தமிழ்நாட்டின் கோயில்களிலிருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும், அது குறித்த உண்மைக்குப் புறம்பான பல்வேறு செய்திகளும் அண்மைக் காலங்களில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் மாநாட்டில், கோயில்கள் அனைத்தையும் அறநிலையத் துறையிலிருந்து விடுவித்து சுயேட்சையான நிர்வாக அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கை யாருடையது, எத்தகையது, அறநிலையத் துறையின் வரலாறு என்ன, அதன் பங்களிப்பு என்ன என்பதைப் பற்றிக் காண்போம்.

tamilnadu templeமுதலாவதாக, இக்கோரிக்கை இந்துக்களின் கோரிக்கை என்பதே தவறானது. இந்துக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையில், மதவாத அரசியலை முன்னிறுத்தும் அமைப்புகளே இத்தகைய கோரிக்கையினை முன்வைக்கின்றன.

இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் கடவுள் நம்பிக்கையாளர்களால் கோயில் சொத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சட்டம். இதன் வரலாறு என்ன? ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பிரிக்கப்படாத பழைய சென்னை மாகாண அரசின் 1817 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 7- வது பிரிவு, கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை ரெவின்யூ போர்டுக்கு வழங்கியது.

1863 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அறநிலையச் சட்டம் ஙீஙீ- ன்படி, இந்திய மதங்களில் தலையிடுவதில்லை என்ற பொதுக் கொள்கையோடு, கோயில் நிர்வாகத்திலிருந்து ஆங்கிலேய அரசு விலகிக் கொண்டது. இந்தச் சட்டப்படி, அரசு எல்லாப் பொறுப்புகளையும் கோயில்களின் அறங்காவலர்களுக்கு வழங்கியது.

1905 ஆம் ஆண்டு பெல்லாரியில் நடைபெற்ற மாநாட்டில், இந்து அறக்கட்டளைகளில் நிர்வாகச் சீர்குலைவும், நிதி மோசடிகளும் அதிகமாக உள்ளன; ஆகவே, தேவஸ்தானக் கமிட்டிகளின் உறுப்பினர்களை அளவாக நியமிக்கவும், கோயில் கணக்கைப் பருவம்தோறும் வெளியிடவும் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    1907 ஆம் ஆண்டு தரும ரட்சண சபை என்ற அமைப்பு, கோயில்களில் நிதி நிர்வாகத்தினை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை எழுப்பியது.

இந்நிலையில், கோயில் நிதிகள் முறையாகப் பயன்படுத்தப் படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. கோயில்களின் சொத்துகளுக்கும், மானியங்களுக்கும் சரியான பாதுகாப்பு இல்லை. கோயில் நகைகளுக்குச் சரியான கணக்கு இல்லை; அவை குருக்களின் வீட்டுப் பொருளாகவே இருந்து வந்தன. கோயில்களில் நிர்வாகச் சீர்குலைவு உச்சகட்டத்தை எட்டியது.   இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும், கோயில்களின் சொத்தை மீட்கவும் கொண்டு வரப்பட்டதே அறநிலையத்துறைப் பாதுகாப்புச் சட்டமாகும்.

சட்டமன்றத்தில் இம்மசோதாவைக் கொண்டு வருவற்குக் கோபாலசாமி அய்யங்காரைச் சிறப்பு உறுப்பினராக (Expert member) நியமித்தார் பானகல் அரசர். சட்டம் நிறைவேற்றப்பட்டு, துறை அமைக்கப்பட்டவுடன் அதன் முதல் தலைவராக,  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சதாசிவ அய்யர் நியமிக்கப்பட்டார். இவ்விருவரையும் பயன்படுத்திக் கொண்டதால், அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைக்கப்பட்டதற்கான எதிர்ப்பைக் குறைக்க உதவியது. எனினும் இச்சட்டத்தை நீதிக்கட்சி பெரும் எதிர்ப்புக்கிடையேதான் நிறைவேற்ற முடிந்தது. நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையில் (1920-&23) கொண்டு வரப்பட்ட மசோதா, இரண்டாவது அமைச்சரவையில்தான் (1923&-26) நிறைவேற்றப்பட்டது.

கோயில்கள் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. அவை அரசால் நிர்வகிக்கப்படுவதே சரியானது. சான்றாக, அறநிலையத்துறை கையகப்படுத்தும் கோயில்களின் நகைகள் ஆண்டுதோறும் பரிசோதிக்கப்பட்டுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. காலத்திற்கும், அந்த நகைகள் பாதுகாக்கப்படுகின்றன. இதன்மூலம் வெளிப்படைத்தன்மை (Transparency) உறுதிப்படுத்தப்படுகின்றது. இதை ஓர் அரசு அமைப்பால் மட்டுமே செய்ய முடியும். எந்த ஒரு நிர்வாகத்திலும் குறைபாடுகள் ஏற்படவே செய்யும். குறைபாடுகளைக் களைவதும், நிர்வாகத்தை நெறிப்படுத்துவதும் ஓர் அமைப்பைச் சரிசெய்யுமே அல்லாது, அந்த அமைப்பையே கலைத்து விடுவது சரியான தீர்வாகாது.  அரசால் நிர்வகிக்கப்படும்போது மட்டுமே நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டவும், தவறுகளைத் தட்டிக் கேட்கவும் இயலும்.

மேற்காணும் காரணங்களை முன்னிறுத்தியே, கடந்த பிப்ரவரியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையால் நடத்தப்பட்ட சமூகநீதி மாநாட்டில் அறநிலையத் துறையைக் காப்பாற்ற வேண்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இந்து சமய அறநிலையத் துறையைச் சிலர் அபகரிக்கும் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு, பொதுச் சொத்து அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருப்பதே சமூக நீதியும், நியதியுமாகும்.

சமூக நீதி மாநாடு, 2018. தீர்மானம் 1

நீதிக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பதற்கான பெருமுயற்சி ஒன்று, தன்னலம் மிக்க கூட்டம் ஒன்றினால் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடுத்து விடுங்கள் என்பதாக அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை. இந்துக்கள் என்னும் பெயரில், வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர், மொத்தக் கோயில் சொத்துக்களையும் தாங்கள் மட்டும் அபகரித்துக் கொள்வதற்கான திட்டமே இது. எனவே தங்களை இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வெகுமக்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் கடமை, கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமின்றிப் பகுத்தறிவாளர்களுக்கும் உள்ளது.

ஆதலால், எக்காரணம் கொண்டும் இந்து அறநிலையத் துறை கலைக்கப்படக் கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துவதுடன், தில்லை நடராசர் கோயிலையும், தீட்சிதர்களிடமிருந்து மீண்டும் அரசு மீட்டெடுக்க வேண்டும்.

Pin It