நான் எழுதிய ‘காலந்தோறும் பிராமணியம்’ நூலின் முதல் பாகம் வேதகாலம் முதல் சோழர் காலம் வரை பேசியது. அங்கே ஆரம்பத்திலேயே பிராமணியம் என்கிற சொல்லாட்சியின் துவக்கம் பற்றியும், அதன் பொருள் பற்றியும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. மனுதர்மத்திலேயே இது இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. “ பிராமணியம் என்கிற சொல்லாட்சியின் மூலம் இங்கே ஒரு குறிப்பிட்ட சாதியினரின் செயல்பாடுகள் மட்டும் அலசப்படவில்லை. மாறாக அது சுட்டும் ஒரு வித சமூகக் கட்டமைப்பும், அதன் பல்வேறு கூறுகளும் இங்கே ஆராயப்படுகின்றன. குறிப்பாக வருண -சாதி முறை, மாதர்நிலை, கல்வி அமைப்பு, சமயச் சடங்குகள் இங்கே கணக்கில் கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமான பொருளாதாரச் சூழலும் சுட்டப்படுகிறது”-என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த முதல் பாகத்திற்கு விமர்சனம் வெளியிட்ட ‘இந்தியா டுடே’(10.02.2010) ஏடு “சாதியின் உருவாக்கத்தில் பிராமணியத்துக்கு மட்டுமே பங்கிருப்பதாகக் கூறுவது முற்றிலும் சரியான கூற்றா?” என்று அதற்குத் தலைப்பு கொடுத்துள்ளது. பிராமணியம் என்பதே சாதிமுறைமையை உள்ளடக்கியது என்று கூறியிருக்கும் பொழுது இப்படிக் கேள்வி கேட்பது அர்த்தமற்றது. இது சாதி உருவாக்கத்தில் சாதிக்கு மட்டுமே பங்கு என்பதா? -எனக் கேட்பது போல அர்த்தமற்றது.

பிராமணியம் என்கிற சொல்லாட்சியைக் கண்டவுடனே பதறிப்போன  போக்கையே அந்த முழு விமர்சனமும் காட்டுகிறது. வேத காலம், இதிகாச காலம், திரிபிடகங்கள் -அர்த்தசாஸ்திர காலம், சங்ககாலம்-களப்பிரர் காலம், புராணங்கள் காலம், தர்மசாஸ்திரங்கள் காலம், குப்தர் காலம், குப்தர்களுக்குப் பிந்திய காலம், சோழர் காலம், பிராமணிய மன்னர்களின் இறுதிக்காலம் என்று காலவரிசையாக பிராமணியம் எனும் சமூகக் கட்டமைப்பு அந்த முதல் பாகத்தில் அலசப்பட்டுள்ளது. அதற்குள் எல்லாம் போகாமல் பிராமணியம் எனும் சொல்லாட்சியை வைத்தே விமர்சனம் எழுதியிருப்பதில் அந்தப் பதட்டம் தெளிவாகப் புலப்படுகிறது.

“சாதியின் தோற்றத்தைப் பிராமணன் என்பவனிடத்தில் சுமத்திவிட்டதாக” அந்த விமர்சகர் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். ஆனாலும் இதற்கு எந்தவொரு ஆதாரத்தையும் நூலிலிருந்து தராததும், இந்தச் சொல்லாட்சியே அவரைப் பயமுறுத்தியிருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறது. முதல்பாகத்திலும் சரி, இந்த இரு பாகங்களிலும் சரி பிராமணிய ராஜாக்களின்செயல்பாடும், அவர்களது நோக்கிலும் பிராமணியக் கட்டமைப்பு பொருந்தி வந்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அன்றைய ஆளும் வர்க்கங்களாக இருந்த பிராமணப் “புரோகிதர்கள் மற்றும் ­த்திரிய ராஜாக்களை ஒட்டு மொத்தமாகச் சுட்டவே உணர்வு பூர்வமாக பிராமணியவாதிகள்” எனும்சொல்லாட்சி அந்தந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமர்சனத்தில் மார்க்சியர்களை மட்டுமல்லாது பெரியாரியவாதிகளையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். இதற்காகவே ஆரிய -திராவிடப் பிரச்சனையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மார்க்சிய வரலாற்று ஞானியாகிய டி.டி.கோசாம்பி தனது ‘ வரலாற்று வரையறையில் புராதன இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும் ’ நூலில் சிந்துவெளி நாகரிகம் பற்றியும், ஆரிய வாழ்வுமுறை பற்றியும் ஒருங்கே பேசியிருக்கிறார். பிறப்பின் அடிப்படையிலான வருணாசிரம வாழ்வுமுறை என்பது சிந்துவெளி நாகரிகத்தில் இருந்ததாக அவர் கூறவில்லை. மாறாக, ஆரியர்களின் வருகைக்குப் பிறகுதான், அவர்களது வாழ்வும் இங்கு இருந்தவர்கள் வாழ்வும் சந்தித்த பிறகுதான் அது உருவானது என்கிறார். உதாரணமாக இப்படிக் கூறியிருக்கிறார் -“ஆரியரும் தொல்குடியினரும் மறு கலப்பு ஆனபிறகுதான் வல்லுநர்களைக் கொண்ட ஒரு புதிய வர்க்கம் வளர்ந்தது. பிராமண சாதி என்கிற அவர்கள் அனைத்து ஆரியச் சடங்குகளுக்கும் முடிவில் உரிமை கொண்டாடினார்கள்”. ஆக ஆரியர்களது வருகைக்குப் பிறகுதான் இங்கு வருணாசிரமம் உருவானது என்பதில் சந்தேகம் இல்லை.

இது முழு உருவம் எடுத்ததும் -நான்கு வருணங்கள் தோன்றியதும் -வேத காலத்தில்தான். இதுபற்றி கோசாம்பி கூறியிருந்ததை முதல் பாகத்திலேயே நான் கொடுத்திருக்கிறேன். அந்த மார்க்சிய அறிஞர் மட்டுமல்ல, பாரதிய வித்யா பவனத்தின் வரலாற்றாளர் வி.எம்.ஆப்தேயும் அதே கருத்தைத் தொகுத்துத் தந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். “ரிக்வேத காலத்திலேயே சமூகம் சில பிரிவுகளாகப் பிரிந்துவிட்டாலும் அது சாதியற்றதாக இருந்தது. ஆனால் யஜுர் வேத காலத்திலே விரிவான சாதி அமைப்பு வந்துவிட்டது” என்றார் அவர். இங்கு சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் பிரிவு உருவானதைக் குறிக்கிறது. ஆனால் வேதம், வேதகாலம் என்றாலே ‘ இந்தியா டுடே’ பத்திரிகைக்கு நெஞ்சு படபடத்தால் நாமென்ன செய்ய முடியும்?

“புத்தரையும் மகாவீரரையும் ­த்ரியர் என்கிறார்” என்று நான் ஏதோ மாபாதகம் செய்துவிட்டது போலக் கோபப்பட்டிருக்கிறார்கள். “உயர்ந்த லிச்சாவி குடியின் ஒரு ­த்திரியர் என்றாலும் மகாவீரர்... ” என்றும், “சித்தார்த்தர் எனப் பின்னாளில் பெயர்பெற்ற கோதமர் சாக்கியர்கள் எனும் ­த்திரியக் குடியில் பிறந்தவர்” என்றும் கோசாம்பி எழுதியிருக்கிறார். அந்த வரலாற்று ஞானியின் பேச்சைக் கேட்பதா, இந்தத் தடாலடிப் பத்திரிகை விமர்சனத்தின் உத்தரவைக் கேட்பதா?

அப்புறம் ஒரு வி­யம் “வெறுக்கத்தக்கதா பிராமணியம்?” என்று  துக்ளக் சோ புத்தகம் போட்ட போது இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை. அவரின் “எங்கே பிராமணன்?” எனும் தொடரின் இரண்டாம் பாகம் பெரும் விளம்பரத்தோடு ஜெயா டி.வி.யில் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார்களா இல்லையா என்றும் தெரியவில்லை. ஒருவேளை சோவின் குரலைத்தான் இவர்களும் இந்த அர்த்தமற்ற, நாணயமற்ற விமர்சனத்தின் மூலம் வெளியிடுகிறார்களோ? இருக்கட்டும். நமது பணி தொடரும். அதனுடைய அவசியத்தையே இவர்களின் போக்கு தெளிவாக உணர்த்துகிறது. இதற்குள் அடுத்த பாகங்களையும் என்னால் எழுதி முடிக்க முடிந்திருப்பது இவர்களுக்கு இன்னும் சரியான பதிலாகும்.

- அருணன்

Pin It