இந்தத் தீர்ப்பு சரியா தவறா என்ற விமர்சனத்தில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் வீழ்ச்சி எழமுடியாமல் வீழ்ந்து கிடக்கும் தி.மு.கழகத்தின் மறு எழுச்சிக்கு வித்திடலாகாது என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கவலையாக இருக்கிறது.

                                                                - தமிழருவி மணியன், ஒன் இந்தியா இணையத்தளத்தில்

தர்ம நியாயங்கள் குறித்து எல்லா இடங்களிலும் தொண்டை வலிக்கப் பேசும் மணியன், இப்போது தீர்ப்பு சரியா, தவறா என்று விவாதிக்க விரும்பவில்லை எனக் கூறிவிட்டார். வெல்வது நீதியா அநீதியா என்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை, எக்காரணம் கொண்டும் தி.மு.க. வென்றுவிடக் கூடாது என்பது மட்டும்தான் அவரின் ஒரே நீதி நியாயம் எல்லாம்.

.........................

சாதனையும் வேதனையும்

“ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவியேற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வர் ஆவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை. இப்போது இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்”

 - தினமணித் தலையங்கம், 12.05.15

ஊழல் வழக்கில் சிறைசென்று, சிறைசென்று திரும்பி வந்ததையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றால், ஆறு முறை என்ன அறுபது முறை கூட அவர் முதல்வர் பதவியை ஏற்க முடியும்.

..........................

தண்டனையும் விடுதலையும்

“ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர்(நீதிபதி குமாரசாமி) சரிபாதி வழக்குகளில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்திருக்கிறார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்குகளிலும் விசாரணை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.

இதற்கு உதாரணமாக முத்திரைத் தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, பி.டி.பருத்தி போன்ற வழக்குகளைக் கூறலாம். அதேபோல, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் ஏழு தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ‘தலித் படுகொலைக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்தார்”

                 - நன்றி : தி இந்து, 12.05.15

............................

செய்ததும் செய்யாததும்

“கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் பன்னீர்ச் செல்வம் உள்ளிட்ட அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்க வேண்டும் என்பதுதான். அதனால், பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால், முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததைத் தவறு காண முடியாது”

                                                 - தினமணித் தலையங்கம், 12.05.15

அமைச்சர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததில் எதுவும் குற்றமில்லை என்கிறது தினமணி. ஆனால் அமைச்சர்கள் பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டுதான் இருந்தார்கள் என்பதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி உட்பட அமைச்சர்கள் பலர் ரத்தமும் சதையுமான சாட்சிகளாய் நிற்கின்றனர்.

..................................

நட்பும் நடப்பும்

“உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து (ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியவர்) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, அவருடன் நெருங்கிப் பழகி உள்ளார் (நீதிபதி குமாரசாமி). இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால், விடுமுறைக் காலங்களில் சிருங்கேரி கோவிலுக்கும், முல்பாகல் சிக்குத்திருப்பதி கோவிலுக்கும் சென்று பூஜை செய்து வருவார்கள்”

                 - நன்றி : தி இந்து, 12.05.15

Pin It