தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் நடத்தும் நாடகங்கள் இன்னும் முடியவில்லை. திரைப்படங்களில் தான் கள்ளக் கடத்தல் கும்பல் இரவோடு இரவாக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பெட்டிகளைக் கைமாற்றும் காட்சியைப் பார்த்து வந்தோம். இப்போது தமிழ்நாட்டில் நேரடியாகப் பார்க்கிறோம்.

voting 303கோவையிலிருந்து 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கும் 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இதனை அனைத்து எதிர்க்கட்சியினரும் கண்டித்துள்ளனர்.

இப்படி வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படும் செய்தியை அறியும் போது, தேர்தலில் போட்டியிட்டவர்கள் எல்லோரும் நியாயமாக பதற்றப்படுவார்கள். ஆனால் இந்தப் பதற்றம் எதிர்க்கட்சியினரிடம் மட்டுமே இருக்கிறது. ஆளுங்கட்சியினர் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆளுங்கட்சியினர் பாராட்டுத் தெரிவிக்கின்றனர். வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவது ஆளுங்கட்சியினரின் நன்மைக்காகவே என்பது இதிலிருந்து உறுதிப்படுகிறது.

ஆளுங்கட்சியினரின் நன்மைக்காகச் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, வீட்டுக்குக் காவல் வைக்கப்பட்டிருக்கும் காவலரே வீட்டிலிருக்கும் பொன்னையும் பொருளையும் திருடனுக்கு அள்ளிக் கொடுப்பதைப் போன்றதாகும்.

வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்கும் பணியைக் காவல் துறையினர் இராணுவத்தினர் ஆகியோர் செய்வது வழக்கம். ஆனால் இங்கு மட்டும்தான் வாக்கு இயந்திரங்களை அரசிடம் இருந்தும் ஆணையத்திடமிருந்தும் பாதுகாக்கும் பணியை அனைத்து எதிர்க்கட்சியினரும் செய்யும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

அவலங்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது : “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.”

Pin It