அண்மையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாகச் சமூக ஆர்வலர் ஏ.நாராயணன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 23.06.2011 அன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை முதன்மை அமர்வு மன்றம்:
"மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில், மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து உத்தர விட்டு வருகின்றோம். இதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்றோம். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை செயலாளர் நேரில் மனுதாக்கல் செய்து விளக்கம் அளிக்காமல் வசதியாகத் தப்பித்துக் கொண்டு இருக்கின்றார். இந்தப் பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஆகஸ்ட் 27ஆம் தேதி விசாரணை நடைபெறும். அப்போது, உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரச செய்திருக்க வேண்டும். இல்லையயனில் பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள், உள்துறை அமைச்சகம் அல்லது சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டியதிருக்கும் " - என்ற கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.
மாண்புக்குரிய மனிதர்களின், மனித நேயமற்ற வேலையை ஒழிக்க, மதிப்புக்குரிய நீதிபதிகளின் மனிதநேயமிக்க தீர்ப்பின் ஒரு பகுதி இது.
26.12.2004 அன்று கோவையில், ஆதித்தமிழர் பேரவை கூட்டிய தூய்மைத் தொழிலாளர் மறுவாழ்வு மாநாட்டில் இயற்றப்பட்ட 21 தீர்மானங்களில், அப் பேரவையின் தலைவர் இரா.அதியமானால் கொண்டு வரப்பட்ட முதல் தீர்மானம் இது:
"இந்தியத் துணைக்கண்டம், விடுதலை பெற்று 57 ஆண்டுகள் ஆகியும் கூட, 1993ஆம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்ட, கையால் மலம் அள்ளுதல் மற்றும் உலர் கழிப்பகக் கட்டுமான (தடுப்புச்) சட்டம், எந்த ஒரு மனிதனும் தீண்ட மறுக்கும் மனித மலத்தை, தலையிலும் தோளிலும் சுமக்கும் அவலம், நடைமுறையில் இருப்பதை ஒழித்திட உடனடியாக அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது"
அந்த மாநாட்டில் தோழர் சுப. வீரபாண்டியன் அவர்களும் கலந்து கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
மேற்சொன்ன தீர்மானத்தில் சொல்லப்பட் டுள்ள 1993ஆம் ஆண்டுச் சட்டம் என்பது, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் வேலையைத் தடைசெய்து, உலர் கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பகக் கட்டுமானத்(தடை)ச் சட்டம் - 1993 (The Employment of Manual Scavengers and Construction of Dry latrines (Prohibition) Act 1993). இச் சட்டம் 1993 சூன் 5ஆம்நாள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தப்படாமல் இன்று காலாவதியாகிவிட்டது.
தமிழ்நாட்டில் அருந்ததியர்கள், ஆந்திராவில் பக்கிகள், குசராத்தில் பங்கிகள், மராட்டியத்தில் மகர்கள் என்று இந்தியா முழுவதும் இச்சமூக மக்களில் 95 விழுக்காடு மக்கள் இந்த இழி தொழிலைச் செய்து வருகிறார்கள்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்குப்பின் உருவான இந்த வேலையை ஒழிக்கத் துப்புரவுப் பணியாளர்கள் கடுமையாகப் போராடியிருக்கிறார்கள். சில தொழிற்சங்கங்கள் இதைக் கையில் எடுத்திருந்த போதும், அது வர்க்கப்போராட்ட வரலாற்றில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டு விட்டது.
1924 தொடக்கம் 1940 வரையும் அன்றைய இந்தியத் தலைநகர் கல்கத்தாவில், 5 முறை பெயரிய அளவில் தூய்மைத் தொழிலாளர்கள் பெரிய அளவில் வேலைநிறுத்தம் செய்திருக்கிறார்கள். 1946இல் பம்பாய் நகராட்சியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். 1949,1953,1957 ஆகிய மூன்று ஆண்டுகளில் மூன்று முறை டில்லியில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியிருக்கிறார் கள். அப்போது 3 தூய்மைத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜவகர்லால் நேரு தலையிட்டு 1957ஆம் ஆண்டுப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
1972 மே 9ஆம் நாள் டில்லியில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்திருக்கிறது. 1946 மற்றும் 1950இல் ஜோத்பூரிலும், 1950ஆம் ஆண்டு பிக்காகோரிலும், 1960 மற்றும் 1972இல் வாரனாசி மற்றும் டில்லியிலும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.
வர்க்கப் போராட்டங்களையும், மேட்டுக் குடியினர் நடத்திய போராட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசும் மேதாவிகள், தூய்மைத் தொழிலாளர்களின் நேர்மையான இந்தப் போராட்டங்களை எங்காவது பேசியிருக்கிறார்களா? இல்லை! ஏன்? இவர்கள் தீண்டப்படாதவர்கள், வர்ணாசிரமத்தின்படி சாதி அடிமைகள்! ஒதுக்கப்பட்டவர்கள்!
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக்கான ஆணையம், மனித உரிமைப் பாதுகாப்பு, வளர்ச்சியின் சார்பு ஆணையம் இவை இணைந்து ஜெனிவாவில் 2002, மே 27 - 31 வரை 5 நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் 27ஆவது அமர்வில் கையால் மலம் அள்ளுதல் என்பது மிக மோசமான, நாகரிகமற்ற முறையிலான வேலை என்று அறிவித்தது.
அது மட்டுமல்ல. ஐ.நா. குழு (Committee on the Elimination of Racial Discrimination - CERD) இந்தியாவுக்கு இப்படி ஒரு பரிந்துரையைச் செய்கிறது:
"இந்திய அரசு, மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளுதல் மற்றும் உலர் கழிப்பகங்கள் கட்டுதல் (தடை)ச் சட்டம் 1993 என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த நடைமுறை தொடர்ந்திருப்பதற்கு அரசின் வழக்குத் தொடர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் பொறுப்பேற்கவும் தனது மாநில அரசுகளை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்"
இவ்வளவு நடந்த பிறகும் இந்த மக்கள் இன்னமும் மனிதக் கழிவுகளை அள்ளிக் கொண்டும் அகற்றிக் கொண்டும்தான் இருக்கிறார்கள். இடையில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை என்றாலும், அதனால் எந்தப் பயனும் விளையவில்லை என்பதே உண்மை! இந்த வேலையைச் செய்யும் சமூக மக்களின் அவலங்கள் என்ன தெரியுமா?
கையால் மலம் அள்ளுவதால் கிருமிகளின் தாக்கத்தால் கொடும் தோல்நோய்களுக்கு ஆளாகிறார்கள். சுவாசச் சீர்கேட்டினால் நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மலத்தின் அழுகிய நாற்றம் தாங்காமல் குடிப்பது வழக்கமாகி குடிகார்களாக ஆகிவிடுகிறார்கள். இதே நாற்றத்தால் சரியாக உணவு உண்ண முடியாமல் உடல்நலம், பலம் இழந்து விரையில் மரணத்தைத் தழுவுகிறார்கள்.
இந்த மாட்சிமை மிக்க மனிதர்களின் குழந்தைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் தெருவோரப் பிள்ளைகளாக மாறுகிறார்கள். அவர்களின் கல்வி பாழ்படுகிறது. உழைக்கும் சிறிய கூலிகூட குடிப்பதற்குப் போய்விட, வட்டி, கந்து வட்டி என்று வட்டிக்குப் பணம் வாங்கி, அதைக் கட்ட முடியாமல் வாழ்க்கை நார் நாராகக் கிழிந்துவிடுகிறது. இது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும்.
காலை 4 மணிக்கு வேலைக்குப் போகின்ற இவர்கள் மாலையில்தான் வீடு திரும்புகிறார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் மேஸ்திரி, சூப்பர்வைசர் உள்பட பலரால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள்.
முடைநாற்றம் வீசும் இந்த வேலை இதுவரையும் அரசால் அங்கீகரிக்கப்பட்டத் தொழில் அல்ல என்பது முக்கியச் செய்தி. ஆனால் இரயில்வே, அரசுத்துறை, ஒன்றியங்கள், கிராமங்கள் என்று பரவலாக விரிந்திருக்கும் இந்தக் கேவலமான வேலையை (தொழிலை) மத்திய மாநில அரசுகளால் இதுவரை ஒழிக்கமுடியவில்லை என்றால், மலத்தில் புதைந்து போனது மாண்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த மாண்பை மீட்டெடுக்க, மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இத்தொழிலை ஒழிக்க, இனி நீதிமன்றங்கள்தான் முன்வரவேண்டும். அதன் தொடக்கமாகச் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஆறுதல் தருகிறது.
ஆறுதல் மட்டும் போதாது. நல்ல முடிவும் கிடைக்க வேண்டும். அதுதான் சமூக நீதி!