சேதுக்கால்வாய்:

சேதுக்கால்வாய் தமிழன் கால்வாய்.

கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே மன்னார் வளைகுடாவையும் இணைக்கின்ற 165 கிமீ. நீளமும் 12 மீ. ஆளமும் 300 மீ. அகலமும் கொண்ட வழித்தடம்.

55 கிமீ. நீளத்துக்கு கோடிக் கரைக்கு அருகே கடல் தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.

55 கிமீ. நீளத்துக்கு சேதுத்திடல் பகுதியில் கடல்தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.

இந்த 85 கிமீ. நீளத்தைத் தவிர வேறு எந்தக் கடல்தரை யையும் ஆழமாக்கவில்லை.

இந்த 165 கிமீ. நீள வழித்தடத்தில் கடல்தரையில் பவளப் பாறைகள் இல்லை, கிடையவே கிடையாது.

பவளப்பாறைகள் இருக்கும் பகுதிகள்:

வடகடலில்

1.    இலங்கைத் தீவின் வடக்கே பருத்தித்துறை தொடங்கி, மாதகல் வரை இருக்கின்றன.

2.    யாழ்குடா நாட்டின் தெற்கே இரணைத் தீவு, அதை ஒட்டிய பகுதிகள், பல்லவராயன் கட்டுக் கரை, மேலும் தெற்கே விடத்தல் தீவுக் கரை.

தென் கடலில்

1.    இராமேச்சரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையே, கரை யோரத்தில், தெற்கே வான்தீவு தொடக்கம் வடக்கே செங்கால் தீவுவரை உள்ள 21 தீவுகளை ஒட்டிப் பவளப்பாறைகள் இருக்கின்றன.

இலங்கைக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தில் இருந்து ஆகக் குறைந்தது 20 கிமீ. தொலைவில் பவளப் பாறைகள் இருக்கின்றன.

தமிழகக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தின் தென் முனையில் இருந்து 20 கிமீ.தென்மேற்கே மேற்கே செங்கால் தீவை ஒட்டிப் பவளப்பாறைகள் இருக்கின்றன.

பவளங்கள் இல்லாத கரையோரக் கடல்கள் உலர் வலையக் கடல்களில் இல்லை. ஆனால் அவை பாறைகளாக அமைகின்ற கரையோ ரங்கள்மிகக் குறைவு. ஒதுக்கிடக் கரையோரங் களைத் தேடிப் பவளங்கள் பாறைகளாகக் குவிந்து வளர்கின்றன.

 கால்வாய் அமையும் 165 கிமீ. நீளத்திற்கு இரு பகுதிகளிலும் 20 கிலோ மீட்டர் அகலம்வரை பவளப் பாறைகள் இல்லை, இல்லவே இல்லை.

சேதுக் கால்வாயை அமைக்கக் கடல் தரையை ஆழமாக்குவதால் பவளப் பாறைகள் உடையும், பெருகுவது குறையும், பாதிப்புறும் என்ற கருத்துப் பொருளற்ற புனைவு.

கடல்குதிரைகள் மற்றும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள்:

‘கடலில் கப்பலை ஓட்டினால் கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கும்.’ கப்பல்கள் எங்கே ஓடினாலும் கடல்வாழ் உயிரினங் களுக்கு ஓரளவு பாதிப்பு இருக்கும். விசைப் படகுகளையோ கட்டுமரங்களையோ ஓட்டினாலும் பாதிப்பு இருக்கவே இருக்கும். அதில் எவ்வித ஐயமும் இல்லை.

கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பதால் யாரும் கப்பல்களை ஒட்டாமல் விடுவதில்லை. தொழிலுக்கு மீனவர் போகாதிருப்பரா?

தூத்துக்குடியில் இருந்து வடக்கே இராமேச்சரம் வரை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் உயிரினப் பாதுகாப்பு வலையம் உண்டு.

அங்கே அரியவகையான கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன.

சேதுஅணைக்குத் தெற்கே உள்ள அந்த உயிரினப் பாதுகாப்பு வலையத்தில் கால்வாயின் வழித்தடம் அமையாது. அதனால் அந்த அரிய அரிய வகையான கடல்வாழ் உயிரினங்களுக்குக் கால்வாய் ஆழமாக்குவதால் எந்தப் பாதிப்புமில்லை.

மீனவர் வாழ்வு செழிக்கும்

அடிப்படைத் தகவல்கள் காண்க, அதன்பின் ஆய்க.

தமிழ் நாட்டின் மொத்தக் கடற்கரையின் நீளம் 1,076 கிமீ.அதனுள் கோடிக்கரைக்குத் தெற்கே கால்வாய் அமையும் கடலை ஒட்டிய கரை 545 கிமீ. நீளம் (50.6%).

நாகப்பட்டினம் மாவட்டம்170 கிமீ.

திருவாரூர்மாவட்டம் 20 கிமீ.

தஞ்சாவூர்மாவட்டம்45 கிமீ.

புதுக்கோட்டைமாவட்டம்39 கிமீ.

இராமநாதபுரம் மாவட்டம் 271 கிமீ.

மொத்தம் 5 மாவட்டங்களில் 545 கிமீ.

தமிழ் நாட்டில் 442 மீனவ ஊர்கள் உள. அவற்றுள் 224 ஊர்கள் (50.6%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி உள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் 60 மீனவ ஊர்கள்.

திருவாரூர்மாவட்டம் 04 மீனவ ஊர்கள்.

தஞ்சாவூர்மாவட்டம் 27 மீனவ ஊர்கள்.

புதுக்கோட்டைமாவட்டம் 34 மீனவ ஊர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் 99 மீனவ ஊர்கள்.

மொத்தம் 5 மாவட்டங்களில் 224 மீனவ ஊர்கள்.

தமிழ் நாட்டில் தோராயமாக 5.5 இலட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர் (2011 கணக்கு). அவர்களுள்3.79 இலட்சத்தினர் (69%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி வாழ்கின்றனர்

நாகப்பட்டினம் மாவட்டம்140,000 மீனவர்.

திருவாரூர்மாவட்டம் 13,000 மீனவர்.

தஞ்சாவூர்மாவட்டம் 21,000 மீனவர்.

புதுக்கோட்டைமாவட்டம் 15,000 மீனவர்.

இராமநாதபுரம் மாவட்டம்190,000 மீனவர்.

மொத்தம் 5 மாவட்டங்களில் 379,000 மீனவர்

தமிழ் நாட்டில் தோராயமாக 40,000 மீன்பிடிக் கலங்கள் உள (2011 கணக்கு). அவற்றுள் 21,000 000 மீன்பிடிக் கலங்கள் (53%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டியதமிழக மீனவர் களிடம் உள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் & 1500 கரையோரக் கலங்கள், 4,000 விசைப் படகுகள்.

திருவாரூர்மாவட்டம் & 50 கரையோரக் கலங்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் & 1000 கரையோரக் கலங்கள், 200 விசைப் படகுகள்.

புதுக்கோட்டை மாவட்டம் & 200 கரையோரக் கலங்கள், 50 விசைப் படகுகள்.

இராமநாதபுரம் மாவட்டம் & 10,000 கரையோரக் கலங்கள், 4,500 விசைப் படகுகள்.

மொத்தம் 5 மாவட்டங்களில் 12,750 கரையோரக் கலங்கள், 8,750 விசைப் படகுகள்

தமிழ்நாட்டின் கடல் உயிரின வள உற்பத்தி மொத்தம் தோராயமாக 4 இலட்சம் மெட்ரிக் டன். அதில் இந்த 15 மாவட்டங்களில் 2.5 இலட்சம் மெட்ரிக் டன் (60%) கடல் உயிரின வளத்தைக் கரையேற்றுகிறார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம்100,000 மெட்ரிக் டன்.

திருவாரூர்மாவட்டம் 2,800 மெட்ரிக் டன்.

தஞ்சாவூர்மாவட்டம் 15,200 மெட்ரிக் டன்.

புதுக்கோட்டைமாவட்டம் 12,000 மெட்ரிக் டன்.

இராமநாதபுரம் மாவட்டம் 120,000 மெட்ரிக் டன்.

மொத்தம் 5 மாவட்டங்களில் 250,000 மெட்ரிக் டன்.

தமிழ்நாட்டின் 50% கடற்கரைநீளத்தில் வாழும், 70% மீனவர்கள், 60% கடல் உயிரினவள உற்பத்தியைக் கரையேற்று கிறார்கள்.

இந்த ஐந்து மாவட்டங்களே மீன் உற்பத்திக் களஞ்சியங்கள். இந்த மீனவர்கள் எங்கே மீன் பிடிக்கிறார்கள்?

இந்த 5 மாவட்ட மீனவர்களுள் 65% சதவீத மீனவர்கள் வடகடலில் மீன் பிடிக்கிறார்கள்.

வடகடலின் பற்றாக்குறை அறுவடை:

வடகடலின் மற்றறொரு பெயர் பாக்கு நீரிணை. வடகடலின் மொத்தப் பரப்பளவு 10,000 சகிமீ. இதில் சரிபாதி இலங்கைக்குச் சொந்தமானது.

எனவே ஏறத்தாழ 5,000 விசைப்படகுகள், 10,000 கலங்கள் என வைத்திருக்கும் 3.2இலட்சம் மீனவர்களும் இந்த 5,000 சகிமீ. பரப்பளவிலுள்ள கடல் உயிரின வளத்தையே தம் வாழ்வாதாரமாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

1974ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டிற்குப் பின்னரே இந்தக் கடற்கரையோர மீனவர்களின் பரப்பளவு 5,000 சகிமீ. ஆகச் சுருங்கியது.

அதற்கு முன்பு எல்லையற்ற கடல். அப்பொழுது அண்ணளவாக இந்தக் கரையில் ஒன்றரைஇலட்சம் மீனவர் எண்ணிக்கை. கடற்கலங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டவில்லை. விசைப்படகுகளோ 1,000 வரைதான் இருந்தன. மீன் உற்பத்தியும் ஒரு இலட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டவில்லை.

அக்காலங்களில் இலங்கை மீனவர்களும், ஈழத்து மீனவர்களும், தமிழக மீனவர்களும் ஒரே கடலில் எல்லைகள் தெரியாமல் மீன்பிடித்தது மட்டுமில்லை, தாங்கள் பிடித்த மீன்களை இரு கரையோரங்களின் சந்தைகளில் விற்பார்கள். திருமண உறவுகளையும் வைத்திருந்து உறவுமுறையுடன் மீன்பி டித்தனர். கடலில் ஒருவருக்கு ஒருவர் பேருதவியாக இருந்தனர்.

இது 1974க்கு முன்பு. கள்ளத்தோணி என்றும், கடத்தல்காரர் என்றும் தமிழரைச் சிங்களக் கடற்படை சிறைப்பிடித்த, சுட்டுவீழ்த்திய காலங்கள். மீனவர்களை அல்ல.

கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கரையோர 5 மாவட்டங் களிலும் விசைப்படகுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. இக்காலத்தில் இறால், சிங்க இறால், நண்டு போன்ற உயிரின வகைகள் ஏற்றமதிப் பொருளாயின. ஏற்கனவே இக்கடலில் சுழியோடிக் குற்றிய சங்கு, வங்காள தேசத்திற்கும், கடலட்டை சிங்கப்பூருக்கும் ஏற்று மதியாகிக் கொண்டிருந்த காலம்.

கடல்பரப்பு அளவு மாற வில்லை. கடல் வளக் கொள்ளளவு மாறவில்லை. ஆனால் மீனவர்கள் எண்ணிக்கையோ மூன்று மடங்காகி யது. விசைப்படகுகள் எண்ணிக் கையோ ஐந்து மடங்கு பெருகியது. கடலோரக் கலங்களின் எண்ணிக் கையும்பெருகியது.

கடலின் வளமோ மாறாமல் இருக்க, மக்கள் தொகைப் பெருக்கமும், ஏற்றுமதி வாய்ப்புகளும், மீன்பிடி பரப்பளவில் சரிபாதி குறுக்கமும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையுப் பாதிக்கத் தொடங்கின.

1970களில் இக்கடலருகிலுள்ள மீனவர்களின் தனிமனித வருவாய்க் கடுமையாகக் குறைந்தது. எனவே தமிழக மீனவர்கள் தமிழகஎல்லைக்குள்ளான 5,000 கிமீ. பரப்பளவைத் தாண்டி, இலங்கையின் 5,000 சகீமீ. பரப்பளவிலும் சென்று மீன்பிடிக்கத் தொடங்கினர்.

இலங்கைப் போரினால், 1980களுக்குப் பின்பு இலங்கைக் வட கரையோரங்களில் மீன்பிடிக்கத் தடை. அக்காலத்தில் சிங்களக் கடற்படை போராளிகள் எனத் தமிழரைத் தேடியது. எனவே மீனவர்களையும் துன்புறத்தத் தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களைச் சிங்களப்படை கடுமையாகத் தாக்கத் தொடங்கியது.

கடந்த 30 ஆண்டுகளாகக் கடல்வள உயிரின உற்பத்தி வளர்ச்சி வேகம் தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களிலும் குறைந்தது. தனிநபர் வருமானம் குன்றியது. மீன்பிடிப் பரப்பெல்லைகள் குறுகின. மக்கள் தொகை பெருகியது. கலங்கள் பெருகின.இம் மீனவர்களின் வாழ்வாதாரம் படிப்படி யாகச் சீர்குலைந்தது.

வடகடல் மீனவர் தொழில்திறன்:

தமிழ்நாட்டின் மொத்த மீனவர்களுள் இந்த ஐந்து மாவட்டங்களில் வாழ்கின்ற மீனவர்களுக்குரிய திறமைகள், ஆற்றல்கள் ஆழ்கடல் மீன்பிடியை ஒட்டியதல்ல. அவை தரவைக்கடல் அல்லது கரையோரக் கடலை ஒட்டியது. ஆனாலும் ஏனைய மாவட்ட மீனவர்களை விட இவர்களுக்குக் கடல் வாழ் அனுபவம்அதிகம்.

வைகாசி, ஆனி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்கள் அவர்கள் கடலுக்குள் போவதைக் குறைத்துக் கொள்ளும் மாதங்கள். ஏனெனில், உயிரின மீன் உற்பத்திக்கு உரிய காம விதைகள், கருக்கட்டல்கள், கடலின் பருவ நிலை மாற்றங்கள் இந்த நான்கு மாதங்களில் மிகை. வைகாசியில் அரசே மீன்பிடையத் தடுக்கிறது. மார்கழியில் பருவநிலை தடுக்கிறது.

வழமையாக இந்த மீனவர்கள் மதியம் 2 மணிக்குக் கடலுக்குச்செல்வர், விடிய 4 மணிக்குக் கரை திரும்புவர். அதற்கேற்றவாறு அவர்கள் படகுகளில், விசைப்படகுகளில் வசதிகளை வைத்திருப்பர்.

ஆற்றல், திறமை, கடல்வாழ் அனுபவம் கொண்டமூன்று லட்சம் மீனவர்கள், தனிநபர் வருவாய்க் குறைவாலும், அறுவடைப் பற்றாக் குறையாலும் துன்புறும் பொழுது வேறு தொழில்களுக்கு அவர்கள் போகாமலும், தமக்குத் தெரிந்த தொழிலை மேம் படுத்தவும், அவர்களின் வாழ்வா தாரத்தைப் பெருக்கவும் வளர்ச்சிக்குத் திட்ட மிடுவோரே வழிகாட்ட வேண்டும்.

சேதுக் கால் வாய்த் திட்டம் அத்தகை வழிகாட்டல் திட்டமே. மீனவரின் வாழ்வாதரத்தைப் பன்மடங்கு பெருக்கும் வழிகாட்டல் திட்டமே.

(அடுத்த இதழில் முடியும்)

Pin It