கீற்று இணைய தளத்தில் தேன்மொழி என்பவர் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் "தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?" எனும் தலைப்பில் கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் ஜுன் 6, 2024 இதழில் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ஒரு கட்டுரையை எழுதி இருப்பதைப் படிக்க நேர்ந்தது.

அவரின் பிழையான பார்வையை சுட்டிக் காட்டவே இந்த அவரின் மறுப்புக்கு இந்த மறுப்பு.

அவர் எழுதியிருக்கும் அந்தக் கட்டுரையில் முதல் பத்தியிலேயே அவரின் திமுக வெறுப்பு உணர்வு மிகத் தெளிவாகவே தெரிகிறது.

துதி பாடுவது, வெட்கமே இல்லாமல் என்றெல்லாம் வசைச் சொற்களைப் பயன்படுத்தி எழுதி இருக்கும் அவர், பாஜக தமிழ்நாட்டில் அதிக வாக்கு சதவீதம் வாங்கி இருப்பதாகவும், அதனால் முற்போக்கு இயக்கங்கள் மிகப் பெரிய தோல்வி அடைந்து விட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

மிகக் குறைந்த அரசியல் அறிவு உள்ள பார்வையாளர்களுக்குத் தெரியும், அதிமுக என்கின்ற கட்சி தன்னுடைய அடிப்படை திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுவிட்டு ஒன்றிய பாஜக அரசுக்கு அடி பணிந்து போனதால் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்து நிற்கிறது. மேலும் அதிமுக பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து இருப்பதால், அதனுடைய வாக்குகள் சிதறி இருப்பது திமுகவிற்கு எதிரான வாக்குகளை அதனால் ஒருங்கே பெற முடியாமல் போனது. சிதறிய இந்த வாக்குகளை பாஜக கூட்டணி அறுவடை செய்திருக்கிறது.

உண்மையில் பாஜக பெற்றுள்ள வாக்கு என்பது தனித்து பாஜக பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் அல்ல. பாஜக ஜாதியவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அந்தக் கட்சிகள் வலிமையாக இருக்கும் பகுதிகளில் அதிக வாக்கு சதவிகிதத்தைப் பெற்று பாஜக தன் கணக்கில் வரவு வைத்துப் பேசுவதை ஆராயாமல், பாஜக சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு நம்மை நோக்கி வசைபாட பயன்படுத்தி இருக்கிறார்.

பாஜக கூட்டணியில் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் வாக்கு அதிகம் பெற வாய்ப்புள்ள பாமக, ஜாதி வாக்குகளை நம்பி நின்ற டிடிவி தினகரன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரின் வாக்குகளையும் சேர்த்து தான் பாஜகவின் வாக்கு விகிதம் உள்ளது.

கட்டுரையாளர் சொல்வதைப் போல் பாஜக மிகப் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறதா? பாஜக வளர்ந்ததைப் போல் சொல்லி, திரும்பத் திரும்ப முற்போக்கு இயக்கங்கள் மீது அவதூறு கிளப்புகிறார் கட்டுரையாளர். அவருக்கு தேர்தல் முடிவுகள் குறித்த எந்த ஒரு அடிப்படை புள்ளிவிவர அறிவும் இல்லை என்பது கீழ்கண்ட புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். மூன்றாம் தர சொற்களைப் பயன்படுத்தி வசை பாடத் தெரிந்த இவருக்கு இந்த வாக்கு எண்ணிக்கையைப் பார்த்து அறிந்து, பிறகு பேச வேண்டும் என்கின்ற குறைந்தபட்ச யோக்கியத் தன்மை கூட இல்லை.

அண்ணாமலை என்கிற, பார்ப்பன ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட போலி பிம்பம் கோவை தொகுதி வாக்காளர்களினால் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அதன் விபரங்கள் கீழே...

2014-ல் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக தேர்தலைச் சந்தித்தபோது 9 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே டெபாசிட் இழந்தது. தற்போது அண்ணாமலை தலைமையில் 23 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களில் டெபாசிட் இழந்தது. 2014-ல் கோவையில் 42,000 வாக்கு வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வி, அண்ணாமலை அதைவிட 3 மடங்கு அதிக வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இல்லாமல், தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை பாஜக அமைத்தது. அந்தத் தேர்தலில் பாஜக சார்பில் கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளைப் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளில் சி.பி.ராதாகிருஷ்ணனைக் காட்டிலும் அதிகமாக அண்ணாமலை மொத்தம் 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை பாஜகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது உறுதியாகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கோவை தொகுதியில் அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, வாக்கு சதவீதத்தைக் கணக்கில் கொண்டு இதை ஆராய வேண்டியுள்ளது.

அப்படிப் பார்க்கையில், தற்போது அண்ணாமலை மொத்தம் பதிவான வாக்குகளில் 32.79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆனால், 2014 ஆம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணனோ கோவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 33.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வாக்கு CP ராதாகிருஷ்ணன் (2014) = 3,89,701
பதிவான வாக்குகள் - 11,59,192
சதவீதம் 33.62 %

தற்போது அண்ணாமலை (2024) = 4,50,132
பதிவான வாக்குகள் - 13,72,833
சதவீதம் - 32.79%

வித்தியாசம் - 60431 - இதுக்குத்தான் இந்த அலப்பறை. அண்ணாமலையினால் பாஜகவின் வாக்கு வங்கி வளர்ந்ததாகத் தெரியவில்லை.

சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்கள் தற்பொழுது அதிகரித்து உள்ளனர். அதில் பாஜகவுக்கு 60,000 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் ஓட்டு சதவீதம் 2014. ஒப்பிடுகையில் 1% குறைந்து தான் உள்ளது.

பா.ஜக.வை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்.ன் அடிப்படைக் கொள்கை சனாதனம். அந்த சனாதனத்திகு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தி கொள்கைச்சமர் புரியும் ஒரே கட்சி ஒன்றியத்தில் திமுக மட்டுமே. அதுவும் தேர்தல் அரசியல் கட்சியாக இருந்து கொண்டு இதனைச் செய்வது என்பது எந்த அளவிற்கு துணிச்சலான செயல் என்பதை கொள்கையாளர்கள் அறிவார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் உதயநிதி அவர்களையும் நாங்கள் பாராட்டுவதாக தேன்மொழி குறிப்பிட்டுள்ளார்.

துளியும் சந்தேகம் வேண்டாம், நாங்கள் திமுகவையும், முதல்வர் ஸ்டாலின் அவர்களையும், உதயநிதி அவர்களையும் மனமுவந்து பாராட்டுகிறோம். அவர்களுக்காக நாங்கள் தேர்தல் பரப்புரைப் பணியை தெருத்தெருவாக செய்திருக்கிறோம். காரணம் திமுக சனாதனத்திற்கு எதிராகப் பேசுவதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய திட்டங்களிலும் அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

உதயநிதி சனாதனத்திற்கு எதிராகப் பேசிய பேச்சு ஒன்றியம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியே வடமாநிலங்களில் தேர்தல் பரப்பரைகளில் உதயநிதி குறித்தும், உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு குறித்தும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் பேசியது, எந்த அளவிற்கு சனாதனவாதிகளுக்கு உதயநிதியின் பேச்சு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அரசியல் நோக்கர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உதயநிதி அவர்களின் சனாதன எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காகவே அவரை ஆதரிப்பதும், எங்கள் மேடையில் ஏற்றுவதும் எங்கள் கடமையாகவே நாங்கள் கருதுகிறோம்.

இளைஞர்கள் 70% பேர் பாஜகவிற்கு வாக்களித்ததாக யூகத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு நம்மை வசை பாடுவது எந்த அளவிற்கு அறிவு நாணயம் என்று தெரியவில்லை.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அவர்களும் உதயநிதி அவர்களும் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் இலட்சக்கணக்கில் இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டதை காணொளி மூலம் உலகமே பார்த்தது. இவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாரா என்று தெரியவில்லை.

இன்றைய இளம் தலைமுறையினரிடம் பெரியார் எந்த அளவிற்குப் போய்ச் சேர்ந்திருக்கிறார் என்பதனை அதே சமூக ஊடகங்களில் கவனித்துப் பார்த்தால் நன்கு தெரியும். ஆனால் இவருக்கு பாஜகவுக்கு ஆதரவாக எழுதுபவர் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது போல.

திமுகவின் நலத்திட்டங்கள் சனாதன எதிர்ப்பு தன்மை கொண்டவை என்று சொன்னோம். சனாதனம் நமக்கு பல நூறு ஆண்டுகளாக மறுத்த கல்வியை பல்வேறு திட்டங்களின் மூலம் அடுத்த தலைமுறைக்கு இந்த அரசு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், தற்பொழுது மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் 1000 ரூபாய், அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெரும் பள்ளிகள் ஆகியவற்றில் ஒன்றியத்திலேயே முதல் முறையாக காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களினால் பலனடையும் அடுத்த தலைமுறை திமுகவை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இவை ஒரு துறையில் மட்டும் திமுக அரசு செய்துள்ள சமூக நலத் திட்டங்கள். இவை போன்று பல்வேறு துறைகளில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை திமுக அரசு நிறைவேற்று இருக்கிறது. அவற்றை சொல்லிக் கொண்டு போனால் பக்கம் பக்கமாக சொல்ல வேண்டி இருக்கும். கோடிட்டு ஒரு துறையில் மட்டும் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

ஒரு சமூக அமைப்பு செய்யும் பணிகளை திமுக செய்கிறது. அதனுடைய இளைஞர் அணித் தலைவர் உதயநிதி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒன்றியம் வாரியாக திராவிடர் இயக்கப் பயிலரங்குகளை நடத்திக் காட்டி இருக்கிறார். அவற்றில் திராவிடர் இயக்கத் தலைவர்கள் பங்கேற்று வகுப்புகளையும் எடுத்திருக்கிறார்கள். அவை தொடரும் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார். இவையெல்லாம் சமூக அமைப்புகள் செய்யும் பணி. திமுக எனும் கட்சி செய்து கொண்டிருக்கிறது. இதனைப் பாராட்டாமல் வேறு என்ன செய்வது?

சமூக இயக்கங்கள் என்ன ஒரு அரசிடம் எதிர்பார்க்கின்றனவோ, அதனை திமுக அரசு மிகச் சரியாக திட்டங்களாகவும் செயல்படுத்தி வருகிறது.

திமுக செய்யும் இந்தத் திட்டங்களை எல்லாம் கட்டுரையாளர் வேண்டுமென்றே விட்டுவிட்டு 'துதி பாடும்' என்கின்ற தனக்குப் பிடித்த வார்த்தையைப் பல இடங்களில் பயன்படுத்தி இருப்பதன் மூலம் திமுகவின் மீது ஒரு மிகப் பெரிய வெறுப்பு மனநிலையில் அவர் இந்தக் கட்டுரையை எழுதி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

திமுக அரசில் எங்காவது ஒரு பிழை தென்பட்டால் அதனை சுட்டிக்காட்டவும் நாம் தயங்குவதும் இல்லை. பல இடங்களில் சுட்டிக்காட்டி அவற்றை அரசு திருத்திக் கொண்டும் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்றால், நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளரை அவருடைய ஜாதி வெறிப் பேச்சுக்காக மாற்றச் சொல்லி திவிக செயலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றிய சில மணி நேரங்களில் அந்த வேட்பாளர் மாற்றப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

போகிற போக்கில் நீலச்சட்டை தோழர்களையும் அதே சொற்களைப் பயன்படுத்தி இழிவுபடுத்தி விட்டுச் செல்கிறார். அவர்கள் களத்தில் நின்று செய்யும் அரிய பணிகளை எல்லாம் இவர் பார்ப்பதில்லை போலும்.

ஏழை எளிய உழைக்கும் மக்கள் என்று திரும்பத் திரும்ப இரண்டு மூன்று இடங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த ஏழை எளிய உழைக்கும் பிறவித் தொழிலாளர்களை அவர்கள் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், தேநீர்க் கடைகள், தெருமுனைகள் இவற்றில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நேரடியாகச் சந்தித்து சனாதனம் குறித்தும், திராவிடம் குறித்தும் சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டிய அவசியம் குறித்தும், சமூக ஒற்றுமையைக் காக்க வேண்டிய தேவை குறித்தும் கடும் வெயிலிலும் தமிழ்நாட்டின் பல்வேறு கிராம நகர ஒன்றிய பகுதிகளில் கடந்த ஓராண்டில் மட்டும் 1300 க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.

மிகப் பெரிய பொருளாதாரப் பின்புலம் இல்லாமல் இருந்தாலும், எமது அமைப்பான திவிக, வலிமையான கொள்கைப் பற்றுடைய எங்கள் தோழர்கள் கடும் உழைப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தெருமுனைக் கூட்டங்கள் மட்டுமல்லாமல் துண்டறிக்கை, சிறு வெளியீடுகள் ஆகியவற்றின் மூலமும் உழைக்கும் ஏழை எளிய பிறவித் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஓயாமல் எமது தோழர்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கருத்தரங்கம், பயிலரங்கம், மாநாடுகள், புரட்சிப் போராட்டங்கள் ஆகியவை கட்டுரையாளரை சிலிர்க்க வைக்கிறதாம். ஆனால் இப்போது அவை எதுவும் நடப்பதில்லையாம். எந்த நாட்டில் இவர் இருக்கிறார் என்று தெரியவில்லை.

கருத்தரங்குகள், பயிலரங்குகள், பொதுக்கூட்டங்கள் எனத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இவை குறித்த செய்திகளை எல்லாம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்து கொண்டே இருக்கிறோம். இச் செய்திகள் கட்டுரையாளருக்குத் தெரியாமல் இருந்தால் சமூக ஊடகங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எதுவும் பார்க்காமல், தெரியாமல் இப்படி உளறிக் கொட்டி ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருப்பது இவரின் அறியாத் தன்மையையும், திமுகவின் மீதான வெறுப்பு மனநிலையையும், பெரியார் இயக்கங்களின் மீது கொச்சை சொற்களை வீசும் இவரின் விருப்பத்தையும் மட்டும் தான் காட்டுகிறது.

கண் திறந்து பாருங்கள். வெறுப்பு மனநிலையில் இருந்து வெளியேறுங்கள். நீங்கள் சொல்லும் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு யார் இங்கு நன்மை கிடைக்கும் செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து நோக்கி அவர்களுக்கு ஆதரவளியுங்கள். அதுவே அம்மக்களுக்கு செய்யும் நன்மையும் கூட.

மதவெறி சக்திகள் இம்மண்ணில் கால் ஊன்ற முடியாத அளவிற்கு பரப்புரையின் வலிமை இருக்கின்ற காரணத்தினால் தான், இந்த அளவிற்கு அவர்களை தேர்தல் அரசியலில் வீழ்த்தி இருக்கிறோம். அவர்களின் தேர்தல் வாக்கு சதவிகிதம் உயருமேயானால் அவற்றையும் கணக்கில் கொண்டு அதற்கு தக்க எதிர்வினை ஆற்றுவதற்கு அணியமாகத் தான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை வட மாநிலங்கள், வட மாநிலத் தலைவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் உற்று நோக்குகிறார்கள். பாஜகவை உள்ளே நுழைய விடாமல் செய்யும் இம்மக்களின் தெளிவான மனநிலைக்குக் காரணம் இங்கு மக்கள் மத்தியில் நிகழ்ந்துள்ள பண்பு மாற்றம். இந்த மாற்றம் நிகழ பெரியாரும், பெரியார் இயக்கங்களும் தான் காரணம். அதனால் தான் இன்று வடநாட்டிற்கும் பெரியார் தேவைப்படுகிறார் என்று வடநாட்டுத் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் வீழ்த்தப்பட்ட பாஜக, பிற மாநிலங்களில் பெற்ற எம்பிக்கள் மற்றும் வெளியே இருந்து பெறப்படும் ஆதரவின் மூலம் ஆட்சி அமைத்திருப்பதற்கும் தமிழ்நாட்டில் பெரியார் தொண்டர்களின் பணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லை. தன்னை தந்தை பெரியாரின் பிள்ளை என்று சொல்லிக் கொள்ளும் கட்டுரையாளர் பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தின் காரணமாக "ஐ" எனும் எழுத்து "அய்" என மாற்றப்பட்டு "ஐயா" என்பது "அய்யா" என மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை கூட அறியாமல் இருப்பது பரிதாபம்.

தமிழ்நாட்டில் வீழ்த்திய மதவாத சக்திகளை வடநாட்டிலும் வீழ்த்துவதற்கு INDIA கூட்டணியில் வலிமையான கட்சியாக உருவெடுத்து இருக்கும் திமுகவின் கரத்தை வலுப்படுத்த அனைத்து தரப்பு மக்களிடமும் பரப்புரை செய்யும் எங்கள் பணியை நாங்கள் திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருப்போம்!

- பரிமளராசன், சமூக ஊடக பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

Pin It