தில்லியில் ஏப்ரல் 16ம் தேதியன்று கொங்குநாடு தந்த படைப்புச் செம்மல் முற்போக்கு எழுத்தாளர் சின்னப்ப பாரதிக்கு பாராட்டு விழாவும் அதையொட்டி தேசிய அளவில் ஒரு கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியை திருமதி மக்தூபா முந்தஜா கோஜயேவா இவ்விழாவில் கலந்து கொண்டார்.

'இந்திய இலக்கியத்தில் கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு' என்ற தலைப்பில், தலைநகரின் புகழ்வாய்ந்த படைப்பாளிகள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

"இந்தியன் சொஸைட்டி ஆஃப் ஆதர்ஸ்' என்னும் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் இக்கருத்தரங்கை வடிவமைத்தது.

பாரதிய ஞானபீடத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் தினேஷ் மிஸ்ரா இந்த அமைப்பின் தலைவர்.

'ஸம்வேத்' இலக்கியப் பத்திரிகை மூன்று மாதம் முன்னதாகவே கு.சின்னப்ப பாரதியின் ஆளுமை மற்றும் படைப்பு நயங்களை மையப்படுத்தி கையடக்கமான ஒரு சிறப்பு மலர் தயாரித்திருந்தது.

16 ஏப்ரல் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரையிலும் மூன்று அமர்வுகளிலாக நிகழ்ந்த இக்கருத்தரங்கத்தில் தலைநகரின் முக்கிய அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகளும் படைப்பாளிகளும் பிரசன்னமாயிருந்தனர்- இந்தோ ஆசிய சாகித்திய அகாதமியின் சார்பாக அஷோக் கன்னா, மத்திய இந்தி இயக்கத்திலிருந்து முனைவர் பகவதி பிரசாத் நிதாரியா, அகில பாரத இந்தி பேரவையின் பொறுப்பாளர் ஜானகி வல்லப், உத்பவ அமைப்பின் சார்பாக விவேக் மிஸ்ரா, ஜனவாதி எழுத்தாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சஞ்சய் சௌஹான், சாகித்யப் பதிப்பு நிறுவன இயக்குனர் ரமேஷ் சர்மா குறிப்பிடத்தக்கவர்கள்.

'ஆவாங்' என்ற அரிய படைப்புக்காக பிர்லா பவுண்டேஷனின் வியாஸ் ஸம்மான் விருதினையும் லண்டன் இந்துபாலா விருதினையும் பெற்ற சித்ரா முத்கல் இவ்விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் ஒளிவீசும் கலைமகள் உருவச் சிலையை சின்னப்ப பாரதிக்கு அளித்தது. 'உத்பவ' அமைப்பு சமூக இலக்கியப் பண்பாட்டுக் களங்களில் சின்னப்ப பாரதியின் அரிய பணியைப் பாராட்டும் முறையில் சான்றிதழ் அளித்துச் சிறப்பித்தது. தமிழகத்திலிருந்து கு.சி.பா.வுடன் வருகை தந்திருந்த முன்னாள் இந்திய வருவாய்த் துறைத் துணைத் தலைவர் சி.கே.கருப்பண்ணன் அவர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டார்.

திறப்பு விழாவில் கு.சி.பா.வின் தமிழ்ப் புதினம் தாகத்தின் 'ப்யாஸ்' என்ற இந்தி மொழியாக்கம் மற்றும் 'ஸம்வேத்' கு.சி.பா சிறப்பிதழ் இரண்டையும் சகோதரி சித்ரா முத்கல் வெளியிட்டார். தாஷ்கண்டிலிருந்த வந்திருந்த திருமதி மக்தூபா நாவலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தலைசிறந்த படைப்பாளி, நாடகாசிரியர் முனைவர் மஸ்த்ராம் கபூர் ஸம்வேத் இதழின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

'உடன் பிறவாச் சகோதரர்' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தலைமை உரையாற்றிய இலக்கியவாதி கிஷன் காலஜயி, "கதைச் சிற்பி சின்னப்ப பாரதி இந்தி மற்றும் பிற இந்திய மொழி வாசகர்களுக்குப் புதியவரல்ல. இவரது படைப்புகள் மொழி, பிரதேச எல்லைகளைக் கடந்து சீனம், ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளிலும் ஆங்கிலம் வழி பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளன என்றார்.

சோஷலிஸச் சிந்தனையாளரும் இந்தியில் குழந்தை இலக்கிய இயக்கத்தின் தந்தையுமான மஸ்தராம் கபூர் தலைமையிலான முதல் அமர்வில் தாஷ்கண்ட் பல்கலைக் கழகத்திலிருந்து இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த திருமதி மக்தூபாவுக்கு இந்திய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னம் பரிசளிக்கப்பட்டது. திருமதி மக்தூபா தாஷ்கண்டில் சின்னப்ப பாரதியின் படைப்புகளை, குறிப்பாக பவளாயி என்னும் புதினத்தை உஸ்பேகிய மொழிப் படைப்புகளுடன் ஒப்பாய்வு செய்து வருகிறார்.

 இரண்டாவது அமர்வுக்கு ஜனவாதி எழுத்தாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சஞ்சல் சௌஹான் தலைமை வகித்தார். முதலில் வங்கமொழி-ஆங்கில எழுத்தாளர் திருமதி அமிருதா பேரா பவளாயியை மையப்படுத்தி ஆய்வுக் கட்டுரை படித்தார்.

அடுத்து, கவிஞரும் கதாசிரியருமான விவேக் மிஸ்ரா 'சர்க்கரை' புதினத்தின் அடிப்படையில் சின்னப்ப பாரதியின் படைப்பு நயங்களை எடுத்துரைத்தார்.

இதன்பின் பாரத் ஆசிய இலக்கிய அகாடமித் தலைவர் அசோக் கன்னா, 2002-ல் தில்லி விட்டல்பாய் படேல் பவனில் பவளாயி, சர்க்கரை இந்தி மொழியாக்கங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். கு.சின்னப்ப பாரதிக்கு அகாடமியின் கௌரவ உறுப்பினர் பதவி அளிக்க முடிவெடுத்துள்ளது என்றார்.

ஜனவாதி எழுத்தாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சஞ்சல் சௌஹான் தோழர் சின்னப்ப பாரதியுடன் தமது நெடு நாளைய உறவை நினைவு கூர்ந்தார்.

அவருடைய படைப்புகளில் மனித வாழ்க்கை, ஏழை எளிய மக்கள் படும் துன்பங்களுடன் எதார்த்தமாகச் சித்தரிக்கப்படுகிறது. பிரச்சனைகளை மட்டும் அவர் முன்வைப்பதில்லை. அவற்றுக்கான தீர்வுகளையும் நாவலில் வரும் இளம் தலைமுறைப் பாத்திரங்களை வைத்து முடித்துக் காண்பிக்கிறார் என்றார்.

இறுதியாக, சின்னப்ப பாரதியின் ஏற்புரை கூறினார்.

நான் எழுதுவதெல்லாம் வாழ்க்கையில் நான் காணும் யதார்த்தங்களைத் தான்- எழுத்தின் நோக்கம் சமூகத்தின் கடைநிலையில் வாழ்க்கைக்காகப் போராடும் மக்களுக்கு அவர்கள் உரிமைகளை அறிந்து கொண்டு ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராட ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும் என்றார்.

பத்துமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு மொழி, மாநில, நாட்டு எல்லைகளையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்களிடையே தாக்கம் ஏற்படுத்திய என் படைப்புகள் தான் என்னுடைய பலம் என்றார்.

முனைவர் விவேக் கௌதம் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Pin It