22.10.2016 அன்று சென்னையில் திரையிடப்பட்ட ‘மீசை’, ‘காக்கைக் கூடு’ ஆகிய இரு குறும்படங்கள் குறித்து அவ்விழாவின் சிறப்பு விருந்தினர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து (மூலக்கதை-சுபவீ, இயக்குநர்கள்-ராஜவசந்தன், சுரேந்தர்)

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்

நான் சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன். 50 வருடங்களுக்கு முன் இந்தப் படங்கள் திரையிடப்பட்டு அவற்றைப் பெரியார் பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்! அவருடைய சிந்தனைகள் கொஞ்சமும் சமரசம் இல்லாமல் இங்கு படங்கள் ஆகியிருக்கின்றன. சிகரெட் குடிப்பது சரியா, தவறா என்பது இங்கு பிரச்சினையே இல்லை. அது ஏன் ஆண்களுக்கு ஒன்றாகவும், பெண்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதைக் குறித்துத்தான் இந்தக் குறும்படங்கள் பேசுகின்றன. மீசை என்பது மிகப் பொருத்தமான தலைப்பு. இந்த உலகை மீசைகள்தான் ஆள்கின்றன. வரலாறு, இலக்கியம், பண்பாடு எல்லாவற்றிலும் ஆண்களின் ஆதிக்கமே உள்ளது. அதனைத் தகர்க்கும் விதமாக இந்தப் படங்களை ஏற்ற திரைமொழியில் இந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.

இயக்குனர் சீனு ராமசாமி

அய்யா சுபவீயை ஒரு பேச்சாளராக நான் அறிவேன். இந்தப் படங்கள் அவர் ஒரு எழுத்தாளர் என்பதை உணர்த்துகின்றன. எனது அடுத்த படத்திற்கு அவரிடம் ஒரு கதை கேட்கலாமா என்று யோசிக்கிறேன். மீசை படத்தின் கதையை நான் இன்னொரு கோணத்தில் பார்த்தேன். ஒரு குடும்பத்தில் ஆண் சிகரெட் குடித்தால் அது சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது. அதுவே பெண்ணாக இருந்தால் அதிர்ச்சியும் கோபமும் வருகிறது. ஒருவேளை, ஒரு குழந்தை அதைச் செய்தால் நம் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். அதிர்ச்சி காரணமாக நாம் சிகரெட் குடிப்பதையே விட்டு விடுவோம். இப்படி இங்கு ஒவ்வொரு சிக்கலும் வெவ்வேறு விதமாகப் பார்க்கப்படுகின்றன. இன்னொன்றையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். ழிஷீஸீ sனீஷீளீமீக்ஷீs பலரும் ஒன்று சேர்ந்து சிகரெட் குடிக்கும் இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். யாருக்கும் சரியாகவே சிகரெட் பிடிக்கத் தெரியவில்லை. ரத்தக்கண்ணீர் பாருங்கள், எம்.ஆர். ராதா எப்படி சிகரெட் குடிக்கிறார் என்று!

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

இந்தக் குறும்படங்களில் வரும் பெண்களின் குரல்கள் எனக்கு அகலிகையின் குரலாய், சூர்ப்பனகையின் குரலாய்க் கேட்கிறது. அவர்களின் முகங்களோ திராவிட முகங்களாய் இருக்கிறன. ஒரு பெண்ணின் வாழ்வில் விரும்பியோ, தவறுதலாகவோ நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சிதான் காக்கைக் கூடு. அது கணவன், மனைவி இருவருக்குமிடையிலான அந்தரங்கம் தொடர்புடையது. திருமணத்திற்குப் பிறகும் ஒரு பெண்ணுக்குக் காதல் வரலாம் இல்லையா? அது அவளுடைய மனம், சூழல் சார்ந்தது. அது குறித்து அந்தப் பெண்ணிடம்தான் கேட்க வேண்டும். இந்தக் குறும்படம் அது குறித்து விவாதிக்கவில்லை. பண்பாடு, கலாச்சாரம் இவைகளையெல்லாம் தாண்டியது மனித நேயம் என்கிறது. முதல் குறும்படத்தில் வரும் சிகரெட் காட்சியும், கிராமத்த்திலிருந்து வந்துள்ள என் போன்றவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தரவில்லை. எங்களின் அம்மம்மா, அப்பத்தா போன்ற வனப்பேச்சிகள் சுருட்டுப் பிடிக்கும் பழக்கமுடைய வர்கள்தான். ஆனால் இங்கு அது பிரச்சினையே இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிகள் பொதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்படம் முன்வைக்கும் பிரச்சினை.

இயக்குனர் பாலாஜி சக்திவேல்

மீசை படத்தை நான் ஏற்கனவே இணையத்தில் பார்த்துள்ளேன். காக்கைக்கு கூடு படத்தை இன்றுதான் பார்க்கிறேன். இப்படத்த்தில், எந்தப் பெண் பற்றிப் பேசப்படுகிறதோ, அந்தப் பெண்ணின் முகத்தைக் காட்டவே இல்லை. அதுதான் நுட்பத்தின் உச்சம். ஏனெனில், அவள் மீது எழும் சந்தேகம் சரியா, தவறா என்று தெரியாதபோது, அந்தப் பெண்ணின் முகத்தைக் காட்ட வேண்டாம் என்று இயக்குனர் எண்ணியுள்ளார். இயக்குனர் ராஜ வசந்தனுக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. அதே போல இவர் (சுரேந்தர்) மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப் பெண்ணை (அபிநயா) ரொம்ப நாள்களாகத் தேடித் கொண்டிருந்தேன். இந்தப் பாத்திரத்தில் நடிக்கப் பெரிய துணிச்சல் வேண்டும். சுபவீ அய்யா எழுதியுள்ள இடைவேளை நாவலை அந்தத் தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி நானே டைரக்ட் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். உலகத் தரமான படமாக அது வரும். ஆனால் இப்போது அந்தப் படத்தை இந்த இளைஞர்களிடம் கொடுத்தால், என்னை விடச் சிறப்பாகச் செய்வார்கள் என்று தோன்றுகிறது.

Pin It