தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி, முன்னாள் முதல்வர் கலைஞர், சுசுஏன் இந்த இரட்டை வேடம்? முன்னுக்குப்பின் முரண்பாடு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?" என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

என்ன இரட்டை வேடம்? என்ன முரண்பாடு?

"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய மதிப்புமிக்க ராமர் பாலத்தின் முக்கியத்துவம் கருதி, அதனைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தைத் தாமதமின்றி, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு மூலமாகத் தமது கருத்துகளைத் தனியே உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கும்".

சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஜெயலலிதா, மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் என்று, இவ்வரிகளை நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் வெளியிட்டிருந்தது.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வின் 2001ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் அறிக்கையை நினைவு படுத்துகிறார் கலைஞர் 'முரசொலியில்'. "சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். கப்பலின் பயணதூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழகத் தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்னபிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக்கொண்டிருக்காமல், உலகவங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, வேண்டிய நிதியைத் தேடி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்.

இதே தேர்தல் அறிக்கையில்,"இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கில் இருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேதுசமுத்திரத்திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்" என்ற இந்தப் பகுதியைச் சுட்டிக்காட்டும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், இவ்வறிக்கையின்படி 1. சேதுசமுத்திரத் திட்டம் தேவை என்பதையும் 2. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் அது மணல் மேடுகள், பாறைகள் (இராமர் பாலம் அல்ல) என்பதையும் அவ்வறிக்கை உறுதி செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் சுவிடுதலை' நாளிதழில்.

இதே கருத்தை மீண்டும் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்திய அ.தி.மு.க., 2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் "அதி வேகமும் மிக அதிக எடை கொண்ட சரக்குகளை ஏற்றிச்செல்லும் திறனும் கொண்ட கப்பல்கள் பயணிக்கும் இன்றைய நவீன யுகத்தில், இது தற்காலத்திற்கு ஒவ்வாத திட்டம் என்ற உண்மை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது.

இப்போது திட்டமிட்டுள்ளபடி, இந்தக் கால்வாய்த்திட்டம் நிறைவேற்றப்படுவதால் நாட்டிற்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாரமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்"

ஜெயலலிதாவின் முன்சொன்ன அறிக்கைகளுக்கும், இந்த அறிக்கைக்கும் இடையில் உள்ள நேர் எதிர் முரண்பாடுகளைத்தான் ‘இரட்டை வேடம்' என்று கலைஞர் சுட்டிக்காட்டினார்.

தொடக்கத்தில் ‘ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும் மணல்மேடு, பாறைகள் என்றும் உறுதிபடச் சொன்ன ஜெயலலிதா இப்பொழுது ‘கோடிக் கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்' என்று சொல்லி, மக்களுக்குப் பயன்தரப் போகும் திட்டத்தில் மதச் சாயம் பூசிவிட்டார். இவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சரித்திர முக்கியத்துவம் என்றும், தொல் பொருள் ஆராய்ச்சி என்றும், பாரம்பரிய மதிப்புமிக்க ராமர்பாலம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

எந்தத் தொல்பொருள் ஆய்வில் ராமர் பாலம் சரித்திரப் பூர்வமானது என்ற உறுதிசெய்யப்பட்டது என்பதை ஜெ. விளக்கவில்லை. ராமர் பாலம் சரித்திரமா அல்லது புராண இதிகாசக் கதையா என்பதில் அவருக்கே குழப்பம் ஏற்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் உள்ள நாசா ஆய்வு மையம், இந்தியா இலங்கைக்கு இடையே இருக்கும் ஆதம்பாலம், இயற்கையாக உருவான மணல் படிகள் மணல் திட்டுகள் என்பதைத் தெளிவாக, அறிவியல் பூர்வமாகச் சொன்னபிறகும், இல்லையில்லை அது ராமன் பாலம்தான் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது ஆரிய மாயை.

சேதுக்கால்வாய்த் திட்டத்திற்கான கால்கோள் 1860ஆம் ஆண்டு இடம்பெற்றது. 1956ஆம் ஆண்டு இதுகுறித்து ஆய்வு நடத்த ஏ. இராமசாமி முதலியார் தலைமையில் குழு ஒன்று அன்றைய பிரதமர் நேருவால் அமைக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவையில், இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கமாகப் பேசினார் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா.

பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது, 2005 ஜூலை 2ஆம் நாள், கலைஞர் சோனியாகாந்தி முன்னிலையில் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்றைய மத்திய அமைச்சர் டி. ஆர். பாலுவின் கடும் முயற்சியால் முக்கால் பங்கு பணி முடிவடைந்த நிலையில், ஆரிய மாயை ஏற்படுத்திய நீதிமன்றத்தடையால் பணி பாதியில் நின்றுவிட்டது.

பலகோடி ரூபாய் மக்கள் பணம் இத்திட்டத்தில் செலவு செய்த பிறகும், பணியை முடிக்கவிடாமல் மதம் இங்கே குறுக்கே நிற்கிறது. வடக்கு எப்படி அயோத்தி ராமனைத் தூக்கி வைத்து ஆடுகிறதோ, அதுபோலவே தெற்கு ராமர் பாலத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் இராமனும் இல்லை, இராவணனும் இல்லை. இது கற்பனை. பிறகு எப்படி ராமன் பாலம் இருக்க முடியும்.

‘இராவணன் நாடு' என்றொரு ஆய்வு நூலை அகத்திய தாசன் என்பவர் எழுதி இருக்கிறார். அந்நூலில் வான்மீகி இராமாயாணம், ஆரண்ய காண்டம், இயல் 27, பாடல் 29ன் மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்திரானா என்ற 193 அடி உயரமுள்ள மலையை அடையாளம் காட்டுகிறார் நூலாசிரியர். அங்கே கோதாவரி லங்கா சோனாலங்கா ரூப்யா லங்கா என்று தால் மற்றும் உலார் ஏரிகளின் திட்டுகளைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் பல்வேறு சான்றுகளை முன்வைக்கும் அகத்தியதாசன், மத்தியபிரதேசம் சபல்பூர் மாவட்டம், இந்திரானா மலைக்குன்றுத் தீவுதான் இராவணன் ஆண்ட நாடு என்று உறுதி செய்கிறார்.

இவன் வடநாட்டு இராவணன் சூத்திர மன்னன். இவனுக்கும், அயோத்தி ராமனுக்கும் நடந்த சண்டையின் போது மேற்சொன்ன லங்கா மணல் திட்டுப்பகுதியில் கெரன் ஆற்றைக் கடந்திருக்க வேண்டும் ராமன். இந்தக் கதையை, தமிழகத்தில் நுழைத்து கற்பனை வளத்தைச் சேர்த்து எழுதிய கம்பன், மத்திய பிரதேச சபல்பூர் இந்திரானா லங்காவை இலங்கையாக வைத்தும், கெரன் ஆற்று மணல் திட்டுகளை சுசேதுபந்தனம்' என்று ராமன்கட்டிய பாலமாகத் தமிழன் கால்வாயில் கதையளந்து விட்டான் தன் இராமகாதையில் அதாவது இராமாயணத்தில்.

இராமாயாணம் ஒரு கற்பனைக் கதை. வரலாறு அல்ல. ‘சேதுபந்தனம்' கம்பனின் சொல்நயம். பாலம் அல்ல. அதை ராமனும் கட்டவில்லை. ‘தமிழன் கால்வாய்' இது வரலாறு. தமிழனின் புவியியல் அடையாளம். தமிழகத்தின் முன்னேற்றம். ‘தமிழன் கால்வாய்' என்கிறார் கலைஞர். ‘சேதுபந்தனம்' என்கிறார் ஜெயலலிதா.

இப்பொழுது புரிகிறதல்லவா ஜெயலலிதாவின் இரட்டை வேடமும் முரண்பாடும்!

தமிழன் கால்வாயை வீழ்த்தத் துடிக்கும் ஆரிய மாயையின் நோக்கம், சேதுபந்தனம் ராம பந்தம் ராமராஜ்யம்!

Pin It