ஆட்டுக்குத் தாடி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அதனால் எதற்கும் எந்தப் பயனும் இல்லை. மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் இது பொருந்தும் என்றார் அறிஞர் அண்ணா.

     Govern  என்ற சொல்லுக்கு  ‘ஆட்சி’ என்பது பொருள்.  Governor என்றால் (மாநிலத்தின்) ‘ஆட்சியர்’.

இவர் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதி மாநில ஆட்சியராக வருபவரன்று.

மாறாக மத்திய ஆளும் அரசினால், நியமிக்கப்படுபவர். இவரை மத்திய அரசின் ‘ஏஜன்ட்’ என்பதுதான் சரி.

மத்திய அரசுக்குச் சார்பாக, ஆதரவாகச் செயல்படுவதும்,  அதற்கேற்பத் தன் வேலைகளை அமைத்துக் கொள்வதும் இவர்களின் பணி.

அதனால்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதல்வரையும், அரசையும் மீறி அரசியல் அமைப்புக்கு மாறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுவைத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இவ்விருவரும் இதற்குச் சான்று.

குறிப்பாக புதுவை, காலப்பட்டில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரிக்குச் சென்றார் கிரண்பேடி.

கல்லூரி முதல்வரைச் சந்தித்தபின் அங்கிருந்து புறப்பட்ட துணைநிலை ஆளுநரிடம், அக்கல்லூரியின் மாணவர்கள், கல்லூரியில் தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகின்றன என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தனர்.

அவ்வளவுதான்! தான் மழைநீர் சேகரிப்பு குறித்து மட்டுமே முதல்வரிடம் பேச வந்ததாகவும், வேறு எதிலும் தலையிட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

தேவையில்லாத விசயங்களில் தலையிடும் ஆளுநர், மாணவர்களின் பிரச்சனையில் இருந்து விலகியதால் மாணவர்கள் அவரைச் சிறை பிடித்துள்ளனர்.

இது ஆளுநரின் அலட்சியத்தையும், அவரின் ஆணவத்தையும் காட்டுவதாக அல்லவா இருக்கிறது.

மாணவர்கள் இந்நாட்டின் எதிர்காலம். அவர்களின் உரிமையைக் கூடப் பாதுகாக்க கிரண்பேடி முன்வராத நிலையில், அவர் ஆளுநராக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன - ஆட்டுத்தாடியைப் போல.

Pin It