்க வேண்டும் என்பது பற்றியும் நிறைவேற்றப் பட்டுள்ளன.

தமிழ் இனத்திற்கும், பொதுவான ஜனநாயக முறைமைகளுக்கும் எதிராகச் செயல்படும் ராஜபக்சே ஐ.நா.வில் பேசுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை, ஐ.நா. அவை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான்காவது தீர்மானம் கோருகின்றது.

நான்கு தீர்மானங்களையும் வலியுறுத்தி, டெசோ சார்பில் செப்டம்பர் 3ஆம் நாள் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி எல்லைகளைக் கடந்து, தமிழர்கள் அனைவரும் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் இலங்கைக்கு மட்டுமின்றி, இந்திய அரசுக்கும், ஐக்கிய நாடுகள் அவைக்கும் நம் ஒருமித்த உணர்வுகளை எதிரொலித் துக் காட்ட இயலும்.

டெசோவைப் பொறுத்தமட்டில், தமிழீழம் அமைவது குறித்து பொதுவாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு. பிரெஞ்ச் புரட்சியின் போது தொடங்கிய இம்முறை இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் மட்டும் கிழக்குத் திமோர், கொசோவா, தெற்கு சூடான் ஆகியன பொதுவாக்கெடுப்பு மூலமே தனிநாடுகள் ஆயின. இவை அனைத்தும் ஐ.நா. மேற் பார்வையில் நடத்தப்பட்ட வாக்கெ டுப்புகள் ஆகும்.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் நாள், உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்டது. 1991இல் 14 துண்டுகளாக உடைந்த சோவியத் யூனியனின் ஒரு துண்டுதான் உக்ரைன். அந்த உக்ரைனில், தன்னாட்சி பெற்ற ஒரு மாநிலமாக கிரிமியா இருந்து வந்தது. இப்போது 96.77 விழுக்காட்டினர், ரஷ்யாவுடன் இணைந்து கொள்ள ஒப்புதல் அளித்து வாக்கு செலுத்தியுள்ளனர். எனினும் ஐ.நா. மேற்பார்வையில் நடைபெறாமல், ரஷ்யா தன்னிச்சையாக நடத்திய அந்த வாக்கெடுப்பை, அமெரிக்காவும், ஐ.நா. அவையும் ஏற்க மறுத்துள்ளன.

நம்மைப் பொறுத்தளவு, ஐ.நா. மேற்பார்வையில் புலம் பெயர்ந்த மக்கள் உள்ளிட்ட, ஈழ மக்கள் அனைவரிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கை. எனினும் அதற்கு முன்பாக, இடைக்கால நிவாரண மாக இந்திய அரசு தலையிட்டு, பேச்சு வார்த்தை நடத்தி ஓர் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதும் நம் நோக்கமாகும்.

TNA-Indian-PM 600செப்டம்பர் 25இல் நடைபெற விருக்கும் ஐ.நா. அவைக் கூட்டம் வழக்க மானதுதான் என்றும், நாட்டின் அதிபர் கள் அதில் உரையாற்ற அழைக்கப்படுவது ஒரு சடங்கு போன்றதுதான் என்றும், சிலர் கூறுகின்றர். ஐ.நா. அவை கூடுவதும், அதில் அதிபர்கள் உரையாற்றுவதும் வழக்கமானதுதான் என்றாலும், ராஜபக்சே மீதான குற்றச்சாட்டு வழக்கமானது இல்லை. அது ஓர் இனப்படுகொலை. அதனைப் போர்க்குற்றம் என்று சொல்வதுகூட சரியானதன்று.

முறைப்படி நடக்கும் போர்களில் தவறான வழிமுறைகள் பின்பற்றப்படுவதைத்தான் போர்க்குற்றம் என்று சொல்லவேண்டும். ஆனால் அங்கே உரிமை கேட்ட மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டதே குற்றம். போர் என்னும் பெயரால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களைக் கொன்று ஒழித்தது, குற்றத்திலும் குற்றம், அது ஓர் இனப்படுகொலை.

இனப்படுகொலையில் ஈடுபட்ட வர்கள், அதிபர்களாகவே இருந்தாலும், கடந்த காலங்களில் தண்டிக்கப் பட்டுள்ளனர். அந்த வரிசையில் தண்டிக் கப்பட வேண்டிய ராஜபக்சே, ஐ.நா.வின் விருந்தினராக அவையில் உரையாற்ற எப்படி அனுமதிப்பது?

ஈழ மக்களின் எதிர்கால விடியலுக்கு இன்னும் பல காத தூரம் நடக்க வேண்டிய இருக்கலாம். அதுவரை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

செப்டம்பர் 3இல் அணிவகுப்போம், ஆர்த்தெழுவோம்!

Pin It