bjp electionவடக்கே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.

உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.ஆட்சியைப் பிடித்துவிட்டது. பஞ்சாபின் ஆட்சி ஆம் ஆத்மியிடம் போய் விட்டது. வழக்கம் போல் தலைவர்கள், மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குவதாகச் சொல்லி முடித்துக் கொண்டார்கள்.

பஞ்சாப் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தாலும், அது பா.ஜ.கவின் பின்புலத்தில்தான் இருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி தலைவர்கள் பா.ஜ.கவை விமர்சித்துப் பேசவில்லை என்பது கருதத்தக்கது. விவசாயிகளின் கடும்போராட்டத்தாலும், பா.ஜ.க மீது இருந்த மக்களின் கோபத்தாலும் வாக்குகளைக் கவனமாக ஆம் ஆத்மி மூலம் அறுவடை செய்திருக்கிறது பா.ஜ.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி எப்படி இருந்தது?

ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்களில் கொரொனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தார் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள். ஆனால் உ.பியில் மருத்துவமனைகளில் இடமில்லை, ஆக்சிஜனுக்கு மிகப்பெரும் பற்றாக்குறை, தெருத் தெருவாக எங்கும் பிணங்கள் எனச் சொல்லொனாக் கொடுமைகளால் கதறினார்கள் மக்கள். ஆக்சிஜன் இல்லாமல் 80 குழந்தைகள் இறந்தார்கள் அங்கே.

உ.பியில் சட்டம் ஒழுங்கைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மாட்டு இறைச்சி வைத்திருந்தார்கள் என்று இஸ்லாமிய, தாழ்த்தப்பட்டவர்கள் அடித்துத் துன்பப்படுத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் இருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகளும் அங்கு உண்டு.

இந்தத் தாக்கத்தைக் கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் பார்க்கலாம்.

இவ்வளவையும் மீறி பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கிறது. இது கவலைக்குரிய செய்தி.

மாநிலத்தின் சின்னஞ் சிறிய உதிரிக் கட்சிகளை வைத்துக் கொண்டு வாக்குகளை எல்லாம் அள்ளிவிடலாம் என்ற அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையில் இருந்தார் அகிலேஷ் யாதவ். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளை அரவணைக்காமல் களம் கண்டது அவரின் பலவீனம்.

அங்குள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்கள், அக்கட்சியின் தோல்வியில் பெரும் பங்கு வகிக்கிறது எனலாம். யோகி ஆதித்யநாத் தேர்தலுக்கு முன்பே ஓராண்டாக தேர்தல் பணியைத் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி 4 அல்லது 5 மாத காலத்தில் களத்திற்கு வருகிறது.

பகுஜன் சமாஜ் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கன்சிராமுக்குப் பின், மாயாவதியால் அக்கட்சி சரிந்து வருகிறது.

உ.பி. மக்களை விழிப்படைய விடாமல் மதம் என்ற பெயராலும், ராமன், கிருஷ்ணன் என்று கடவுளின் பெயராலும், மயக்க வைத்திருப்பதில் பா.ஜ.க வின் சூழ்ச்சியும், பலமும் இணைந்து இருக்கிறது.

இவையெல்லாம் இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கற்றுத்தரும் பாடங்கள்.

இவைகளை எல்லாம் கவனத்தில் கொண்டு, கவனமாகப் பரிசீலித்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் ஒன்றிய அரசின் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன.

பா.ஜ.கவை வீழ்த்துவது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் தனி மரம் தோப்பாகாது என்பதை இனியாவது தலைவர்கள் புரிந்து கொள்வது ஆகும்!

- எழில்.இளங்கோவன்

Pin It