ஒரு திரைப்படம் என்றால் அதில் நகைச்சுவைக் காட்சிகள் இருக்கும், நகைச்சுவை நடிகர் இருப்பார்.
சர்க்கஸ் நடைபெறும் பொழுது அங்கேயும் ஒரு நகைச்சுவைக் கோமாளி இருப்பார். இந்தத் தொழில்முறை நகைச்சுவையாளர்களை ‘பஃபூன்’ என்று சொல்வார்கள்.
தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு பஃபூன் இருக்கிறார். அவர் தொழில்முறை பஃபூன் இல்லை, ஓர் அரசியல் கோமாளி, பெயர் ரஜினிகாந்த்.
திடீரென ரசிகர்களைக் கோடம்பாக்கத்தில் கூட்டுவார். ஆலோசனை கேட்பார். நான் அரசியலில் குதிக்கத் தயாராகி விட்டேன் என்பார். பணம் சம்பாதிக்க யாரும் என் அரசியலுக்கு வர வேண்டாம் என்பார். அவரின் அரசியல் பிரவேசம் குறித்துச் செய்தியாளர்கள் கேட்டால் ‘‘எல்லாம் ஆண்டவன் பாத்துக்குவார்’’ என்று ஓடிவிடுவார், பாவம் ரசிகர்கள்.
2017 டிசம்பரில், அவர் கூட்டிய ரசிகர் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவது போலப் பேசினார். ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எந்த ஓர் அசைவும் இல்லை. கடைசியில் நாடாளுமன்றத் தேர்தலைக் கை கழுவி விட்டார், பாவம் ரசிகர்கள்.
இப்பொழுது ‘‘சட்டமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனது ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்’’ என்று பேசியிருக்கிறார்.
முதலில் தேர்தல் என்பது மக்களுக்காகவா அல்லது ரசிகர்களுக்காகவா என்பதில் பாவம் ரஜினி குழம்புகிறார்.
ரசிகர்களும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள், இந்த ஆளு சட்டமன்றத் தேர்தல் வந்தவுடன் எப்படி பல்டி அடிக்கப் போகிறாரோ என்று.
இவர் அரசியலில் மிகச்சிறந்த பஃபூன் வேலைகளைச் செய்வார்.
மோடி ஆட்சிக்கு வந்தால் நதிகளை எல்லாம் இணைத்துத் தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்த்து விடுவார் என நம்புகிறார். அப்படியானால், கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மோடி என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கு பதில் இல்லை.
தவிர அனைத்து நதிகளையும் இணைக்க முடியுமா என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவராக இருக்கிறார்.
இவர் நடிக்கும் திரைப்படத்தில் இவர் ஒருவரே 100 பேர்களை அடித்துக் கிழித்துவிடுவார். ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில், பொதுமக்களில் 13 பேர் இறந்து போனார்கள். போராடியவர்களை வன்முறையாளர் என்கிறார்.
இப்பொழுது கூட வாக்குப் பதிவின் விழுக்காடு குறைந்ததற்கு என்ன காரணம் என்ற செய்தியாளர் கேள்விக்கு, ‘‘விடுமுறை என்பதால் பலர் அவரவர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்’’ என்று வாக்குபதிவு குறைந்ததற்குத் தத்துவார்த்த விளக்கம் சொல்லியிருக்கிறார்.
இந்த அரசியல் பஃபூனை அவரின் ரசிகர்கள் தாங்குகிறார்களோ இல்லையோ, தமிழ்நாடு தாங்காது.