ஒரு முரண் இப்போது எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது!
தமிழ்நாட்டின் இன்றைய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் தேர்தலுக்கு முன்னால் கூட்டங்களில் மிக ஆவேசமாகப் பேசினார்! உணர்ச்சி மிகுந்த குரலில் உரத்துப் பேசினார்!
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பதவிப் பிரமாணத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டது, பேரவைத் தலைவரை வாழ்த்தியது, ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது என மரபு அடிப்படையிலான சில பேச்சுகளைத் தவிர, சட்டமன்றத்தில் முழுமையாக அவர் மௌனம் காக்கிறார்!
இந்த முரண்பாடுதான் இன்று பேசு பொருள் ஆகியிருக்கிறது!
நாட்டில் சட்டம், ஒழுங்கு சிக்கலாகி இருக்கிறது! பெண்களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது! அதற்காகவே உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படை குறித்த கேள்விகள் சட்டமன்றத்தில் எழுந்திருக்கின்றன! காலையில் காக்கி உடையில் பணியாற்றும் அதே பெண்கள்தான் மாலையில் சிங்கப்பெண் படையில் சீருடையை அணிந்து கொள்கிறார்கள். இது ஒரு விதமான ஏமாற்றாக இருக்கிறது என்று சட்டமன்றத்திலேயே, திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசியிருக்கிறார்.
பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள் குறித்து சட்டமன்றத்தில் வினாக்கள் எழுப்பப்பட்ட போதெல்லாம், அந்தத் துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் விடை ஏதும் சொல்லாத நிலையில், மற்ற அமைச்சர்கள் எழுந்து விடை சொல்கிறார்கள்!
தூய சக்தி என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்ட முதல்வர், ஏன் எதற்கும் விடை சொல்ல மறுக்கிறார், அல்லது அஞ்சுகிறார்? பல நேரங்களில் எல்லாவற்றிற்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எழுந்து விடை சொல்கிறார்!
வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சர், தமிழ்நாட்டில் நீதிப் பற்றாக்குறை இருக்கிறது என்கிறார். பிறகுதான் நிதிப் பற்றாக்குறையைத்தான் அவர் அவ்வளவு தெளிவாகச் சொல்கிறார் என்பது புரிகிறது!
எப்போது பேச வேண்டும் என்பது முதலமைச்சருக்குத் தெரியும் என்று மிரட்டும் தொனியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனார் பேசுகிறார்!
"வாயைத் திறங்க சிஎம் சார்!" என்ற பதாகையோடு எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்திற்குள் நுழைந்த பிறகும், நம் முதலமைச்சர் வாயைத் திறக்க மறுக்கிறார்!
இந்தப் போக்கு சட்டமன்ற மரபுகளுக்கும், ஜனநாயகத்திற்கும் ஏற்றதில்லை! இதே நிலை நீடிக்குமானால், அது தமிழ்நாட்டின் முதலமைச்சரின் குறைபாடாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு அரசியலின் குறைபாடாகவே பார்க்கப்படும்!
சில வேளைகளில், மௌனமும் ஒரு வலிமையான குரலாகப் பார்க்கப்படுவதுண்டு! ஆனால் சட்டமன்றத்தில் பொறுப்புகள் நிறைந்த முதலமைச்சர் மௌனமாகவே இருப்பது, நமக்குச் சம்மதமில்லை!
- சுப.வீரபாண்டியன்