parthiban divyadharshiniமயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தில் நிகழ்ந்துள்ள ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பார்த்திபன் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யதர்சினி இருவரின் ஜாதி ஆணவப் படுகொலை , தமிழ்நாட்டின் மனசாட்சியை மீண்டும் உலுக்கியுள்ளது. காதலித்த ஒரே காரணத்திற்காக, அடித்துக் கொல செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ள கொடூரத்தைப் பார்க்கும்போது , நாம் வாழும் சமூகம் இன்னும் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான ஜாதியப் பிடிக்குள் சிக்கியிருக்கிறது என்பது வெட்கக்கேடாக உள்ளது.

 ஜாதி ஆணவப் படுகொலைகள் ஏதோ தனிநபர்களுக்கு எதிரான வெறும் கொலைக் குற்றங்கள் மட்டுமல்ல; அவை ஒட்டுமொத்த மனிதத்தன்மைக்கும், ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானது என்பதை உணர்த்த வேண்டியது நம் அனைவரின் சமூகப் பொறுப்புணர்வாகும். மேலும் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புச் சிந்தனைகளும், ஜாதி மறுப்பு , மத மறுப்புக் காதல் மற்றும் சுயமரியாதைத் திருமணங்களின் தேவையும் ஏன் இன்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பதை நாம் அரசியல் மற்றும் சமூகக் கண்ணோட்டத்துடன் விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 ஜாதி என்பது வெறும் சமூகப் பிரிவு மட்டுமல்ல, அது ஒரு படிநிலை ஆதிக்கம். இந்த ஆதிக்கத்தின் அடித்தளமே அகமண முறை (Endogamy) எனப்படும் "சொந்த ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும்" மரபுதான். ஜாதி என்னும் கோட்டையைத் தகர்க்க வேண்டுமானால், அதன் அடித்தளமாக இருக்கும் திருமண முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதைத் தந்தை பெரியார் மிக ஆழமாக வலியுறுத்தினார்.

 பெரியாரைப் பொறுத்தவரை, காதல் திருமணங்கள் என்பவை வெறும் இரு மனங்கள் இணைவது மட்டுமல்ல, அவை ஜாதிச் சுவர்களை உடைத்தெறியும் அரசியல் ஆயுதங்கள். வெவ்வேறு ஜாதியினரிடையே மலரும் காதல், ஜாதித் தூய்மை (Caste Purity) என்ற கற்பிதத்தைத் தகர்க்கிறது.

 காதலை வெறும் ஒழுக்கப் பிரச்சினையாகப் பார்க்கும் ஒரு சமூகம், அதைத் தண்டிப்பதாகக் கூறிக்கொண்டு ஆயுதங்களைக் கையில் எடுப்பது எவ்வளவு பெரிய அநீதி? ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் இந்தப் படுகொலைகள் உண்மையில் வன்மத்தின் உச்ச வடிவம்.

 பார்த்திபன், திவ்யதர்ஷிணி போன்ற இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையைக் கூட இந்தச் சமூகம் மறுக்கிறது என்றால், இங்கு தனிமனித சுதந்திரத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஜாதி வெறி என்பது மனித நேயத்தையும், சக மனிதனை நேசிக்கும் தன்மையையும் முற்றிலுமாக அழித்துவிடுகிறது.எனவே பெரியாரைத் தங்கள் கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ளதாகக் கூறும் தவெக அரசு, ஜாதி வெறியால் தூண்டப்படும் குற்றங்களைச் சாதாரணக் கொலையாகப் பார்க்காமல், கடுமையான பிரிவுகளின் கீழ் விசாரிக்க ஒரு தனிச்சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் . மேலும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு அரசு உடனடியாகப் பாதுகாப்பும், வாழ்வாதார உதவிகளும் வழங்க வேண்டும்.

 அத்தோடு நில்லாமல், இத்தகைய வழக்குகளை மாதக்கணக்கில் இழுத்தடிக்காமல், சில வாரங்களுக்குள் விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

 பார்த்திபன் மற்றும் திவ்யதர்சினி படுகொலையே கடைசியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வெறும் காவல்துறை விசாரணையோடு நின்றுவிடாமல், ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக, கல்வி நிலையங்கள் முதல் பொதுவெளி வரை தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு மற்றும் மனிதநேயச் சிந்தனைகள் தீவிரமாக விதைக்கப்பட வேண்டும்.

 “ஜாதி ஒழிய வேண்டுமானால், ஜாதி மறுப்புத் திருமணங்கள் தாராளமாக நடக்க வேண்டும். காதலும், சுயமரியாதையுமே மனிதனை அடிமைச் சங்கிலிகளில் இருந்து விடுவிக்கும்" என்கிறார் தந்தை பெரியார்.

- முனைவர் காந்தி பாபு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.