வின்சன்ட் ஸ்மித், ஆர்.சி. மசூம்தார், ஜவகர்லால் நேரு போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களின் மூலம் நாம் காணும் இந்திய வரலாறு, ஒரு பொதுவான வரலாறு. குறிப்பாகக் கிழக்கிந்தியக் கம்பெனி, பிரிட்டீஷ் அரசின் நேரடி ஆட்சி காலங்களில் சில பல சட்டங்கள் நிறைவேற்றும் பொழுது அங்கே பார்ப்பனியக் கூறுகளைக் காணமுடிகிறது.

பேராசிரியரும், எழுத்தாளருமான அருணன் எழுதியிருக்கும் "காலந்தோறும் பிராமணியம்" என்ற நூலைப் பார்க்கும்போது, குறிப்பாக வெள்ளையர்களின் ஆட்சியில் பார்ப்பனியம் எவ்வாறு அதன் வேலைகளைச் செய்திருக்கிறது என்பதை விரிவாக அறிய முடிகிறது. வரலாறுடன், பார்ப்பனியம் என்ற இந்த வரலாற்றுக் கருத்துப் பெட்டகம் ஒரு முழுமையான இந்திய வரலாற்றை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதைக் காலந்தோறும் பிராமணியம், கிழக்கிந்தியக் கம்பெனி காலம், பாகம் 4இல் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நூலின் தொடக்கத்தில், "பதினெட்டாம் நூற்றாண்டில் பாரதத்தில் மூன்று முக்கியமான அரசியல் சக்திகள் தீவிரமாக இயங்கின. அவை டில்லியில் முகலாயர்கள், சதாரா - பூனாவில், மராத்தியர்கள், வங்காளம் சென்னையில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார். இவர்களுக்கிடையே மோதல் - சமரசம் - மோதல் என்பதே இந்தத் துணைக்கண்டத்தின் வரலாறாக இருந்தது. இதில் மற்ற இரண்டு சக்திகளையும் முறியடித்து கிழக்கிந்தியக் கம்பெனியார் வென்றதுதான் அந்த வரலாற்றின் உச்சகட்டம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு சிறிய நாட்டிலிருந்து வந்தவர்கள் இந்த மாபெரும் நாட்டையே அடக்கி ஆண்ட வரலாற்று வினோதம் நடந்தது " என்று கூறும் நூலாசிரியர் அருணன், இந்த வரலாற்று வினோதங்களுக்கிடையே பார்ப்பனியம் நிகழ்த்திய வரலாற்று விபரீதங்களை உரிய சான்றுகளுடன் விளக்கி இருப்பதுதான் நூலின் சிறப்பு.

பார்ப்பனியத்தின் கொடூரங்களில் ஒன்று பலதார மணமுறை. இங்கே கணவன் இறந்தால், அவன் மனைவி எத்துனை பேர்கள் இருந்தாலும் அவர்களை, அந்த அபலைப் பெண்களைக் கணவன் எரியும் நெருப்பில் தள்ளி கொலை செய்து விடுவார்கள். இதற்குப் பெயர் " சதி ".

" துருக்கியர்கள் மத்தியில்கூட பணக்காரர்களிடம் தான் பெரும் அந்தப் புரம் இருந்தது. ஆனால் வங்காளத்தில் ஒரு கோவணமும், பூணூலும் உள்ள ஒரு இந்து பிராமணருக்குக் கூட நூறு மனைவிகள் இருந்தார்கள் " என்று வார்ட் என்பவரை மேற்கோள் காட்டிக் கூறும் நூலாசிரியர், தன் கூற்றாக, " பெண்பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே மணம் செய்து விட வேண்டும் எனும் சாஸ்திரத்தைப் பின்பற்றத் துடித்து, மாப்பிள்ளை கிடைக்காமல், ஒரே மனிதருக்கு இப்படி ஏகப்பட்டப் பெண்களைத் திருமணம் செய்து வைத்தார்கள். இந்த அநியாயம் 19ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது " - என்று சொல்லிவிட்டு, இன்னொரு செய்தியையும் விளக்குகிறார்.

இப்படிப்பட்ட பலதார மணமுறையை ஒழிக்கக் கம்பெனி நிர்வாகம், பலதார மண ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவர முயன்றபோது, " சிப்பாய்க் கலகம் " அதை நிறைவேற்ற விடாமல் செய்துவிட்டதாகக் கூறுகிறார். அதற்காக அவர் கொடுக்கும் விரிவான விளக்கம், நூலினுள் சென்றால்தான் சரியாக இருக்கும்.

ஊர் மக்களிடையே தடுப்புத் சுவர் வைத்துச் சாதி பிரிக்கும் நாகரீகம் பார்ப்பனியத்திற்கே உரியது. தமிழ்நாட்டில் உத்தபுரம் இதற்குச் சான்று. ஆனால் கிருத்துவர்களிடையே தேவாலயத்தில் கூட சாதியத் தடுப்புச் சுவர் ஏற்றும் அளவுக்குப் பார்ப்பனிய  விளையாட்டு இருந்த செய்தியை " தேவாலயத்தில் தீண்டாமைச் சுவர் " என்ற குறுந்தலைப்பில் ஆசிரியர் விளக்குவது அறியப்படாத புதிய செய்தி.

குழந்தைகளுக்குக் கள்ளிப்பால் ஊற்றிக் கொலைசெய்யும் கொடுமையை நாளிதழ்களில் பார்க்கிறோம். இதன் மூல ஊற்று பிராமணியக் கட்டமைப்பில் இருந்தது என்று விளக்கம் தரும் ஆசிரியர், ஆர்.சி. மசூம்தாரை மேற்கோள் காட்டி, குஜராத்தில் ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரம் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டதாக சொல்வது நெஞ்சை உலுக்குகிறது. தொடர்கிறார் அருணன், " இந்தப் பச்சைப் படுகொலைக்கு அவர்கள் சொன்ன காரணம், சின்ன வயதிலேயே அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டு, சாதி கெட்டுப் போவதை விட அந்தக் குழந்தைகளைக் கொன்று விடுவது உத்தமம். பால்ய விவாகம் இத்தகையப் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தது... பிள்ளைகளுக்குப் பால்கொடுக்காமலோ அல்லது மார்புக் காம்பில் வி­ம் தடவியோ கொன்றார்கள் "

சாதியம், பார்ப்பனியத் தனிச்சாதி காத்தல் என்ற கேடுகெட்ட வர்ணாசிரம மநு அநீதியைக் காக்க, பெற்ற பிள்ளைகளையே கொன்று குவித்த கொடூரத்திற்கு இன்னும் சான்றுகளை நூலில் விளக்குகிறார் ஆசிரியர்.

காஞ்சி சங்கரமடத்தைப் பற்றி நாம் அறிவோம். அதன் மூலவேர் கும்பகோணத்தில் ஊன்றப்பட்ட செய்தியைச் சுவைபடச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

இதில் முக்கியமானவர் கணபதி சாஸ்திரி. யார் இவர்? பின்னாளில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி என்று அவாள்களால் அழைக்கப்பட்ட சங்கராச்சாரியின் தாத்தாதான் இந்த கணபதி சாஸ்திரி.

" பிராமணியம் காக்க சில பிராமணர்கள் ஒன்று திரண்டு, காஞ்சி மடத்தை உருவாக்கினார்கள். அதற்குச் சொத்து சேர்த்தார்கள். தங்களது குடும்பத்துப் பிள்ளை களை அதற்கு அதிகாரிகளாகவும், சந்நியாசிகளாகவும் ஆக்கிவிட்டார்கள். சங்கராச்சாரி எனப்பட்ட அந்தச் சந்நியாசி குடும்ப வாழ்வைத் துறந்தவரே தவிர பிராமணியச் சமூக வாழ்வைத் துறந்தவர் அல்ல. சொல்லப்போனால் பிராமணியச் சமூக வாழ்வைக் கட்டிக் காக்க அவர் குடும்ப வாழ்வைத் துறந்தார். அந்தக் சின்னத் தியாகத்திற்கு ஈடாக அவரை ஒரு ராஜா போலவே நடத்தினார்கள். பிராமணிய தர்ம சாஸ்திரங்கள் வழி சமூகம் நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையை அந்த சந்நியாசி ஏற்றுக்கொண்டார். கூடவே தனது சாதியாருக்குப் பதவிகள் பெற்றுத் தருவது உள்ளிட்டப் பல உதவிகளைச் செய்கிற தலைவராகவும் செயல்பட்டார் " - என்று சங்கர மடம், சங்கராச்சாரி குறித்து விளக்கும் நூலாசிரியர், அனைத்து சாதியினருக்கும் தாங்களே குருமார்கள் என்று பிராமணர்கள் உரிமை கொண்டாடினாலும், பல சூத்திரர்களும் இந்த நிலையை எட்டியதுண்டு. ஆனால் பிராமணர்கள் இவர்களை அங்கீகரித்ததில்லை - என்ற அபே துபேயின் வாக்குமூலத்தைப் போட்டு பார்ப்பனியத்தின் குட்டை உடைக்கின்றார்.

பார்ப்பனியம் காத்த பேஷ்வாக்கள் - பிராமணியத்தைக் கம்பெனியார் எதிர்கொண்ட விதம் - கல்வியில் எதிர் கொண்ட விதம் - சாஸ்திரங்களில், நடைமுறைகளில் பிராமணியத்தின் இயங்குநிலை - பிராமணித்தின் ஊடுறுவலை எதிர்த்த இசுலாம் - சீக்கிய இயக்கங்கள் - ராம்மோகன் ராயின் பிரம்ம சமாஜம் - 1857, சிப்பாய்க் கலகமா, முதல் சுதந்திரப் போரா, பதிலடியா? - பிராமணியத்தின் அரசியல் பொருளியல் பின்புலம் என்று விரிவாகவும் மறுக்க முடியாத சான்றுகளுடனும், காலந்தோறும் பிராமணியம் 4ஆம் பாகத்தை முடித்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலில் அருணனின் கடின உழைப்பு, தேர்ந்த புலமை, நடுநிலையான ஆய்வு இவைகளைக் காண முடிகிறது. மதுரை வசந்தம் வெளியீட்டகம் இந்நூலை வெளியிட்டு இருக்கிறது.

இந்திய வரலாற்றையும் பார்ப்பனியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் " காலந்தோறும் பிராமணியம் "

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு, அருணன் : 94437 01997

Pin It