பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 495 மதிபெண்கள் பெற்று மாநிலஅளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் நெல்லை மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின். 8 இலட்சத்து 44 ஆயிரம்பேர் எழுதிய பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், மாநகராட்சிப் பள்ளியில் படித்த ஜாஸ்மின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார். ஆங்கிலத்திலும் 99 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் ‘ தமிழ்வழியில் ’ படித்த இந்த மாணவி. இச்சாதனைக்குரிய பள்ளி, 1995 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில அளவில் 2 மற்றும் 3 ஆம் இடங்களைப் பிடித்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி.

இதே போல் சென்னை மாவட்ட அளவில், சென்னை (மாநகராட்சி)ப் பள்ளிகள் 85.33 சதவீத தேர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும். 9 ஆயிரத்து 115 மாணவ - மாணவியர் தேர்வு எழுதியதில், 1138 பேர் 400க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றனர்.

நன்றாகப் படிக்கின்ற நாற்பது மாணவர்களை நுணுக்கமாக தயார்படுத்திப் பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி காட்டுகின்றன தனியார் பள்ளிகள். அனைத்து மட்டங்களில் இருந்தும் வருகின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை எத்தனையோ வசதி குறைபாடுகளுக்கு நடுவிலும், பயிற்றுவித்து 60 முதல் 85 விழுக்காடு தேர்ச்சியைக் காட்டுகின்ற அரசுப் பள்ளிகள் கட்டணக் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகளை விட எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை என்பதை தேர்வு முடிவுகளைப் பார்த்தபிறகாவது பெற்றோர்கள் உணரவேண்டும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்குப் பல சலுகைகள், திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது அரசாங்கம். 100 சத தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் அறிவித்திருக்கிறார். 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களின் மேற்படிப்புச் செலவினை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான பஞ்சுப் பட்டைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் சுகாதரம் பேணப்படுகின்றது. மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்போது சிற்றுண்டியாக பிஸ்கட்டுகள் கொடுக்கப்படுகின்றன. ஆங்கிலத்திற்குச் சிறப்பு முக்கியத்துவம் தரப்படுகிறது.

இருந்தும் ஆங்கில வழித் தனியார் பள்ளிகளின் மீதான ஈர்ப்பு மக்களுக்குக் குறைந்தபாடில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் அந்தப் பள்ளிகளில் படித்தால்தான் தங்களுடைய பிள்ளைகள் ஆங்கிலத்தில் சிறப்பாகத் தேர்ச்சி பெற முடியும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகின்றனர். தங்களுடைய பிள்ளைகள் ஆங்கிலம் சரியாகத் தெரியாமல் போய்விட்டால் வேலைவாய்ப்பில் பின்தங்கிவிடுவார்களோ என்று அச்சப்படு கின்றனர்.

காரணம் வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதேபோல் Group Discussion என்று சொல்லப்படுகின்ற குழுக் கலந்துரையாடலும் ஆங்கிலத்தி லேயே நிகழ்த்தப்படுகிறது. இதனால் சம்பந்தப் பட்ட துறை குறித்த தேர்ந்த அறிவும், ஆர்வமும் இருந்தும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்துகின்ற திறமை இல்லாத காரணத்தால் பெரும்பான்மையானவர்கள் வாய்ப்புகளை இழக்க நேரிடுகின்றனர்.

இன்னொரு பிரச்சினையும் முன்வைக்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று, தகுதி அடிப்படையில் மருத்துவம், பொறியியல் போன்ற மேல்படிப்புகளுக்குச் செல்லும் மாணவர்களையும் ஆங்கிலம் அச்சப்பட வைக்கிறது. வகுப்புகளில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் புரிந்துகொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதுதொடர்பான குறிப்புதவிப் புத்தகங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக் கின்றன என்பதால் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் மனத்தளவில் மிகவும் சோர்ந்துபோய் விடுகின்றனர். அவர்களில் சிலர் அவசரப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் உண்டு.

எனவே ஆங்கில மொழி அறிவினை நம்முடைய பிள்ளைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆங்கில வழியில், தாய்மொழியைக் கற்றுக் கொள்ளாமலேயே பள்ளிக் கல்வியில் தேர்ச்சிபெறுகின்ற நிலையைத்தான் தவறு என்கிறோம். ஆங்கில மொழி அறிவினை வளர்த்துக் கொள்வது என்பது வேறு; ஆங்கில வழியில் பயில்வது என்பது வேறு. தாய்மொழியில் படிப்பவர்களால் பிறமொழிகளையும் எளிதாக உள்வாங்கிக் கொண்டு தேர்ச்சிபெற முடியும் என்பது அறிவியலாளர்களின் கூற்று. இதைத்தான் மாணவி ஜாஸ்மினின் வெற்றி தெரிவிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ்வழிப் பள்ளிகளில் ஆங்கிலப் பாடத்திற்கான பயிற்சிகளை இன்னும் மேம்படுத்தி மாணவர்களின் ஆங்கில மொழி அறிவினை மெருகேற்ற வேண்டும்.

இங்கே நாம் இரண்டு செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், நேர்முகத் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே நடத்துகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிகளிலும் தொடர்பு மொழியான ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

குடும்பச் சூழலை மனதில் கொண்டு, கடின உழைப்பைச் செலுத்திப் படித்து, அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் தொழில் படிப்புகளுக்குள் செல்லமுடியாத நிலையே இன்னும் நீடிக்கிறது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக ஆங்கிலம் உள்ளது.

தொடக்கக் கல்விநிலைகளில் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில், மேற்படிப்புகளையும் தமிழ்வழியில் கொண்டுவர நடிவடிக்கைகள் எடுத்தாக வேண்டும். வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகள் தமிழ்வழியில் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். வரவேற்கவேண்டிய அறிவிப்பு. இதேபோல் மருத்துவப் படிப்பும் தமிழ்வழியில் கொண்டுவரப்பட்டால், சமூக அக்கறை உள்ள மருத்துவர்கள் நமக்குக் கிடைப்பார்கள் என்பது உறுதி.

முதலில் பாட நூல்கள் தமிழில் உருவாக்கப்படவேண்டும். அதோடு அவை தொடர்பான குறிப்புதவி நூல்களும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்படவேண்டும். இது கொஞ்சம் கடினமான செயல்தான். ஆனால் கண்டிப்பாக செய்தாக வேண்டிய செயல். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம், தான் பங்கேற்கும் விழாக்களில் பேசும்போது தொடர்ந்து ஒரு கருத்தினை வலியுறுத்தி வருகிறார். ஐப்பானில் பிறமொழிகளில் உள்ள அறிவியல் தொடர்பான நூல்களை ஐப்பான் மொழியில் மொழிபெயர்ப்பதை ஒரு தொழிலாகவே அரசாங்கம் அங்கீகரித்து ஊக்குவித்து வருகிறது. பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதற்கு தகுதியுள்ளவர்கள் முன்வரவேண்டும். அப்படி முன்வந்தால், சென்னைப் பல்கலைக்கழகம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதனை அரசும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

 இன்றைய உலகமயமாக்கல், வளர்ந்து வருகின்ற பொருளாதாரச் சூழல் ஆங்கிலத்தையும் அணைத்துக் கொண்டேதான் வந்துசேர்கின்றன. ஆங்கிலம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டிருக்கிறது.

தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களாலும் ஆங்கில மொழியில் சிறப்பாகத் தேர்ச்சிபெற முடியும் என்பதை மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜாஸ்மின் நிரூபித்திருக்கிறார். அனைத்து விதத்திலும் அச்சுறுத்தலாக மாறிப்போன ஆங்கில வழித் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் கல்விதான் தரமான கல்வி என்ற எண்ணம் விதைக்கப்பட்டுவிட்டது. மக்களும் அதை நம்பத்தொடங்கி விட்டனர். இதைக் காட்டித்தான் தனியார் பள்ளிகள் கல்விக் கொள்ளையில் கொழுத்த லாபம் பார்த்து வந்துள்ளன.

மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கின்ற பள்ளிகள்தான் தரமான பள்ளிகள் என்றால் அரசுப்பள்ளிகளும் தரமான பள்ளிகள்தான்.

- இரா.உமா

Pin It