நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உடனேயே தி.மு.கழகம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவும் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கல்வியாளர்கள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது.
நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பணி எளிதில் நடைபெற்றுவிடவில்லை. சட்ட மன்றத்தில் அரசிற்கு ஒத்துழைப்பு தருவதாகச் சொன்ன பாஜகவினர் சில நாட்களிலேயே நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். தமிழக அரசும் சமூக நீதி காக்கப் போராடும் பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடினர்.
பாஜகவினரின் அவ்வழக்கை நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. மாநில அரசின் உரிமைகளில் தலையிட முடியாது என்றும் அந்த ஆணையம் அமைக்கப்பட்டது அரசின் முடிவு என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் சொன்னது.
எனினும் நீட் தேர்வை எப்படியாவது தொடர்ந்து நடத்திவிட வேண்டும் என்பதில் பாஜகவினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் இப்படி சட்டத்திற்க்குப் புறம்பாகவும், ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தித் தொடர்ந்து இடையூறுகள் செய்து வரும் வேளையில் தமிழக அரசு விரைந்து நீட் தேர்விற்கு விலக்கு பெற்றிட வேண்டும் என்பது மட்டுமே சமூக நீதியை நிலைநிறுத்தப் போராடுபவர்கள் அனைவரும் வேண்டுவதாகும்.
அனைத்து வகைகளிலும் திறன்பட செயல்பட்டு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்விற்கும் விரைந்து விலக்கு பெற்று சமூக நீதியை தமிழகத்தில் நிலைநாட்டும் நாளை நாம் விரைவில் காண வேண்டும்.
- கருஞ்சட்டைத் தமிழர்