கமலகாசன் சிறந்த நடிகர். அது மட்டுமல்ல திரைத் துறையில் துணிச்சலான முயற்சிகளை முன்னெடுப்பவர். இதையெல்லாம் மறுப்பவளில்லை நான். ஆனால் இப்போது அவர் தொடங்கியிருக்கும் விவாதத்தில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கிறேன். பிக் பாஸ் என்றொரு நிகழ்ச்சி நாம் கண்டுகொள்ளாமலிருப்பதால் கோடிக்கணக்கான மக்கள் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இந்தி தெரியாத நம்மைப் போன்ற பாமரர்களுக்கு இப்படியெல்லாம் பல விசயங்களை அறிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் கமல். தமிழுக்கு இப்போது அறிமுகம். கூடி வாழ்தலை இந்த மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்களாம்.  சரி, அந்த நிகழ்ச்சிப் பற்றி படித்து இந்நேரம் எல்லோருக்கும் அலுத்திருக்கும். விஷமமான பல விசயங்கள் அதிலிருக்கின்றன. அதற்கு பதிலளித்திருக்கும் அவரின் பதில்களைப் பற்றித்தான் இந்த பதிவு. ஜல்லிக்கட்டு போராட்ட அவமதிப்பு தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அவமதிப்பு - இப்படித் தொடர்கிறது குற்றச் சாட்டுகளின் பட்டியல்.

kamal 255தமிழ் வராத மாதிரி நடிக்கும் சிலரை வைத்து தமிழ்த்தாய் கற்றுக் கொடுப்பதாக ஏன் அவமானப்படுத்தினீர்கள் என்று கேட்டால், சொல்லிக் கொடுத்தோம் என்கிறார். இவ்வளவு நாள்கள் திரைத் துறையிலிருந்தவருக்கு ஒரு காட்சி மக்களிடம் என்ன பேசுகிறது என்பதுதான் முக்கியம் என்பது கூடவா தெரியாது? அவர்கள் தமிழ் வராதது மாதிரி நடிப்பது போல் இது ஒரு நடிப்பு.  அதில் வரும் காயத்ரி என்ற பெண் சாதித் திமிரோடு பேசியிருக்கிறார் என்றால் வெளியில் வந்தவுடன் நீங்கள் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார். பேசியவர்களுக்கு மட்டுமல்ல காட்சிப் படுத்தியவர்களுக்கும் பொறுப்பில்லையா?  அதன் மிகப் பெரிய பிம்பமாகிய இவருக்கு பொறுப்பில்லையா?

இதற்கு முன் ஜிஎஸ்டி பிரச்சனை தொடங்கிய போது தமிழக அரசு ஊழலில் மிதக்கிறது என்றார்.  இப்போது நம்மவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு அதில் என்ன தப்பு என்கிறார்கள். தப்பில்லை. ஆனால் ஜிஎஸ்டி பிரச்சனையில் மத்திய அரசைக் கேள்வி கேட்காமல் இவருக்கு ஏன் மாநில அரசின் மீது கோபம் வருகிறது? செயலலிதா அம்மையார் போன பிறகு இவரது துறையைப் பாதிக்கும் விதமாகத் தமிழக அரசு என்ன செய்தது?  இப்போது அளிக்கும் பேட்டிகளிலும் அந்த வாதத்தைத் தொடர்கிறார். தமிழக அமைச்சர்கள் கோபமாகப் பதிலளித்தவுடன் அவர்களை எதிர்ப்பதற்காக கமலகாசனுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார்கள் எதிர்க்கட்சிக்காரர்கள். அவர்களுக்கு ஒரு வார்த்தை. தமிழக அரசை நீங்கள் எதிர்த்துப் பணி செய்யுங்கள். அதற்கு எதற்கு கமலகாசன்? கமலிடம் முதலில் பிக் பாஸைப் பற்றிப் பேசுங்கள். பிறகு அவரை ஆதரிக்கலாம்.

இதில் இன்னொரு பெரிய அபாயம். நான் கறுப்புச்சட்டைக்காரன். எனவே இந்து மக்கள் கட்சி தன்னை எதிர்க்கிறது என்கிறார். இங்குதான் நமக்கு பலமாக உதைக்கிறது. கறுப்பு வண்ணம் அவருக்கு அழகாக இருக்கலாம். ஆனால் கறுப்பு சட்டை போட்டால் கருப்புச்சட்டைக்காரராக முடியாது. சைவத்திலும் வைணவத்திலும் மாறி மாறிப் பயணம் செய்ய விரும்பும் கமலகாசன் கருஞ்சட்டைப் படையில் சேரமுடியாது. பிக் பாஸ் மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் அவர் தன்னை பெரியார் பற்றாளராக அடையாளம் காட்ட முனைவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Pin It