தற்போது இந்தியாவில் நிலவுகிற பாசிச காவி கார்ப்ரேட் இந்துத்துவ அரசியல் சூழலில் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த அரசியல் மாநாட்டிற்கு (24.12.2024) நான் சார்ந்திருக்கும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்க்சிய பார்வையில் பெரியார், அம்பேத்கார் என்கிற தலைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரை மார்க்சிய பார்வையில் அணுகுவது என்னளவில் சற்று கடினமான பணி என்பதால் தோழர்களின் ஒப்புதலோடு அதனை சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி “கம்யூனிஸ்ட் பார்வையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பினில் எனது உரையை முன்வைக்கிறேன்.
ஏனென்றால், மார்க்சியம் என்பது சமூக அரசியல் பொருளாதாரக் கோட்பாட்டு அடிப்படையிலான தத்துவம். பொதுவாக கோட்பாட்டளவில் ஓர் மார்க்சிஸ்ட்டாக வாழ்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் கம்யூனிஸ்ட் என்பது மார்க்சிய அடிப்படையிலான கட்சி, கொள்கை அரசியல் முன்னெடுப்பு சார்ந்தது என்பதனால் அந்தப் பார்வையில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கா் ஆகியோரை அணுகுவது எளிமையான முறையாகும். எனக்குத் தெரிந்த வரையில் முற்றுமுதலாக மார்க்சியராக வாழ்தல் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்குக் கூட முழுமையாக சாத்தியமாகாது. செயல் அதே வேளையில் கம்யூனிஸ்ட்டாக இருப்பது சற்று எதார்த்தவாதமாக இருக்கிறது என்கிற புரிதலின் அடிப்படையில் தான் நான் இந்த உரையைத் தொடங்குகிறேன்.
எனது உரையில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து முன்வைக்கப்படும் கருத்துகள் அனைத்தும் சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் கட்சியின் 12ஆவது பேராயத்தில் (கோழிக்கோடு, 2022) ஜாதி ஒழிப்புத் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மத்தியக் குழு ஆகியவற்றில் விரிவாக விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நவம்பர் 2024 இல் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் கூடிய கட்சியின் அகில இந்திய பிளீனத்தில் இறுதி செய்யப்பட்ட பகுதி அளவு முடிவுகளின் அடிப்படையில் முன்வைக்க உள்ளேன். ஆனால், தந்தை பெரியார் குறித்த சி பி ஐ (மா லெ) ரெட் ஸ்டார் கட்சியில் இன்னும் முழுமையான அளவில் விவாதத்திற்கு வரவில்லை என்கிற போதும் கட்சியின் வழிகாட்டுதலில் செயல்படும் அனைத்து இந்திய ஜாதி ஒழிப்பு இயக்கத்தின் கொள்கை அறிக்கை மற்றும் தந்தை பெரியார் குறித்து எமது கட்சிக்குள் இயல்பாக நிலவும் கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்பதனையும் எனது உரையின் அடித்தளமாக பதிவிட்டுக் கொள்கிறேன்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் தா.செ.மணி அவர்கள் தகுந்த தரவுகளுடன் “பெரியாரும் மார்க்சியமும்” என்கிற உரையை 2021இல் ஆற்றியுள்ளார் என்பதுடன் அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது என்கிற காரணத்தால் பெரியார் குறித்த எனது உரையில் மேற்கண்ட நூலில் இருந்து பல செய்திகளை எடுத்துக் கொண்டுள்ளேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்களின் பொதுவுடமை பார்வை, செயல்பாடுகள் மீதான செய்திகள் பல பதியப்பட்டுள்ளதால் கம்யூனிஸ்ட் பார்வையில் அண்ணல் அம்பேத்கர் என்கிற செய்திகளை பதிவது சற்று ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்கிற வகையில் என் உரையை முன்வைக்கிறேன்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் இருவரும் பொதுவுடமையை நேசித்தவர்கள். ஆனால் அன்றைக்கு இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஜாதி ஒடுக்குமுறை மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தால் அவர்கள் இருவரும் இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து விமர்சிக்க நேர்ந்தது. மற்றபடி அவர்கள் இருவரும் பொதுவுடமைத் தத்துவத்தை முற்றிலும் மறுத்தவர்கள் அல்ல என்பதே உண்மை. அண்ணல் அம்பேத்கர் எழுதிய புத்தரா? கார்ல் மார்க்சா? என்கிற நூல் மார்க்சியம் மீதான கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளதை நாம் மறுக்கவில்லை என்கிற போதும் இந்திய சமூகத்தில் நீடித்து வரும் ஜாதி அமைப்பு முறை வழியிலான சமூக ஒடுக்குமுறை, அதன் வழியாக சுரண்டல் வாதத்திற்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பற்றிய ஆய்வும், வரலாற்றின் வழியாக பார்ப்பனியத்தின் வளர்ச்சி, சூழ்ச்சி, நீடித்திருக்கும் காரணம், பெண்ணுரிமை, நில உரிமை, தொழிலாளர் நலன் பற்றிய அண்ணலின் எழுத்துகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது அவரின் ஜனநாயகப் பார்வை நன்கு விளங்கும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற கொள்கை முழக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார். இந்த முழக்கங்கள் கார்ல் மார்க்ஸ் காலத்தில் அவரால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரான்சு புரட்சியின் முதன்மை முழக்கமாக திகழ்ந்து என்கிற போதும் இந்த முழக்கங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே புத்தரால் முன்வைக்கப்பட்டது என்பதற்காகவே அம்பேத்கர் இதனை முழுமையாக ஏற்றுக் கொண்டார். சுதந்திரம், சமத்துவம் ஆகியவை மார்க்சியத்திலும் முதன்மைக் கூறுகளாக இருந்த போதிலும் சகோதரத்துவம் என்கிற சொல்லாடல் மார்க்சியப் பார்வையில் சற்று வேறுபாட்டைக் கொண்டுள்ளது. சுரண்டும் வர்க்கமும் சுரண்டலுக்கு உள்ளாகும் வர்க்கமும் சகோதரத்துவம் கொள்வது இயல்பில் நடக்க இயலாத அல்லது நியாயமாக இருக்க முடியாது என்பதை மார்க்சியம் வரலாற்றின் இயங்கியல் பார்வையில் தெளிவாக வரையறுக்கிறது. ஆனால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வர்க்கப் போர் என்பது வன்முறை வழியிலான கருத்தாக்கம் எனவே சகோதரத்துவம் என்கிற அமைதி வழியிலான சமூக மாற்றத்தை வலியுறுத்தினார். இவ்வகையில் மார்க்சியத்தின் அடிப்படை கொள்கையில் அம்பேத்கார் மாறுபட்ட போதிலும் மக்களுக்கான ஜனநாயகத்தை எல்லா வகையிலும் வலியுறுத்தினார்.
தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில் 1929 முதல் 1936 வரை பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் தனது அமைப்பை உருவாக்க முற்பட்டார். ஆனால் அப்போதிருந்த காலனியாதிக்க அரசின் நெருக்கடியினால் அதனை சற்று கைவிட்டு விலக வேண்டிய தருணம் உண்டானதை அவரே வெளிப்படையாக அறிவித்தார் என்பதே அவரின் நேர்மைக்கு சான்று.
சமூகநீதி அரசியலின் முதன்மையாளர்களாக விளங்கும் அம்பேத்கரும், பெரியாரும் என்றும் தங்களை மார்க்சிஸ்ட் என்றோ, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் என்றோ நேரடியாக அறிவித்துக் கொள்ளவில்லை என்கிற படியால் அவர்களிடம் முழுமையான கம்யூனிஸ்ட் கருத்தாக்கங்களை எதிர்பார்த்து அவதூறுகளை, பயனற்ற சொல் வாதங்களை முன்வைப்பது தற்கால அரசியல் சூழலில் தேவையற்ற ஒன்று. அதனைப் புறந்தள்ளி அவர்கள் இருவரின் கருதாங்கங்கள், செயல்பாடுகள், போராட்டங்கள் ஆகியவை கம்யூனிஸ்ட் கருத்தாங்கங்களுக்கு நட்பு முரணாக இருப்பதை உணர்ந்து செயல்படுவதே அறிவார்ந்த செயலாக இருக்கும்.
மார்க்சிய ஆசான் கார்ல் மார்க்ஸ் இந்தியா பற்றிய குறிப்புகளில் “சரக்கு உற்பத்திக்கு வேலைப் பிரிவினை ஓர் தேவையான நிபந்தனை. ஆனால் வேலைப் பிரிவினைக்கு சரக்கு உற்பத்தி தேவையான நிபந்தனை அல்ல என்று கூறுவதுடன் புராதன இந்தியாவில் சரக்கு உற்பத்தி இல்லாமலே சமூகப் பிரிவினை இருந்து வருகிறது என ஜாதியை குறித்து சாடியுள்ளார். அவ்வகையில் அன்றைய நாட்களில் கார்ல் மார்க்ஸ் தனக்கு கிடைத்த குறிப்புகளின் அடிப்படையில் இந்திய சமூகத்தில் ஜாதியின் பாத்திரம் குறித்து எழுதியுள்ளார். பொதுவாக அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் எதிரான தத்துவம் தான் மார்க்சியம். அவ்வகையில் இந்தியாவில் உழைக்கும் மக்களை சுரண்டி கொழுக்கும் வர்க்கத்தின் தத்துவமாக பார்ப்பனியம் கோலோச்சி வருகிறது. பார்ப்பனியம் என்பது உழைப்பு சுரண்டலின் இந்திய வடிவம் ஆகும். அவ்வகையில் பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் ஜாதி அமைப்பு முறையை தகர்க்காமல் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை நிலை நாட்டுவது சாத்தியமற்ற செயல். ஆகவே இந்திய சமூகத்தில் ஜாதியும் வர்க்கமும் பிரிக்க முடியாத அளவில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாகக் காணப்படுகிறது.
அரசியல் பொருளாதாரத்தின் சாராம்சத்தில் தான் அச்சமூகத்தின் இயங்குதல் நீடித்து வருகிறது. அவ்வகையில் அடிக்கட்டுமானத்தை தகர்த்திட வர்க்கப் போராட்டமே தீர்வு. அரசியல் பொருளாதாரத்தைத் தவிர்த்து ஓர் சமூகத்தில் இருந்து வரும் மொழி, பண்பாடு, இனம் ஆகியவை எல்லாம் வெறும் மேல்கட்டுமானம் தான். எனவே அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கும் பொழுது மேல்கட்டுமானமும் வீழ்ந்து விடும் எனபதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கையாக இருந்தது வந்தது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியின் போக்கில் சமூகவியலை ஆய்வு செய்த பல மார்க்சிய அறிஞர்கள் அரசியல் பொருளாதாரத்தை மீறிய அளவில் சில வேளைகளில் சமூகத்தின் மேல்கட்டுமானமாக விளங்கக் கூடிய மொழி, பண்பாடு ஆகியவை கூட சமூக இயங்கியலை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குவதைத் தக்க தரவுகளோடு முன் வைத்ததைப் பெரும்பான்மை மார்க்சியர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வகையில் இந்தியாவில் கூட ஜாதி என்ற மேல் கட்டுமான அமைப்பின் தீவிரத் தன்மையின் காரணத்தால் ஜாதியும் வர்க்கமும் என்கிற தலைப்பில் பல்வேறு விவாதங்கள் 1990 கால கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆய்வுகளின் அடிப்படைகளில் இன்றைக்கு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜாதி அமைப்பு முறை உழைக்கும் மக்களின் வர்க்க அணி சேர்க்கைக்கு மாபெரும் எதிரியாக உள்ளது. ஆகவே இந்தியாவைப் பொருத்தமட்டில் ஜாதியும் வர்க்கமும் பிரிக்க முடியாத அளவில் ஒன்றிணைந்து உள்ள காரணத்தால் ஜாதி என்கிற சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தையும், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். அதன் பின்னரே ஜாதி ஒழிப்புக்கு என்று தனி கவனத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னெடுக்கத் தொடங்கினர்.
ஜாதி ஒழிப்பு என்கிற கொள்கை நிலையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொண்ட பொழுது ஜாதி குறித்தான ஆய்வுகளில் அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டனர். அதன் பின்னர்தான் பார்ப்பனியம் , பார்ப்பன - பனியா எதிர்ப்பு மாநாடுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெகுஜன அமைப்புகள் நடத்தத் தொடங்கின. அவ்வகையில் அண்ணல் அம்பேத்கர், தான் வாழ்ந்த காலத்தில் எழுதிய பார்ப்பனியம், பார்ப்பனியத்தின் அடிப்படையாக விளங்கக்கூடிய ஜாதி அமைப்பு, ஜாதி அமைப்பைப் பாதுகாக்கின்ற இந்து மதவாத அமைப்பு என அனைத்தையும் இன்றைக்கு நாம் பேசி வருகிறோம்.
எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் தாங்கள் வகுத்துக் கொண்ட மூலயுத்தி (Strategy), செயலுத்தி (Tactics) அடிப்படையில் தான் செயல்படுவார்கள். மூலயுத்தி தான் ஓர் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைக் கொள்கை. மாறாக செயலுத்தி என்பது நிகழ்கால அரசியல், சமூகத்தின் தாக்கம், சர்வதேச சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்வப்போது மாற்றத்திற்கு உள்ளாகும். அவ்வகையில் இந்திய சமூகத்தில் வர்க்கமும் ஜாதியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதை சிபிஐ (மா லெ) ரெட் ஸ்டார் கட்சி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவில் வர்க்கப் போராட்டமும் ஜாதி ஒழிப்புப் போராட்டமும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டி அண்ணல் அம்பேத்கார் முன்வைத்த கருத்துகளின் உண்மைத் தன்மையை சமூக இயங்கியல் வழியாக ஏற்றுக்கொண்டு ஜாதி ஒழிப்பு, கட்சியின் மூலயுத்தியாக முன்வைத்துள்ளது. மார்க்சியம் என்பது முற்போக்குத் தன்மை கொண்ட சமூக அறிவியல் கருத்தியலாகும். ஆகவே சமூக அறிவியலில் நாம் முன்பு பார்க்கத் தவறிய பிழைகளை நேர் செய்து கொள்வதே ஓர் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான செயல்பாடாகும். தோழர் லெனின் கூறுவது போல “செயல்பாடற்றத் தத்துவம் பயனற்றது” என்கிற கூற்றை கட்சி உள்வாங்கி கொண்டதன் வழியாக ஜாதி ஒழிப்பு கருத்தியலை முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறோம்.
(தொடரும்.........)
- இனியவன்