1967 இல் அண்ணா முதல்வராக இருந்த போது தலித் மக்களுக்காக சிறுதாவூரில் ஒதுக்கப் பட்ட இடத்தில்தான் ஜெயலலிதா பங்களா கட்டியுள்ளார் என்ற பிரச்சினை இப்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதில் புதிய தமிழகமும் இணைந்துள்ளது. முதல்வர் கலைஞர் இதை உறுதிப்படுத்தி எழுதியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் இன்னும் இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. வேறு சில தலித் அமைப்புகள் சிறுதாவூர் சென்று, பாதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தியுள்ளன.
சிறுவர் நிலை படுமோசம்
உலகில் - சிறுவர்கள், குழந்தைகளின் நிலை ஆபத்தாக இருக்கும் 10 நாடுகளில் - இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும், பத்திரிகையாளர்களும் இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு; உணவு உற்பத்தியில் உலகில் 3 வது இடத்தில் இருக்கும் நாடு; அமெரிக்கா - சீனாவுக்கு அடுத்த படியாக ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு; இந்த இந்தியாவில் தான் உலகம் முழுவதும் பட்டினியால் வாடும் மக்களில் 50 சதவீதம் பேர் (380 மில்லியனுக்கும் அதிகம்) இருக்கிறார்கள். இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள் தான். 60 முதல் 115 மில்லியன் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். கிராமங்களில் பெண் சிசுக்கள் அழிக்கப்படுகின்றன. உலகிலேயே மிக அதிகமாக சிறுவர்களை உடல் உழைப்பில் ஈடுபடுத்தும் நாடு (218 மில்லியன்) இந்தியா தான் என்று உலகம் முழுவதம் கணக்கெடுப்பு நடத்தி வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது! (தகவல் : இந்து, ஜூலை 19)
வி.பி.சிங். துவக்கிய அரசியல் கட்சி
மூன்று நாட்களுக்கு ஒரு முறை - ‘டயாலிஸ்’ சிகிச்சை செய்து கொண்டு, தனது உடலியக்கத்தை உயிர்ப்பித்துக் கொண்டு வரும், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், உ.பி.யில் குடிசை வாழ் மக்கள், தலித், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், கைவினைஞர்கள் உரிமைக்காக ‘ஜன் மோட்சா’ என்ற அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளார்.
முலாயம் சிங் கட்சியிலிருந்து வெளியேறிய ராஜ்பாபர் இதன் தலைவர். அண்மையில் உ.பி. அரசு தனக்கு சொந்தமான நிலத்தை, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தி கைதானார் வி.பி.சிங். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி - பார்ப்பன மாநாடுகளை நடத்தி, பார்ப்பனர்களுக்கு வலை வீசிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், வி.பி.சிங் கின், ‘ஜன் மோட்சா’ தலித் ஒடுக்கப்பட்ட மக்களை வேகமாக ஈர்த்து வருகிறது. ‘இந்து’ நாளேடுக்கு அண்மையில் வி.பி.சிங் அளித்த பேட்டியில் ‘இனி நான் எந்தப் பதவிக்கும் போக மாட்டேன். பிரதமர் பதவியிலிருந்து இறங்கியதிலிருந்தே நான், குடிசை வாழ் மக்களுக்காகப் போராடி வருகிறேன். ஆனால் ஊடகங்கள் முழுமையாக இருட்டடித்தன. இப்போது அரசியல் கட்சி துவக்கியதற்குப் பிறகு தான், ஊடகங்கள் திரும்பிப் பார்க்கின்றன. ஊடகங்களுக்கு எப்போதுமே, மக்கள் பிரச்சினைகளை விட, அரசியல் கட்சிகள் என்று வரும்போது தான், கவனிக்கத் துவங்குகின்றன’ என்று மிகச் சரியாகக் கூறியிருக்கிறார்.
1996-ல் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்குமாறு பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தி, அவரது வீட்டையே முற்றுகையிட்டபோது, வீட்டின் பின்புறக் கதவு வழியாக வெளியேறினார் வி.பி.சிங். அதற்குப் பிறகு தான் தேவகவுடா பிரதமர் ஆனார். பொது வாழ்க்கையில் நேர்மை பற்றி பேசும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையின் சிகரமாக வாழ்ந்த வி.பி.சிங்கை முழுமையாக இருட்டடிப்பு செய்துவிட்டன. காரணம், அவர் சமூக நீதிக்குக் குரல் கொடுப்பவர் அல்லவா?
ஆட்டத்தை நிறுத்திய ‘ஆவி’
என் தோழியின் மகள் திருமணமானவள். மூளைக் காய்ச்சல் வந்து மருத்துவமனையில் இறந்து போனாள். மகளின் பிரிவு தாங்காமல் என் தோழி ரொம்பவும் வேதனைப்பட்டாள். நிறைய பேர் வந்து ஆறுதல் சொல்லி சொல்லி தேற்றினார்கள். அப்போது ஒருவர் வந்து, “நீ கவலையே படாதே. உன் மகளிடம் நீயே பேசலாம். உன் மகளின் குரலை நன்றாக கேட்கலாம்” என்று என் தோழியிடம் சொல்லி, மறுநாளே அவளை வேலூரில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். பணம் ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார்.
என் தோழி, மருமகன், நான், தோழியின் சம்பந்தி ஆகியோரை அழைத்து சென்றார். அந்த வீட்டை அடைந்ததும் அங்கே நிறைய பேர் வந்து காத்திருந்தார்கள். குறி சொல்பவர் ஒருவர் வந்து அமர்ந்து அருள் வந்தவர் போல் ஆடினார். சிறிது நேரத்தில் என் தோழியை கூப்பிட் டார். “நீ யாரோட பேச வேண்டும் யாரை அழைக்க வேண்டும்” என்று கேட்க, “என் பெண் அருணா இறந்து மூன்று மாதமாகிறது.
அவளிடம் பேச வேண்டும் என்று தோழி சொன்னாள். உடனே மூடிக் கொண்டிருந்தவர், “அம்மா நான்தான் உன் பொண்ணு வந்திருக்கேன்” என்று பெண் குரலில் பேச, அடுத்த வினாடியே என் தோழி பேச்சு வராம ஒரே அழுகை, “நீ அழாதே அம்மா என் விதி முடிந்துவிட்டது. தம்பி, தங்கையை பார்த்துக் கொள் என்று மகளின் ஆவி கூற, “ஏனம்மா இளம் வயதிலே நீ இறந்து போனாய் உன் பிரிவால் ஏங்குகிறோமே” என்று என் தோழி சொன்னாள்.“என் மாமியார் கொடுமை தாங்க முடியாமல்தான் தற்கொலை செய்து கொண்டேன்” என்று ஆவி சொன்னது. “என்ன தற்கொலை செய்துகிட்டியா? மூளைக் காய்ச்சல் வந்துதானே இறந்தே” என்று அம்மா கூற, ‘ஆவி’ மகளுக்கும், நிஜ அம்மாவுக்கும் வாக்குவாதம் வந்து விட்டது. “அடிப்பாவி உன் மாமியார் எவ்வளவு தங்கமானவர். அவளைப் போய் குறை சொல்கிறாயே” என்று சொல்ல, ஆவி பயந்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
மனிதர்களை ஏமாற்றி பிழைப்பதும் மட்டுமின்றி, உறவுகளுக்கு மோதலையும் அல்லவா உருவாக்குகிறார்கள்.
நன்றி: ‘தினத்தந்தி’