ஆளுநர் அளித்த தேநீர் விருந்தைத் தமிழக அரசு புறக்கணித்தது மிகப் பெரிய அரசியல் செய்தி! அதனால் தேநீர் செலவு மிச்சம் என்று பேசுவது, மிகக் குறுகிய சிறுபிள்ளைத்தனம்.

governor ravi 253இந்நிகழ்வு, ஆளுநர் என்னும் ஒரு தனி மனிதரைப் புறக்கணிப்பதோ, கட்சி அரசியலை வெளிப்படுத்துவதோ இல்லை. ஓர் அரசு, ஆட்சித் தளத்தில் தங்கள் கடும் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்வது! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் தீர்மானத்தை அலட்சியப்படுத்துவது, நாட்டு மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்! நாட்டையும் மக்களையும் அவமதிக்கும் உரிமை எந்தக் கொம்பனுக்கும் இருக்க முடியாது.

திருப்பி அனுப்பப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பிறகு, அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர, சட்டத்தில் வேறு வழியில்லாத நிலையில், அதனை அனுப்பாமலே வைத்திருப்பது, சட்ட மீறலும் ஆகும்.

இந்த நிலையிலும், மிக நிதானமாக, மிகக் கவனமாகத் தமிழக அரசு நடந்து கொண்டு வருகிறது. இப்போதும் ஆளுநர் சட்டத்தை மதிப்பார் என்ற நம்பிக்கையை முதல்வரின் கடிதம் வெளிப்படுத்துகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல எந்த ஒரு தன்முனைப்போடும் இன்றைய முதல்வர் நடந்து கொள்ளவில்லை. அன்றைய நாள்களில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும் இடையில் நடந்த மோதல்கள் எப்படித் தரம் குறைந்தன என்பதை நாம் அறிவோம்.

ஆளுநர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ஓர் அரசியலற்ற குற்றச்சாற்றை அன்றைய முதல்வர் முன்வைத்தார். (சென்னாரெட்டியால், சரியாகக் கூட நடக்க முடியாது என்பது வேறு செய்தி). பிறகு ஒரு விடுதலை நாள் விழா அணிவகுப்பில், முதல்வரும், ஆளுநரும், ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமல், வேறு வேறு பக்கம் திரும்பி அமர்ந்திருந்தார்கள்.

அதுபோன்ற எந்த ஒரு செயலிலும் இன்றைய அரசும், முதல்வரும் ஈடுபடவில்லை. மக்களுக்கான கோரிக்கையினை மறுபடியும் மறுபடியும் ஆளுநர் புறக்கணித்தால், ஆளுநரையே திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைதான் அடுத்து எழும்.

ஆளுநரைத் திரும்பப் பெறுவது நல்லது. ஆளுநர் பதவியையே எடுத்து விடுவது அதனை விட நல்லது!

- சுப.வீரபாண்டியன்

Pin It