தமிழக அரசியல் அமைதியாக, ஆனால் அதி விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை வெளிவரும் நேரத்திற்குள்ளாகவே கூடச் சில மாற்றங்கள் நேர்ந்திருக்கக்கூடும்.

mk stalin திமுக வின் எதிரிகள் அனைவரும் பிரிந்து கிடப்பது நல்லதில்லை என்று பாஜக கருதுகின்றது. சில சமரசத் திட்டங்களை அது முன்வைத்துள்ளது. அதன்படி, பன்னீர்செல்வம் கட்சியின் தலைவராகவும், எடப்பாடி முதல்வராகவும் இருக்க இரு பிரிவினரும் ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகின்றதாம். தினகரன் அணியையும் ஏதோ ஒரு விதத்தில் மிரட்டி அல்லது ஆசை காட்டிச் சம்மதிக்க வைத்து விடுவார்கள் என்று செய்தி கசிகிறது.

தமிழ்நாட்டில் திமுக மேலும் மேலும் வலிமை பெற்று வருவதைத் தங்களுக்கான ஆபத்து என்று பாஜக நினைக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு ரஜினியின் அரசியல் நுழைவுதான் சரியான வழி என்று அக்கட்சி உறுதியாக நம்புகின்றது. ஆனால் அது உடனடியாக நடக்கும் என்று கூற முடியாது. கடைசி நேரத்தில் ரஜினி தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டால், அந்தக் கனவு பலிக்காமல் போய்விடவும் வாய்ப்புண்டு. அதனால், அதிமுக வை ஒன்றாகச் சேர்ப்பதுதான் ஒரே வழி என்பது அவர்கள் கருத்து.

அவர்கள் எண்ணப்படி ரஜினி அரசியலுக்கு வந்து, தனிக்கட்சி தொடங்கி தங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டால், அதிமுக கூடாரத்தைக் காலி செய்துவிடலாம். அங்குள்ள தொண்டர்கள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலருக்கும் ஆசைகாட்டி இங்கு இழுத்துவிடலாம்.

இந்த எண்ணத்தில்தான் பலரையும் இப்போது அதுகுறித்துப் பேச விடுகின்றது பாஜக. குருமூர்த்தி போன்றவர்கள் வெளிப்படையாகவே, “ரஜினிதான் தமிழகத்தின் மீட்பர் (விமீssவீணீலீ) என்கிறார். அடுத்த எம்ஜிஆர் அவர்தான் என்கிற அளவுக்கு அவர் நேர்காணல் (டைம்ஸ் ஆப் இந்தியா - 22.06.2017) அமைந்துள்ளது. சில நிபந்தனைகளையும் ரஜினிக்குக் குருமூர்த்தி விதிக்கிறார். ரஜினியிடம் முறையான நிகழ்ச்சி நிரல், முறையான மொழி, முறையான வழிகாட்டல் ஆகிய மூன்றும் இருக்குமானால், அவர் வெற்றி உறுதி என்கிறார். அது என்ன முறையான வழிகாட்டல்? பாஜகவின் வழிகாட்டல்தான்!

அந்த நேர்காணலில் இன்னொரு உண்மையையும் குருமூர்த்தி போட்டு உடைத்திருக்கிறார். நீண்ட நாள்களாக சோ, ரஜினியை வரும்படி வலியுறுத்தத்தினாராம். இவரோ, வெறும் கருத்துரைதான் சொல்கிறாராம். ரஜினியின் ஆன்மிகச் சிந்தனை, பாஜகவிற்கு மிக நெருக்கமானதாம். இவர்கள் எல்லோருக்கும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்னும் ஒரே நோக்கம்தான், அதற்குத்தான் இப்படிச் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகின்றனர்.

தமிழருவி மணியனின் குரலும் அதே நோக்கில்தான் ஒலிக்கின்றது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். திமுக மட்டும் வந்துவிடக்கூடாது. அந்த அடிப்படையில்தானே எல்லோரும் ஒன்று சேர்ந்து சென்ற தேர்தல்களில் விஜயகாந்தை முன்னிறுத்தினார்கள். கிங் ஆவதா கிங் மேக்கர் ஆவதா என்று இவர்கள் எழுப்பிய குழப்பத்தில், இன்று அவர் ஒன்றுமே ஆகாமல் போய்விட்டார். அடுத்து, தங்கள் ஆசைக்கு ரஜினியைப் பலியாக்கத் திட்டமிடுகின்றனர்.

இந்த புத்திசாலிகள் எல்லோரும் ஒன்றை நினைவு வைத்துக் கொள்வது நல்லது. யாரை நீங்கள் அழைத்து வந்தாலும் அல்லது யாரை எல்லாம் நீங்கள் ஒன்று சேர்த்தாலும், திமுக வின் வாக்கு வங்கியிலிருந்து ஒரு வாக்கு கூடச் சிதறாது. எந்தப் பக்கம் ஓடலாம் என்ற சிந்தனை எப்போதும் திமுக தொண்டனுக்குக் கிடையாது.

ரஜனியின் உடல்நலம், வயது, அவருடைய இயல்பான சுபாவம் எதுவுமே பரபரப்பான அரசியலுக்கு ஏற்றதில்லை. “தன்னை அறிதலே” மிகப் பெரிய ஆன்மிகக் கோட்பாடு என்று கூறிக்கொள்வார்கள். அது உண்மையானால், ரஜினி தன்னை அறிவதோடு மட்டுமின்றி, தன்னைக் காத்துக் கொள்வதற்கும் இதுவே சரியான தருணம். அவர் நினைக்கும் ஆன்மிகமும், தனிமையும் வேறு. இவர்கள் காட்டும் சுயநலம் மிக்க ஆன்மிக அரசியல் வேறு!

எத்தனையோ கோட்டைச் சுவர்களை, தடைகளைத் தாண்டி வந்த கழகம் திமு கழகம். இன்று உடைந்து கிடைக்கும் அதிமுக என்னும் குட்டிச் சுவரையும், இன்னமும் தமிழ்நாட்டில் கட்டவேபடாத பாஜக என்னும் வெற்றுத்தரையையும் தாண்டுவதா கடினம்? 

Pin It