தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் பாழ் செய்யும் பெரு முயற்சியில் பா.ஜ.க அரசு இறங்கியிருக்கிறது. நெடுவாசல், கதிராமங்கலம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் என்கிற வரிசையில் இப்போது சேலம். எட்டு வழிச் சாலை ஏற்படுத்தும் விளைவுகள் தமிழ் நாட்டு மக்களிடம் பெருமளவு எட்டியிருக்கிறது. யாரோ விரைவாகச் செல்வதற்கு நம்முடைய வளங்களை நாம் விரயம் செய்ய வேண்டுமாம். அறிவித்திருக்கிறது அரசு. அதிர்கிறது தமிழ்நாடு.

police arrested old lady

(சேலம் எட்டுவழிச் சாலையை எதிர்த்த மூதாட்டி கைது)

ஒவ்வொரு ஆண்டும் வெம்மையும் வறட்சியும் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், இப்படி ஒரு திட்டத்தை ஓர் அரசு அறிவிக்கிறதென்றால், அந்த ஆட்சியாளர்களிடம் ஈரம் இல்லை என்பது விளங்குகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்த வேண்டும். இதை இந்த அரசு செய்யவில்லை. கருத்துக் கேட்பு நடத்தினால் என்ன கருத்து வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்களைச் சந்திக்கும் வீரமும் இல்லை. இது எப்படி மக்களுக்கான திட்டமாக இருக்க முடியும். தேசத்தின் வளர்ச்சி என்றால் தேசம் என்பது மரமா அல்லது செடியா? தண்ணீர் ஊற்றி உரம் போட்டு வளர்ப்பதற்கு. மக்கள் இல்லாமல் இவர்களுக்குத் தேசம் தெரிகிறது என்றால், இவர்கள் இடப்போகும் சாலைகள் வழியாக வரப்போவது முதலாளித்துவத்தின் வளர்ச்சியேயாகும்.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விழிப்புணர்வை சேலம் மாவட்ட ஆட்சியர் வதந்திகள் என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் கூறுகிறார். மலைகளும், வனங்களும், விளைநிலங்களும் அழிக்கப்பட்டே சாலைகளை உருவாக்கப்போகிறோம் என்று அரசே சொல்கிறது. 10 ஆம் வகுப்பில் சுற்றுச்சூழல் படிக்கும் மாணவருக்குக் கூட இதனால் விளையும் கேடுகள் விளங்கும். ஆனால் குடிமைப் பணித் தேர்வுகளில் சுற்றுச்சூழலியலை தனியே ஒரு தாளாக எழுதித் தேர்ச்சி பெறும் IAS அதிகாரிகளுக்கு இது தெரியவில்லை என்றால் தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? ஆட்சியாளர்களும் அதிகாரிகளும், தாங்களும் மக்கள் திரளில் ஒரு துளிதான் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்.

மக்களுக்காகவும் மரங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்களை உடனே கைது செய்கிறார்கள், மிரட்டுகிறார்கள். அன்றைக்கு அவர்களை எதிர்த்தவர்களை அரக்கர்கள் என்றார்கள்; இன்றைக்கு Anti-social Elements (சமூக விரோத சக்திகள்) என்கிறார்கள். அன்று நரகாசுரன் என்றார்கள்; இன்று நக்சலைட் என்கிறார்கள். ஆக மொத்தத்தில் நடப்பது தேவ அசுரப் போராட்டம் என்பது விளங்குகிறது.

நாம் காவிரி உரிமைக்காகக் குரல் கொடுத்த போது திராவிடக் கட்சிகள்(திராவிடக் கட்சி என்று அவர்கள் குறிப்பிடுவது தி.மு.கழகத்தை மட்டும் தான்) இயற்கை வளங்களைப் பாதுகாக்கவில்லை, நீர் மேலாண்மை சரியில்லை என்று உளறிக்கொட்டியவர்கள் இன்று இயற்கை வளங்களையும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கக் குரல் கொடுக்கும் போது வளர்ச்சிப் பற்றி பேசுகிறார்கள். சரி, வளர்ச்சி முக்கியம் என்றால் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியது தானே. அதைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.

இவர்களுடைய நோக்கம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் கிடையாது வளர்ச்சியும் கிடையாது. ஆட்சியில் இருக்கிற காலத்திலேயே தங்களுடைய சுயநலத்திற்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதேயாகும். அதிலும் குறிப்பாக அவர்களுடைய குறி தமிழ்நாட்டின் மீது தான் இருக்கிறது. தமிழ்நாட்டைச் சூழ்ந்து கொள்வதும் சூறையாடுவதும் அவர்களுடைய செயல்திட்டம். மத்தியில் பா.ஜ.க.வும் மாநிலத்தில் அ.தி.மு.க வும் ஆட்சியில் அமர்ந்திருந்தால் அடுக்கடுக்காக அழிவுத் திட்டங்கள் தான் வந்து சேரும். வேறு எந்த மாநில மக்களும் இந்த அளவிற்கு மத்திய அரசை எதிர்த்துப் போராடுவதில்லை. அதனால் தான் அவர்கள் தமிழ்நாட்டைப் போர்க்களமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

பார்ப்பனிய ஆட்சி என்றைக்கும் சமூக முன்னேற்றத்தைத் தடுக்கும். ஏனெனில் சமூகம் முன்னேறினால் முதலில் அடிவாங்குவது பார்ப்பனியம்தான். அதனால் அவர்கள் கொண்டு வரும் திட்டங்கள் எல்லாம் அவர்களுடைய முன்னேற்றத்திற்காக மட்டுமேயன்றி மக்கள் முன்னேற்றத்திற்காக அன்று.

வரலாற்றுக் காலம் தொட்டு மக்களுடைய வரிப்பணம் பார்ப்பனர்களுக்குப் பயன்படுவதை நாம் பார்த்து வருகிறோம். சமூக முன்னேற்றத்திற்குச் சிறிதும் பயன்படாத கோவில்களை அன்று அரசர்கள் கட்டிக் குவித்தனர். இன்று கோமான்களுக்குப் பயன்படும் சாலைகளைக் கட்ட மக்கள் வரிப் பணத்தையும் வனங்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கும் நம்மை முதுகில் குத்த வீடணர்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

வீடணர்களை விரட்டியடிப்போம், விடியலை நோக்கிப் பயணிப்போம்!

Pin It