"ஒரே...." வரிசையில் இப்போது வந்திருப்பது, இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டை என்பதாகும். ஏழைகளுக்கு நன்மை செய்வதற்காக, ஊழலை ஒழிப்பதற்காக, இரண்டு அட்டைகள் வைத்திருப்பதைத் தடுப்பதற்காக......என்று இதற்குப் பல்வேறு நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. இப்படித்தான், 1,000 ரூபாய், 500 ரூபாய்த் தாள்களைச் செல்லாதவை என்று அறிவிக்கும்போதும் பல காரணங்களைச் சொன்னார்கள். ஒன்று கூட நடைமுறையில் உண்மையாகவில்லை.
பொது விநியோக முறையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் இன்றும் முதலிடத்தில் நிற்கிறது. வடமாநிலங்கள் பலவற்றில் இந்த விநியோக முறை மிகவும் பின்தங்கி உள்ளது. 1966ஆம் ஆண்டு தமிழகம் கடுமையான அரிசிப் பஞ்சத்தில் தவித்தது. அறிஞர் அண்ணா ஆட்சியேற்று ஆறு மாதங்களில் அது சரி செய்யப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இது குறித்து எவரும் பேசுவதில்லை. இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டை என்கின்றனர்.
ஒரே மாநிலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாற்றலாகிப் போகின்றவர்கள் தங்கள் குடும்ப அட்டையை மாற்றிக் கொள்வதற்கே பெரும் பாடாக இருக்கிறது. இப்போது இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் ஒரே அட்டையை வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். வட மாநிலங்களிலிருந்து தென்னிந்தியா நோக்கி, குறிப்பாகத் தமிழகம் நோக்கி இப்போது சாரை சாரையாகத் தொழிலாளர்கள் வருகின்றனர்.
அவர்களுக்கான திட்டமாகவே இது தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக, இந்த "ஒரே...." வரிசைத் திட்டங்களில் ஒளிந்திருப்பது இரண்டே இரண்டுதான். ஒன்று, தேசிய இனங்களின் அடையாளங்களை முற்றிலுமாக அழிப்பது. இரண்டாவது, மாநில சுயாட்சி என்னும் கோட்பாட்டை முற்றிலுமாகத் தகர்த்து, மத்திய அரசு மட்டுமே வலிமையான, ஒரே அரசாக ஆவதற்கு வழிவகை செய்வது!
ஒவ்வொருவருக்கும் அடையாளம் என்பது உயிர்நாடியைப் போன்றது. அந்த அடையாளத்தை அழித்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாளத்தைக் கொடுக்க முயல்வது, ஜனநாயகத்திற்கு நூற்றுக்கு நூறு எதிரானது. ஒற்றுமையாய் வாழ்வது வேறு, ஒரே மாதிரி வாழ்வது வேறு. எல்லோரும் ஒரே மாதிரி, ஒரே மொழியைப் பேச வேண்டும், ஒரே மாதிரியான உணவைத்தான் உண்ண வேண்டும், ஒரே மதத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம் சர்வாதிகாரத்தின் சாரமேயன்றி வேறில்லை.
மத்திய அரசு வெறும் ஒருங்கிணைப்பு அரசாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதும், மாநில அரசுகளே கூடுதல் அதிகாரம் உடையவைகளாக இருக்க வேண்டும் என்பதும் மாநில சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படை. எஞ்சிய அதிகாரங்களும் (residual powers) மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்திற்கும் எதிரான போக்கையே மத்திய அரசு கட்டவிழ்த்து விடுகிறது.
"ஏகம்" என்பது வன்முறை. "அநேகம்" என்பதே நன்முறை .