2011ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெ. ஜெயலலிதா.

ஓராண்டு உருண்டோடிப் போய்விட்டது.

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் செ.கு. தமிழரசன், சரத்குமார் தொடங்கிக் கம்யூனிஸ்டுகள் வரையும் ஜெயலலிதாவின் ஓராண்டு சாதனையைப் புகழ்ந்து பேசிப் புளகாங்கிதம் ஆகிவிட்டார்கள்.

அமைச்சர்களைப் பற்றிக் கேட்கவேண்டியதே இல்லை.

இந்த ஓராண்டுச் சாதனையை ஒட்டி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு...அப்பப்பா!

வண்ண வண்ண டிஜிடல் பதாகைகள், தோரணங்கள், அலங்காரங்கள், மின்தட்டுப்பாடு கடுமையாக நாட்டில் இருந்தும்கூட ஒளிர்ந்த வண்ண ஒளிமயமான மின் விளக்குகள்; இவை மட்டுமா, குதிரைப்படைகள் கூட வரவேற்ற காட்சிகள் சொல்லி மாளாது.

paramakudy_380பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆட்சிக் காலங்களில் கூட செய்யாத சாதனைகளை “அம்மா” ஆட்சியில் செய்துவிட்டார்கள் என்று வியக்க வைக்கும் அளவுக்கு விளம்பரங்கள்...விளம்பரங்கள்.

தமிழ், ஆங்கில நாளிதழ்களில் முழுப்பக்க அளவுக்குக் கோடிக் கணக்கில் விளம்பரங்கள். அதுவும் வண்ண வண்ண விளம்பரங்கள்.

இந்தக் கோலாகலங்கள், குதூகலக் கொண்டாட்டங்களைப் பார்க்கும் போது, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

ஆம்!

தமிழ்நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது. விலைவாசி எல்லாம் குறைந்து விட்டது. தமிழகம் ஒளிவெள்ளமாகப் பிரகாசமாக ஒளிர்கிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் - இப்படி எல்லாம் நம்ப வைப்பதற்காகத் தான் இந்த ஓராண்டு சாதனைக் கொண்டாட்டங்கள் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

உண்மையில் இந்த ஓராண்டுச் சாதனைகள்தான் என்ன? கைப்புண்ணைப் பார்க்கக் கண்ணாடியா வேண்டும்? ஆட்சிக்கு வந்தவுடன்-

மத்திய அரசின் இராணுவத்திற்குச் சொந்தமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த தலைமைச் செயலகத்தை, சொந்த இடத்தில் பிரம்மாண்டமாய் கட்டிய கட்டடத்திற்கு மாற்றினார் கலைஞர். ஆனால் புதிய தலைமைச் செயலகத்திற்குள் நுழைய மாட்டேன். அதை மருத்துவமனையாக ஆக்கப் போகிறேன் என்றார் - நடவடிக்கை எடுத்தார்.

ஏன்? அது கலைஞர் கட்டிய தலைமைச் செயலகம் என்பதால். நீதிமன்றத் தலையீடு, இன்று கேட்பார் அற்ற நிலையில் அது இருக்கிறது.

தமிழகத்தில் கல்வியைச் சமநோக்குக் கல்வியாக ஆக்கக் கலைஞர் எடுத்த முயற்சி சமச்சீர்க் கல்வி. இது கலைஞரால் முன்னெடுக்கப்பட்டது என்பதால் அதனை ஒழிக்க இந்த அரசு எடுத்த முயற்சியும், அதனால் பெற்றோர்கள், மாணவர்கள், அவர்களின் கல்வி எவ்வளவுக்குப் பாதிப்புக்கு உள்ளானது என்பதையும் நாடு அறியும்.

இதுவும் நீதி மன்றத் தலையீடுக்கு உள்ளாகிய காரணத்தால் சமச்சீர்க்கல்வி இன்று நடைமுறைப் படுத்தப்படுகிறது.

உலகிலேயே மிகச் சிறந்த நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டப் பயனுள்ள நூலகம். கற்றாரைக் கற்றோரே காமுறுவர். அண்ணா கல்வியாளர். அவர் பெயரில் கட்சி நடத்தும் இந்த ஆட்சியில் இந்நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றப்போகிறோம். இந்நூலகக் கட்டடத்தை மருத்துவமனை ஆக்கப்போகிறோம் என்று அறிவுச் சோலையை அடக்கம் செய்யப் பார்த்தது. மீண்டும் நீதிமன்றத் தலையீடு. வழக்கும் நடக்கிறது.

என்ன பாவம் செய்தார்கள் ஏழை மக்கள்நலப் பணியாளர்கள். குறைந்த சம்பளத்தில் உடல் உழைப்பைத் தந்து மக்களுக்கான பணிகளைக் கிராமங்களில் செய்து வந்த 14,000 பணியாளர்களை வேலைவிட்டே நீக்கியது இந்த அரசு. இதுவும் நீதிமன்றத் தலையீடுக்கு உள்ளானது.

இது எல்லாம் ஒருபுறம் இருக்க. கலைஞர் ஆட்சியில் குறைவாக இருந்த மின்வெட்டு, இந்த ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் இருளோடு 10 மணிநேரம் 15 மணிநேரம் என்று பெரும் சாதனையே படைத்துவிட்டது.

மின்வெட்டினால் தொழிற்சாலைகள் முடக்கம், தொழிலாளர் வேலை இழப்பு, மாணவர்களின் படிப்பு பாதிப்பு, வேளாண்மை நசிந்து விடும் அளவுக்கு மக்கள் அடைந்த வேதனை சொல்லி மாளாது.

இல்லாத மின்சாரத்திற்கு இருமடங்கு கட்டணம் என்பது தமிழகம் கண்ட வினோதம். அரசு ஏற்றிய கடுமையான மின்கட்டண உயர்வு சொந்த வீட்டாளர்களைவிட, ஏழை நடுத்தர வாடகைக்குக் குடியிருப்போரை பெரும் வேதனையில் ஆழ்த்தி விட்டது.

ஏழை மக்களின் சத்துணவு என்றால் பால் ஒன்றாகத்தான் இருக்க முடியும். குழந்தைகளின் உணவு பால். அந்தப் பாலின் விலையைக் கூட விட்டுவைக்கவில்லை. நஞ்சேறியது போல் பால்விலை ஏறியதால், ஏழை நடுத்தர மக்கள் இன்னமும் வேதனையில்தானே வாழ்கிறார்கள்.

நாட்டில் 90 விழுக்காடுக்கு மேல் மக்கள் பேருந்தில்தான் பயணம் செய்கிறார்கள். அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரிக்குச் செல்வோர், சிறுவணிக மக்களின் பயணம் என்று பேருந்தை நம்பி வாழ்கின்ற மக்களின் வேதனை இந்த அரசுக்குத் தெரியாதா என்ன?

அப்படி இருந்தும் பலமடங்கு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ஒரு வார இதழ் எடுத்த கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மின்வெட்டு 89 விழுக்காடு, பேருந்துக் கட்டண உயர்வு 82 விழுக்காடு, மின்கட்டண உயர்வு 76 விழுக்காடு, பால்விலை உயர்வு 70 விழுக்காடு, பெட்ரோல் விலை உயர்வு 65 விழுக்காடு என்று மக்கள் அடைந்த வேதனையைச் சுட்டிக் காட்டி இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, சட்டமன்றத்தில் ஒரு தனி ஆவர்தனமே நடந்து கொண்டு இருக்கிறது. எதிர்க் கட்சிகளுக்குப் பேச வாய்ப்பளிக்கப் படுவதில்லை. அப்படியே பேசினாலும் அவர்களைப் பேச விடாமல் இடைமறிக்கும் அமைச்சர்கள். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு அல்லது இடைநீக்கம். 110ஆம் விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வாசித்தவுடன், செ.கு. தமிழரசன் முதல் அமைச்சர் வரை ஒரே துதிபாடிக் களிக்கும் காட்சிகள் - இதுதான் இன்றைய சட்டமன்றம்.

மக்கள் பிரச்சினைகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசுவதில்லை. எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. பிறகு எப்படி உறுப்பினர்களின் தொகுதி மக்கள் பிரச்சினை தீரும்.

இவை எல்லாம் வேதனை இல்லையா?

நிறைய திட்டங்களை முதல்வர் அறிவிக்கிறார். அறிவிப்பு அறிவிப்பாக இருக்க நடைமுறைக்கு அது வருவதில்லையே என்று ஆதங்கப்படுகிறார்கள் மக்கள்.

 எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதைச் சரியாகக் கையாள வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

ஆனால் எந்தப் பிரச்சனை என்றாலும் எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சியைக் குறைகூறிக் கொண்டே இருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.

இவைகளை எல்லாம் வசதியாக மறந்து விட்டு, மறைத்து விட்டு, ஓராண்டு சாதனை என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருப்பது வேதனையிலும் வேதனையல்லவா?

சுருக்கமாகச் சொன்னால் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த ஓராண்டில் இந்த அரசிடம் மக்கள் கண்டது சாதனை அல்ல; பட்டதுதான் வேதனை! வேதனை!

Pin It