‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்று சொல்வதுண்டு. அதற்கு இன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் பொருத்தமான உதாரணம். ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், யாரையாவது நீக்க வேண்டும், எதையாவது மாற்ற வேண்டும். இல்லையயன்றால், அதிகாரம் செய்த மனநிறைவு அம்மையாருக்குக் கிடைக்காது போலும். அண்மையில் அம்மையாரின் ‘கருணைக்கு’ ஆளாகியிருப்பவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள்.

கடந்த 08.11.2011 அன்று 12,653 மக்கள் நலப் பணியாளர்கள் அ.தி.மு.க. அரசால் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள் ளனர். 1989இல் ஆட்சிக்கு  வந்த தி.மு.கழக அரசால் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ. 750 மதிப்பூதியமாக நிர்ணயிக்கப் பட்டது. 2009இல் மற்ற அரசு ஊழியர்களைப் போல கால முறை ஊதியத்தின் கீழ் மக்கள் நலப் பணியாளர்களையும் கொண்டு வர வேண்டுமென்ற எண்ணத்தில், தி.மு.கழக அரசு 1.06.2009 முதல் ரூ. 2500 ‡5000 மற்றும் தர ஊதியம் ரூ.500 என்று அரசாணை பிறப்பித்தது. இதனால் 12,653 மக்கள் நலப்பணியாளர்கள் பெரிதும் பயன்பட்டனர். இன்று அந்த 12, 653 பணியாளர்கள் ஜெயலலிதாவின் ஆட்சியில் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிவருகிறார்கள். அவர்கள் செய்த தவறு என்ன? ஊதிய உயர்வு கேட்டுப் போராடினார்களா? (2003ஆம் ஆண்டின் எஸ்மா, டெஸ்மா மறந்துவிடுமா என்ன? ) இல்லை அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டார்களா? மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம் தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் தொடங்கப்பட்டது என்பதைத் தவிர, பணி நீக்கத்திற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்த செய்தி.

பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள். அதிலும் பாதிப்பேர் பெண்கள். அரசு வேலைக்கான வயது வரம்பைக் கடந்து விட்டவர்கள். இதற்கு மேல் இவர்களால் புதிதாக ஒரு வேலையைக் கற்றுக்கொள்வது என்பது கடினம். பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 12, 653 தனிமனிதர்கள்  அல்ல 12, 653 குடும்பங்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகள் இந்த ஊதியத்தை நம்பி இருந்த அந்தக் குடும்பங்கள், திடீரென நாளை முதல் உங்களுக்கு வேலையில்லை என்று சொன்னால் என்ன நிலைக்கு ஆளாகும் என்பதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். மணநாள் குறிக்கப்பட்டுக் கனவுகளோடு காத்திருப்போர், குழந்தைகளுக்குப் பால் மாவு வாங்கவும், நோய்த்தடுப்பு ஊசி போடவும் சம்பள நாளை எதிர்பார்த்திருப்போர், பள்ளி, கல்லூரிக் கட்டணங்களைக் கட்டத் தவணை கேட்டிருப்போர், மழைக்கு ஒழுகும் கூரைக்கு பிளாஸ்டிக் பாயையாவது வாங்கிப் போர்த்தி விட நினைத்திருப் போர் என எத்தனை பேரின் கனவுகள் ஒரே நாளில் சிதைக்கப்பட்டிருக்கின்றன. மனச்சான்று உள்ள யாரும் இந்த அராஜகப் போக்கைச் சரியயன்று சொல்லமாட்டார்கள்.

தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ‘ கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதால், தனியாக மக்கள் நலப் பணியாளர்கள் தேவையில்லை என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. இந்த நிலையில், எங்களின் பணி மிகவும் பயனுடையதாக இருக்கிறது ’ என்று கூறியிருக்கின்றன. ஊராட்சி அமைப்புகளில் போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில், மக்கள் பணியார்கள் செய்துவந்த பணிகளை அவர்களிடம் ஒப்படைப்பது பணிச்சுமையை அதிகரிக்கும். இதனால் நிர்வாகம் சீர்கெடும் என்பது ‘சிறந்த நிர்வாகி ’யான இன்றைய முதல்வருக்குத் தெரியாதா? தெரியும். தெரிந்தேதான் ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்.

முதியோர் கல்வியைப் பரப்புவது, குடிப்பழக்கத்தின் தீமைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது, தெரு விளக்குகளைப் பராமரிப்பது, சத்துணவுக் கூடங்களை கவனிப்பது போன்ற நலப்பணிகளை மக்கள் நலப்பணியாளர்கள் செய்து வந்திருக்கின்றனர். அரசின் பணிநீக்க ஆணை வெளிவந்ததும், தொலைக்காட்சிகளில் பேசிய பெண் பணியாளர்கள், ‘ மழை என்றும், வெயில் என்றும் பார்க்காமல் உழைத்தோமே, அதற்குக் கிடைத்த பரிசு இதுதானா? ’ என்று கதறினர். என்ன செய்வது,   ‘விதைக்காமல் விளையும் கழனி ’யிடம் வியர்வை சிந்தும் உழைப்புக்கு மரியாதையை எதிர்பார்க்க முடியுமா?

இந்திய அளவிலும், தமிழக அளவிலும் ஐந்து முறை முதல்வாராகி சாதனை படைத்த அரசியல் தலைவர்கள், உலக அளவில் 40 ஆண்டுகளாக ஆட்சியில் நீடிக்கும் சாதனைத் தலைவர்களைப் பற்றி நாம் அறிவோம். இன்றைய முதல்வரும், அ.தி.மு.க. வின் நிரந்தரப் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அம்மையாரும் யாரும் செய்ய முடியாத ஒரு ‘ சாதனை ’யைச் செய்திருக்கிறார். கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, மக்கள் நலப் பணியாளர்களை மூன்று முறை ( 1991‡2001‡2011 ) பணி நீக்கம் செய்து அவர்களின் பிழைப்பில் மண்ணைப் போட்டவர் என்ற சாதனைதான் அது. ‘ இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை ; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை ’ என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வேதனையோடு பாடிய வரிகளுக்கு, உயிர் கொடுத்து வருகிறார் ‘புரட்சித் தலைவி ’

எந்த ஆட்சி வந்தாலும் அரசுப் பணியாளர்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட கடமைகள் இருக்கின்றன. அவற்றைக் கண்டிப்பாக அவர்கள் செய்தே ஆக வேண்டும். அப்படி இருக்கும் போது, ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர்களைப் பந்தாடுவது, ஏதோ அவர்கள் தன்னுடைய அரசுக்கு  எதிரானவர்கள் என்று கருதும் அந்த அம்மையாரின் ‘ ஆரோக்கியமற்ற மனப்போக்கையே ’ காட்டுகிறது. 2003இல் வேலை பறிக்கப்பட்ட 1 இலட்சம் ஊழியர்களானாலும் சரி, 12,653 மக்கள் நலப் பணியாளர்களானாலும் சரி, அந்த அம்மையாருக்கு ஒரு பொருட்டன்று. ஒரு வாடகை வீட்டை காலி செய்யச்சொல்ல வேண்டும் என்றால் கூட, வீட்டின் உரிமையாளர், வாடகைதாரருக்கு ஒரு மாதம் முன்பே அறிவிப்புச் செய்ய வேண்டும் என்பது விதியாக இருக்கிறது. ஆனால் ஒரு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சொந்த மக்களைச் சோத்துக்கு அல்லாட விடத் துணிகிறர்கள் என்றால், அவர்களின் மனிதத் தன்மையை என்னவென்று சொல்வது?

ஜெயலலிதா எப்போதும் உத்தரவிடும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தான் சாதகமானவராகவும், நெருக்கமானவராகவும் இருப்பார். கடைநிலை ஊழியர்களை அவர் என்றுமே மதித்தவரில்லை. அவர்களை விலங்குகளாகப் பாவித்து, சாட்டையால் அடித்து வேலை வாங்குவேன் என்று சொன்னவர் அவர். சென்னையில் நவம்பர் 13, 14 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், ‘ எனது  அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்துப் பிரச்சினைகளையும் போலீசார் எந்தவிதப் பயமுமின்றி கையாள்வதற்கான முழு சுதந்திரத்தையும் வழங்கி இருக்கிறேன்....போலீசார்  தங்களது கடமையைத் திறமையாகச் செய்வதற்கு எனது முந்தைய ஆட்சியைப்போலவே இப்போதும் அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறேன் ’ என்று சொல்லியிருக்கிறார். காரணம் காவல்துறையின் துணையின்றி, அவரால் ‘ அவருடைய ’ ஆட்சியை நடத்தவே முடியாது. சும்மாவே ஆடுபவனின் கால்களில் சலங்கையை வேறு கட்டிவிட்டால் ஆட்டத்தைக் கேட்கவா வேண்டும். ஏற்கனவே காவல்துறை ஆடிய ஆட்டத்தைத்தான் பரமக்குடி பார்த்திருக்கிறதே!

‘எனது’ ஆட்சி, ‘நான் ஆணையிட்டேன்' என்று  அவருடைய சொற்களில் மட்டும் ஆணவம் தெறிக்கவில்லை, சமச்சீர்க் கல்வி, அண்ணா நூலக இடமாற்றம் இப்போது மக்கள் பணியாளர் நீக்கம் என அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் பாசிசப் போக்கும், ஆணவமும் நிறைந்து வழிகிறது. அதன் விளைவு, நாளொரு அதிரடி அறிவிப்பும், பொழுதொரு மக்கள் போராட்டமுமாகத் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மக்கள் நலப் பணியாளர் நீக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி. பணி நீக்கம் செய்யப்பட்ட 12, 653 பேரை மறுபடியும் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு மக்கள் நலப்பணியாளர் நலச்சங்கங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் நியாய மான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதத்திலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் திமுக சார்பில்,  15.11.2011 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தலைநகர் சென்னையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதோடு பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஜெயா அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன. ஜனநாயக சக்திகளின் குரலுக்கு  மதிப்பளித்து, மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.

ஜெயலலிதா அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய சொல்லாலும், செயலாலும்,

‘நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்’

என்ற குறள் சொல்லுவது போலத்தான்  இருந்து வருகிறார். மனுநீதிக்குத் தலைவணங்கும் ஜெயலலிதா, மக்களின்  நீதிக்கும் சிறிது தலைவணங்கினால், வாக்களித்த மக்களுக்கு நன்றியுடைவராக அறியப்படுவார்.

Pin It