பார்ப்பனியத்தின் தன்மைகளாக வரலாற்றில் இன்றுவரை நாம் பார்ப்பது ஏமாற்றுதலும் மறைமுகமாகச் செயல்படுதலுமாகும். பார்ப்பனியம் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப தன்னுடைய முகமூடியை மாட்டிக் கொள்கிறது. இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை கொடுப்பது போலக் காட்டிக் கொள்கிறது. மறைமுகமாகச் சனாதனத்தை  நிலைநாட்டிக் கொள்கிறது. 

தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த  திரு எல்.முருகன் என்பவரை பாஜகவின் தமிழகத் தலைவராக நியமித்து இருக்கிறார்கள். 

இந்தச் சூழலை ஏற்படுத்தியது திராவிட இயக்கம் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் இதில் தென்படுவதோ பார்ப்பனர்களின் வழக்கமான சூழ்ச்சி.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்க்கிடையே அவர்கள் ஏற்படுத்த நினைப்பது பிளவு. பார்ப்பனரல்லாதோர் இயக்கம் கண்ட பெரியார் மண்ணில் ஒரு போதும் பலிக்காது இந்தக் கனவு.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திராவிட இயக்கம் போராடிப் பெற்றுத் தந்தது இடஒதுக்கீடு. காலம் காலமாக இடம் தராமல் ஒதுக்கியவர்கள் நோகாமல் பறித்துக் கொண்டார்கள் அதில் 10 விழுக்காடு.

நீதியரசர்களாக, நிர்வாக அதிகாரிகளாகத் தாழ்த்தப்பட்டோரை உயர் பதவிகளில் அமர வைத்து திராவிட இயக்கம் வென்றெடுத்தது சமூக நீதி.

நீதிமன்றம் மூலமே தாழ்த்தப்பட்டோர் பதவி உயர்வைத் தடுத்து நிறுத்தி இன்று பார்ப்பனியம் மீட்டெடுப்பது மனுநீதி.

போராடிப் பெற்ற உரிமைகளுக்கெல்லாம் வேட்டு வைத்து விட்டு இப்போது நடத்தும் நாடகம் வெறும் ஓட்டுக்குத்தான்.வேரோடிப் போயிருக்கும் சாதியத்தால் அவர்கள் ஏற்படுத்த நினைக்கும் தேர்தல் கூட்டுக்குத்தான்.

ஆட்டுவிக்க ஒருவரை, பலமில்லாத கட்சிக்குத் தலைவராக நியமித்து விட்டால் அவர்கள் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் அரங்கேறாமல் போய்விடுமா?

மாட்டு அரசியல் செய்து மனிதர்களை வாட்டி வதைக்கும் மனுவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டெடுக்காமல் திராவிட இயக்கம் ஓய்ந்திடுமா?

Pin It