டக்ளஸ் தேவானந்தா யார்? இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி.

1986 ஆம் ஆண்டு சூளைமேட்டில் டக்ளஸ் தேவானந்தாவின் வீட்டைப் பொதுமக்கள் சூழ்ந்தபோது, பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டவர் இவர். அப்போது நான்குபேர் காயம் அடைந்தனர். திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார்.

அப்போது கைது செய்யப்பட்டாலும், பிணையில் வெளிவந்து 1988 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் ஒரு சிறுவனைக் கடத்தி லட்சக்கணக்கான பணத்தை பேரம்பேசி வழக்குப் பதிவானது, சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா. 1989 இல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு, ஓராண்டில் வெளிவந்த தேவா பல குற்றச் செயல்களில் ஈடுபட்டார் - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக.

இப்படிப்பபட்ட தேடப்படும் குற்றவாளியை நீதிமன்ற ஆணை இல்லாமலேயே பார்த்ததும் காவல்துறை உடனே கைது செய்ய முடியும்.

ஆனால் இராஜபக்சேவின் தோள்துண்டைப் பிடித்துக் கொண்டு இந்தியா வந்திருக்கும் தேடப்படும் குற்றவாளியான இந்த நபரை, காவல்துறை கைது செய்யவில்லை. மாறாக இந்தியப் பிரதமரே கைகுலுக்கி வரவேற்கிறார்.

ஈழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 80 வயது தாயார் சிகிச்சைக்காகத் தமிழகம் வந்தபோது, அவரைத் திருப்பி அனுப்பிய இந்திய அரசின் வெளிஉறவுத் துறை - உள்துறை அமைச்சகங்களுக்கு டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளி என்பது தெரியாதா? தேவா இந்தியாவிற்குள் நுழைய அனுமதி வழங்கிய இந்தியத் தூதரகம் அவரைப் பற்றி விசாரிக்காமல், அவரின் பின்னணியைத் தெரிந்து கொள்ளாமலா அனுமதி அளித்தது?

தேடப்படும் குற்றவாளியான போபால் விஷ‌வாயு வாரன் ஆண்டர்சன், பீரங்கிபேர ஊழல் குவாத்ரோச்சி ஆகியோர் அமைச்சர்களாகி அவரவர் நாட்டின் அதிபருடன் இந்தியா வந்தால் அதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா இந்தியா?

தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தலைவர் பிரபாகரனை “கைது செய்” “நீதிமன்றத்தில் நிறுத்து” என்றெல்லாம் கூச்சல்போட்ட காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், தமிழ் மக்களைக் கூட்டம் கூட்டமாக அழிக்கப் பெரிதும் துணைபுரிந்த, இந்நாட்டின் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய கூச்சலிடவில்லையே, ஏன்?

 “ஓர் இந்தியக் குடிமகனைக் கொலைசெய்த குற்றத்திற்காகக் கைவிலங்கு மாட்டப்பட வேண்டிய ஒரு நபருடன், கைகுலுக்கப் பிரதமருக்கு எப்படி மனம் வந்தது? நூறுகோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கை தகர்கிறதே... வெட்கக்கேடு!” என்கிறது ஒரு தமிழ் நாளேட்டின் தலையங்கம்.

சென்னை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சொல்கிறார், “இது (டக்ளஸ்) குறித்த ஆவணங்களை டில்லி காவல்துறைக்கு அனுப்பிவிட்டோம்” என்று.

ஆனால், “டக்ளஸ் தேவானந்தா மீது நிலவையில் வழக்கு உள்ளது பற்றி அதிகாரப் பூர்வத் தகவல் மத்திய அரசுக்கு வரவில்லை. செய்தித்தாள்கள் மூலம்தான் இதுபற்றி அறிந்து கொண்டேன்” என்கிறார் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

இதுவும் வெட்கக்கேடு அல்லவா?

ஏன் கைது செய்யவில்லை டக்ளஸ் தேவானந்தாவை!

- தேரவாதன்

Pin It