மனுநீதிச் சோழன் என்று ஒரு அரசன் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாகவோ அல்லது தமிழ்நாட்டில் வேறு எந்த ஊரையும் தலை நகராகக் கொண்டு ஆண்டதாகவோ எந்த வரலாற்று ஆசிரியரும் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியம் மனுநீதிச் சோழன் பற்றிப் பேசவில்லை. அவன் யாரிடமும் போர் புரிந்ததாகவோ, வள்ளலாக இருந்து வாரி வழங்கியதாகவோ சங்கப் புலவர்கள் யாரும் பாடவில்லை.

தமிழக வரலாறு பேசாத, சங்கப்புல வர்கள் பேசாத மனுநீதிச் சோழன் எங்கிருந்து முளைத்தான்?- மனுநீதிச் சோழன் பற்றித் தமிழ் இலக்கியம் எப்போது பேசத் தொடங்குகிறது? கேள்வி கேட்டால் சிலப் பதிகாரத்தைக் கை காட்டுகிறார்கள். சிலப்பதிகாரத்தின் காலம் எது என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அது சங்க காலத் திற்குப் பிந்தியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

இளங்கோவின் படைப்பு உண்மையில் மனுநீதிச் சோழன் பற்றிப் பேசுகிறதா? மனுநீதிச் சோழன் திருவாரூரைத் தலைநக ராகக் கொண்டு கோலோச்சினான் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஆதாரங்கள் யாவை? அவற்றை இனிமேல் பார்க்கலாம்-.

கணவன் கோவலன் கொலை யுண்ட பின்னர் வெகுண்டு எழுந்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு, பாண்டியன் அவைக்கு வருகிறாள், அவனிடம் தன் ஊரின் பெருமையைப் பேசுகிறாள்.

“தேரா மன்னா? செப்புவது உடையேன்-/எள்அறு சிறப்பின் இமையவர் வியப்ப/புள்ளறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்/வாயிற் கடைமணி நடுநா நடுங்க/ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட/தான்தன்/அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்/பெரும்பெயர்ப் புகார்என் பதியே...”

மனுநீதிச் சோழன் கதை சில வரிகளில் சொல்லப்பட்டாலும், மனுநீதிச் சோழன் பெயரைக் கண்ணகி குறிப்பிட வில்லை, திருவாரூர் பெயரும் இடம் பெற வில்லை. அவர் சொல்லும் ஊர் புகார்தான்.

சிலப்பதிகாரம் சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியம். சங்க காலத்திற்கும் சிலப்பதிகார காலத்திற்கும் இடையே புராணங்கள் தமிழ்நாட்டில் புழக்கத்திற்கு வந்துவிட்டன. கண்ணகி குறிப்பிடும் இன்னொரு மன்னனான சிபிச்சக்கரவர்த் தியும் மனுநீதிச் சோழனும் புராணக் கதைகள். வட நாட்டுப் புராண மரபுகள் தமிழ்நாட்டு மன்னர்களாக அவதாரம் எடுத்துவிட்டன. சிபியின் கதை வடநாட் டில் இருந்த கதை. அவன் சோழ மன்னன் ஆனான். மனுநீதிச் சோழன் சிபிச் சக்கரவர்த்திபோல வடநாட்டு மன்னன் அல்லன். மனுநீதியை மக்களிடம் பரப்பு வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். சிலப்பதிகாரத்தின் பெருமை பேசியவர்களும், அதற்கு உரை எழுதியவர் களும் கண்ணகி சொல்லாத மனுநீதிச் சோழனையும், திருவாரூரையும் தங்கள் உரையில் “விளக்க உரை”யாகக் கொண்டு விட்டனர்.

சிலப்பதிகாரத்தில் மனுநீதிச் சோழன் பெயரும், திருவாரூர் பெயரும் குறிப்பிடப் படவில்லை என்றால், எந்த இலக்கியம் குறிப்பிடுகிறது? பெரிய புராணம்தான். சிலப்பதிகாரத்தின் காலத்திற்கும், பெரிய புராண காலத்திற்கும் இடைவெளி பல நூற்றாண்டுகளாகும். இந்த நூற்றாண்டு களில் மனுநீதிச் சோழனின் கதை புதிய முகவரியைப் பெற்றிருக்க வேண்டும்.

திருவாரூர் தியாகராய சுவாமி கோயில் பற்றி தமிழக அரசின் தொல்லியல் துறை எஸ். பொன்னுசாமி என்பவர் எழுதிய ஒரு நூலை (Sri Thiyagaraja Temple, Thiruvarur) 1927இல் வெளியிட் டுள்ளது. அந்த ஆங்கில நூலின் ஒரு பகுதியைப் பார்க்கலாம்.

“Again the silappathigaram refers to the noble courage of this king, but the lines convey an air of mystery to the incident, as they do not say that the incident had taken place at thiruvarur. He is referred to only as an ancestor of the Cholas of Puhar. It is only in the Periyapuranam that the incident is specifically localised at Thiruvarur”

சரி, பெரிய புராணம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

பெரியபுராணம் தொடக்கத்திலேயே திருவாரூரின் திருநகரச் சிறப்பு பற்றி 86ஆவது பாடல் முதல் 135ஆவது பாடல் வரை கூறுகிறது. இங்கேதான் மனுநீதிச் சோழனின் ஊர் திருவாரூர் என்றும் அவன் தன் மகனையே பசுவுக்கு நீதி வழங்கத் தேர்க்காலில் ஏற்றிக் கொன்றான் என்றும் கதை சொல்லப்படுகிறது-.

சிலப்பதிகாரத்திற்கும், பெரியபுராணத்திற்கும் இடையில் இருப்பவை நூற்றாண்டுகள் பல. அப்படி யிருந்தும், இந்த இடைப்பட்ட காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் ஏன் மனு நீதிச் சோழனைப் பற்றிப் பேசவில்லை?

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பக்தி இலக்கியங்கள் தோன்றின. அப்பரும், சம்பந்தரும், சுந்தரரும், திருவாரூர் கோயில் வந்து பதிகங்கள் பாடி யிருக்கிறார்கள். சுந்தரர் பரவை நாச்சியா ரைப் பார்த்து மையல் கொண்டதும் திருவாரூரில்தான். அங்கு குடிபுகுந்த இறைவன்தான் “இன்று முதல் நீ எனக்குத் தோழன்” என்று சுந்தரரைத் தோழன் ஆக்கினான். திருவாரூரிடம் அவ்வளவு தொடர்பு கொண்ட சுந்தரர் மனுநீதிச் சோழனை பாடவில்லை, ஏன்?

சுந்தரர் தீண்டாத மனுநீதிச் சோழனை சேக்கிழார் தீண்டியது ஏன்?

பிற்காலச் சோழர்களிலும் பிற்காலத் தவர் தங்களின் பாரம்பரியப் பெருமை பேச மனுநீதிச் சோழனைத் தன் முன்னோராகக் காட்டிக் கொண்டார்கள். இந்தப் பாரம்பரியப் பெருமையை மன்னர்களுக்குச் சூட்டும் திருப்பணியை அமைச்சர் சேக்கிழார் திறம்படச் செய்து காட்டினார். திருவாரூர் கோயில் கல் வெட்டுகள் மனுநீதிச் சோழனைப் பற்றிப் பேசுகிறதே என்று சிலர் கேட்கலாம். அவை எல்லாம் காலத்தால் பிந்தியவை. திரு வாரூர் கோயில் கல்வெட்டுகள் சேக்கிழார் காலத்துக்கு முந்தியவையா, பிந்தியவையா, சமகாலத்தவையா என்பதை உறுதியாக நிர்ணயிக்க முடியாவிட்டாலும், அவை பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப் பட்டவை என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். விக்கிரம சோழன் காலத்தியது என்கிறார்கள். எனினும் அந்தக் கல்வெட்டுகளுக்கு வரலாற்று முக்கியத் துவத்தை அளிக்க முடியாது. இது பற்றி தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் வெளியீடு இவ்வாறு கூறுகிறது.

“However, the inscription does not establish the historicity of the legend as the period in which Manu lived is not referred to”

பெரிய புராண காலத்தில் மனுநீதிச் சோழன் “கதை” பிரபல மடைந்ததற்கு இன்னும் சில காரணங்களும் உண்டு. பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் சைவ சமயத்தின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை கவனிக்க வேண்டும். சோழர்கள் மாறாத சிவன் வணக்கத் தைக் கொண்டவர்கள். அவர்களுக்கு “சிவன்”தான் எல்லாம். அவர்கள் சமயம் சைவம்; ஆனால் அவர் களுக்கு சிவனின் வரலாறோ, சைவத்தின் வரலாறோ தெரியாது. அவர்கள் பாமரத்தனமாக சிவனை வணங்கினார்கள். அவர்களுக்கு வைதீகச் சைவமும் ஒன்றுதான், சித்தாந்த சைவமும் ஒன்றுதான். இரண்டிற்கும் உள்ள முரண்பாடு தெரியாது. தமிழ்நாட்டுச் சைவம், வட நாட்டு வேதங்களுக்கு இரையான போதும் தங்களின் சொந்த முகத்தை முற்றிலும் இழக்கவில்லை என்ற பார்வை அவர்க ளுக்குக் கிடையாது. வரலாற்றுப் பார்வையும், தத்துவப் பார்வையும் இல்லாமல், இதுவும் சைவம், அதுவும் சைவம், அது வட மொழியில், இது தமிழ் மொழியில் என்று எளிதாகப் புரிந்து கொண்டார்கள். என்றாலும் பிராமணியம் மேலானது என்ற பார்வையை அவர்கள் கொண்டிருந்தார் கள். அதனால்தான் கோயிலில் வடமொழி உள்ளே இருந்தது. தென்மொழி வெளியே இருந்தது. தேவார காலத்தில் சிவனைத் தொட்டு வணங்கிய “கண்ணப்பன்” பின்னர் சிவனை நெருங்க முடியாதவனானான்.

பிற்காலச் சோழர்களுக்கு தேவாரமும் வேண்டும், வடநாட்டு வேதமும் வேண்டும். ஆனால் இந்த இரட்டைக் கொள்கை சம நிலையில் இல்லை. வேத மரபு ஓங்கிய நிலையில் இருந்தது. அதன் விளைவு வேத மரபின் “மனுநீதி” தமிழ் நாட்டுக்கு இறக்கு மதி செய்யப்பட்டது. மனுநீதியை மக்கள் ஏற்றுக்கொள்ள பிற்காலச் சோழர்கள் மனு நீதிக்கு ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்தார்கள்.

சோழர்கள் ஆட்சியில் அரசியல், அதிகாரம் மன்னர்கள் கையில் இருந்தா லும், சமூக அதிகாரம் பிராமணியத்திடம் இருந்தது. சம்பந்தர் காலத்தைவிட சோழர்கள் காலத்தில் பிராமணியம் உச்சத்தை நெருங்கியது. நாயக்கர்கள் காலத்தில் உச்சத்தைத் தொட்டது.

நன்றி - ‘தீக்கதிர்’ பொன்விழா மலர் 2013.

Pin It