குரு: ஏ! சீடனே! மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையை விட்டு ஒழி!

சீடன்: விட்டேன் குருவே! தங்கள் கட்டளையை ஏற்கிறேன். அது சரி குருவே! அவற்றை விட்டால் என்ன கிடைக்கும்?

குரு: சொர்க்கம் கிடைக்குமடா! சொர்க்கம் கிடைக்கும்.!!

சீடன் : சொர்க்கத்தில் என்ன இருக்கும் குருவே!

குரு : சொர்க்கத்தில் கற்பகத் தரு இருக்கும். அது தேவலோகத்து மரம். அதனிடம் எதைக் கேட்டாலும் கிடைக்கும். பொன்சுவர்களாலும், பொன்கூரைகளாலும் வேயப்பட்ட பொன்மாளிகைகள் இருக்கும். அத்துடன் ரதி, ரம்பை, மேனகை, ஊர்வசி ஆகிய தேவலோகத்து அப்சரஸ்கள் இருப்பார்கள். அனுபவிக்கலாமடா... அனுபவிக்கலாம்.

சீடன் : ஏன் குருவே! கண்ணெதிரே, கையில் இருக்கிற மண்ணையும், பொன்னையும், பெண்ணையும் துறந்துவிட்டு, சொர்க்கத்துக்குப் போனாலும் அவைதானே கிடைக்கும். அதிலும் இங்கே எனக்கென இருக்கும் ஒரே அன்பு மனைவியைத் துறந்துவிட்டு அங்கே போய் எல்லோருக்கும் பொதுவான ரதி, ரம்பை, மேனகை, ஊர்வசிக்காக வரிசையில் நிற்பதா? இவ்வுலகில் இருப்பதைத் துறந்துவிட்டு, எங்கே இருக்கிறது என்று தெரியாத சொர்க்கத்தில் போய் மண்ணில் விட்டதை, விண்ணில் தேடுவது சரியாகத் தெரியவில்லை குருவே! எனக்கு இருப்பதே போதும்! இதுவே சொர்க்கம்.

கற்பனையில் இருக்கும் சொர்க்கத்தைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை இது. இது நம் தேசியவாதிகளுக்கும் சரியாகப் பொருந்தும். நாம், நம் அன்னைத் தமிழ் மொழியுடன், உலக அறிவு பெற ஆங்கிலம் இவற்றோடு, எதற்கும் உதவாத இந்தியைப் படிக்க வேண்டுமாம். அப்படிப் படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்குமாம். அதனால் வளமான வாழ்வு கிடைக்குமாம். இல்லையென்றால் தாழ்ந்து போவோமாம், வீழ்ந்து போவோமாம்.

hindi agitationஇந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன், படித்துப் பட்டம் பெற்று, வடக்கே வேலை கிடைக்காமல் தெற்கு நோக்கிப் படையெடுக்கிறான், சென்னைக்கும், பெங்களூருக்கும், ஐதராபாத்துக்கும், திருவனந்தபுரத்திற்கும் தினந்தோறும் வடக்கே இருந்து வரும் தொடர்வண்டிகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான வடநாட்டு இளைஞர்கள் வேலை தேடி வந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், இவர்கள் இந்தியைப் படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்கின்றனர். இங்கே வந்தவர்களுக்குப் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதால், சப்பாத்திக் கடை போடுகிறான், சோன்பப்டி விற்கிறான், பான்பீடா கடை போடுகிறான், பானிபூரி விற்கிறான். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனுக்கே அங்கு வேலை இல்லாத போது நமக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும்?

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் இருமொழிக் கொள்கைதான் என்று 1968ல் அறிவித்தார். அவர் குறிப்பிடுவார்; "இந்தியில் இரண்டு பெரிய நூல்கள் தான் உள்ளன; ஒன்று துளசி ராமாயணம்; மற்றது ரயில்வே கைடு". இவற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்தி இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் ஒன்று. வேறெந்த இந்திய மொழிக்கும் இல்லாத சிறப்புச் சலுகைகளை இந்திக்கு மட்டும் கொடுப்பது பாரபட்சமானது, மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டது.

அடுத்து இந்தி இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழி என்கின்றனர். இது ஒரு மோசடி. தொடக்கத்தில் எல்லோரும் அப்படித்தான் நினைத்தோம். அப்போதுகூட அறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் கேட்டார், "எண்ணிக்கையில் அதிகம் என்று பார்த்தால் இந்தியாவின் தேசியப் பறவையாகக் காகம்தான் இருக்க வேண்டும். ஏன் மயிலை வைத்திருக்கிறீர்கள்? அதன் சிறப்பைக் கருதித்தானே! எண்ணிக்கைப்படி பார்த்தால் இந்தியாவின் தேசிய விலங்காக எலிதானே இருக்க முடியும்; ஏன் புலியை வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அப்போது, வடநாட்டில் பேசுவது எல்லாம் இந்தி என்று நினைத்தோம் இப்போதுதான் தெரிகிறது இந்தி என்பது ஒரே மொழியல்ல. பிகாரில், ஜார்க்கண்டில் பேசப்படும் மைதிலி, பீகார், கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் பேசப்படும் போஜ்புரி, ராஜஸ்த்தானில் பேசப்படும் ராஜஸ்தானி, மார்வாரி உள்ளிட்ட சத்தீஸ்க்கரி, மகதி, ஹரியான்வி, கோர்த்தா, புண்டேலி, மால்வி, சாத்திரி, மேவாரி, வாதி, லம்பாடி, பஹாரி, ஹராட்டி, பாகேலி, கார்வாலி, நிமாடி, சுராஜ்புரி, சுரகுஜியா, பஞ்சாரி, ப்ராஜ்பாஷா, துண்டாரி, கோஜ்ரி, காங்கிலி போன்ற பல்வேறு மொழிகளைப் பேசுவோரையும் இந்தி பேசுவோராகக் காட்டி மோசடி செய்துதான் இந்தி பேசுவோர் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டினர். தொடக்கத்தில் 52% பேர் இந்தி பேசுவதாகக் குறிப்பிட்டனர். இப்போது அது 26% மட்டுமே உள்ளது. எனவே அந்தச் சாயமும் வெளுத்துப் போனது.

இந்தியைப் படிப்பதால் நமது பிள்ளைகளின் வாழ்வு பாதிக்கப்படுகிறதா என்றால் இல்லை. வளங்கள் குறைகிறதா என்றாலும் இல்லை. ஒரு மொழியின் சுமை குறைந்து ஆங்கிலத்தில் கவனம் செலுத்திய நமது பிள்ளைகள் இன்று கணினி வல்லுனர்களாக உலகெங்கும் பரவிக் கிடக்கின்றனர். இந்தியர்களை நாட்டைவிட்டு வெளியேற்றினால் எனது தலைமை அலுவலகத்தைத் தமிழகத்துக்கு மாற்றுவேன் என்று மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் அவர்கள் குறிப்பிடும் அளவுக்குத் தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். நமது தமிழ்நாட்டைச் சார்ந்த சுந்தர்ப்பிச்சை அடைந்துள்ள உயரம் மற்றுமொரு எடுத்துக்காட்டு.

இந்தியாவின் பெரிய பதவிகளான குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, விண்வெளி விஞ்ஞானி ஆகிய பொறுப்புகளுக்கு வந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும், நீதியரசர் சதாசிவமும், சந்திராயன் மயில்சாமி அண்ணாத்துரையும் இந்தியைப் படித்து முன்னேறியவர்கள் இல்லை. இந்தி படிக்காததால் அவர்களின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியவில்லை. அவர்களின் முன்னேற்றத்திற்கு இந்தி எந்த விதத்திலும் பயன்படவும் இல்லை.

1938ல் தந்தை பெரியார், தமிழ்க்கடல் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோரை முன்னிறுத்தி, அறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி போன்றோரின் துணையோடு கட்டாய இந்தியை விரட்டினர். 1948 இல் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களை இந்தி எதிர்ப்புப் போராளியாக்கி வென்றார். 1950களில் திராவிடர் கழகத்திலிருந்து தி.மு. கழகம் பிரிந்தாலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு இந்தியை விரட்டினர். 1965 மொழிப்போரில் கீழப்பழவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், மாயவரம் சாரங்கபாணி, ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், தொண்டாமுத்தூர் தண்டபாணி, போன்றோர் இந்தியை எதிர்த்து தங்கள் இன்னுயிரை நன்கொடையாக அளித்தனர். மாணவன் ராசேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் ராணுவம் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர். அதன் பின் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இந்தியை நீக்கிவிட்டு இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். 1986இல் மீண்டும் இந்தித் திணிப்பு தலைதூக்கியதும் சட்டத்தை எரித்துக் கலைஞர் சிறைப்பட்டார். பேராசிரியர் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிழந்தனர்.

இவ்வளவு நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழ் நாட்டில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அதனை மீண்டும் தீண்டிப் பார்ப்பது ஆபத்தானது, தூங்கும் புலியை இடறிப் பார்க்கும் தன்மை கொண்டது. இருப்பதைக் காத்துக் கொள்ளாமல் சீண்டிப் பார்த்தால் தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னகத்தின் மற்ற மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்புப் போர் வெடிக்கும். இந்தி எழுத்தைப் பிறகு தமிழ்நாட்டு தேடிப் பார்த்தாலும் கிடைக்காத நிலை ஏற்படும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. அவ்வளவு தான் சொல்ல முடியும். 

Pin It